Monday, March 25, 2013

சீறாப்புராணம் - மானுக்கு பிணை நின்ற படலம்


சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம் (812 - 883 )

812குயினிழல் பரப்பச் செவ்விக் கொழுந்தடை நறவஞ் சிந்தும்
வயிரவொண் வரையின் விம்மி வளர்ந்ததிண் புயத்து வள்ளல்
செயிரறு மறையின் றீஞ்சொற் செழுமழை பொழிந்து தீனின்
பயிர்வளந் தேறச் செய்து பரிவுட னிருக்கு நாளில்.
2.12.1
813அரியினஞ் செறிந்த போன்ற அறபிகள் குழுவி னாப்ப
ணொருதனிச் சீய மொப்ப வுடையவன் றூதர் செல்வத்
திருநகர்ப் புறத்து நீங்கிச் செழுமுகின் முடியிற் றாங்கி
மருமலர் செறியுஞ் சோலை சூழ்ந்ததோர் வரையைச் சார்ந்தார்.
2.12.2
814கொன்றையுங் குருந்துங் கார்க்கோற் குறிஞ்சியும் வேயுந் தற்றித்
துன்றிய நிழலு நன்னீர் சொரிதரு மிடமுஞ் செந்தேன்
மன்றலொண் மலரு நீங்கா வனந்திகழ் வரையின் கண் ண
சென்றன நெறிக்குங் காந்தி செவ்விமெய் முகம்ம தன்றே.
2.12.3
815வனந்தரி விலங்கு மாய்த்து வன்றசை வகிர்ந்து வாரித்
தினந்தொறுங் கோலிற் கோலித் தீயிடை யமிழ்த்திக் காய்த்தித்
தனந்தனி யிருந்து நின்று தன்றசைக் பெருக்க லன்றி
யனந்தலிற் பொழுதும் வேறோ ரறிவென்ப தறிந்தி லானே.
2.12.4
816காலினிற் கழலு நீண்ட கரியகா ளத்தின் வீக்கும்
பாலினில் வலையுங் கையிற் பருவரைத் தனுவுங் கூருங்
கோல்வெறி நணியுந் தோளிற் கூன்பிறை வாளு மென்மை
வாலுடைப் பறவை சேர்த்துங் கண்ணியு மருங்கிற் கொண்டோன்.
2.12.5
817குறுவெயர்ப் புதித்த மெய்யுங் கொழுந்தசை மணத்த வாயும்
பறிதலை விரிப்புங் கூர்ந்த படுகொலை விழியு மாக
வறபினி லறபி வேட னடவியிற் றொடர்ந்தோர் மானைக்
கறுவொடும் வலையிற் சேர்த்திக் கட்டிவைத் திருப்பக் கண்டார்.
2.12.6
818குழைகுழைத் தெரியுஞ் செந்தேன் கொழுமலர்க் காவை நோக்கார்
பொழிமலை யருவி நோக்கார் புறத்துநன் னிழலை நோக்கார்
செழுமுகிற் கவிகை வள்ளல் செறிதரு மீந்தின் செங்காய்
மறையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்.
2.12.7
819அருளடை கிடந்த கண்ணு மழகொளிர் முகமுஞ் சோதி
சொரிநறை கமழ்ந்த மெய்யுஞ் சூன்முகிற் கவிகை யோடும்
வருவது தூயோன் றூதர் முகம்மது வென்னத் தேறிப்
பருவர லுழக்கு முள்ளத் தொடும்பிணை பகரு மன்றே.
2.12.8
820நெடியவன் றூதர் வந்தார் வேடனா னிலத்தி னந்த
முடலுயிர்க் கிறுதி யில்லை யுழையினத் தோடுஞ் சேர்ந்து
கடிதினிற் கன்றுங் காண்போ மெனமுகம் மதுவைக் கண்ணா
னொடிவரை யிமைமூ டாம னோக்கியே கிடந்த தன்றே.
2.12.9
821பொருப்பிடைத் துறுகற் சார்பிற் பொரியாரைத் தருவி னீழன்
மருப்புடைப் படலைத் திண்டோன் மன்னவ ருடனும் புக்கு
நெருப்பிடைத் தசைவா யார்ந்து நின்றவே டனையுஞ் செம்மான்
றிருப்புதற் கருங்கட் டுண்டு கிடப்பதுஞ் சிறப்பக் கண்டார்.
