Monday, August 20, 2012

கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம் - குகப்படலம்

கம்ப இராமாயணம் – அயோத்தியா காண்டம்
11. குகப்படலம்

கம்ப இராமாயணத்தில் அயோத்திய காண்டத்தில் குகப்படலம் அமைந்துள்ளது.  பரதன் முதலியோர் கங்கைக் கரைக்குப் போய் சேர்ந்த போதுஅதன் தென்கரைக்கு வந்து நின்ற குகன், ”இராமபிரானோடு போர் செய்வதற்குத் தான் இந்தப் படை திரண்டு வந்திருக்கின்றதுஎன்று நினைத்துச்  சினம் மிகக் கொள்கின்றான். குகனைப் பற்றி அமைச்சனாகிய சுமந்திரன் சொல்லக் கேட்ட பரதன், அவனைக் காண ஆவலோடு நெருங்கி வந்தான்.  மரவுரித்தரித்த நிலையில், இராமனிருக்கும் திசை நோக்கித் தொழுதவண்ணம் பரதன் வரக் கண்ட குகன், இராமனுக்குப் பின் பிறந்தார் பிழை செய்யார் எனக்கூறி படகில் ஏறி, பரதனின் அருகில் வந்து வணங்கினான்.

பரதன் கங்கையையடைதல்

பூ விரி பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரிநாடு அன்ன கழனி நாடு ஒரீஇத்
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்.         1

உரை
பூவிரி- பூத் தொழிலாற் சிறப்புற்றபொலன்கழல் -பொன்னாற்
செய்யப்பெற்ற வீரக்கழலை அணிந்தபொருஇல் தானையான்- ஒப்பற்ற
சேனையை உடையபரதன்காவிரி நாடு அன்ன- காவிரி நதியால்
வளம்பெறும் (தமிழகத்துச்) சோழ நாட்டை ஒத்த; கழனிநாடு ஒரீஇ-
வயல்வளம் பொருந்திய கோசல நாட்டை விட்டு நீங்கி; தாவரசங்கமம்
என்னும் தன்மையயாவையும் - நிலைத்திணை; இயங்கு திணை என
இரண்டாகப் பிரிக்கப்பெறும் எல்லாஉயிர்களும்; இரங்கிட- (தன் நிலை
கண்டு) வருந்தகங்கை எய்தினான் -கங்கைக்கரையை அடைந்தான்.

பூ - பொலிவு என்றும் ஆம்.  அரசகுமாரன் மரவுரி தரித்துத்துயரக்
கோலத்தோடு வருதல் கண்டு மனம் தாளாமல் எல்லா உயிர்களும் இரங்கின. ஏழு வகையானஉயிர் வர்க்கங்களைத் தாவரம்,  சங்கமம் என்ற இரண்டில் அடக்கினார். ஒரே இடத்தில்நிலையாக இருப்பன நிலைத்திணையாகிய மரம்செடி முதலிய தாவரங்களாம். இடம் விட்டுப்பெயர்ந்து  செல்லும் தன்மை  படைத்த ஊர்வன. நீர் வாழ்வன,  பறவை,  விலங்கு,  மனிதர், தேவர்  முதலியவை இயங்கு திணையாகிய சங்கமம் ஆகும்.

கம்பர் தம்முடைய நாடாகிய சோழநாட்டைக் கோசல நாட்டுக்கு
உவமையாக்கினார். உவமைபொருளினும்உயர்ந்ததாக இருக்கவேண்டும்
என்பது இலக்கணம். உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”(தொல்.
பொருள். உவம. 3) என்பதனால் இங்குக் கோசல நாட்டினும் சோழ நாடு
உயர்ந்தது என்றாயிற்று இங்ஙனம் தம் நாட்டை மீக்கூறியது கம்பரது
தாய்நாட்டுப் பற்றைக் காட்டும். சோழநாடு போலவே கோசல நாட்டிலும்
பயிரில்லாத வெற்றிடம் இல்லை என்பதாம்.
               
பரதனொடு சென்ற சேனையுள் யானையின் மிகுதி

எண்ணரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெம் கரி மதம் அத்து அருவி பாய்தலால்
உண்ணவும் குடையயும் உரித்து அன்று ஆயதே.    2

உரை
 கண் அகன் - இடம் அகன்ற; பெரும் புனல் - மிக்க நீரை உடைய;
கங்கை - கங்கையாறு; அண்ணல் - பெருமையுடைய; வெங்கரி - கொடிய
யானைகளின்; மதத்து அருவி - மத நீர்ப் பெருக்காகிய அருவி; எங்கணும்
பாய்தலால் - எல்லா இடங்களிலும் பாயப் பெறுதலால்; எண்ண அரும்
சுரும்பு தம் இனத்துக்கல்லது - கணக்கிட முடியாத வண்டுக்
கூட்டங்களுக்கெல்லாமல் (ஏனைய உயிர்களுக்கு); உண்ணவும் - குடிக்கவும்;   குடையவும் - குளித்து மூழ்கவும்; உரித்தன்று ஆயது -
உரிமையுடையதல்லாததாக ஆயிற்று.  

கங்கை நீரினும் யானைகளின் மதநீர்ப் பெருக்கு மிகுதி என்றதாம்.
எனவே, யானைகளின்மிகுதி கூறியவாறு.  வண்டுகள் மதநீரிற் படிந்து
குடைந்து உண்ணும் இயல்பின ஆதலின் அவற்றுக்குஇப்போது கங்கை நீர்
உரியதாயிற்று. மதம் பிடித்த யானையின் உடல் வெப்பம் அதிகமாகஇருக்கும் ஆதலின், வெம்மையுடைய கரி என்றும் பொருள்படும். காரம்ஈற்றசை. 2    

குதிரைகளின் மிகுதி

அடி மிசைத் தூளி புக்கு அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது; ஓர் முறைமை தேர்ந்திலேம்;
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும்
பொடி மிசைப் புரண்டவும் புரவி ஈட்டமே.          3

உரை
 அடிமிசைத் தூளி புக்கு - (குதிரைகளின்) அடியின் மேல் எழுந்த
தூசி(அமரருலகத்தில்) புகுந்துஅடைந்த தேவர்தம் - அங்கே உள்ள
தேவர்களதுமுடி உற- தலைமீது  படும்படி; பரந்தது - (தேவருலகு
முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமைதேர்ந்திலெம் - ஒரு
தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்)
ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் - பெருமூச்சு
விட்டு (நீரைப்)பருகியவையும்; நீந்தி நின்றவும் - (நீரில்) நீந்திக்கொண்டு
இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் - மண்ணில் விழுந்து
புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே- குதிரைத் தொகுதிகளே.
(வேறில்லை)

     புழுதி, மேல் படர்ந்து சென்று வானுலகத்தில் தேவர்களை
முழுக்காட்டிய செய்தி நாம்அறியோம். ஆயினும், இங்கே நீரிலும் நிலத்திலும் நின்றவை யெல்லாம் குதிரைகளே என்றதுகுதிரைப் படையின் மிகுதி  கூறியவாறு. காரம் ஈற்றசை.    
               
காலாட்படையின் மிகுதி

பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங்கடல் ஓடிற்று இல்லையால்;
மாலை ஏய் நெடுமுடி மன்னன் சேனையாம்
வேலையே மடுத்தது அக் கங்கை வெள்ளமே.      4

உரை
 அக் கங்கை வெள்ளம் - அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு;
பாலை ஏய்நிறத்தொடு - பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான்
பண்டு படர் - தான் முன்புசென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல்-
ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று  இல்லை - சென்று
கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி -பூமாலை
பொருந்திய நீண்ட மகுடத்தை உடையமன்னன் சேனை ஆம்
வேலையே - பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது - உண்டு விட்டது.

     பரதனது  சேனைக்கடல்வழிவந்த இளைப்பினால் கங்கை நீரைப்
பருகிய படியால் கங்கையில் நீரே இல்லையாகிவிட்டது; எனவேகடலில்
கங்கை கலக்கவில்லை எனஉயர்வு நவிற்சியாகக் கூறிச் சேனை மிகுதியைக்
காட்டினார். ஓல்’-ஒலி மிகுதி. பாலை ஏய்நிறத்தொடு....ஓடிற்றில்லைஎன
உரைத்து மதநீர்ப் பெருக்கு்க் கலந்தலாலும்சேனை மிகுதிஉழக்கலாலும்
கங்கையின் கங்கையின் வெண்ணிறம் மாறிக் கடலில் கலந்தது என்பாருளர்.
பின்னர்ச் சேனையாம் வேலையே மடுத்தது என வருதலின் அது ஒவ்வாமை அறிக. கடலினும் சேனைமிகுதி என்பதுகூறியதாம், யானை, குதிரை மிகுதி
கூறினார்; இப்பாடலால் காலாட்படையின் மிகுதி கூறினார் என்றலும் ஒன்று.ஆல்’, ‘அசைகள்.      
               
பரதன் பின் சென்ற படையின் அளவு

கான்தலை நண்ணிய காளை பின் படர்
தோன்றலை அவ் வழி தொடர்ந்து சென்றன
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்தாயிரத்து இரட்டி முற்றுமே.      5

உரை
 கான் தலை நண்ணிய - காட்டிடத்திற் சென்றகாளை பின்படர் -
இராமன்பின்னே (இராமனை நாடிச்) சென்ற;  தோன்றலை - இராமன்
பின்னே (இராமனை நாடிச்)சென்ற; தோன்றலை - பரதனைஅவ்வழி -
அந்த வழியிலேதொடர்ந்து சென்றன - பின்பற்றிச் சென்ற சேனைகள்;
முற்றும் -; ஆன்றவர்  உணர்த்திய -பெரியோர்களால் கணக்கிட்டு
உணர்த்தப்பெற்றமூன்று பத்து ஆயிரத்து  இரட்டி -அறுபதினாயிரம்;
அக்குரோணிகள் - அக் குரோணிகள் ஆகும்.

     அக்குரோனி என்பது ஓர் எண்ணம். யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது (21870), தேர்இருபத்தோராயிரத் தெண்ணூற் றெழுபது
(21870). குதிரை அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்து (65610), காலாள்
இலக்கத் தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது (190350) ஆக இரண்டு
இலட்சத்துப் பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது (218700) ஓர்
அக்குரோணி. இப்படிஅறுபதினாயிரம் அக்குரோணி சேனைகள் உடன்
சென்றன என்க. மகாசக்கரவர்த்திகளுக்கு எல்லாம்அறுபதினாயிரம் என்றல்
நூல் மரபு என்பர் அக்குரோணி - அகௌஹிணீ என்னும் வடிசொற்
சிதைவு என்பர். ஈற்றசை.       
               
அப்படை கங்கையை அடைந்த ஆயிடைத்
துப்பு உடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப்படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான். 6

உரை
அப்படை- அந்தச் சேனைகங்கையை அடைந்த ஆயிடை -
கங்கைக் கரையைநெருங்கிய அச்சமயத்தில் (அது கண்டு) குகன் எனப்
பெயரிய கூற்றின் ஆற்றலான்’ (2309); இப்படை எடுத்தது- இந்தச் சேனை
புறப்பட்டதுதுப்பு உடைக் கடலின் நீர் சுமந்தமேகத்தை- பவளம்
உடைய கடலிலிருந்து  நீரை முகந்து  சூல் கொண்ட கரு மேகத்தைஒப்பு
உடை அண்ணலோடு - உவமையாகப் பெற்ற கரிய திருமேனியுடைய
இராமபிரானோடுஉடற்றவேகொல் - பேர்செய்வதற்காகவேயோ;
என்று - எனக் கருதி; எடுத்தசீற்றத்தான்-மேல் எழுந்த கோபம்
உடையவனாய் தென்கரை வந்து தோன்றினான் (2313.)

     பரதன் சேனையோடு வடகரை அடைந்தான்.  குகன் தென்கரையில்
தோன்றினான். பரதனையும்சேனையையும் கண்டு ஐயப்பட்டுச் சீறுகிறான்.
அடுத்த செய்யுளின் முதற்கண் குகன் எனப் பெயரியகூற்றின் ஆற்றலான்
என்பதனை இங்குக் கொண்டு பொருள் முடிக்க. இதுமுதல் ஆறு பாடல்கள்
தொடர்ந்து (2313) ‘தென்கரை வந்து தோன்றினான்என்கின்ற இப்படலத்துப்
பதினொராம்பாடலில் முடியும். வினா? ‘கொல்’- ஐயம். ஆம்அசை  6                
               
படை வரக் கண்ட குகன் நினைவும் செயலும்

குகன் எனும் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான்
நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில்
புகை உறக் குனிப்புறும் புருவப் போர் விலான்.     7

உரை
 குகன் எனப் பெயரிய - குகன் என்ற பெயரை  உடையகூற்றின்
ஆற்றலான் - யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்;
தொகை முரண் சேனையை - கூட்டமாகஉள்ள வலிமை படைத்த (பரதன்)
சேனையைதுகளின் நோக்குவான் - ஒரு தூசி போலப்பார்ப்பவனாய்;
நகை மிக - (இகழ்ச்சிச்) சிரிப்பு அதிகமாக; கண்கள் தீ நாற -
கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; நாசியில் புகை உற - (உள்ளே
எரியும் கோபநெருப்பால்) மூக்கிலிருந்து புகை வெறிவர; குனிப்புறும் -
(கோபத்தால்) மேலேறிவளைந்தபுருவப் போர்விலான் - புருவமாகிய
போர்க்குரிய வில்லை உடையனானான்.

     மேல் பாட்டில் எடுத்த சீற்றத்தான்என்றார். குகனுக்கு வந்த
சீற்றத்தின்மெய்ப்பாடுகளை இங்கே கூறினார்.  சேனை வருவதை முன்னவர்
வந்த துகளினால்பார்த்தறிந்தான்என்றலும் ஒன்று. புருவப் போர்வில்
என்றது  உருவகம்.  புருவத்துக்கு வில் உவமை.  வளைதல்தன்மையால்;
போர்க்கு மேலும் வளைப்பர். அதுபோல இங்கே கோபத்தால் புருவம்
மேலேறி மேலும்வளைந்தது.  அதனால், ‘போர்விலான்என்றார்.  இனி
அவன் சீற்றம் தொடர்வதைத்தொடர்ந்து கூறுகிறார்.       
               
மை உறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ ஐநூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான்.     8

உரை
 மைஉற - தீமை உண்டாகஇறுதி உயிர் எலாம்வாங்குவான் -
இறுதிநாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின்
உடலிலிருந்து) வாங்குகின்ற; கை உறுகவர் அயில் பிடித்தகாலன்
தான்- கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தைஏந்தியயமனே;
ஐ- அழகிய; ஐ நூறாயிரம் உருவம் ஆயின - ஐந்து இலட்சம் வடிவம்
எடுத்தாற் போன்றஉறு மெய் தானையான்- வலிய உடம்புடைய
சேனையை உடையவன்; வில்லின் கல்வியான் -வில்வித்தையில்
தேர்ந்தவன்.

     ‘ஐ - இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர்என (1983) முன்னர்க்
கூறியதுஇருபதோடு ஐந்துவைத்துப் பெருக்க நூறு ஆகும். நூறு
ஆயிரவர் எனக் கூட்ட இலட்சம் ஆகும். முன்னர் உள்ள ஐ என்றஐந்தால்
முரண ஐந்துலட்சம் சேனைஎன வரும். அது  நோக்கி, இங்கும்
ஐந்நூறாயிரவர்என்பதற்குப் பொருள் உரைத்தாம். முன்னர் உள்ள
அழகு, வியப்பு என்னும் பொருள் பற்றிவந்தது. எண் பற்றி வந்ததன்று.
எண்ணாகக் கொள்ளின் முன்பாடற் றொகையோடு மாறுபடும் ஆதலின்
என்க. குகனது சேனை வீரர்கள் காலனை ஒத்தவர்கள் என்று அவனது
சேனைப் பெருமை கூறினார்.       

கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினான்.       9

உரை
 கட்டிய - (இடைக்கச்சில்) கட்டப்பெற்றுள்ள; கரிகையன் -
உடையவாளை உடையவன்; கடித்த வாயினன் - (பற்களால்) உதட்டைக்
கடித்துக் கொண்டிருப்பவன்; வெட்டிய மொழியினன்- கடுமையாகப் பேசும்
சொற்களை உடையவன்விழிக்கும் தீயினன்- (கண்கள்) விழித்துப்
பார்க்கும் நெருப்புத் தன்மை  உடையவன்கொட்டிய துடியினன் -
அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்குறிக்கும் கொம்பினன் -
(போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘அமர்
கிட்டியது’ - ‘போர் அருகில்வந்துவிட்டது;’ எனக் கிளரும் தோளினான்-
என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன் (ஆகி..)
(வரும் பாடலில் முடியும்).