2.12.10
822இடைநிலத் துருக்கி விட்ட விரசிதம் பரந்த தென்ன
மடிசுதை யமுதஞ் சிந்த வடிக்கணீர் பனிப்பத் தேங்கு
முடலகந் துருத்தி யொப்ப நெட்டுயிர்ப் புயிர்த்துக் காலிற்
றுடரொடுங் கிடப்பத் தூயோன் றூதுவ ரடுத்து நின்றார்.
2.12.11
823கொடியடம் பிலையை மானும் குளம்பின்மேற் சுருக்கும் புள்ளிப்
பொடியுடற் பதைப்பும் வீங்கிப் புதையுநெட் டுயிர்ப்பு நோக்கி
நெடியவ னிறசூ லுல்லா நெஞ்சுநெக் குருகிக் கானின்
பிடிபடு மானின் றன்பாற் பேரருள் சுரப்ப நின்றார்.
2.12.12
824கதிர்விரி ஹபீபு நிற்பக் கானகத் தருக்க ளியாவும்
புதுமல ரலர்த்திச் செந்தேன் பொழிவமான் வருத்த நோக்கி
விதிர்சினைக் கரங்கள் சாய்த்து மென்றழைக் கூந்தல் சோர
மதியழிந் திரங்கிக் கண்ணீர் வடிப்பன போன்ற தன்றே.
2.12.13
825குலத்தொடும் பறவை தத்தங் குடம்பையிற் புகுதன் மானை
நிலத்திடைக் கிடத்திக் கட்டி நின்றவேட் டுவனைக் கண்ணா
னலத்தொடுங் காண்ப தாகா தெனநடு நடுங்கி யுள்ள
முலைத்தறப் பெடையி னோடு மொளிப்பன போன்ற தன்றே.
2.12.14
826ஏட்டலர் நறவ மாந்தி யிருஞ்சுரும் பிசைக்குந் தோற்றம்
வாட்டமின் முகம்ம திங்ஙன் வந்தனர் வருந்து மானை
மீட்டனர் வேட னீமான் விரும்பினன் பயங்க டீர்த்தார்
கூட்டுறைந் தொளித்தன் மாற்று மெனப்பல கூய போலும்.
2.12.15
827நிறைவளஞ் சுரந்த கானி னின்றநந் நபியை நோக்கிக்
குறியவா லசைத்து நீண்ட கொழுங்கழுத் துயர்த்தி நீட்டி
மறைபடா மதியே வண்மை முகம்மதே யென்னப் போற்றித்
தறுகிடா தெவர்க்குங் கேட்பச் சலாமெடுத் துரைத்துக் கூறும்.
2.12.16
828வல்லவ னுண்மைத் தூதே மன்னுமா நிலத்தின் மாந்த
ரல்லலை யகற்றி வேதத் தறநெறி பயிற்றிச் சொர்க்கத்
தில்லிடைப் புகுத்தப் பூவி னிடத்தினி லுதித்த கோவே
யொல்லையி னெனது சொற்கேட் டுவந்தரு ளளிக்க வேண்டும்.
2.12.17
829என்னுயி ரெனநீங் காத வினமுமென் கலையுங் கன்றுந்
துன்னிடத் திரண்டு பைம்புற் றுறைதொறு மேய்ந்து நாளு
முன்னிய பசிக டீர்த்தோர் மிருகங்கட் குயிர்கொ டாமன்
மன்னிய மலையின் சார்பு மனப்பய மகற்றி வாழ்ந்தேம்.
2.12.18
830இருநிலத் தாசைக் காயோ ரிளங்கன்றென் வயிற்று றாதான்
மருவிய கலையு நானும் வருத்தமுற் றிருக்குங் காலம்
பெருகுதீன் முகம்ம தேநும் பெயரினைப் போற்றல் செய்தே
னுருவமைந் திளஞ்சூன் முற்றி யுதரமும் வளர்ந்த தன்றே.
2.12.19
831தனியனென் னுயிருங் காக்குங் கலையுயிர் தானு மொன்றா
யினிதினொன் றாய தென்ன விளங்கன்றொன் றீன்றே னின்ப
நனிகளி கடலி லாழ்ந்து நறுமலை யிடத்திற் சேர்ந்து
துனிபல வகற்றி னேன்முன் சூழ்வினை யறிகே லேனே.