     உதட்டைப் பற்களால் கடித்தலும்உரத்த சத்தமிட்டுக் கடுமையாகப்
பேசுதலும், கண்கள்கனல் சிந்தச் சிவந்து  பார்த்தலும் கோபத்தின்
மெய்ப்பாடுகளாம். போர் கிடைத்தால்வீரர்களாயிருப்பார் மகிழ்தல் இயல்பு.
கிட்டியது அமர்என்றதால் குகனது  தோள்கள்கிளர்ச்சியுற்றன எனற்ார்.
போரெனில் புகலும் புனைகழல் மறவர்” (புறம் 31) என்பதும் காண்க.
துடியும், கொம்பும் போர்க்காலத்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட
எழுப்பப்படும்வாத்தியங்களாகும். எனவே, இப்பாடலால் குகன் போருக்குச்
சித்தமானான் என்பதைக்கூறினார்.       
               
எலி எலாம் இப்படை; அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்;
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே.      10

உரை
இப்படை எலாம் எலி - இந்தச் (பரதன்) சேனை முழுவதும்
எலிகளாகும்; யான்அரவம் - யான் இந்த எலிகளைத் தின்றொழிக்கும்
பாம்பாவேன்;’ என - என்று வீரவார்த்தை பேசி; வலி உலாம் - வலிமை
நிரம்பிய; உலகினில் வாழும் -உலகத்தில் வசிக்கின்ற; வள் உகிர்ப் புலி
எலாம் - வளவிய நகத்தை உடைய புலிகள்எல்லாம்; ஒரு வழிப் புகுந்த
போல- ஒரே இடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும்படி உள்ள; ஒலி
உலாம் சேனையை- (தனது) ஆர்ப் பொலி மிகுந்த(வேட்டுவச்) சேனையை;
உவந்து கூவினான் - மகிழ்ச்சியால் (போகுக்கு) அழைத்தன.(ஆகி).

     ‘இப்படைஎன்றது பரதன் சேனையை. படைகளை எலியாகவும்,
தன்னைப் பாம்பாகவும் உருவகித்தது எலிக்கு நாகம் பகை என்பதுபற்றி.
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை, நாகம் உயிர்ப்பக் கெடும்” (குறள்
763) என்பதனை ஈண்டு ஒப்பு நோக்குக. அரவின் நாமத்தை எலி இருந்து
ஓதினால் அதற்கு, விரவும் நன்மை என்”, “புற்றில் நின்று வல் அரவினம்
புறப்படப் பொருமி, இற்றது எம்வலி என விரைந்து இரிதரும் எலி” (6238,
9325) எனக் கம்பர் பின்னும் கூறுவர். பைரிவி நாகத் தைவாய்ப் பிறந்த,
ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல, ஒழிந்தோர் ஒழியஎன (பெருங். 1.56:
273 - 5) வருவதும் இக்கருத்தினதாதல் அறிக. நகத்துக்கு வளமாவது
கூர்மையாம். வாளுடைய வீரரைக் கூரிய நகம் உடைய புலியாக்கினார் என்க.
உருவகம், உவமையாம். வலிமை நிரம்பிய உலகம் என்றது உலகில் உள்ள
ஆற்றலை நோக்கி. இனி வளி உலாம் உலகுஎன்பாரும் உளர். அது
பொருந்துமேற்கொள்க.       
               
மருங்கு அடை தனெ் கரை வந்து தோன்றினான்;
ஒருங்கு அடை நெடும் படை ஒல் என் ஆர்ப்பினோடு
அருங் கடை யுகம் தனில் அசனி மா மழை
கருங்கடல் கிளர்ந்து என கலந்து சூழவே.          11

உரை
 ஒருங்கு அடை நெடும் படை - ஒன்று சேர்ந்து  வந்த பெரிய
(வேட்டுவச்) சேனை; அருங் கடை உகம்தனில் - அரிய கடையூழிக்
கூாலத்தில்; அசனி மா மழை - இடியோடுகூடிய மேகமும்; கருங்கடல் -
கரிய கடலும்கிளர்ந்து  என - (ஒலித்து) மிக்குஎழுந்தார்  போல;
கலந்து சூழ - ஒன்று சேர்ந்து தன்னைச் சுற்றிவர; மருங்கு அடை-
பக்கத்தில் உள்ள; தென்கரை - (கங்கையாற்றின்) தெற்குக் கரையில்; வந்து
தோன்றினான் - (குகன் என முடிக்க)

     படைகளின் மிகுதியும், ஆரவாரம்சூழ்தலும் பற்றி  ஊழிக்காலத்து
இடிமேகமும், பொங்குங்கடலும் சேர்ந்தது போல என்று உவமை கூறினார்.
வந்து சேர்ந்தான் என்னாது தோன்றினான்என்றது, பரதனும் அவன்
சேனையில் உள்ளாரும், பிறரும் தனது பேராற்றலும் வீராவேசமும்
காணும்படி வந்தடைந்தான் என்பதுபற்றி. வடகரையில் பரதனும்,
தென்கரையில் குகனும் நின்றார் ஆதலின்தோன்றினான்என்றார் எனலும் ஆம்.  
               
குகன் தன் படையினர்க்கு இட்ட கட்டளை

தோன்றிய புளிஞரை நோக்கிச் சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென்; என் உயிர் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம் என்றான்.      12

உரை
   (தென்கரை வந்து  சேர்ந்த குகன்) தோன்றிய புளிஞரை நோக்கி -
(தென்கரையில்தன்னால் அழைக்கப்பட்டுத் தன்முன் வந்து) தோன்றிய
வேடர்களைப் பார்த்து; ‘ஆன்ற பேர்அரசு - நிரம்பிய பெரிய
அரசாட்சியைஎன் உயிர்த் துணைவற்கு - என் உயிர்போலச் சிறந்த
தோழனாகிய இராமனுக்கு; ஈகுவான் - தருவதற்காக; சூழ்ச்சியின்ஊன்றிய
சேனையை - (அதனை அவன் பெறாமல் தடுக்கும்) ஆலோசனையோடு
எதிரில் (வடகரையில்)கால் ஊன்றி நிற்கும் (இப்பரதனது) சேனையை;
உம்பர் ஏற்றுதற்கு - (போரில்தொலைத்து) வீரசுவர்க்கத்தே செல்ல
விடுதற்குஏன்றனென் - தொடங்கியுள்ளேன்நீர் அமைதி ஆம்’ -
நீங்களும் இதற்கு உடன்படுவீர்களாகஎன்றான் - என்றுசொன்னான்.

     அரசன் கீழது சேனையாயினும், தன் கருத்தை அவர்கள்பால்
தெரிவித்து அவர்கள் உடன்பாடுவேண்டல் பண்பாட்டின் சிறப்பினைத்
தெரிவிக்கும்.  போரில் இறந்தார் வீரசுவர்க்கம்பெறுதல் நூல் முடிபு
ஆதலின் உம்பர் ஏற்றுதல்என்று  அதனைக் கூறினான். ஈகுவான்
என்னும் வினையெச்சம், ‘ஏற்றுதற்குஎன்னும் வினையொடு முடிந்தது.      
               
துடி எறி; நெறிகளும் துறையும் சுற்றுற
ஒடி எறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி; கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி பட எனப் பெயர்த்தும் கூறுவான்.         13

உரை
 ‘துடிஎறி - போர்ப் பறைகளை அடியுங்கள்; நெறிகளும்துறையும்-
வருவதற்குரிய வழிகளையும் (தென்கரையில்) ஏறுதற்குரிய துறைகளையும்;
ஓடியெறி - அழித்துநீக்கி, இல்லாமல் செய்யுங்கள்; அம்பிகள்யாதும்
ஒட்டலிர் - தோணிகளுள்ஒன்றையும் (கங்கையில்) ஓட்டாதீர்கள்; கடிஎறி
கங்கையின் - விரைந்து அலைவீசிவருகின்ற கங்கையாற்றின்கரை
வந்தோர்களை - தென்கரைக்கு (தரமாக முயன்று)வந்தவர்களைபிடி-
பிடியுங்கள்; பட எறி’ - இறக்கும்படிஅழியுங்கள்; எனா - என்று (குகன்)
கூறிபெயர்த்தும் - மேலும்; கூறுவான்- சில வீரவார்த்தைகளையும்
சொல்லுவான் ஆனான்.

     ‘துடிஎன்பது ஈண்டுப் போர்ப்பறைகளுக்கு உபலக்கணம். துடியொன்று
கூறவே மற்றப் பறைகளும் கொள்ளப்பட்டன. பரதனது சேனை இராமன்மேல்
படையெடுத்து வந்துள்ளதாகக் குகன் கருதினான் ஆதலின், அச்சேனை
தென்கரை அடையாதபடி எச்சரிக்கையாகத் தன் சேனைகளுக்குக் கட்டளை
இடுகிறான் என்க. மேலும், அச் சேனை வீரர்கள் உற்சாகம் அடைவதற்காகச்
சில வார்த்தைகள் மேல் கூறுகிறான். கடி எறிகாவலாக வை
என்றுரைப்பதும் உண்டு; அது பிடி என்பதற்குப் பின் உரைப்பின்
பொருந்தும். தோணிகள் ஓட்டாதீர்என்றான் ஆதலின் விரைந்து
அலைவீசி ஓடும்கங்கையில் தோணிகள் உதவியின்றித் தென்கரை
அடைதல் இயலாது என்பதைப் பின்னர்க் கூறினான். அதனையும் மீறித் தம்
ஆற்றலால் வருவாரைப் பிடி’, ‘பட எறிஎன்பது அதன்பின் கூறப்பட்டது.
குகனது ஆற்றொழுக்கான சிந்தனை யோட்டத்தை இப்பாடல் சுட்டிச்
செல்கிற அழகு காண்க. எறி’, ‘பிடிஎன வீரரைத் தனித்தனி நோக்கி
ஒருமையிலும், ‘ஓட்டலிர்எனக் கூட்டமாக பார்த்துப் பன்மையிலும்
கூறினான் என்க. இனி ஒருமை பன்மை மயக்கம் எனினும் அமையும்.      
               
குகன் மீட்டும் கூறல்

அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர்
    நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
    மன்னரும் வந்தாரே!
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன,
    செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய் குகன்
    என்று எனை ஓதாரோ?                                     14

உரை
  ‘என் ஆருயிர் நாயகன் - என் அரிய உயிர்த் துணைவனாகிய;
அஞ்சனவண்ணன்- மை போலும் கரிய நிறமான திருமேனி அழகனாகிய
இராமபிரான்; அரசு ஆளாமே - ஆட்சிஉரிமை எய்தாதபடி;
வஞ்சனையால் - சூழ்ச்சியால்எய்திய -(அவ்வரசாட்சியைக் கைப்பற்றி)
அடைந்த; மன்னரும் - அரசரும் (பரதரும்)வந்தாரே - (இதோ
என்னருகில்) வந்துள்ளார்கள் அன்றோ!தீ உமிழ்கின்றனசெஞ்சரம் -
நெருப்பைக் கக்குகின்றனவான (என்) சிவந்த அம்புகள்செல்லாவோ -
(இவர்கள் மேற்) செல்லாமல் போய்விடுமோ?-; இவர் உஞ்சு போய்விடின்-
இவர்கள்(என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும்
இடத்துக்குப்) போய்விட்டால்; ‘நாய்க்குகன்என்று - (உலகோர்) குகன்
றாய் போன்ற கீழ்த்தன்மை உடையவன் என்றுஎனை - என்னைப் பற்றி;
ஓதாரோ’ - சொல்லாமல் இருப்பார்களா? (தொடரும்)

     இவன் ஈடுபட்டது அவன் திருமேனி அழகில் ஆதலின், அது
தனக்கும் அவனுக்கும் ஒன்றாயிருத்தலின் அஞ்சன வண்ணன்என்று இது
மேலிட்டு வந்தது என்க. இராமன் பெற வேண்டிய அரசைப் பரதன் பெற்றது
பற்றியது சீற்றம் என்பதைத் தெரிவித்தான். நாய்என்பது ஒருவரைக்
கீழ்மைப்படுத்திப் பேசுதற்குப் பயன்படுவது ஆதலின் இங்கே நாய்க்குகன்
என்று உலகம் தன்னை இழித்துப் பேசும் என்றான். பரதன் படைகளைப்
போகவிடில் இராமன்பால் காட்டும் நன்றியுணர்வுக்கு மாறானது; அச்செயலைச் செய்யும் குகனுக்கு நன்றியுணர்வி்ல் சிறந்த நாயைக் கூறலாமோ எனின், அற்றன்று, நாய் நன்றியுணர்விற் சிறந்ததாயினும் தன் வீட்டுக்குடையவன்பால் காட்டும் நன்றியுணர்வைத் தன் வீட்டில் திருட வரும் திருடன் தனக்கோர் உணவு கொடுத்த வழி அவன்பாலும் நன்றி காட்டிக் குரைக்காது ஒரோவழி இருந்துவிடல் பற்றி அதன் நன்றியுணர்வும் சிறப்பின்மை கண்டு உலகம்  அதனைக் கீழ்மைப்படுத்திக் கூறுதல் தெளிவாம். குகன் நாய்என்ற  சொல்வதினும் நாய்க் குகன்எனல் மேலும் இளிவரலாம். உரையினும் பாவத்துக்கேகம்பர் இது போன்ற இடங்களில் முதன்மை தருதல்  வெள்ளிடை. ஏகார, ஓகாரங்கள் ஐய, வினாப் பொருளில் வந்துள்ளன.
மன்னர்என்பது இகழ்ச்சிக் குறிப்பு. உயர்சொல்தானே குறிப்பு நிலையால்
இழிபு விளக்கிற்று (தொல். சொல். சிளவி. சேனா.27).                  
               
ஆழ நெடுந்திரை ஆறு
    கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு
    விலங்கிடும் வில்லாேளா?
தோழமை என்று அவர் சொல்லிய
    சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன்
    என்று, எனை ஏசாரோ?                        15

உரை
இவர் -; ஆழம் - ஆழத்தையும்நெடுந் திரை - நீண்ட பெரிய
அலைகளையும்  உடைய; ஆறு - கங்கையாற்றைகடந்து - தாண்டி;
போவாரோ- அப்பால் ( தென்கரைப் பகுதிக்குச் ) செல்வார்களா?
(மாட்டார்)வேழ நெடும்படை- யானைகளை உடைய நீண்ட பெரிய
சேனையை; கண்டு - பார்த்து (பயந்து)விலங்கிடும்- புறமுதுகு காட்டி
விலகிச் செல்லுகின்றவில் ஆளோ - வில் வீரனோ (நான்); ‘தோழமை
என்று- (உனக்கும் எனக்கும்) நட்பு என்பதாக; அவர் சொல்லிய சொல்-
அந்த இராமபிரான் சொல்லிய வார்த்தை; ஒரு சொல் அன்றோ -
(காப்பாற்ற,மதிக்கப்பட வேண்டிய) ஒப்பற்ற வார்த்தை அல்லவா?
(அந்நட்புக்கு மாறாக இவர்களைப்போகவிட்டால்); ஏழைமை வேடன் -
அற்பனாகிய இந்த வேடன்இறந்திலன் -(இவ்வாறு இராமனோடு நட்புச்
செய்து, இப்பொழுது  சேனைக்குப் பயந்து இராமனை எதிர்க்கும்பரதனோடு
நட்பாய் மானங்கெட்டு வாழ்தலைவிட) இறக்கலாமே, அது தானும்
செய்தானிலனே; என்றுஎனை ஏசாரோ - என்றிவ்வாறு  உலகத்தார்
என்னைப் பழியாமல் விடுவார்களா - (பழிப்பர்)(தொடரும்)

     ‘போவாரோ’, ‘ஏசாரோஎன்பனவற்றுள் எதிர்மறை இறுதியில்
ஓகாரங்கள் ஐயவினாப் பொருளில் வந்துள்ளன. இனி இரண்டு எதிர்மறை
உடன் பாட்டுப் பொருள் என்ற கருத்தில் ’ ‘என்ற இரண்டையும்
எதிர்மறை எனக் கொண்டு கூறலும் ஒன்று. இவ்வாறே முன்னுள்ளவற்றிற்கும்,
பின்வருவனவற்றிற்கும் காண்க. தோழமை என்று அவர் சொல்லிய
சொல்லைக்குகன் செய்குவென் அடிமை’ (1969) என்றபொழுது அவன்கூறிய
கொள்கை (தொண்டன்) கேட்ட அண்ணல், அதனை விலக்கி யாதினும்
இனிய நண்ப” (1970) என்றும், “என் உயிர் அனையார் நீ, இளவல் உன்
இளையான், இந் நன்றுதலவள் நின்கேள்” (1988) என்றும், “முன்பு உளெம்
ஒரு நால்வேம்.....இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்என்றும் (1988)
இராமன் கூறிவற்றைக் கொண்டு அறிக. ஏழை ஏதலன் கீழ்மகன்
என்னாது.....தோழன் நீ எனக்கு” (திவ்யப். 1418) என ஆழ்வார் கூறியதும்
இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ
தோழன்; மங்கை கொழுந்தி எனச் சொன்ன, வாழி நண்பு” (5091) என்று
இவரே பிற்கூறியது கொண்டும் அறியலாம். தோழமைஎன்றது பண்பாகு
பெயராய்த் தோழன் என்பதைக் குறித்தது. காட்டிலே வாழும் வேடுவராகிய
தமக்கு வேழ நெடும்படைஒரு பொருட்டல்ல என்பது கருதி அதனைக்
கூறினான். யானை உடைய படை காண்டல் முன்னினிதே” (இனியவை 5)
என்பதும் காண்க. ஏழைமைஎன்பது அறியாமைப் பொருளதாயினும் ஈண்டு
எளிமை, அற்பம் என இகழ்பொருளில் வந்தது.       
               