2.12.20
832உள்ளுயி ரனைய கன்று மொருத்தலு மியானு மோர்நாள்
வெள்ளமொத் தனைய மானி னினமோர் வெற்பின் சார்பி
னள்ளிலை யள்ளி வாய்கொண் டரும்பசி தடிந்து நீருண்
டெள்ளள வெனினு மச்ச மின்றிநின் றுலவு நேரம்.
2.12.21
833அத்திசைக் கெதிரின் மேல்பா லடுத்தொரு குவட்டின் கண்ணே
மத்தகக் கரியு மாய்க்கும் வரிப்புலி முழக்க நீண்ட
குத்திரத் தசனித் தாக்கின் குவலய மதிரக் கேட்டுத்
தத்தியெத் திசையுந் திக்குந் தனித்தனிச் சிதறி னேமால்.
2.12.22
834கூடிய தூறும் பாரிற் குளித்திடக் குதித்து வல்லே
யோடிய திசையி னொன்றை யொன்றுகாண் கிலதா யானும்
வாடிய மனத்தி னோடு மறியையு நோக்கா தாக்கை
யாடியிற் றுரும்பாய் வேறோ ரடவியி னடைந்திட் டேனால்.
2.12.23
835அடவியி னடையுங் காலை யவ்வுழைக் கரந்திவ் வேடன்
றுடரிடும் வலையைச் சுற்றிச் சுருக்கிடப் புலிவாய்த் தப்பி
மிடலரி யுழையிற் சிக்கி மிடைந்தென மிடைந்து செவ்வி
யுடலுயிர் பதைப்பத் தேம்பி யுணர்வழிந் தொடுங்கா நின்றேன்.
2.12.24
836வலையிடத் துறைந்த தென்ன மகிழ்ந்தெழுந் தோடி வந்து
நிலைபெற வடுத்துச் சாய்த்து நின்றெனை நோக்கி யாகத்
துலைவுறும் பசிக்கின் றென்பா லுற்றனை யென்னக் கூறிச்
சிலகணை நிலத்திற் சேர்த்தித் தெரிந்தொரு பாசந் தொட்டான்.
2.12.25
837திருக்கற நாலு தாளுஞ் செவ்விதிற் கூட்டி யங்கை
வரிக்கயி றதனாற் சுற்றி மாறுகொண் டீழ்த்துக் கட்டிக்
சரிக்கர மென்ன நீண்ட கரத்தினாற் றாங்கி முன்னர்ச்
சுருக்கிய வலையை நீக்கித் தோளினி லெடுத்துக் கொண்டான்.
2.12.26
838சுவைமுனைக் கோட்டுச் செவ்விக் கலையுட லுயிரு மீன்ற
நவியுட லுயிரு மோர்மா னுடன்கொண்டு நடப்ப தொத்துச்
சவிபுறந் தவழுங் கோட்டுச் சார்பிலிவ் வனத்தின் கண்ணே
சுவையறு மொழியா னென்னைச் சுமந்திவ ணிறக்கி வைத்தான்.
2.12.27
839கட்டுடன் கிடந்து நெஞ்சிற் கவலையுள் ளழிந்து மாறா
நெட்டுயிர்ப் பெறிந்து சோர்ந்து நிலத்திடைக் கிடக்கு நேரம்
வட்டவெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே யும்மைத்
திட்டியிற் றெரியக் கண்டேன் றிடுக்கமுந் தீர்ந்த தன்றே.
2.12.28
840எனவினை யுரைத்துப் பின்னு மெழினபி முகத்தை நோக்கி
மனநிலை வாக்கி னோடு முகம்மதே யென்னப் போற்றிப்
புனமுறை விலங்கின் சாதி யாயினுந் தமியேன் புன்சொற்
றனையருட் படுத்திக் கேட்பீ ரென்றுரை சாற்றிச் சாற்றும்.
2.12.29
841இச்சிலை வேடன் கையி னிறத்தலை யுளத்தி லெண்ணி
யச்சமுற் றுரைப்ப தன்றிவ் வவனியிற் சீவ னியாவு
நிச்சய மிறத்த லல்லா லிருப்பவை நிலத்தி லுண்டோ
முச்சகம் விளங்குந் தீனின் முதன்மறை முறைமைச் சொல்லோய்.
2.12.30
842கலையெனப் பிரிவி லாது கண்ணிமை காப்ப தென்ன
வலைவறக் காப்பச் சின்னா ளவனியிற் கலந்து வாழ்ந்தேன்
குலவிய மறியு மீன்றேன் குறித்தினி யிருப்ப தென்கொ
லிலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன் மன்னோ.
2.12.32
843அடவியிற் கிரியில் வீணி லவதியுற் றிறந்தி டாமல்
வடிவுடைக் குரிசி லேநும் மலர்ப்பதச் செவ்வி நோக்கிப்
படுபரற் கானில் வேடன் பசிப்பிணி தீர்ப்ப தாக
வுடலிறத் திடுத லெவ்வெவ் விறப்பினு முயர்ச்சி மேலோய்.
2.12.33
844வரிப்புலி முழக்கங் கேட்டு மானினஞ் சிதறித் தத்தந்
தரிப்பிட மறியா தொன்றுக் கொன்றுடன் சாரா தெங்கு
முரைப்பரி தென்னப் போந்த தாலென தொருத்த றேடி
யிரைப்பறா நெடிக்கான் போய்ப்போ யிருந்ததோ விறந்த தேயோ.
2.12.33
845ஒல்லையி னோடி நீங்கா தொருத்தலின் றளவு மோந்து
புல்லினைக் கறியா நீரும் புசித்திடா திருந்து தேடி
யல்லலுற் றழுங்கிக் கண்ணி னருவிநீர் சொரிய வாடிப்
பல்லவ மெரியிற் புக்க தெனவுடல் பதைக்கு மன்றே.
2.12.34
846பிடிபடு மிதற்கு முன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின்
கொடிநுனை மேய்ந்து நீருங் குடித்தறி யாது பாவி
மடிமுலை யிறங்கிப் பாலும் வழிந்தது குழவி சோர்ந்து
படிமிசை கிடந்தென் பாடு படுவதோ வறிகி லேனே.
2.12.35
847கோட்டுடைக் கலையி னோடுங் கூடிற்றோ வலதோர் பாலின்
மீட்டதோ வினத்தைச் சேர்ந்து விம்மிநின் றேங்கிற் றோகான்
காட்டிடைப் புலிவாய்ப் பட்டுக் கழிந்ததோ வென்னைத் தேடி
வாட்டமுற் றலறி யோடி மறுகிற்றோ வறிகி லேனே.
2.12.36
848தேங்கிய பசியால் வாடித் திரிந்ததோ விறந்த தோவென்
றேங்கிய வருத்த மல்லா லிவ்விட ரதனி லாவி
நீங்குமென் றுள்ளத் துள்ளே னெட்டுட லுடுப்பி னாவி
தாங்கிய தரும வேந்தே தவறன்று சாத மன்றே.
2.12.37
849மன்னிய கலிமா வென்னும் வழிநிலை மாந்த ரியாரும்
பொன்னிலம் புகுதச் செய்யும் புண்ணியப் புகழின் மிக்கோய்
கொன்னிலைச் சிலைக்கை வேடன் கொடும்பசி தணிப்பே னென்றாட்
பின்னிய பிணிப்பு நீக்கிப் பிணையென விடுத்தல் வேண்டும்.
2.12.38
850விடுத்திரேற் கலையைச் சேர்ந்து விழைவுறுங் கவலை தீரப்
படுத்தியென் னினத்துக் கோதிப் பறழினுக் கினிய தீம்பால்
கொடுத்தரும் பசியை மாற்றிக் குலத்தொடுஞ் சேர்த்து வல்லே
யடுத்தொரு கடிகைப் போதிலடைவ னென் றைந்த தன்றே.
2.12.39
851மானுரை வழங்கக் கேட்டு மனத்தினிற் கருணை பொங்கிக்
கானவேட் டுவனை நோக்கிக் கன்றிடை வருத்தந் தீர்த்துத்
தான்வரு மளவு மியானே பிணையெனச் சாற்ரி நின்றார்
தீனெனும் பயிரைக் காத்துச் செழும்புகழ் விளக்குஞ் செம்மல்.
2.12.40
852பிரியமுற் றிரங்கிக் காட்டின் பிணக்கியான் பிணையென் றோது
முரையினைக் கேட்டு வேட னொண்புயங் குலுங்க நக்கித்
தெரிதரு மறிவி னோடுஞ் சினத்தொடுங் கலந்து தேர்ந்து
கருமுகிற் கவிகை வள்ளல் கவின்முக நோக்கிச் சொல்வான்.