முன்னவன் என்று நினைந்திலன்;
    மொய் புலி அன்னான், ஓர்
பின்னவன் நின்றனன் என்றிலன்;
    அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது?
    இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில், வேடர்
    விடும் சரம் வாயாவோ?                 16

உரை
இவன் - இப் பரதன்; “முன்னவன்என்று நினைந்திலன் -
(இராமபிரானைக்குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை;
மொய் புலி அன்னான் ஓர் பின்னவன்நின்றனன்” - வலிமை
நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக
உடன் உள்ளான்என்றிலன் - என்று கருதினானும் இல்லை; அன்னவை
பேசானேல் -அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி
நினைக்காமல் விட்டாலும்; என்னைஇகழ்ந்தது என் - (இடையே கங்கைக்
கரை யுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல்)இகழ்ந்தது என
கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ - (இவன் இராமன்பால்
போர்செய்வது)இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?;
வேடர் விடும் சரம் - வேடர்கள்விடுகின்ற அம்புகள்; மன்னவர்
நெஞ்சினில் - அரசர்கள் மார்பில்வாயாவோ’ -தைத்து  உள் நுழைய
மாட்டாவோ?

     இராமனைத் தமையன் என்று கருதியிருந்தால் அரசை அவன்பால்
கொடுத்திருப்பான், புலி அன்னஇலக்குவன் இராமன் உடன் உள்ளான்
என்று கருதினால் போருக்கு வராமல் இருந்திருப்பான் என்றான்.என்
ஆற்றலையும் உணராதவனாய் உள்ளானே என்று இகழ்ந்தானாம் - இறுதியடி
இகழ்ச்சிக்குறிப்பாகப் பேசிய வீரவசனம். அன்னவை பேசானேல்பேசுதல்
எண்ணுதல் என்ற பொருளில்வந்துள்ளது. எண்ணுதலைப் பேசுதல் என்றது
உபசார வழக்குஆகும்.       
               
பாவமும் நின்ற பெரும்பழியும்
    பகை நண்போடும்
ஏவமும் என்பவை மண்ணுலகு
    ஆள்பவர் எண்ணாரோ?
ஆ! அது போக! என் ஆர் உயிர்த்
    தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும் ஆர்
    உயிரும் கொடு போயன்றோ?                    17

உரை
மண் உலகு ஆள்பவர் - (இப்) பூவுலகத்தை ஆள்கின்ற அரசர்கள்;
பாவமும் -(தாம் ஒரு செயலைச் செய்கிறபோது  அதனால் விளையும்)
பாவத்தையும்நின்ற பெரும் பழியும்- (செயல்முடிந்த பிறகு அதனால்)
தம்மேல் நின்ற பெரும் பழியையும்; பகை நண்போடும்-பகைவர் இன்னார்,
நண்பர்கள் இன்னார் என்பவற்றையும்; ஏவமும் - விளையும்குற்றங்களையும்;
என்பவை - என்று இதுபோலச் சொல்லப்படுபவைகளையும்; எண்ணாரோ-
நினைக்கமாட்டார்களோ?; ஆவது போக - அது கிடக்கட்டும்; என்
ஆருயிர்த்தோழமை தந்தான் மேல் போவது - எனக்கு அரிய
உயிரோடொத்த நட்புறவைத் தந்தஇராமன்மேல் படையெடுத்துச் செல்வது;
ஆர் உயிரும் சேனையும் கொடு போயன்றோ - தம்முடைய அரிய
உயிரையும் சேனைகளையும் (எனக்குத் தப்பி) உடன் கொண்டு சென்ற
பிறகல்லவா(முடியும்)?

     இங்கே அண்ணனைக்கொல்வதால் ஏற்படும் பழி, பாவம்
முதலியவற்றைக் கருதுகின்றானில்லை என்னும் கருத்தால் இவ்வாறு
கூறினான். பகை நண்பு என்பன போர்க்குச் செல்கிறவர் தம் எதிரிகளுக்குத்
தற்போது பகைவர் யார்? நண்பர் யார்? என்பதை அறிந்து சேறல்
வேண்டும் என்பது. அவ்வாறு அறியின் இராமனுக்கு நண்பன் குகன் என
அறிந்து சேறல் வேண்டும் என்பது. அவ்வாறு அறியின் இராமனுக்கு
நண்பன் குகன் என அறிந்து படையெடுத்துச் செல்வதைத் தவிர்ப்பான்
பரதன் என்றானாம். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்” (குறள் 471) என்பதனுள் துணைவலி
என்றதனை இதன்கண் வைத்து அறிக. செல்வம் வந்துற்ற காலைத்
தெய்வமும் சிறிது பேணார், சொல்வன நினைந்து சொல்லார் சுற்றமும்
துணையும் விளைவும் எண்ணார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்” (வில்லி
பாரதம்27. 141) என்னும் பாடற் கருத்தைக் குகண் கூற்றோடு ஒப்புக்
காணலாம். ஏவம் - எவ்வம் என்பதன் திரிபு. குற்றம் அல்லது தீமை எனப்
பொருள்படும். ஏவம் பாராய்” (1532)என்பது காண்க......ஆ அது போக’ -
அந்த அது  போகட்டும் மேலே சொல்லியவைகளைஇவன் சிந்திக்காமல்
விட்டாலும் விடட்டும்என்றானாம் குகன். நான் இவனையும்
சேனையையும் உயிரோடு போகவிட்டால்தானே இராமன் இருக்கும்
இடம்வரை சென்று இவன் போர்செய் இயலும் என்றுகூறினான். ஓகாரங்கள்
வினாப் பொருளன.          
               
அருந்தவம் என் துணை ஆள,
    இவன் புவி ஆள்வானோ?
மருந்து எனின் அன்று உயிர்; வண் புகழ்
    கொண்டு பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை உகந்தவர்
    தம்மொடு போகாதோ
இருந்ததும் நன்று கழிக்குவென்
    என்கடன் இன்றோடே.        18

உரை
 என் துணை - எனக்கு நண்பனாகிய இராமன்; அருந் தவம் ஆள-
அரியதவத்தைச் செய்துகொண்டிருக்கஇவன் - இந்தப் பரதன்புவி
ஆள்வானோ? -உலகத்தை ஆட்சி செய்வானோ? (அதையும்
பார்த்துவிடுவோம்); உயிர் -  என்னுடையஉயிர்; மருந்து  எனின் -
(கிடைத்தற்கரிய) தேவர் அமுதமோ என்றால்அன்று -அல்ல (நான்
அப்படி அதை அரிதாக எண்ணிப் பாதுகாக்க நினைக்க வில்லை);
வண்புகழ்கொண்டு- (இராமனுக்காகப் பரதனை எதிர்த்து) அதனால் சிறந்த
புகழைப் பெற்று; பின் மாயேனோ- அதன் பிறகு உயிர் துறக்க
மாட்டேனோ?;  பொருந்திய கேண்மை - மிகவும் ஒட்டியஉறவை;
உகந்தவர் தம்மொடு - என்பால் கொண்டு மகிழ்ந்த இராம
இலக்குவர்களோடு; போகாதே - உடன் செல்லாமல்; இருந்தது நன்று -
(நான்) இங்கேயே தங்கியது நல்லதாய்ப் போயிற்று; என்கடன் - (நான்)
இராமனுக்குச் செய்ய வேண்டிய கடமையை; இன்றோடு கழிக்குவென் -
இன்றைக்கே செய்து முடிப்பேன்.

     என் துணை - என் அண்ணன் எனலும் ஆகும். முன்பு உளெம், ஒரு
நால்வேம்; முடிவு உளது என உன்னா, அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளெர் ஆனோம்” (1995) என்பது கொண்டு இராமன் குகன்
அண்ணன் தம்பி முறையாதல் அறியலாம் . உயிர் மருந்து எனின் அன்று
என்பதற்கு, “மருந்தோ மற்று ஊன் ஒம்பும் வாழ்க்கை, பெருந்தகைமை, பீடு
அழிய வந்த இடத்து” (குறள் 968) என்பது பற்றி உரை காண்க. மருந்து -
உயிரைக் காப்பாற்றி நிறுத்தவல்ல சஞ்சீவினி போன்ற மருந்தும் ஆகும்.
நன்றுஎன்பதற்கு நன்றாயிருந்ததுஎனத் தன்னிகழ்ச்சியாகப் பொருள் கூறி,
நான் அவர்களுடனேயே போயிருக்க வேண்டும், போகாமல் தங்கியது நன்று
என்று கூறுதல் உண்டு. அப்பொருள் இங்கு ஏற்குமேல் கொள்க.
இராமனுக்குப் பகைவராய் உள்ளாரை அழித்தலைப் தன் கடமை செய்தலாகக்
குகன் கருதினன் என்க. காரம் ஈற்றசை.    
               
தும்பியும் மாவும் மிடைந்த
    பெரும்படை சூழ்வாரும்
வம்பு இயல் தார் இவர் வாள் வலி
    கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்! துறை
    ஓடம் விலக்கீரோ
நம்பி முன்னே இனி நம் உயிர்
    மாய்வது நன்று அன்றோ?                             19

உரை
 தும்பியும் - யானைகளும்மாவும் - குதிரைகளும்மிடைந்த -
நெருங்கிய; பெரும்படை - பெரிய சேனையால்சூழ்வு ஆரும் -
சுற்றப்படுதல்பொருந்தியவம்பு இயல் தார் இவர் - மணம் வீசுகின்ற
மாலையணிந்துள்ள இவர்கள்; வாள்வலி - படையின் ஆற்றல்கங்கை
கடந்து அன்றோ - இக் கங்கையாற்றைக்கடந்து  போன பிறகு அல்லவா
(காட்டமுடியும்?);  வெம்பிய வேடர் உளீர்! - (இவர்களைக்கண்டு) மனப்
புழுக்கம் அடைந்துள்ள வேடர்களாய் உள்ளவர்களே!; துறை ஓடம்
விலக்கீரோ - நீர்த்துறையிலே இவர்களுக்கு ஓடம் விடுவதை
நிறுத்திவிடுங்கள். (ஒருவேளை இவர் நம்மைத்தடுத்து மேற்செல்லும்
ஆற்றல் உடையவராயினும் இவரோடு போரிட்டு)நம்பி முன்னே -
இராமபிரானுக்கு முன்னாலேயேநம் உயிர் மாய்வது - நமது உயிர்
அழிந்து போவது; இனி நன்று அன்றோ? - இனிமேல் நல்லது அல்லவா?

     “ஆழ நெடுந்திரை ஆறு கடந்து  இவர் போவாரோ”, “இவ் எல்லை
கடந்து  அன்றோ”, “சேனையும்ஆர் உயிரும் கொடு போய் அன்றோ
என்பதனை ஒப்புக் காண்க. மணம் வீசும் மாலையைப்பரதனுக்குக்
குகன்தானே இட்டான் எனக் கொள்க; அவன் படை எடுத்து  வந்தான் என
நினைத்தலின், தந்தை இறந்ததோடு தமையன் காடு செல்லவும் தான்
காரணமாக இருத்தலின் பழிசுமந்தேன் என்று காடுநோக்கிக் கண்ணீரோடு
வருகின்ற பரதன்மணம் வீசும் மாலை அணிந்து  வந்தான் என்றல்
பொருந்தாதாதலின்,  ‘நீங்கள் ஓடம் ஓட்டாவிடினும் அவர்களே ஓடத்தைப்
பயன்படுத்தி அக்கரைசெல்லக்கூடும். ஆதலின், கங்கையில் ஓடங்களை
அப்புறப்படுத்துங்கள்என்று தன் சேனைவீரர்களுக்குக் குகன் கட்டளை
இட்டான். போரில் வெற்றி தோல்வி உறுதி அல்ல ஆதலின், ‘நம்பி முன்னே
இனி நம் உயிர் மாய்வது நன்றுஎன்றானாம். காரம் வினாப் பொருட்டு.  
               
போன படைத் தலை வீரர்
    தமக்கு இரை போதா இச்
சேனை கிடக்கிடு; தேவர் வரின்,
    சிலை மா மேகம்
சோனை படக் குடர் சூறை
    பட சுடர் வாேளாடும்
தானை படத் தனி யானை
    படத் திரள் சாயேனோ.       20

உரை
 போன - (நம்முடன்) வந்துள்ளபடைத்தலை  வீரர் தமக்கு -
சேனையின்கண் உள்ள வீரர்களுக்கு; இரை போதா - (ஒருவேளைப்)
போர்க்கும் பற்றாத; இச்சேனை - இந்தப் (பரதனது) சேனை; கிடக்கிடு-
கிடக்கட்டும்; தேவர்வரின்- தேவர்களே (படையெடுத்து) வந்தாலும்; சிலை
மா மேகம் - என் வில்லாகியகரிய மேகம்சோனை பட - அம்பு
மழையைச் சொரியகுடர் சூறைபட -எதிரிகளது  குடர்கள் சிதைந்து
அலையதானை சுடர்வாளோடும் பட - எதிரிச் சேனைகள்தம்கையிற்
பிடித்த படைக்கலங்களோடும் இறக்க; தனி யானை பட - ஒப்பற்ற
யானைகள்அழிய; திரள் சாயேனோ - (அப்படைக்) கூட்டத்தை
நிலைகுலைக்காமல் விடுவேனோ?

     இரை என்பது உணவு. இங்கே வீரர்களுக்கு உணவாவது போர்
ஆதலின், ‘ஒருவேலைப் போர்எனப்பொருள் உரைத்தாம். போன
படைத்தலை வீரர்இராம இலக்குவனர் என்றலும் ஒன்று. நம்மைத்தப்பிச்
சென்றாலும் இராம இலக்குவர்களோடு இரை போதா இச்சேனை என்றானாம்.
தேவர் வரின்’- வரினும் என்ற சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.
வினாப்பொருட்டு.       
               
நின்ற கொடைக் கை என் அன்பன்
    உடுக்க, நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர்
    பலத்தை, என் அம்பாலே
கொன்று குவித்த நிணம் கொள்
    பிணக் குவை கொண்டு ஓடித்
துன்று திரைக் கடல், கங்கை
    மடுத்து இடை தூராதோ?                                21

உரை
 அன்று- (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற
கை - (முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச்
செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்-என் அன்பிற்குரிய
இராமன்; நெடுஞ் சீரை உடுக்க - பெரியமரவுரியைஉடுக்குமாறு;
கொடுத்தவள் - (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்மைந்தர்
பலத்தை - மகனார் ஆன பரதன் சேனையைஎன்அம்பால் கொன்று
குவித்த - என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள்
பிணக்குவை - கொழுப்பு  மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை;
கங்கை - இந்தக் கங்கா நதி; கொண்டுஓடி - இழுத்துக் கொண்டு
விரைந்து சென்று; துன்று திரைக்கடல் - நெருங்கியஅலைகளை உடைய
கடலில்மடுத்து - அவற்றைச் சேர்த்து;இடை தூராதோ?- அக்கடல்
இடத்தைத் தூர்த்து விடாதோ? (தூர்த்துவிடும்)

     ‘நின்ற கொடைக் கைஎன்பதற்கு என்றும் வள்ளலாக நின்ற எனவும்
பொருள் உரைக்கலாம்.சீரை - மரவுரி.  அதன் பொல்லாங்கு கருதி நெடுஞ்
சீரை என்றான். குகன் தன் ஆற்றாமையால்.மைந்தாஎன்றது பரத சத்துருக்
கனர்களையும் ஆம்.  சத்துருக்கனன் கைகேயியின் மகனல்லன்ஆயினும்
பரதன் துணையாதலின் மைந்தர்என ஒன்றாக்கிக் குறித்தான் குகன் எனல்
அமையும்என்க. பலம்என்றது  சேனையை.  
               
ஆடு கொடிப் படை சாடி,
    அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார் ‘‘ எனும்
    இப் புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு
    இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி,
    எடுத்தது காணீரோ?                               22

உரை
 ஆடு - அசையும்கொடி - கொடிகளை உடைய; படை -
சேனைகளைசாடி - கொன்றழித்துஅறத்தவர் ஆள - தருமத்தின்
துணைவர்களாய இராமஇலக்குவர்கள் ஆளும்படி; வேடு- வேடர்கள்; பார்
கொடுத்தது - (இந்தப்)பூமியை மீட்டுக் கொடுத்தனர்எனும் இப்புகழ்
மேவீர் - என்கின்ற இந்தப் புகழைஅடையுங்கள்நாடு கொடுத்த என்
நாயகனுக்கு - (இவர்கள் ஆளும்படி) தான் ஆட்சியுரியவேண்டிய
நாட்டைக் கொடுத்துவிட்டு வந்த என் தலைவனாகிய இராமனுக்குஇவர் -
இந்தப்பரதர்நாம் ஆளும் காடு - நாம் ஆட்சி செயும் நமக்கு
உரிமையாகிய இந்தக்காட்டையும்; கொடுக்கிலர் ஆகி - ஆட்சி செய்ய
மனம் பொறாதவராயஎடுத்தது- படை எடுத்து  வந்த படியை;
காணீர் - காணுங்கள்.

     போர் வீரர்களைநோக்கி இதனுள் உள்ள நியாய அநியாயங்களை
அவர்களுக்கு விளக்கி,அவரவரது மனோநிலைக்கு ஏற்பத் தூண்டிப்
போர்க்கு அவர்களைத் தயார்  செய்வது  அறிந்துஇன்புறத்தக்கது. போர்
என்றால் தினவும் தோள்களை உடையவர்களைப் பார்த்து, “ஆடு கொடிப்
படைசாடிஎன்றான். அறத்தின் பொருட்டுத் தம்முயிரையும் கொடுக்கும்
மனம் உடைய வீரர்களைநோக்கி, “அறத்தவரே ஆளஎன்றான். புகழ்
ஆசை உடையாரைப் பார்த்து, “வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ்
மேவீர்என்றான். தம்முடைமையைப் பறிப்பாரைப் பொறாத குணம் உடைய
வீரரைப் பார்த்து  நாம ஆளும் காடு கொடுக்கிலர் ஆகிஎன்றான்.
இவ்வாறு பல்வேறு மனநிலையை வீரர்களையும் அவரவர்க்கு ஏற்பப் பேசிப்
போர்க்குத் தயார் செய்வதாகக் குகனைப்பேச வைத்தகம்பர் கவி இனிமை
தேரும்தொறும் இனிதாம் தமிழ்க்கு எடுத்துக் காட்டாகும். தேற்றம்.
ஓகாரம் வினாப் பொருட்டு.        
               
மா முனிவர்க்கு உறவு ஆகி,
    வனத்திடையே வாழும்
கோ முனியத் தகும் என்று,
    மனத்து இறை கொள்ளாதே,
ஏ முனை உற்றிடில், ஏழு
    கடல் படை என்றாலும்
ஆ முனையின் சிறு கூழ் என
    இப்பொழுது ஆகாதோ?                      23

உரை
 ‘மா முனிவர்க்கு - பெரிய தவசிகளுக்கு; உறவாகி - இனிய
சுற்றமாகி; வனத்திடையே வாழும் - காட்டிடத்தில் வாழும்; கோ -
இராமன்; முனியத் தகும்’- (தன் தம்பியான பரதனை எதிர்த்தால் என்னை)
வெறுத்துக் கோபிப்பான்; என்று -; மனத்துஇறை கொள்ளாது -
மனத்தின்கண் சிறிதும் நினையாமல்; ஏ முனை உற்றிடில் - போர்முனையில்
சென்று (பரதனைச்) சந்தித்துப் போரிட்டால்; இப்பொழுது -இந்நேரத்தில்;
ஏழு கடற் படை என்றாலும் - ஏழு கடல் அளவு சேனை என்றாலும்;
முனையின் சிறு கூழ் என - பசு தின்பதற்கு முனைந்தவழி அதன் எதிரில்
கிடந்த சிறிய புல்என்று சொல்லும்படி; ஆகாதோ - அனைத்தும் அழிந்து
போகாதோ (போகும்.)

     இராமனது குணங்களைக் குகன் நன்குணர்ந்தவன் ஆதலின்,
இராமனுக்கு உதவுவதாக, நன்றிக்கடன்செய்வதாக இதுகாறும் கூறிப் பரதனை
எதிர்க்கத் துணிந்தவன், அச்செயல் இராமனுக்கு உகப்பாகாது என்பதையும்
அறிந்து வைத்துள்ளான் என்க. அது இடைப்புகுந்த வழி போரின் வேகம்
குறையும்தளர்ச்சி வரும் ஆதலின், மனத்திற் சிறிதும் அக்கருத்திற்கு இடம்
கொடுக்காது போர்செய்தல்வேண்டும் என்றானாம். பசித்த பசுவின் பசுவின்
முன் சிறிய பயிர் உண்ணப்பட்டுமாய்ந்து போதல் போல என்முன்
இச்சேனை கணத்தில் அழியும் என்றாள். கொள்ளாதே’ ‘காரம் அசை.      
               
சுமந்திரன் பரதனிடம் குகன் தன்மை சொல்லல்

என்பன சொல்லி, இரும்பு அன
    மேனியர் ஏனோர் முன்
வன் பணை வில்லினன், மல் உயர்
    தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது
    கண்டு, அரி ஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன்
    மூரிய தேர் வல்லான்.        24

உரை
 வன் பனை வில்லினன் - வலிய கட்டமைந்த பருத்த வில்லை
உடையவனும்மல்உயர் தோளினன் - மல் தொழிலால் சிறப்புற்ற
தோளை உடையவனும்வாள் வீரற்குஅன்பனும் - வாளாற் சிறந்த
வீரனாகிய இராமனுக்கு அன்பு  பூண்டவனும் ஆய குகன்இரும்பு
அனமேனியர் ஏனோர்முன் - இரும்பை ஒத்த வலிய உடம்பை உடைய
வேடுவ வீரர்களுக்கு முன்னால்; என்பன சொல்லி - என்ற இச்
சொற்களைச் சொல்லிநின்றனன் -நின்றது கண்டு - (குகன்) நின்ற
படியைப் பார்த்துமூரிய தேர்வல்லான் - வலிய தேரைஓட்டுதலில்
வல்லவனாகிய சுமந்திரன்அரி ஏறு அன்ன முன்பனில் - ஆண்
சிங்கத்தைஒத்த வலிமை படைத்த பரதனுக்கு முன்னால்; வந்து
மொழிந்தனன் - வந்து  சிலசொற்களைக் கூறுவானானான்.

     இதன்முன் பத்துப் பாடல்களால் குகன் தன் படைவீரர்களை நோக்கிக்
கூறிய வீரவாசகங்களைக் கூறி, அவற்றை என்பன சொல்லிஎன
இச்செய்யுளில் வாங்கினார். மேற்செயல்கருதி நின்றான் ஆதலின்,
நின்றனன்எனப் பெற்றது. இனிப் பரதனது உண்மை நிலையைத்தெரிவது
கருதிப்போர்க்கு விரையாது  நின்றான் எனலும் ஆம்.  மூரிய -
தொன்மையான எனலும்ஆம். சுமந்திரன் சூரியகுலத்து அரசர்க்குத்
தொன்றுதொட்டுத் தேர்வல்லான் ஆதலின்,அப்பொருளும் பொருந்தும்,
குகன் கூறிய அனைத்தும் பரதனை அழிப்பதாகக் கூறினவும் இராமன்பாற்
கொண்ட பேரன்பாற் கூறியனவேயன்றி வேறன்று என்பதனை
உணர்த்துதற்காக,  ‘வாள் வீரற்குஅன்பனும்என்று பாடலில் குகனைக்
கம்பர் குறிப்பிட்டார் என்னலாம்.                    
               
கங்கை இருகரை உடையான்,
    கணக்கு இறந்த நாவாயான்,
உங்கள் குலத் தனி நாதற்கு
    உயிர் துணைவன், உயர் தோளான்,
வெம் கரியின் ஏறு அனையான்,
    வில் பிடித்த வேலையினான்,
கொங்கு அலரும் நறும் தண் தார்க்
    குகன் என்னும் குறி உடையான் ‘‘       25

உரை
 ‘கங்கை- கங்கையாற்றின்இருகரை - இரண்டு கரைப்பகுதியில்
உள்ளநிலங்களையும்; உடையான் - தனக்குச்சொந்தமாக உடையவன்;
கணக்கு  இறந்த -அளவில்லாதநாவாயான்- படகுகளை உடையவன்;
உங்கள் குலத் தனி நாதற்கு -உங்கள் சூரியவம்சத்தில் திருவவதாரம்
செய்தருளிய ஒப்பற்ற தலைவனான இராமனுக்குஉயிர்த்துணைவன் -
ஆத்ம நண்பன்உணர் தோளான் - உயர்ந்ததோள்களைஉடையவன்;
வெங்கரியின் ஏறு அனையான் - (மதம் பிடித்த)கொடிய ஆண்
யானையைஒத்தவன்; வில் பிடித்த வேலையினான்-வில்லைக் கையில்
பிடித்துக் கொண்டுள்ள (வேட்டுவவீரராகிய) சேனைக் கடலை உடையவன்;
கொங்கு அலரும் நறுந் தண்தார்- மணம் வீசித்தேன் பிலிற்றும்
குளிர்ந்த மாலையைஅணிந்துள்ள; குகன் என்னும் குறி உடையான்-
குகன் என்கின்ற பெயரை உடையவன்;’ (அடுத்த பாட்டில் முடியும்)

     இராமனைக் காணும் விரைவில் நிற்கின்ற பரதனுக்கு முதலில்
தேவைப்படுவது கங்கையைக் கடந்து அக்கரை செல்வதே ஆதலால் எடுத்த
எடுப்பில் கங்கை இரு கரை உடையான், கணக்கு இறந்த நாவாயான்
என்று அவற்றை முதலிற் கூறினான். இராமன்பால் அன்புடையார் எல்லாம்
பரதனால் அன்பு செய்யப்படுவார் ஆதலின் தனி நாதற்கு உயிர்த்
துணைவன்என்று அதனை அடுத்துக் கூறி, நின் அன்புக்குப் பெரிதும்
உகந்தவன், இராமனை மீண்டும் அழைத்து வரும் உனது குறிக்கோளைக்
கங்கையைக் கடத்திவிடுவதோடு அன்றித் தொடர்ந்து வந்தும்
முடிக்கவல்லவன் என்பது தோன்றக் கூறினான். அடுத்து, குகனது
பேராற்றலும், அவன் படைப்பெருமையும், அவனது பெயரும் கூறுகிறான்.
தேர்வலான்ஆகிய சுமந்திரன் மதியமைச்சனும் ஆதலின் சொல்வன்மை
விளங்கப் பேசினன் எனலாம். இங்கும் இராம நண்பன் என்கின்ற
காரணத்தால் குகனுக்குத் தேர்வலான் கொங்கலரும் நறுந் தண் தாரை
அணிவித்தான் என்க. இனி, இத் தேர்வலான் ஆகிய சுமந்திரன் மந்திரி
என்பதனை மந்திரி சுமந்திரனை’ (1856) என்பதால் அறிக. குகன்
இராமனோடு நட்புக் கோடற்கு மிக முன்னரே இராமனைக் கானகத்தே
விட்டுச் சென்ற சுமந்திரன் உங்கள் குலத்தனிநாதற் குயிர்த்துணைவன்
என்று பரதன்பால் கூறியது எப்படி என்னும் வினா எழுதல் இயல்பே.
அமைச்சராவார் அனைத்தையும் உணர்தல் வேண்டும் ஆதலின் இராமனது
பயணவழியில் கங்கையைக் கடக்கின்றவரை நிகழ்ந்த நிகழ்ச்சி களையும்
அவன் முன்னரே அறிந்திருத்தலில் வியப்பு இல்லை என அறிக. வான்
மீகம். குகனோடு சுமந்திரன் சிலநாள் உடனிருந்து பிறகே வெறுந்தேருடன்
மீண்டான்என்று கூறுதல் காண்க.       
               
கல் காணும் திண்மையான்,
    கரை காணாக் காதலான்,
அல் காணில் கண்டு அனைய
    அழகு அமைந்த மேனியான்,
மல் காணும் திரு நெடுந்தோள்
    மழை காணும் மணி நிறத்தாய்!
நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் ‘‘ என்றான்.   26

உரை
 ‘மல்காணும் திரு நெடுந்தோள் - மற்போரில் எல்லை கண்ட
அழகிய நெடிய தோளைஉடைய; மழை காணும் மணி நிறத்தாய்-
கார்மழையைக் கண்டால் போன்ற நீலமணி போலும்நிறம் வாய்ந்த
திருமேனி அழகனே!கல்காணும் திண்மையான்- மலையைக் கண்டாற்
போன்ற வலிமை உடையவன்; கரை காணாக் காதலான்- (இராமன் பால்)
எல்லை காணமுடியாத பேரன்பை உடையவன்காணில்- வடிவத்தைப்
பார்த்தால்அல் கண்டு அனைய அழகு அமைந்த மேனியான்-
இருளைக் கண்டாற்போன்ற அழகு பொருந்திய உடம்பை உடையவன்
(ஆகிய இத்தகைய குகன்)நெறி எதிர் -நீசெல்கின்ற வழியின்
எதிரில்; நின்காணும் உள்ளத்தான் - உன்னைப்பார்க்கும் மனம்
உடையவனாய்; நின்றனன் என்றான் - நின்றுகொண்டுள்ளான்என்று
சொன்னான்சுமந்திரன்.

     குகன் பரதனை எதிர்க்க நின்றவனே ஆயினும் இராமன்பால்
பேரன்புடையவனாக அச்சுமந்திரனால்அறியப்பட்டவன் ஆதலால்
இராமனை வரவேற்கச் செல்லும் பரதனை எதிர்பார்த்துக் கண்டு மகிழவே
நின்றதாகச் சுமந்திரன் தன் போக்கில் கருதினான் என்க. பரதன் கங்கையின்
வடகரைப்பகுதியில் கங்கைக் கரையோரமாக நில்லாமல் உள்ளே தள்ளி
நிலப்பகுதியில் சிறிது தொலைவில் நிற்றலின் காண்பார்க்குக் குகனது சீற்றத்
தோற்றம் புலனாகாமையும் பொதுத்தோற்றமே அறியப்படுதலும்
உண்டாயிற்று. மேனி அழகாலும், நிறத்தாலும் இராமன், குகன், பரதன்
மூவரும் ஓர் அணியாதல் பெறப்படும்.         
               
பரதன் குகனைக் காண விரைதல்

தன்முன்னே, அவன் தன்மை
    தன் துணைவன் முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
    துரிசு இலாத் திரு மனத்தான்,
மன் முன்னே தழீஇக் கொண்ட
    மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே; அவற் காண்பென்
    யானே சென்று என எழுந்தான்.    27

உரை
 தன்முன்னே - தன் எதிரில்அவன் தன்மை - அந்தக் குகனது
நல்லியல்புகளை; தந்தை துணை - தன் தந்தையாகிய தயரதனின்
நண்பனான சுமந்திரன்; முந்து  உரைத்த - முற்பட்டுச் சொல்லிய;
சொல்முன்னே - சொல்லுக்கும் முன்பாக;உவக்கின்ற - மகிழ்ச்சி
அடைகின்ற; துரிசு இலாத் திரு மனத்தான் - குற்றம்சிறிதும் இல்லாத
நல்ல மனத்தை உடையவனாகிய பரதன்; ‘மன் முன்னே தழீஇக்
கொண்ட -நம் அரசனாகிய இராமன் வனம் புகுந்த முன்னமே (அன்பு
செய்து) தழுவிக் கொண்டுள்ள; மனக்குஇனிய துணைவனேல் - அவன்
மனத்துக்கு இனிய துணைவன் ஆனால்; என் முன்னே - என்னை(அவன்
வந்து பார்ப்பதற்கு) முன்னமே; யானே சென்று அவற் காண்பென்’ -
நானே(முற்பட்டு) சென்று அவனைக் காணுவேன்;’ என - என்று சொல்லி;
எழுந்தான் -புறப்பட்டான்.

     இராமன்பால் அன்புடையான் குகன் ஆதலின் அவனை முற்பட்டுச்
சென்று காணப் பரதன்விரைந்தான். இராமன் அன்பினால் குகனைத்

துணைவனாகத் தழுவிக்கொண்டான்என்ற சொல் செவிப்படும்
முன்னமேயே பரதனது உள்ளம் உவகையால் நிறைந்தது என்பது பரதன்
இராமன்பால் கொண்ட பேரன்பை எடுத்துக்காட்டும். பாகவதர்களாய்
உள்ளார் ஒருவர் ஒருவரினும் முற்படுதல் இயல்பு. என் முன்னேஎன்பதற்கு,
அந்தக் குகன் இராமனால் தழுவிக் கொள்ளப்பெற்ற துணைவனேல்
என்னுடைய முன் பிறந்த தமையனே ஆவான் எனப் பொருள்படுதல் இங்கு
மிகவும் பொருந்தும். தமையனைத் தம்பி சென்று காணுதல் பொருந்தும்
அன்றித் தம்பியைத் தமையன் வந்து பார்த்தல் பொருந்தாது ஆதலின்
யானே சென்று காண்பன் என்றானாம். என் முன்னேஎன்று குகன்
பரதனின் தமையன் ஆதலை, ‘இன் துணைவன் இராகவனுக்கும்;
இலக்குவற்கும், இளையவற்கும், எனக்கும் மூத்தான்’ (2367) என்று கோசலா
தேவியிடத்துக் குகனைப் பரதன் அறிமுகப்படுத்தியவாற்றான் அறிக.
சுமந்திரன் தயரதனது மந்திரி ஆதலின் தந்தை துணைஆயினன். பின்னர்ப்
பரதன் எந்தை இத்தானை தன்னை ஏற்றுதி” (2349) என அவனைத்
தந்தையாகவே கூறுமாறும் இதனால் அறிக. பரதன்மாட்டுக் குகன் துரிசு
நினைத்தான் ஆதலின், அக்குறிப்புப் பொருள் பற்றித் துரிசு இலாத் திரு
மனத்தான்என்றது இங்கு மிகவும் பொருந்தும்.      
               