2.12.41
853முள்ளுடைக் கானி லேகி முகமழிந் துச்சி வேர்வை
யுள்ளங்கா னனைப்ப வோடி யுடலுலைந் தொன்றுங் காணா
விள்ளரும் பசியான் மீளும் வேளையிப் பிணையை நோக்கி
யொள்ளிழை வலையிற் றாக்கிப் பிடித்திவ ணொருங்கு சார்ந்தேன்.
2.12.42
854பெருத்தமான் றசையா லிற்றைப் பெரும்பசி தவிர்ந்த தென்று
ளிருத்தியிங் கிருந்தே னந்த விருமனக் களிப்பை நீக்கி
வருத்தமுற் றிடுஞ்சொற் சொன்னீர் முகம்மதே யெவர்க்கு மிச்சொற்
பொருத்தம தன்று விண்ணு மண்ணிலும் புகழின் மிக்கோய்.
2.12.43
855கானிடைப் பிடித்த மானைக் கட்டவிழ்த் தவணிற் போக்கின்
மானிடர் பாலின் மீட்டும் வருவது முன்ன ருண்டோ
ஞானமு மறையுந் தேர்ந்தோர் செய்யுளு நாட்டிற் றுண்டோ
வூனமிப் பிணைச்சொ லையா வோதுவ தொழிக வென்றான்.
2.12.44
856என்னுறு பிணையாய்ப் போன விரும்பினை கடிகைப் போதி
னுன்னிடத் துறும்வா ராதே லுன்பசி தீர்ப்ப தாகப்
பின்னிரண் டொன்றுக் கன்பாய்த் தருகுவன் பேது றேலென்
றன்னவன் றனக்குச் சொன்னா ராரணத் தமிர்தச் சொல்லார்.
2.12.45
857காரணக் குரிசில் கூறுங் கட்டுரை செவியி னோர்ந்து
பாரினி லெவர்க்குந் தோன்றாப் புதுமைபார்த் தறிவோ மல்லாற்
சார்பினிற் சாரா லொன்றுக் கிரண்டுமே தருது மென்றார்
பேரினிற் பிணயாய்க் கொள்ளல் கருத்தெனப் பெரிதுட் கொண்டோன்.
2.12.46
858கள்ளமுங் கரப்பு மாறாக் கருத்தின னுயிர்கட் கென்று
மெள்ளள விரக்க மில்லா வேட்டுவ ரினத்தி னுள்ளே
னுள்ளம தறிந்துங் கேட்டீ ருரைப்பதென் ணுயர்ந்த மேன்மை
வள்ளல்நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்தி ரென்றான்.
2.12.47
859வேட்டுவ னுரைப்பக் கேட்டு முகம்மது விருப்ப முற்று
வாட்டமுற் றிருந்த புள்ளி மானிடத் திருந்து பாரி
னீட்டிய காலிற் சேர்த்த துடரினை நெகிழ்த்துக் கானிற்
கூட்டுறாக் குழவிக் குப்பால் கொடுத்திவண் வருக வென்றார்.
2.12.48
860இருந்துகான் மடக்கி நீட்டி யெழுந்துடன் முறுக்கு நீக்கி
மருந்தெனு மமுதத் தீஞ்சொன் முகம்மதின் வதன நோக்கிப்
பொருந்திய கலிமா வோதிப் புகழ்ந்துடற் பூரிப் போடுந்
திருந்தவே டனையும் பார்த்துச் சென்றது கானின் மானே.
2.12.49
861வெண்ணிலாக் கதிர்கான் றென்ன மென்முலை சுரந்த தீம்பான்
மண்ணெலா நனைப்பச் சூழ்ந்த வனமெலாந் திரிந்து தேடிக்
கண்ணினி லினங்கா ணாது கலங்கியோர் வனத்தின் கண்ணே
யெண்ணரும் பிணையுங் கன்றுங் கலையுட னினிது கண்ட.
2.12.50
862மலைவற வினத்து ளாகி மனத்தினுட் கவலை நீக்கிக்
கலையினுள் வருத்தந் தீர்த்துக் கன்றினை யணைத்து விம்மு
முலையினை யூட்டி மென்மை முதுகுவா லடிநா நீட்டி
யலைதர வளைத்து மோந்து வேட்கையை யகற்றிற் றன்றே.
2.12.51
863கன்றது வயிறு வீங்கக் கதிர்முலை யமுத மூட்டி
நின்றதன் னினத்துக் கெல்லா நெடிபடுங் கானி லோடி
வன்றிறல் வேடன் கையிற் படும்வர வாறுந் தூதர்
வென்றிகொள் பிணையின் மீட்டு விட்டது மோதிற் றன்றே.
2.12.52
864பிணையென வுரைத்த மாற்றம் பிணைக்குல மனைத்துங் கேட்டுப்
பணைபடு கானி லுள்ளப் பதைப்பொடுந் துணுக்கி நிற்பத்
துணையெனுங் கலையி னங்கஞ் சோர்ந்துநெட் டுயிர்ப்பு வீங்கி
யணைதர வடுத்து நோக்கி யாற்றுவான் றொடங்கிற் றன்றே.
2.12.53
865மாறுகொண் டவர்கை தப்பி வந்தமா னினத்தின் சாதி
கோறலை விரும்பி முன்னு நரர்கையிற் கூடிற் றுண்டோ
வேறுரை பகரேல் பார்ப்பை வெறுத்துமுன் னினத்தை நீத்து
மீறெனப் போதல் வேண்டா மெனுமுரை யியம்பிற் றன்றே.
2.12.54
866இணைத்தெனைப் பிணித்த வேட னிதயத்துக் கியையப் பேசிப்
பினைதனைப் பொருத்தி நின்றோர் பெரியவன் றூத ரிந்தத்
திணைத்தலத் தறிவி லாத சேதனச் சாதி யன்றே
யணைத்துயி ரனைத்துங் காத்தற் கவரல தில்லை யன்றே.
2.12.55
867என்னுயி ரதனை வேட னிரும்பசிக் கியைய வீந்து
நன்னபி பிணையை மீட்ப நன்மனம் பொருந்தி லேனாற்
பொன்னுல கிழந்து தீயு நரகினிற் புகுவ தல்லாற்
பின்னொரு கதியு முண்டோ பிழையன்றிப் பெருமை யன்றே.
2.12.56
868சிறப்புடைக் குரிசின் முன்னஞ் செப்பிய மாற்ற மாறி
மறப்பொடு மிருந்தே னாகில் வரிப்புலி யினத்தின் வாய்ப்பட்
டிறப்பதே சரத மல்லா லிருப்பதற் கிடமற் றுண்டோ
வுறப்பெரும் விருப்ப மென்மே லிருத்தலை யொழித்தல் வேண்டும்.
2.12.57
869நதியிடைப் பெருக்கின் முன்னோர் நவ்விபி னடக்கு நாளின்
மதியிலி யொருத்தன் வள்ளன் முகம்மதின் வசன மாறிப்
புதியநன் னீரு ளாழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய
வதிசய முலகில் விண்ணி லியாவரே யறிகி லாதார்.
2.12.58
870ஈதெலா மறிந்து மென்னை யிவணிடை யிருத்தல் வேண்டி
யோதுதல் பழுதென் றோதி யுழையின மனைத்துந் தேற்றிக்
காதலிற் கலையைப் போற்றிக் கன்றினை யதன்பாற் சேர்த்திப்
பேதுற லெனப்பா லூட்டி யெழுந்தது பிணையு மன்றே.
2.12.59
871இனத்தினை விடுத்து நீங்கி யிருங்களிப் பிதயம் பூப்ப
வனத்தினி லேகுங் காலை மறிமுன மறிப்பச் சீறிச்
சினத்தது தடுப்ப வோடிச் செவ்விமான் முகத்தை நோக்கி
யினித்தவாய் புற்றீண் டாத விளமறி யுரைக்கு மன்றே.
2.12.60
872மாதவம் பெற்று நின்போன் முகம்மது நபிதஞ் செய்ய
பாதபங் கயத்தைக் கண்டு பரிவுட னீமான் கொண்டு
போதலே யன்றி நின்னைப் புறத்தினி லகற்றி வாழே
னீதுமுத் திரையென் றோதி யெழுந்துமுன் குதித்த தன்றே.
2.12.61
873இறையவன் றூதைக் கண்ட வதிசய மிதுகொ லென்ன
மறிமன மறுகி லாது வதைதனைப் பொருந்திச் சேற
லிறுதியிற் றின்ப நம்பா லெய்துமென் றகத்தி னெண்ணிச்
செறிவனங் கடந்து வேடன் றிசைதனை யடுத்த தன்றே.