பரதன் தோற்றம் கண்ட குகன் நிலையும் செயலும்
(2418-2421)

என்று எழுந்து தம்பியொடும்
    எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது எனக்
    குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான்,
    திருமேனி நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங்குஞ்சி
    எயினர்கோன் துண் என்றான்.       28

உரை
  (பரதன்) என்று - இவ்வாறு சொல்லிஎழுந்த தம்பியொடும் -
தன்னுடன்புறப்பட்ட சத்துருக்கனனொடும்எழுகின்ற காதலொடும் -
(இராமனிடத்தில்அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப்
பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம்என்று) உள்ளே
மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது
என -ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர்
கங்கைக் கரை குறுகி- குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி;
நின்றவனை - நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்-
நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடையவேடர் தலைவனாய  குகன்; நோக்கினான் - கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்;
திருமேனி நிலை - வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின்
வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் - திடுக்குற்றான்.

     பரதனைத்பற்றித் தான் எண்ணியதற்கும், அவன் நிலைக்கும் மிகவும்
மாறுபாடாக இருந்தது கண்டு துணுக்குற்றான் என்க. இராம இலக்குவர்
போலே பரத சத்துருக்கணர் ஆதலின், ‘எழுந்த தம்பிஎன்று பரதன்
கட்டளை இட வேண்டாது அவன் குறிப்புணர்ந்து சத்துருக்கனன்
புறப்பட்டான்.           
               
வற்கலையின் உடையானை
    மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன
    நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற
    துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ,
    விம்முற்று நின்று ஒழிந்தான்.      29

உரை
 வற்கலையின் உடையானை - மரவுரியாலாகிய ஆடையை
உடுத்துள்ள; மாசு அடைந்தமெய்யானை - புழுதி படிந்த உடம்பை
உடையநற் கலை இல் மதி என்ன - நல்லகலைகளில்லாத (ஒளியற்ற)
சந்திரன் போலநகை இழந்த முகத்தானை - ஒளி இழந்தமுகத்தை
உடைய; பரதனை; கண்ணுற்றான் - (குகன்) கண்ணால் சந்தித்துப் பார்த்து;
கையினின்று வில்இடை வீழ - தன் கையிலிருந்து  வில்லானது  தானே
சோர்ந்து  நிலத்தின்கீழ் விழும்படி; விம்முற்று - துன்பத்தால் கலக்கமுற்று;
நின்று ஒழிந்தான் -ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

     பரதன் திருமேனி நிலை எவ்வாறு இருந்தது என்பதை இச் செய்யுள்
விவரிக்கிறது. பரதனது நிலை இராமன் வனத்தின்கண் சென்றதனால்
அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தைக் காட்டுவதாக இருந்ததுஆதலின்,
இப்படிப்பட்டவனை எப்படி நினைத்துவிட்டோம் என்ற தன்னிரக்கமும்
சேர்ந்து கையறுநிலையைக் குகனுக்கு உண்டாக்கியது ஆதலின் நின்றவன்
நின்றவாறே உள்ளான் என்ற வாறாம்.மதிக்குக் கலையால் ஒளி கூடுதலின்
ஒளி குறைந்த முகத்தைக் கலை இழந்த மதியோடு உவமித்தார்.
எப்பொழுதும் தன்னிடத்திருந்து நீங்காது உறுதியாகப் பிடித்திருக்கும்
வில்லும் தன்னை மறந்ததுயரநிலையில் குகன் கையிலிருந்து நழுவிக் கீழே
தானே விழுந்தது என்பது குகனது நிலையைத்தெளிவாகக் காட்டும்.
அதனாலேயே. நின்றான்என்னாது நன்ளொழிந்தான் என்றார்; ஒரு
சொல்லாக்குக.         
               
நம்பியும் என் நாயகனை
    ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
    தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
    திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
    இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்.   30

உரை
  ‘நம்பியும் - ஆடவரிற் சிறந்த இப்பரதனும்என் நாயகனை - என்
தலைவனாகியஇராமனை; ஒக்கின்றான் - ஒத்திருக்கிறான்; அயல்
நின்றான் - அருகில்இருக்கின்றவன் (ஆகிய சத்துருக்கனன்); தம்பியையும்
ஒக்கின்றான் - இராமனது உடன்பிரியாத் தம்பியாகிய இலக்குவனை
ஒத்திருக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான் - (இப்பரதன்)
தவத்துக்குரிய வேடத்தை மேற்கொண்டுள்ளான்; துன்பம் ஒரு முடிவு
இல்லை -(இப் பரதன்) படுகிற துன்பத்துக்கோ ஓர் அளவே இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்- இராமன் சென்ற திசையாகிய
தென்திசையைப் பார்த்து  அவ்வப்போது வணங்குகிறான்; (இவற்றால்இவன்
துயர்நிலை விளங்குதலின்) எம்பெருமான் - எம்கடவுளாகிய இராமனுக்கு;
பின்பிறந்தார் - தம்பிகள்; பிழைப்பு இழைப்பரோ’ - (தவறு
செய்வார்களா)தவறு  செய்வர் என்று  நான் எண்ணியது பெரும் தவறு);
என்றான் - என்று நினைத்தான்.

     பரத சத்துருக்கனர்கள் இராம இலக்குவர்களைப் போன்றனர் என்றான்.
தவ வேடமும் அவ்வாறேஒத்தது. துயர்நிலை இராமனுக்கு இல்லாதது.
இராமனைப் பிரிந்ததனால் பரதனுக்கு உளதாயது. திசைநோக்கித் தொழுதல்
இராமபக்திக்கு அடையாளம். மூத்தோர்பால் இளையார் காட்டும் ஒரு மரபு
எனலாம். மன் பெரிய மாமனடி மகிழ்ந்து திசை வணங்கி” (சிந்தா. 849)
காண்க. இராமனுக்குப்பரதன் தீங்கு செய்ய வந்துள்ளதாகக் கருதிய தனது
பேதைமையைக் குகன் தனக்குள்ளே விசாரித்தான்.ஆதலின், “எம்பெருமான்
பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்புஎன்றான். பரதனைச்சந்தேகித்தற்குக்
குகன் வருத்தம் உறுதல்வெளிப்படை.    
               
உண்டு இடுக்கண் ஒன்று; உடையான்,
    உலையாத அன்புடையான்
கொண்ட தவவேடமே
    கொண்டிருந்தான்; குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்;
    காமின்கள் நெறி; “ என்னாத்
தண் துறை ஓர் நாவாயில்
    ஒரு தனியே தான் வந்தான்.       31

உரை
  ‘உண்டு இடுக்கண் ஒன்று உடையான்- புதிதாக உண்டாகிய துன்பம்
ஒன்றை உடையவனும்உலையாத அன்பு உடையான் -இராமன்பால்
சிறிதும் தளர்ச்சியுறாத அன்பு கொண்டவனும்; கொண்ட தவவேடமே -
(அந்த இராமன்) கொண்டிருந்த தவ வேடத்தையே; கொண்டிருந்தான்-
தானும்கொண்டுள்ளவனும் ஆகிய இப்பரதனது; குறிப்புஎல்லாம் - மனக்
கருத்து எல்லாம்; கண்டு- நேரில் பார்த்து அறிந்து; உணர்ந்து- அதனை
என் அநுபவத்தாலும் நுகர்ந்து; பெயர்கின்றேன் - திரும்பி வருகின்றேன்;
நெறி காமின்கள் - (அதுவரை) வழியைப்பாதுகாத்திருங்கள்;’என்னா -
என்று சொல்லி; தண்துறை - (கங்கையின்) குளிர்ந்தநீர்த்துறையில்; தான்
ஓர் நாவாயில் ஓரு தனியே வந்தான்- (குகன்) தான் ஒருபடகில் வேறு
யாரும் இன்றித் தனியே வந்து சேர்ந்தான்.

     தோற்றத்தால் விளங்காத பல செய்திகள் நெருக்கத்தால்
விளங்கக்கூடும் ஆதலின் பரதன் மனக்கருத்து எல்லாம் கண்டு உணர்ந்து
பெயர்கின்றேன்என்று குகன் கூறினான். இங்கே அறிந்துஎன்னாது
உணர்ந்துஎன்றது சிறப்பு. துக்காநுபவம் ஆகிய அன்பின் செறிவு
உணர்ச்சியொத்தவரிடையே அநுபவம் ஆதல் அன்றி, அறிவினால்
ஆராய்ந்தறியும் பொருள் அன்று ஆதலின், இடுக்கணும், உலையாத அன்பும்
உடைய பரதனை, அதுபோலவே இடுக்கணும், உலையாத அன்பும் உடைய
குகன் உணர்ச்சியொத்தலால் உணர்ந்து பெயர்கின்றேன் என்கிறான்; இந்நயம்
அறிந்து உணரத் தக்கது.ஒரு தனியே தான் வந்தான்என்றது இதுகாறும்
பரதனை மாறாகக் கருதித் தன் படை வீரர்களிடம் பேசியவன் ஆதலின்,
தன் கருத்து மாற்றம் அவர்க்குப் புலப்படாமை கருதியும், அவர்களால் வேறு
தொல்லைகள் உண்டாகாமை கருதியும், அவர்களுள் யாரையும் உடன்
கொள்ளாது தனியே வந்தான் என்க. அதுபற்றியே கம்பரும் தனியே
என்னாது தான்என்றும், ‘ஒரு தனியேஎன்றும் அழுத்தம் கொடுத்துக்
கூறினார். அரசராவார் தம் கருத்தையும் தம் மன மாற்றத்தையும் தம்கீழ்
வாழ்வார் அறியாதவாறு போற்றிக் காத்தல் வேண்டும் என்னும் மரபறிந்து
மதிப்பவர் கம்பர் என்க. துன்பம் ஒரு முடிவு இல்லைஎன்றவர், ‘உண்டு
இடுக்கண் ஒன்று உடையான்என்று மீண்டும் கூறியது, இராமன் வனம்
போவதால் ஏற்பட்ட துன்பம் இராமனைக் கண்டு மீண்டு போம்போது
குறைதல் கூடும் ஆயினம் இவற்றுக்கெல்லாம் தான் காரணமானோம்என்று
கருதும் பழிபடப் பிறந்தேன்என்ற இடுக்கண் என்றும் மாறாது கிடத்தலின்
உண்டு இடுக்கண் ஒன்று உடையான்என்று அதனையும் கருதிப் பரதனது
புறத் தோற்றத்தையும் அகத் தோற்றத்தையும் புலப்படுத்தியதாக அமைகிறது.
உலையாத அன்பு - வேறு காரணங்களால் நிலைகுலையாமல், என்றும்
ஒருபடித்தாக இருக்கும் தளர்ச்சியில்லாத அன்பு என்றவாறாம்.        
               
பரதன் வணங்கக் குகன் தழுவுதல்

வந்து, எதிரே தொழுதானை
    வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும்
    அவனும், அவனடி வீழ்ந்தான்;
தந்தையினும் களி கூரத்
    தழுவினான், தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும்
    வீற்றிருக்கும் சீர்த்தியான்.          32

உரை
 வந்து - (கங்கையின் வடகரைக்கு) வந்துஎதிரே தொழுதானை -
தன்னைஎதிரிலே கும்பிட்ட பரதனை; வணங்கினான் - (குகன்) தானும்
வணங்கினான்; மலர்இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவனும் -
(திருமாலின் திருவுந்தித்) தாமரையில்வீற்றிருக்கும் வேதியனாகிய பிரமனும்
தன்னை வணங்கும் சிறப்புப் பெற்ற பரதனும்; அவன் அடிவீழ்ந்தான் -
அந்தக் குகனது அடித்தலத்தில் விழுந்து வணங்கினான்;  (அதுகண்டு) தகவு
உடையோர் சிந்தையினும் சென்னி யினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் -
நடுவுநிலைமையிற்சிறந்த மேலோர்களது மனத்திலும், தலையிலும் ஏற்றிப்
போற்றப்படும் புகழ் உடைய பண்பு நலம்செநிந்த உத்தமனாகிய குகனும்;
தந்தையினும் களிகூர - பெற்ற தந்தையினும் மகிழ்ச்சிமிக; தழுவினான் -
(அந்த அடி வீழ்ந்த பரதனை எடுத்து) மார்போடு அணைத்துக்கொண்டான்
(தொடரும்)

     குகனும் பரதனும் மிகச் சிறந்த பாகவத உத்தமர்கள்; இராமன்பால்
ஆழங்காற்பட்ட அன்பினைஉடையவர்கள்; ஒருவரை ஒருவர் தம்மிற்
பெரியராக நினைப்பவர்கள். இப்பண்பு நலன்களை உடையஇருவர்
சந்திப்பில் அளவு கடந்த அன்பின் பெருக்கால் நிகழும் நிகழ்ச்சிகளே
இப்பாடலில்வருகின்றன. இப்பாடலில் வணங்கினான், அடிவீழ்ந்தான்,
தழுவினான் என்று மூன்று  நிகழ்ச்சிகள்முக்கிய இடம் பெறுகின்றன.
முன்னைய பாடலில் படகில் தனியே வந்தான்எனக் குகன் வந்ததாக
முடித்திருப்பதும்குகனே பரதனைத் திசை நோக்கித் தொழுகின்றானாகக்
கண்டு கூறுவதும்இப்பாடற் பொருளைத் தெளிவு செய்கின்றன. எதிரே
தொழுதானை என்பது  பரதனை எனவும்,வணங்கினான் குகன் எனவும்
ஆகிறது. வணங்குதலாகிய குகன் செயலை அடுத்து  நிகழ்வது  பரதன்
செயலாகும் அன்றோ. மலர் இருந்த அந்தணனும் தனை வணங்கும்
அவனும்என்பது பரதனைக் குறித்தது.அப்பரதன் அவன் (குகன்) அடியில்
வீழ்ந்தான் என ஆற்றொழுக்காக முடிந்தது.  பரதன் மன் முன்னேதழீஇக்
கொண்ட மனக் கினிய துணைவன்எனக் குகனைக் குறித்து என் முன்னே
என்று தனக்குத்தமையனாகவும் கொண்டான்; அதுவும் அன்றி,
இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும்  மூத்தான்’(2367) என்று பின்னால்
தாயருக்கும் அவ்வாறே அறிமுகம் செய்விக்கிறான். ஆகவே, அண்ணன்
காலில் தம்பி விழுவதே முறை எனக் கருதி அடி வீழ்ந்தான் பரதன் என்க.
தன்னடியில் வீழ்ந்தபரதனைக் குகன் குகனைத் தகவுடையோர் சிந்தையினும்
சென்னியினும் வீற்றிருக்கும்சீர்த்தியான்என்று கம்பர் கூறுவது
சிந்திக்கத்தக்கது. பிறப்பால் வேடனாகிய குகன் தன்னடிவீழும் பரதனைத்
தந்தைநிலையில் இருந்து தழுவினான் என்பதை ஏற்புடைத் தாக்கவே
சிறப்பால்மேலானோர் மனத்திலும், தலையிலும் ஏற்றிப் போற்றும்
குணங்களால் உயர்ந்த புகழ் உடையவன்என்று குகனை நமக்குக் காட்டினார்
கம்பர். இனி, இதனையும் பரதன் மேற்றாகவே கொண்டு கூறுவாரும் உளர்.
அது ஏற்புடைத்தாகுமேல் அறிந்து கொள்க.   
               
குகன் வினாவும் பரதன் கூறும் விடையும்

தழுவின புளிஞர் வேந்தன்
    தாமரைச் செங்கணானை
எழுவினும் உயர்ந்த தோளாய்!
    எய்தியது என்னை? ‘என்ன,
முழுது உலகு அளித்த தந்தை
    முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன், அதனை நீக்க
    மன்னனைக் கொணர்வான் என்றான்.     33

உரை
தழுவின புளிஞர் வேந்தன்- (அவ்வாறு பரதனைத்) தழுவிக்
கொண்ட வேடர் தலைவனான குகன்; தாமரைச் செங்கணானை -
செந்தாமரை போலும் கண்களை உடைய பரதனைப் (பார்த்து);  ‘எழுவினும்
உயர்ந்த தோளாய்!- கணைய மரத்தினும் வன்மைமிக்குயர்ந்த தோள்களை
உடைய பரதனே!எய்தியது  என்னைஎன்ன- (கங்கைக் கரைக்
காட்டிற்கு) நீ வந்த காரணம் என்ன என்று வினாவ; (பரதன்) உலகு முழுது
அளித்த தந்தை - உலகம் முழுவதையும் ஒரு குடை நீழலில் ஆட்சி செய்த
சக்கரவர்த்தியாகியஎன் தந்தை தயரதன்; முந்தையோர் முறையினின்றும்
வழுவினன் - தன் மரபில் முன்னுள்ளாரது நீதிமுறையிலிருந்தும்
தவறிவிட்டான்; அதனை நீக்க - அந்த அநீதியை நீக்கும் பொருட்டு;
மன்னனைக் கொணர்வான்’ - முறைப்படி அடுத்து அரசனாகிய
இராமனைத் திரும்ப அழைத்துக்கொண்டு செல்வதற்காக (வந்தேன்);
என்றான் - என்று சொன்னான்.