2.12.62
874குருளையும் பிணையுங் கூடி வருவது குறித்து நோக்கி
முருகலர் புயத்தார் வள்ளன் முகம்மது மகிழ்ந்தன் பாக
விருளுறு மனத்த னான வேடனை யினிது கூவி
யொருபிணைக் கிரண்டுன் பாலில் வருவதென் றுரைத்திட் டாரால்.
2.12.63
875அன்னது கேட்டு வேட னோக்கியன் புற்ற காலை
முன்னிய கன்று மானு முகம்மதி னடியிற் றாழ்ந்து
பன்னிய சலாமுங் கூறிப் பாவியெற் காக வேட்டு
மன்னிய பிணையை மீட்டு மெனுமுரை வழங்கிற் றன்றே.
2.12.64
876மாடுறைந் திவைமான் கூற முகம்மது நபியும் விற்கை
வேடனை விளித்து நந்தம் பிணையினை விடுத்து நின்றன்
பீடுடைப் பசியை மாற்றிப் பெரும்பதிக் கடைக வென்றார்
வீடுபெற் றுயர்ந்து வாழ்ந்தே னெனமலர்ப் பதத்தின் வீழ்ந்தான்.
2.12.65
877பாதபங் கயத்தைப் போற்றிப் பருவர லகற்றி யாதி
தூதுவ ரிவரே யல்லா லிலையென மனத்திற் றூக்கி
வேதநா யகமே யென்பால் விருப்புறுங் கலிமாத் தன்னை
யோதுமென் றிருகை யேந்தி யுவந்துநின் றுரைப்ப தானான்.
2.12.66
878கருமுகிற் கவிகை வேந்தே கானக வேட னென்னு
முருவினன் விலங்கோ டொப்பே னுள்ளறி வுணர்வு மில்லேன்
றெருளுறப் பாவி யென்னை தீனிலைக் குரிய னென்னப்
பெரிதளித் திடுதல் நுந்நம் பெருமையிற் பெருமை யென்றான்.
2.12.67
879மதிமுக மகிழ்ச்சி கூர முகம்மது கலிமாச் சொல்ல
விதயமுற் றோதி வேட னினிதினி னீமான் கொண்டு
புதியினை வணங்கிச் செய்யுஞ் செய்தொழில் பொருந்தக் கேட்டு
நிதிமனைக் குரிய னாகி தீனிலை நெறிநின் றானே.
2.12.68
880பெறுகதி நின்னாற் பெற்றேன் பெரும்பவங் களைந்தேன் மாறாத்
தெறுகொலை விளைத்து முன்னஞ் செய்தொழி றவிழ்த்தே னீயு
மறுகலை யெறிந்து தேறு ம்னக்கலை யொடுகன் றோடு
முறுகலை யிடத்திற் போய்ச்சேர்ந் தொழுகலை முயல்தி யென்றான்.
2.12.69
881வானவர் பரவுங் கோமான் முகம்மது மானை நோக்கிக்
கானகஞ் சென்னீ யென்றார் கமலமென் பதத்திற் றாழ்ந்து
தீனிலைக் குரிய வேடன் றன்னையுந் திருந்தப் போற்றி
நானிலம் புகலப் பாரி னடந்தினஞ் சேர்ந்த தன்றே.
2.12.70
882தேனைக்குங் குமங்கள் சிந்தச் செழித்ததிண் புயத்து வள்ளல்
கானக்குவ் விடத்திற் காட்டுங் கமலமென் பதத்தைப் போற்றித்
தானைக்கும் பதிக்கு மியானே தலைவனென் பவர்போல் வேடன்
மானைக்கொண் டுவரப் போயீ மானைக்கொண் டகத்திற் புக்கான்.
2.12.71
883துடவைநன் மலரைத் தூற்றுந் தூய்நிழ லிடத்தை நீந்திப்
படர்முகிற் கவிகை யோங்கப் பாருள தெவையும் வாழ்த்த
வடவரை யனைய திண்டோள் வயவர்க ளினிது சூழக்
கடிமனை யிடத்திற் புக்கார் ஹபீபிற சூலூ மன்றே.
2.12.72

மானுக்கு பிணை நின்ற படலம் முற்றிற்று.

மூலம் எடுத்தாளப்பட்ட இணையதளம்  http://senthamil.org/library/115.htm#dt212
விளக்கம் விரைவில் சேர்க்கப்படும்.

1 comment:

  1. Pls sir. I need the explanation today. Bcoz I'm gonna write the exam tomorrow.

    ReplyDelete