     தந்தை என்ற நிலையிலிருந்து  முந்தையோர் முறையில் தயரதன்
வழுவினானே அன்றி மன்னன்என்ற நிலையில் இருந்து  அன்று  என்பது
போல் கூறியது  ஒரு நயம். பின்னரும் அண்ணனைக்கொணர்வான்
இராமனைக்கொணர்வான்என்று கூறாமல் மன்னனைக் கொணர்வான்
என்றது காட்டில்இருப்பினும், நாட்டில் இருப்பினும் இராமனே அயோத்திக்கு
அரசன் என்பதில் பரதனுக்குள்ள உறுதிவிளங்குகிறது.  இராமன் திரும்ப
அயோத்திக்குச் செல்கிற அளவிலேயே முந்தையோர் முறைசரியாகிவிடும்
என்று பரதன் கூறியது சிந்திக்கத்தக்கது. இப்பாடலில் தழுவினஎன்பதற்குத்
தழுவப்பட்ட எனப் பொருள் பட்டவன், தழுவியவன் இருவருள்
தழுவியவனே முதலில் பேச இயலும் என்பது தழுவப்பட்டவன் உரையாற்ற
முடியும் என்பதும் அறிந்ததே. குகனைத் தன் அண்ணனாகக் கருதும் பரதன்
முற்பட்டுக் குகனைத் தழுவுதல் எங்ஙனம்? எங்கும் தழுவல் கம்பர்
வழக்கிலும் இல்லையென்பதுமுன்னும் பின்னும் வரும் கம்பர் கூற்றுகளாலும்
உணரப்படும்.     
               
பரதன்பால் தீதின்மை கண்ட குகன் வணங்கிக் கூறல்

கேட்டனன் கிராதர் வேந்தன்;
    கிளர்ந்து எழும் உயிரன் ஆகி,
மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான்;
    விம்மினன், உவகை வீங்கத்
தீட்ட அரு மேனி மைந்தன்
    சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன் பொய் இல்
    உள்ளத்தன் புகலல் உற்றான்.      34

உரை
 கிராதர் வேந்தன்- வேடர் தலைவனாய குகன்; கேட்டனன் -
(பரதன் சொல்லிய வார்த்தைகளைக்) கேட்டு; கிளர்ந்து எழும் உயிர்ப்பன்
கி - மேல் எழுந்து  மிகும் பெருமூச்சு உடையவனாகி; மீட்டும் - (முன்
வணங்கியதோடு அன்றித்) திரும்பவும்; மண் அதனில் வீழ்ந்தான்-
பூமியில் விழுந்து  வணங்கி; உவகை வீங்க - மன மகிழ்ச்சி மேல் பெருக;
விம்மினன் - உடம்பு பூரித்து; தீட்ட அரு மேனி மைந்தன் -
எழுதலாகாததிருமேனியையுடைய பரதனது; சேவடிக் கமலப் பூவில் -
திருவடிகளாகிய தாமரை மலரில்; பூட்டிய கையன் - இறுக அணைத்த
கையுடனே;பொய்யில் உள்ளத்தன் - பொய்யற்ற புரைதீர்ந்த மனத்தால்;
புகலல் உற்றான் - சில வார்த்தைகள் சொல்லலானான்.

     ‘மீட்டும்’ - என்பதற்குத் திரும்பவும் மண்ணில் விழுந்து வணங்கினான்
எனப் பொருள் உரைத்து, உம்மையால் முன்பொருமுறை அடி
வீழ்ந்ததோடன்றிஎன்றுரைத்து2334 ஆம் பாடலில் அடி வீழ்ந்தான்
என்பது குகன் செயலே என்பார் உளர். மீட்டும்என்பதில் ம்என மகர
ஒற்றுக் கொள்ளுதலும் கொள்ளாமையும் உண்டு. இருவகைப் பாடத்தினும்
மகர  ஒற்றுக் இன்றி மீட்டுஎன்ற பாடமே சிறந்ததாகும். ஓசை நயம்
உணர்வார்க்கு மீட்டு மண்என நிற்றலே ஏற்புடைத்தென அறிவர். மீட்டு
என்பது  உயிர்ப்பை மீட்டு என உரை பெறும். பரதன் கூறிய
வார்த்தைகளைக் கேட்டுக் கிளர்ந்தெழும் உயிர்ப்பைப் பெற்ற குகன்,
அவ்வுயிர்ப்பை மீட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே வேறு
செயல் செய்யமுடியும். ஆதலின், அவ்வுயிர்ப்பை மீட்டு (10161, 10162
பாடல்களை இங்கு நோக்குக). மண்ணதனில் வீழ்ந்தான் என்றது பொருந்தும்.
மீட்டும்என்று இருப்பினும் முன்பு வணங்கினான் இப்போது மண்ணதனில்
வீழ்ந்தான்என்று அதன் வேறுபாட்டை உணர்த்துமே அன்றி வேறன்று.
மூத்தவனாகிய குகன் இப்போது மண்ணில் வீழ்ந்து வணங்குதல் தகுமோ
எனின், இருவர் இணையும்போது முதற்கண் இளையோர் மூத்தோரை
வணங்குதலும், அவ்வாறு வணங்கிய இளையோரை மூத்தோர் எடுத்துத்
தழுவி விசாரித்தலும் இயல்பு. இங்கு, தான் வந்த நோக்கத்தைப் பரதன்
கூறக் கேட்ட குகனுக்குப் பரதன் பரதனாகவே காட்சி அளிக்கவில்லை.
அவன் தம்பி முறையும் புலனாகவில்லை. அவனை ஆயிரம் இராமர்களுக்கும்
மேலாகவே கருதுகிறான். அதனால் ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ
தெரியின் அம்மாஎன்று வியந்து பேசுகிறான். ஆகவே, ஆயிரம்
இராமர்களுக்கும் மேம்பட்டவனாகப் பரதனை எண்ணிய குகன், இராமன்
காலில் விழுந்து பணிவது முறையானாற் போல, பரதன்
காலிலும் விழுந்து பணிந்தான் ஆதலின் தகும் என்க. இதனை விளக்கவே
கம்பர் கவிக் கூற்றாகப் புளிஞர்கோன் பொருஇல் காதல் அனையவற்கு
அமைவின் செய்தான்; ஆர் அவற்கு அன்பிலாதார்? நினைவு
அருங்குணங்கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல்” (2339) என்று
தாமே முன்வந்து பேசுவாராயினர். பரதனது குணங்களில் ஈடுபட்டு
அவனைப் பணிந்தான்; இராமகுணங்கள் எங்கிருந்தாலும் அங்குப் பணிதல்
இராமனைப் பணிதலே அன்றோ? ஆகவே, அது தகாதது செய்ததாகாது;
அமைவிற் செய்ததாகவே ஆகும். விடை கொடுத்த படலத்துத் தன்
அடியனாய அனுமனை இராமன் போர் உதவிய திண் தோளாய்
பொருந்துறப் புல்லுக” (10351) என்று தன்னைத் தழுவிக் கொள்ளச்
சொல்லியதையும் இங்குக் கருதுக. பொது நிலையில் முதற்காட்சியில்
அண்ணனாகிய குகனைப் பரதன் வணங்கினான் என்றும், சிறப்பு நிலையில்
இராம குணாநுபவத்தின் எல்லையைப் பரதன்பால் கண்ட குகன் இராமனிலும்
மேம்பட்டவனாகக் கருதி வேறு எதுவும் நோக்காது அன்பினான் அடியற்ற
மரம்போல் வீழ்ந்து கைகளைத் திருவடியிற் பூட்டி நெடிது கிடந்தான் என்றும்
கொள்க. அங்ஙனம் கிடந்த குகனைப் பரதன் எடுத்துத் தழுவியதாகக் கம்பர்
கூறாமையும் காண்க. நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்” (2332) எனக்
குகன் முன்னரே கூறுதலின், இராமன் எழுதரிய திருமேனி” (656)
உடையவனானாற்போல, “எள்ளரிய குணத்தாலும் எழிலாலும்.....வள்ளலையே,
அனையானா (657) கிய பரதனும், ‘தீட்டரு மேனி மைந்தன் ஆயினன்.
எழுது அரு மேனியாய்” (2105) என்று பள்ளி படைப் படலத்தின்கண்
கூறியதை ஈண்டு ஒப்பு நோக்குக.        
               
தாய் உரை கொண்டு, தாதை
    உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
    சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து,
    புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
    ஆவரோ? தரெியின் அம்மா!         35

உரை
  ‘புகழினோய்! - புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு - (உன்)
தாயாகியகைகேயியின் வரம்என்கின்ற வார்த்தையைக் கொண்டுதாதை
உதவிய - (உன்)தந்தையாகிய தயரதன் அளித்ததரணி தன்னை -
(கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து - தீயவினை வந்து
சேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி -
முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை - (வனத்துக்கு) வந்தாய்;
என்ற போழ்து - என்ற காலத்தில்; தன்மை கண்டால் - (உனது)
நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் - ஆராய்ந்தால்; ஆயிரம்
இராமர் நின்கேழ்ஆவரோ - ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின்
ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -.

     தந்தைமட்டுமே அளித்த அரசை வெறுத்து வந்த இராமனிலும், தாயும்
தந்தையும் இணைந்து அளித்த அரசை வெறுத்த பரதன் மேன்மை புலப்பட
இவ்வாறு கூறினான். தாமரைக் கண்ணன், காதல் உற்றிலன் இகழ்ந்திலன்
(1382) என்ற இராமனது மனநிலையும், ‘தீவினை என்ன நீத்துஎன்ற பரதனது
மனநிலையும் ஒப்பிடுக. இவையெல்லாம் இராமபிரானைக் குறைத்துக்
கூறுவேண்டும் என்று குகன் கருதியதன்று; பரதனது மேன்மைக் குணத்தைப்
பாராட்டும் முகமாகக் கூறியதாம்; எங்ஙனமெனின் இத்தகைய
குணச்சிறப்புகளால் உயர்ந்த பரதனைப் பாராட்டப்படும்பொழுதும் ஆயிரம்
இராமர்என்று குகனுக்கு இராமனே அளக்கும் பொருளாய் வந்து நிற்பது
கொண்டு அறியலாம். உள்ளத்தின் உள்ளதை உரையின் முத்துற, மெள்ளத்
தம் முகங்களே விளம்பும்” (6452) “அடுத்தது காட்டும் பளிங்குபோல்
நெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்” (குறள். 706) ஆதலின், பரதனது உள்ளத்
துன்பம் அவனது முகத்தில் நின்றபடியைச் சிந்தனை முகத்தில் தேக்கி
என்றுரைத்தார். அம்மாஎன்பது வியப்பிடைச் சொல்.      
               
என் புகழ்கின்றது ஏழை
    எயினனேன்? இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை
    ஒளிகளைத் தவிர்க்குமா போல,
மன் புகழ் பெருமை நுங்கள்
    மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
    உயர் குணத்து உரவு தோளாய்!     36

உரை
 ‘உயர் குணத்து உரவுத் தோளாய்!- உயர்த்த உத்தமக்குணங்களையும்வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயினனேன் - அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? - எவ்வாறு
புகழ முடியும்; இரவிஎன்பான் தன்- சூரியன் என்று சொல்லப்படுகிறவனது;
புகழ்க் கற்றை- புகழாகியஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா
போல் - மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக்
கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல;மன் புகழ் பெருமை
நுங்கள் மரபினோர்  புகழ்கள் எல்லாம் - எல்லா அரசர்களாலும்
பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய
அரசர்களது  எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் -
உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய்.

     ‘ஏழை எயினன்’ - குகன் தன்னடக்கமாகக் கூறிக்கொண்டான்.
சூரியனுக்குப் புகழ் என்பது ஆதலின் அதனைப் புகழ்க்கற்றைஎன்றார்.
மரபினோர் புகழ்கள் முன்பு பேசப்பட்டன; இனி, பரதன் புகழே பேசப்படும்
என்பதாகும்.      
               
பரதன்பால் குகன் ஒப்பற்ற அன்பு கொள்ளுதல்
என இவை அன்ன மாற்றம்
    இவைவன பலவும் கூறிப்
புனை கழல் புலவு வேல் கைப்
    புளிஞர் கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவில் செய்தான்;
    ஆர் அவற்கு அன்பு இலாதார்?
நினைவு அருங்குணம் கொடு அன்றோ
    இராமன்மேல் நிமிர்ந்த காதல். 37

உரை
  புனை கழல்- அலங்கரிக்கப் பெற்ற வீரக்கழலை அணிந்த; புலவு
வேற்கை - புலால் மணம் வீசும்வேலைப் பிடித்த கையை உடைய; புளிஞர்
கோன் - வேடர் தலைவனாகிய குகன்; என இவைஅன்ன மாற்றம்
இயைவன புலவும் கூறி - என்று இதுபோன்ற பொருந்திய சொற்கள்
பலவற்றையும்சொல்லி; பொரு இல் காதல் அனையவற்கு -
இராமன்பாலும் அதனால் தன்பாலும் ஒப்பற்றபேரன்பினை உடையனாகிய
பரதனுக்குஅமைவின் செய்தான் - பொருந்தியநல்லுபசரிப்புகளைத்
தகுதியாகச் செய்தான்; அவற்கு அன்பு இலாதார் யார்-அப்பரதனிடத்தில்
அன்பு செலுத்தாதவர் யார்உளர்?; இராமன் மேல் நிமிர்ந்த காதல்-
இராமனிடத்து  மேல் சென்று உயர்ந்த அன்பு (அவன் சக்கரவர்த்தித்
திருமகள் என்பதாலா?அன்று); நினைவு அருங் குணம்கொடு அன்றோ-
நினைக்கவும் முடியாத நற்குணங்களின்நிலையமாக அவன் இருந்தான்
என்பதனால் அல்லவா? (அக்குணங்கள் இவன்பாலும் இருத்தலால்
இவனிடமும் அன்பு நிமிர்ந்தது.)

     ‘அமைவின் செய்தான்என்பது பரதன் தகுதிக்கும், அவன்
குணநலத்துக்கும், அப்போதையதுக்கத்துக்கும் ஏற்ற வகையில் வழுவாது
உபசரித்தான் குகன் என்பதைக் காட்டும். இராமனிடத்துஎந்தக்
குணங்களைக் கண்டு குகன் அன்பு செலுத்தினானோ அதே குணங்கள்
இவன்பாலும் இருத்தலின்இவனிடத்தும் அந்த அன்பு கண்ட அளவிலே
உண்டாயிற்று என்றார். இங்கு எள்ளரிய குணத்தாலும்எழிலாலும்
இவ்விருந்த வள்ளலையே அனையானைக் கேகயர் கோன் மகள் பயந்தாள்
(657.) என்பதனைக் கருதுக. பொரு இல் காதல்என்பதனைக் குகன்மேல்
ஏற்றி உரைப்பதும்உண்டு.     
               
இராமன் உறைந்த இடத்தைப் பரதனுக்குக் குகன் காட்டுதல்
அவ் வழி அவனை நோக்கி,
    அருள் தரு வாரி அன்ன
செவ்வழி உள்ளத்து அண்ணல்,
    தனெ் திசைச் செங்கை கூப்பி,
எவ்வழி உறைந்தான் நம் முன்? ‘
    என்றலும், எயினர் வேந்தன்,
இவ்வழி வீர! யானே
    காட்டுவல்; எழுக என்றான்.         38

உரை
 அருள் தரு வாரி அன்ன - கருணைப் பெருங்கடலை ஒத்த;
செவ்வழி உள்ளத்து அண்ணல் - நேரிய வழியிற் செல்லும்மனத்தை
உடைய பரதன்அவ் வழி - அப்போது; அவனை நோக்கி - குகனைப்
பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி - இராமன் சென்றுள்ள
தென்திசையைப் பார்த்துத்தன் சிவந்த கைகளைக் குவித்து  வணங்கி;
நம்முன் - நம்முடைய அண்ணன்; எவ்வழிஉறைந்தான்?’ - எந்த
இடத்தில் தங்கியிருந்தான்?; என்றலும் - என்றுகேட்டவுடனே; எயினர்
வேந்தன் - வேட அரசனாகிய குகன்; ‘வீர! - வீரனே!; இவ் வழி -
இவ்விடத்தில்; யானே காட்டுவல் - நானே (அவ்விடத்தை உனக்குக்)
காண்பிப்பேன்எழுக’ - என்னுடன் புறப்படுவாயாக;என்றான் -.

     ‘தென் திசைச் செங்கை கூப்பி’ - ‘திசை நோக்கித் தொழுகின்றான்
(2332.)  எனமுன்னர் வந்ததும் காண்க. இவ்வழிஎன்பதற்கு இந்த
இடமாகும்என்று குகன் அவ்விடத்தையும்காட்டிச் சுட்டிச் சொல்லியதாக
முடித்துக் காட்டலும் ஒன்று.                                 

இராமன் வைகிய இடம் கண்ட பரதன் நிலையும் நினைவும்   
               
இராமன் பள்ளிகொண்ட இடம் கண்ட பரதனுடைய செயலும் சொல்லும்

கார் எனக் கடிது சென்றான்;
    கல் இடைப் படுத்த புல்லின்
வார் சிலைத் தடக்கை வள்ளல்
    வைகிய பள்ளி கண்டான்;
பார் மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
    பருவரல் பரவை புக்கான்.
வார் மணிப் புனலால் மண்ணை
    மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்.     39

உரை
  (குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் -
மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் -
கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய -
தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே
பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் - பார்த்து;
பார்மிசை - பூமியின் மேல்; பதைத்து - துடித்து; வீழ்ந்தான் - விழுந்து;
பருவரல் பரவை புக்கான் - துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப்
புனலால்- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்;

மண்ணை - பூமியை; மண்ணு நீர் ஆட்டும் - திருமஞ்சனத் தண்ணீரால்
குளிப்பாட்டுகின்ற; கண்ணான் - கண்ணுடையவனாக ஆனான்.

     பரதன் மனத்தின் பதைபதைப்பும், அதனால் ஏற்பட்ட துன்பமும்,
அதன்வழி உண்டாகின்ற கண்ணீர்ப்பெருக்கும் மிகுந்த படியைக் கூறினார்.
இராமபிரான் வைகியஇடத்தைத் திருமஞ்சனம் ஆடடினான் என்பது
போலக் கூறியது கவிநயம் - மண்ணக மடந்தையை மண்ணுநீர் ஆட்டி
(பெருங். 1-49-89) என்பது போல. கார் எனஎன்கின்ற உவமை பரதனது
திருமேனிநிறம், அவன் விரைந்து சேறல், பின் நீர்பொழிதல் (கண்ணீர்)
ஆகிய அனைத்துக்கும்பொருந்துதல் அறிந்து மகிழத்தக்கது.      
               
இயன்றது என் பொருட்டினால் இவ்
    இடர் உனக்கு என்ற போழ்தும்,
அயின்றனை கிழங்கும் காயும்
    அமுது என, அரிய புல்லில்
துயின்றனை எனவும், ஆவி
    துறந்திலென்; சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும்
    செல்வமும் கொள்வென் யானே.    40

உரை
  உனக்கு இவ் இடர் என்பொருட்டினால் இயன்றது என்ற
போழ்தும் - (இராம!) உனக்கு இவ் வனவாசமாகிய துன்பம் என்காரணமாக
உண்டாகியது  என்று அறிந்த அந்தநேரத்திலும்; (அதன் பிறகு) கிழங்கும்
காயும் அழுது என அயின்றனை - கிழங்கு, காய்முதலியவற்றை
(அரண்மனையில் இருந்து உண்ணும்) அமுது  போல உண்டாய்; அரிய
புல்லில்துயின்றனை- உறங்குதற்கு இயலாத புற்படுக்கையில் உறங்கினாய்;
எனவும் - என்றுஅறிந்த இந்த நேரத்திலும்; யான் ஆவி துறந்திலென்-
யான் உயிர் போகப் பெற்றேன்இல்லை, (அம்மட்டோ); சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் - ஒளி விடும் பொன்னாற்செய்யப்பெற்று உயர்ந்த
திருமுடியை; சூடும் செல்வமும் கொள்வேன் - சூட்டிக்கொள்ளும்அரசச்
செல்வத்தையும் ஏற்றுக் கொள்வேன் போலும்.

     பரதன் தன்னைத் தானே நொந்து  உரைத்துக்கொள்வதாகக் கொள்க.
தன்னால்தான்இத்தகைய துன்பங்கள் இராமனுக்கு உண்டாகின என்று
நைகிறான். அரண்மனையில் உண்பது அமுது ஆதலின்வனத்தில் உண்ணும்
கிழங்கும் காயும் அமுதாயின. இன்னும் உயிர் வைத்திருப்பதும் உயிர்
போகாமல் இருப்பதும் அரசுச் செல்வத்தையும் அநுபவிக்கவோ என்று
நொந்து உரைத்தானாம்.    
               
பரதன் இலக்குவன் இரவை எங்கே கழித்தான்? எனக் குகன் கூறல்

தூண் தர நிவந்த தோளான்
    பின்னரும் சொல்லுவான், ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
    இது எனில், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே
    போந்தவன், பொழுது நீத்தது
யாண்டு? ‘என இனிது கேட்டான்;
    எயினர் கோன் இதனைச் சொன்னான்.    41

உரை
தூண்தர - தூணை ஒப்பாகநிவந்த தோளான் - உயர்ந்த
தோள்களை உடையபரதன்; பின்னரும் சொல்லுவான் - மீண்டும்
குகனைப் பார்த்துப் பேசுவான்; ‘அந்நீண்டவன் துயின்ற சூழல் இது
எனின் - அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம்இது என்றால்;
நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன்- (அவ்
இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து
அவன் பின்னேயேவந்தவனாகிய இலக்குவன்; பொழுது  நீத்தது - இரவுப்
பொழுதைக் கழித்தது; யாண்டு?’- எவ்விடத்தில்?; என - என்று; இனிது
கேட்டான் - இனிமையாக வினாவினான்;எயினர்கோன் - வேட
வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் - இந்த விடையைக்கூறினான்.

     நெடியோன் என்று இராமனைப் பலவிடங்களிலும் கம்பர் குறிப்பர்.
அதனால் நீண்டவன்என்றார். நிமிர்தல் மேல் செல்லுதல் ஆதலின் உயர்ந்த
அன்பு என்றாகும். இலக்குவனைப்பற்றிவினாவுகிறபோது பரதனுக்கு ஏற்படும்
உள்ள நெகிழ்வைப் புலப்படுத்தவே இனிது கேட்டான்என்றார்.        
               
அல்லை ஆண்டு அமைந்த மேனி
    அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்
    வெய்து உயிர்ப்போடும் வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!
    கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
    இமைப்பு இலன் நயனம் என்றான். 42

உரை
  ‘கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- மலையைக் கீழ்ப்படுத்தி
உயர்ந்ததோள்களை உடையவனே!அல்லை ஆண்டு அமைந்தமேனி
அழகனும்-இருளைப் பயன்படுத்தி அமைத்தால் ஒத்த கரிய
திருமேனியுடைய அழகிற் சிறந்த இராமனும்; அவளும்- அந்தப்
பிராட்டியும்துஞ்ச - உறங்க; வீரன் - இலக்குவன்; வில்லைஊன்றிய
கையோடும்- வில்லின் மேல் வைத்த கையுடன்; வெய்துஉயிர்ப்போடும்-
வெப்பமான மூச்சுடையவனாய்; கண்கள் நீர் சொரிய- தன்னிரண்டு
கண்களும் நீரைச்சொரிய; கங்குல் எல்லை காண்பளவும்- இரவு தன்
முடிவான விடியலைப் பார்க்குமளவும்; நயனம் இமைப்பிலன்- கண்கள்
இமைகொட்டாமல் (உறங்காமல்); நின்றான்’-நின்றுகொண்டே (காவல்
செய்து) இருந்தான்என்றான் -

     அவள் - நெஞ்சறிசுட்டு. அஃதாவது  சொல்லும் குகனுக்கும், கேட்கும்
பரதனுக்கும் கேட்டஅளவிலே அது யாரைச்சுட்டுவது என்பது அவர்கள்
மனத்தால் அறியப்படுதலின், ‘வில்லை ஊன்றிய கைஎன்றது  நெடுநேரம்
நிற்பதற்கு ஊன்றுகோலாக வில்லக் கொண்டகை என்பதாம். நயனம்
இமைப்புஇலன்சினைவினை முதலொடு முடிந்தது சினைவினை
சினையொடும் முதலொடும் செறியும்ஆதலின்.(நன். 345.) ‘கண்கள் நீர்
கொரியஎன்றவர், மீண்டும் இமைப்பிலன் நயனம்என்றது இலக்குவன்
உறங்காதிருந்து காத்த பேரன்பில் குகனது  ஈடுபாட்டை உணர்த்தியது.
இலக்குவன்உறங்காது காத்தமையைக் கங்குல் எல்லை காண்பளவும் கண்டு
குகன் கூறினான். ஆகவே, குகனும்உறங்காதிருந்தமை தானே பெறப்படுதல்
காண்க. வரிவில் ஏந்திக் காலைவாய் அளவும் தம்பிஇமைப்பிலன் காத்து
நின்றான்”  “துஞ்சலில் நயனத் தைய சூட்டுதி மகுடம்என (1974, 6505.)
வருவனவற்றையும் இங்கு ஒப்பிட்டுக் காண்க. பிராட்டியை இங்கே குகன்
அவள்என்ற சேய்மைச்சுட்டால் கட்டியது தேருந்தொறும் இன்பம்
பயப்பது.  ஐந்து  வார்த்தைகளால் இராமனைக் கூறியவன்பிராட்டியை
எட்டியும் கட்டியம் சொல்ல இயலாது  எட்ட நின்றே பேசுகிறான். - கம்பர்
இராமனைமையோ மரகததோ மறிகடலோ மழைமுகிலோ” (1926.) என்று
சொல்லிப் பார்த்துப் பிறகு ஐயோஎன ஆற்றாமை மேலிட்டார் - ஆனால்,
பிராட்டியைச் சொல்லமாட்டாமலே  ஒப்பு எங்கே கண்டுஎவ்வுரை நாடி
உரைசெய்கேன்என்று  நாத் தழுதழுக்கக் (503) காண்கிறோம். ஆகவே,
வரம்பில்லாப் பேரழகினாளை எதனால் எவ்வாறு  சொல்வது  என்றறியாத
ஏழைமை வேடன் அவள்என்ற வார்த்தையால் சொல்லி அமைத்தான்
என்னலே போதுமானது.          
               
பரதன் இலக்குவன் நிலை கண்டு பாராட்டுதலும்
தன் நிலை கண்டு நொந்து கூறலும்

என்பத்தைக் கேட்ட மைந்தன்,
    “‘இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத் தேம் இல்,
    யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்;
    அவன் அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ?
    அழகிது என் அடிமை‘‘ என்றான்.    43

உரை
என்பத்தை- என்று (குகன் ) சொன்னதைகேட்ட மைந்தன் -
கேட்ட பரதன்; இராமனுக்குஇளையார் என்று - இராமனுக்குத் தம்பிகள்
என்று சொல்லும்படி; முன்பு ஒத்ததோற்றத்தேமில் - பிறக்கும்பொழுது
ஒத்த தன்மையான பிறப்பைப் பெற்ற எங்கள்இருவரிலும்; யான் -
பரதனாகிய யான்; என்றும் முடிவு இலாத துன்பத்துக்கு ஏது ஆனேன்-
எக்காலத்தும் கரைகாணாத பெருந்துன்பத்தை இராமன் அடைதற்குக்
காரணமாக ஆய்விட்டேன்; அவன் -அந்த இலக்குவன்; அது -
அத்துன்பத்தை; துடைக்க நின்றான் - இராமனிடமிருந்து நீக்கத் துணையாக
இராமனுடன் நின்றான்; அன்புக்கு எல்லை உண்டோ? - அன்புக்கு ஒரு
வரையறை உள்ளதோ; என் அடிமை அழகிது’ - நான் இராமனுக்குச்
செய்யும் அடிமைத்திறம்நன்றாயிருந்ததுஎன்றான் - என்று கூறினான்.

     “அன்பத்துக்கு எல்லை உண்டோஇலக்குவன் செயல் குறிதத்து.
என்பது’ ‘என்பத்துஎனவிரித்தல் விகாரம் செய்யுள் நோக்கி வந்தது.
அன்புக்கு என்பது அன்பத்துக்கு என அத்துச்சாரியை பெற்றது. பிறப்பால்
இருவரும் ஒரு தன்மையர் ஆயினும் அவன் சிறப்பாகிய அன்பினால்
எல்லையின்றி உயர்ந்தான்யான் அடிமையில் தாழ்ந்தேன் என்று பரதன்
தன்னை நொந்துகூறினான்.              
               
பரதன் கங்கை கடத்துவிக்குமாறு குகன்பால் வேண்டுதல்

அவ் இடை, அண்ணல் தானும்,
    அன்று அரும் பொடியின் வைகித்
தவெ் இடைதர நின்று ஆர்க்கும்
    செறி கழல் புளிஞர் கோமாஅன்!
இவ்விடைக் கங்கை யாற்றின்
    ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி,
    வேந்தன்பால் விடுத்தது என்றான்.       44

உரை
அண்ணல் தானும்- பரதனும்; அவ் இடை - அந்த இடத்தில்;
அன்று - அன்றையிரவு; அரும்பொடியின் வைகி- தற்குதற்கியலாத புழுதி
மண்ணில் தங்கியிருந்த, (பொழுதுவிடிந்ததும்); ‘தெவ் இடை தர -
பகைவர்கள் தோற்றோடும்படி; நின்று ஆர்க்கும்செறிகழல்- தங்கி ஒலிக்கும்
கட்டப்பட்ட வீரக்கழல் அணிந்த; புளிஞர் கோமாஅன்! -வேடர்களுக்கு
அரசனாகிய குகனே!இவ் இடை - இந்த நேரத்தில்; கங்கை ஆற்றின்-
கங்கை ஆற்றிலிருந்து; எம்மை ஏற்றினை ஆயின்- எம்மைப் கரையேற்றிச்
(தென்கரை)சேரச் செய்தால்; வெவ இடர்க்கடல் நின்று ஏற்றி - கொடிய
துயரக் கடலிலிருந்துகரையேற்றி; வேந்தன்பால் விடுத்தது’ - இராமன்பால்
அனுப்பியது ஆகும்;’ என்றான்- என்று சொன்னான்.

     இவ் இடை என்பது காலம் இடமாயிற்று. இராமன் வைகிய இடம்
கண்ட பரதன் அந்த இடத்திலேயே புழுதி மண்ணில் தங்கினானாம். கங்கை
ஆற்றைத் தாண்டித் தென்கரை விடுதல் - துன்பக் கடலைத் தாண்டி
இராமனிடம் சேர்பித்ததாகும் என்றானாம் இராமனை வேந்தன், மன்னன்
என்றே குறித்துச் செல்லும் பரதனது உளப்பாங்கை இங்கு அறிக. ஆற்றின்
ஏற்றுதல் என்பது ஆற்றிலிருந்து கரை யேற்றுதல் என்பதனைக்
குறித்தவாறாம்.  
               
குகன் கட்டளையால் நாவாய்கள் வருதல்

நன்று எனப் புளிஞர் வேந்தன்
    நண்ணினன் தமரை; ‘நாவாய்
சென்று இனி தருதிர் என்ன,
    வந்தன; சிவன் சேர் வெள்ளிக்
குன்றெனக் குனிக்கும் அம்பொற்
    குவடு எனக் குபேரன் மானம்
ஒன்று என நாணிப் பல வேறு
    உருவு கொண்டனைய ஆன.        45

உரை
  (பரதன் கூறியது  கேட்டு) புளிஞர் வேந்தன் - வேடர் வேந்தனாய
குகன்; ‘நன்று’- நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை
நண்ணினன் - தன் இனத்தவரைஅடைந்து; ‘சென்று இனி நாவாய்
தருதிர்என்ன - (நீங்கள்) சென்று  இனிமேல்படகுகளைக் கொண்டு
வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள்) சிவன் சேர் வெள்ளிக் குன்று
என- சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்)
வெள்ளிமலை போல; குனிக்கும் அம்பொன் குவடு என -
(அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த(மகா மேரு
மலையாகிய) பொன்மலை போலகுபேரன் மானம் என - (வடதிசைக்கு
அதிபனாகிய) குபேரனது  புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி -
(இவையெல்லாம்) தாம்ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு
உருவு கொண்டனைய ஆன - அவை தாமேஒவ்வொன்றும் பல்வேறு
வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன-
(கங்கையின் கண்) வந்து சேர்ந்தன.

     பல்வேறு வடிவும் நிறமும் பருமையும் உடைய படகுகளை
வெள்ளிமலை, பொன்மலை, புஷ்பக விமானம் பல்வேறு வடிவுகொண்டு
வந்துள்ளதாகக் கற்பனை செய்தார்; இது தற்குறிப்பேற்றம் உவமையணியுடன்
வந்தது. குபேரன் மானம் எனஎன்று எனவைப் பிரித்துக் கூட்டுக.    
               
நங்கையர் நடையின் அன்னம்
    நாண் உறு செலவின் நாவாய்,
கங்கையும் இடம் இலாமை,
    மிடைந்தன கலந்த எங்கும்;
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும்
    அமைதியின் அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும்
    இரு வினை என்னல் ஆன.        46

உரை
 நங்கையர் நடையின்- பெண்கள் நடைபோன்ற நடையையும்;
அன்னம் நாணுறு செலவின் - அன்னப் பறவைகள்நாணப்படும் படியான
நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்; அங்கொடு இங்கு - அக்கரையில்
உள்ளாரை  இக்கரையிலும்; இழித்தி ஏற்றும் அமைதியின் - ஏற்றி
இறக்கும்தன்மையினால்; அமரர் வையத்து அங்கொடு - தேவருலகமாகிய
அவ்வுலகத்தோடுஇங்கு - இவ்வுலகில்உள்ளாரை; இழித்தி ஏற்றும் -
ஏற்றி இறக்கும்; இருவினை - புண்ணியம்பாவம்என்னும் இருவினை;
என்னல் ஆன - என்று  சொல்லும்படியாக இருந்தனவாய்; கங்கையும்
இடம் இலாமை மிடைந்தன- கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி
நெருங்கினஎங்கும் கலந்தன - எல்லா இடங்களிலும் சேர்ந்தன.

     ‘அங்கொடு இங்குஎன்று பொதுவாகக் குறிப்பிடினும், கங்கையின்
வடகரை நின்று தென்கரைக்குச் சேறலே இங்கு வேண்டப்படுதலின்
வடகரையில் ஏற்றித் தென்கரையில்இறக்குதலே இங்கு உண்டு;
தென்கரையில் ஏறுவார் இலர் ஆதலின், புண்ணியம் மிக்கார் பூவுலகில்
நின்று அமரருலகு ஏறலும், புண்ணியம் அநுபவித்துத் தொலைத்த பிறகு
மீண்டும் பாவத்தை அநுபவிக்கமண்ணுலகு சேறலும் ஆகியவற்றுக்கு
இருவினை காரணமாக ஆதலின் இருவினைகளே மேலும் கீழும் ஏற்றி
இறக்குவ என்பது  கொண்டு அவற்றை நாவாய்களுக்கு உவமை ஆக்கினார்.
இழித்தி ஏற்றும்என்பதுஏற்றி இழித்துஎன மாற்றி உரைக்கப்பெற்றது.
இனி தென்கரையில் நின்று வடிகரையில்இறங்குவார் உளராயின்
இருதலையும் கொள்ளுத்லும் ஒன்று. அது உவமையோடு முழுதும்
பொருந்திற்றாம். நாவாய்களின் நடை நங்கையர் நடை போன்றது.
செல்கை அன்னம்  நாணப்படும்படி  உள்ளது  என்க;மெல்ல மெல்ல,
அசைந்து  செல்லுதலால். அன்னப்பேட்டை சிறை இலதாய்க் கரை,
துன்னிற்றென்னவும் வந்தது தோணியே” (2372.) என்றதும் நோக்குக.     
               
குகன் நாவாய்கள் வந்தமை கூற, அவற்றில் படைகளை
ஏற்றும்படி பரதன் சுமந்திரனிடம் சொல்லுதல்

வந்தன வரம்பு இல் நாவாய்;
    வரி சிலை குரிசில் மைந்த!
சிந்தனை யாவது? ‘என்று
    சிருங்கிபேரியர் கோன் செப்பச்
சுந்தர வரி விலானும்
    சுமந்திரன் தன்னை நோக்கி,
எந்தை! இத் தானை தன்னை
    ஏற்றுதி, விரைவின் என்றான்.      47

உரை
  சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில்
உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்;  (பரதனை நோக்கி) வரிசிலைக்
குரிசில் மைந்த - கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி
பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன - கணக்கில்லாத படகுகள்
வந்துள்ளன; சிந்தனையாவது’ - (உன்) மனக்கருத்து என்ன?; என்று
செப்ப - என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் - அழகிய கட்டமைந்த
வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி - (மதியமைச்சருள்
மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை - என்தந்தையே!;
இத்தானை தன்னை - இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப்
படகில் ஏற்றுக; என்றான் - என்று சொன்னான்.

     சிருங்கி பேரன் என்பது குகனது நாட்டின் தலைநகரம். வரிசிலைக்
குரிசில்என்று தயரதனைக் கூறியதற்கேற்பச் சுந்தர வரிவிலானும்என்று
இப் பாடலிலேயே பரதனைக் குறிப்பிட்டது ஒரு நயம். சுமந்திரன் தேர்
ஒட்டுதலில் வல்லவன்; அமைச்சன்; தயரதனுக்கு மிகவும் அணுக்கமானவன்.
ஆதலின், அவனைத் தன் தந்தையெனவே கொண்டு கூறினான் பரதன்.
கம்பராமாயணம் - குகப்படலம் குறித்த இணைப்புகள்:   
நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் (http://www.tamilvu.org/library/libindex.htm)
http://kambaramayanam-thanjavooraan.blogspot.in/2010/05/blog-post_18.html
http://www.mazhalaigal.com/2010/december/20101233gs_ramayan.php

கம்ப இராமாயணம் – அயோத்தியா காண்டம்
11. குகப்படலம்

கம்ப இராமாயணத்தில் அயோத்திய காண்டத்தில் குகப்படலம் அமைந்துள்ளது.  பரதன் முதலியோர் கங்கைக் கரைக்குப் போய் சேர்ந்த போது,  அதன் தென்கரைக்கு வந்து நின்ற குகன், ”இராமபிரானோடு போர் செய்வதற்குத் தான் இந்தப் படை திரண்டு வந்திருக்கின்றது” என்று நினைத்துச்  சினம் மிகக் கொள்கின்றான். குகனைப் பற்றி அமைச்சனாகிய சுமந்திரன் சொல்லக் கேட்ட பரதன், அவனைக் காண ஆவலோடு நெருங்கி வந்தான்.  மரவுரித்தரித்த நிலையில், இராமனிருக்கும் திசை நோக்கித் தொழுதவண்ணம் பரதன் வரக் கண்ட குகன், இராமனுக்குப் பின் பிறந்தார் பிழை செய்யார் எனக்கூறி படகில் ஏறி, பரதனின் அருகில் வந்து வணங்கினான்.

பரதன் கங்கையையடைதல்

பூ விரி பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரிநாடு அன்ன கழனி நாடு ஒரீஇத்
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்.         1

உரை
பூவிரி- பூத் தொழிலாற் சிறப்புற்ற;  பொலன்கழல் -பொன்னாற்
செய்யப்பெற்ற வீரக்கழலை அணிந்த;  பொருஇல் தானையான்- ஒப்பற்ற
சேனையை உடையபரதன்;  காவிரி நாடு அன்ன- காவிரி நதியால்
வளம்பெறும் (தமிழகத்துச்) சோழ நாட்டை ஒத்த; கழனிநாடு ஒரீஇ-
வயல்வளம் பொருந்திய கோசல நாட்டை விட்டு நீங்கி; தாவரசங்கமம்
என்னும் தன்மையயாவையும் - நிலைத்திணை; இயங்கு திணை என
இரண்டாகப் பிரிக்கப்பெறும் எல்லாஉயிர்களும்; இரங்கிட- (தன் நிலை
கண்டு) வருந்த;  கங்கை எய்தினான் -கங்கைக்கரையை அடைந்தான்.

     பூ - பொலிவு என்றும் ஆம்.  அரசகுமாரன் மரவுரி தரித்துத்துயரக்
கோலத்தோடு வருதல் கண்டு மனம் தாளாமல் எல்லா உயிர்களும் இரங்கின.
ஏழு வகையானஉயிர் வர்க்கங்களைத் தாவரம்,  சங்கமம் என்ற இரண்டில்
அடக்கினார். ஒரே இடத்தில்நிலையாக இருப்பன நிலைத்திணையாகிய மரம், செடி முதலிய தாவரங்களாம். இடம் விட்டுப்பெயர்ந்து  செல்லும் தன்மை  படைத்த ஊர்வன. நீர் வாழ்வன,  பறவை,  விலங்கு,  மனிதர், தேவர்  முதலியவை இயங்கு திணையாகிய சங்கமம் ஆகும்.

     கம்பர் தம்முடைய நாடாகிய சோழநாட்டைக் கோசல நாட்டுக்கு
உவமையாக்கினார். உவமைபொருளினும்உயர்ந்ததாக இருக்கவேண்டும்
என்பது இலக்கணம். “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”(தொல்.
பொருள். உவம. 3) என்பதனால் இங்குக் கோசல நாட்டினும் சோழ நாடு
உயர்ந்தது என்றாயிற்று இங்ஙனம் தம் நாட்டை மீக்கூறியது கம்பரது
தாய்நாட்டுப் பற்றைக் காட்டும். சோழநாடு போலவே கோசல நாட்டிலும்
பயிரில்லாத வெற்றிடம் இல்லை என்பதாம்.
             
பரதனொடு சென்ற சேனையுள் யானையின் மிகுதி

எண்ணரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெம் கரி மதம் அத்து அருவி பாய்தலால்
உண்ணவும் குடையயும் உரித்து அன்று ஆயதே.    2

உரை
 கண் அகன் - இடம் அகன்ற; பெரும் புனல் - மிக்க நீரை உடைய;
கங்கை - கங்கையாறு; அண்ணல் - பெருமையுடைய; வெங்கரி - கொடிய
யானைகளின்; மதத்து அருவி - மத நீர்ப் பெருக்காகிய அருவி; எங்கணும்
பாய்தலால் - எல்லா இடங்களிலும் பாயப் பெறுதலால்; எண்ண அரும்
சுரும்பு தம் இனத்துக்கல்லது - கணக்கிட முடியாத வண்டுக்
கூட்டங்களுக்கெல்லாமல் (ஏனைய உயிர்களுக்கு); உண்ணவும் - குடிக்கவும்; குடையவும் - குளித்து மூழ்கவும்; உரித்தன்று ஆயது -
உரிமையுடையதல்லாததாக ஆயிற்று.

கங்கை நீரினும் யானைகளின் மதநீர்ப் பெருக்கு மிகுதி என்றதாம்.
எனவே, யானைகளின்மிகுதி கூறியவாறு.  வண்டுகள் மதநீரிற் படிந்து
குடைந்து உண்ணும் இயல்பின ஆதலின் அவற்றுக்குஇப்போது கங்கை நீர்
உரியதாயிற்று. மதம் பிடித்த யானையின் உடல் வெப்பம் அதிகமாகஇருக்கும் ஆதலின், வெம்மையுடைய கரி என்றும் பொருள்படும். ‘ஏ’ காரம்ஈற்றசை. 2  

குதிரைகளின் மிகுதி

அடி மிசைத் தூளி புக்கு அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது; ஓர் முறைமை தேர்ந்திலேம்;
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும்
பொடி மிசைப் புரண்டவும் புரவி ஈட்டமே.          3

உரை
 அடிமிசைத் தூளி புக்கு - (குதிரைகளின்) அடியின் மேல் எழுந்த
தூசி(அமரருலகத்தில்) புகுந்து;  அடைந்த தேவர்தம் - அங்கே உள்ள
தேவர்களது;  முடி உற- தலைமீது  படும்படி; பரந்தது - (தேவருலகு
முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமைதேர்ந்திலெம் - ஒரு
தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்)
ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் - பெருமூச்சு
விட்டு (நீரைப்)பருகியவையும்; நீந்தி நின்றவும் - (நீரில்) நீந்திக்கொண்டு
இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் - மண்ணில் விழுந்து
புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே- குதிரைத் தொகுதிகளே.
(வேறில்லை)

     புழுதி, மேல் படர்ந்து சென்று வானுலகத்தில் தேவர்களை
முழுக்காட்டிய செய்தி நாம்அறியோம். ஆயினும், இங்கே நீரிலும் நிலத்திலும் நின்றவை யெல்லாம் குதிரைகளே என்றதுகுதிரைப் படையின் மிகுதி  கூறியவாறு. ‘ஏ’ காரம் ஈற்றசை.  
             
காலாட்படையின் மிகுதி

பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங்கடல் ஓடிற்று இல்லையால்;
மாலை ஏய் நெடுமுடி மன்னன் சேனையாம்
வேலையே மடுத்தது அக் கங்கை வெள்ளமே.      4

உரை
 அக் கங்கை வெள்ளம் - அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு;
பாலை ஏய்நிறத்தொடு - பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான்
பண்டு படர் - தான் முன்புசென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல்-
ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று  இல்லை - சென்று
கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி -பூமாலை
பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய;  மன்னன் சேனை ஆம்
வேலையே - பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது - உண்டு விட்டது.

     பரதனது  சேனைக்கடல்வழிவந்த இளைப்பினால் கங்கை நீரைப்
பருகிய படியால் கங்கையில் நீரே இல்லையாகிவிட்டது; எனவே,  கடலில்
கங்கை கலக்கவில்லை எனஉயர்வு நவிற்சியாகக் கூறிச் சேனை மிகுதியைக் காட்டினார். ‘ஓல்’-ஒலி மிகுதி. “பாலை ஏய்நிறத்தொடு....ஓடிற்றில்லை” என  உரைத்து மதநீர்ப் பெருக்கு்க் கலந்தலாலும்,  சேனை மிகுதிஉழக்கலாலும்  கங்கையின் கங்கையின் வெண்ணிறம் மாறிக் கடலில் கலந்தது என்பாருளர். பின்னர்ச் சேனையாம் வேலையே மடுத்தது என வருதலின் அது ஒவ்வாமை  அறிக. கடலினும் சேனைமிகுதி என்பதுகூறியதாம், யானை, குதிரை மிகுதி  கூறினார்; இப்பாடலால் காலாட்படையின் மிகுதி கூறினார் என்றலும் ஒன்று.
‘ஆல்’, ‘ஏ’ அசைகள்.  
             
பரதன் பின் சென்ற படையின் அளவு

கான்தலை நண்ணிய காளை பின் படர்
தோன்றலை அவ் வழி தொடர்ந்து சென்றன
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்தாயிரத்து இரட்டி முற்றுமே.      5

உரை
 கான் தலை நண்ணிய - காட்டிடத்திற் சென்ற;  காளை பின்படர் -
இராமன்பின்னே (இராமனை நாடிச்) சென்ற;  தோன்றலை - இராமன்
பின்னே (இராமனை நாடிச்)சென்ற; தோன்றலை - பரதனை;  அவ்வழி -
அந்த வழியிலே;  தொடர்ந்து சென்றன - பின்பற்றிச் சென்ற சேனைகள்;
முற்றும் -; ஆன்றவர்  உணர்த்திய -பெரியோர்களால் கணக்கிட்டு
உணர்த்தப்பெற்ற;  மூன்று பத்து ஆயிரத்து  இரட்டி -அறுபதினாயிரம்;
அக்குரோணிகள் - அக் குரோணிகள் ஆகும்.

     அக்குரோனி என்பது ஓர் எண்ணம். யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது (21870), தேர்இருபத்தோராயிரத் தெண்ணூற் றெழுபது
(21870). குதிரை அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்து (65610), காலாள்
இலக்கத் தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது (190350) ஆக இரண்டு
இலட்சத்துப் பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது (218700) ஓர்
அக்குரோணி. இப்படிஅறுபதினாயிரம் அக்குரோணி சேனைகள் உடன்
சென்றன என்க. மகாசக்கரவர்த்திகளுக்கு எல்லாம்அறுபதினாயிரம் என்றல்
நூல் மரபு என்பர் அக்குரோணி - அகௌஹிணீ என்னும் வடிசொற்
சிதைவு என்பர். ‘ஏ’ ஈற்றசை.    
             
அப்படை கங்கையை அடைந்த ஆயிடைத்
‘துப்பு உடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப்படை எடுத்தது ‘என்று எடுத்த சீற்றத்தான். 6

உரை
அப்படை- அந்தச் சேனை;  கங்கையை அடைந்த ஆயிடை -
கங்கைக் கரையைநெருங்கிய அச்சமயத்தில் (அது கண்டு) ‘குகன் எனப்
பெயரிய கூற்றின் ஆற்றலான்’ (2309); இப்படை எடுத்தது- இந்தச் சேனை
புறப்பட்டது;  துப்பு உடைக் கடலின் நீர் சுமந்தமேகத்தை- பவளம்
உடைய கடலிலிருந்து  நீரை முகந்து  சூல் கொண்ட கரு மேகத்தை;  ஒப்பு உடை அண்ணலோடு - உவமையாகப் பெற்ற கரிய திருமேனியுடைய  இராமபிரானோடு;  உடற்றவேகொல் - பேர்செய்வதற்காகவேயோ; என்று - எனக் கருதி; எடுத்தசீற்றத்தான்-மேல் எழுந்த கோபம்  உடையவனாய் தென்கரை வந்து தோன்றினான் (2313.)

     பரதன் சேனையோடு வடகரை அடைந்தான்.  குகன் தென்கரையில்
தோன்றினான். பரதனையும்சேனையையும் கண்டு ஐயப்பட்டுச் சீறுகிறான்.
அடுத்த செய்யுளின் முதற்கண் ‘குகன் எனப் பெயரியகூற்றின் ஆற்றலான்’
என்பதனை இங்குக் கொண்டு பொருள் முடிக்க. இதுமுதல் ஆறு பாடல்கள்
தொடர்ந்து (2313) ‘தென்கரை வந்து தோன்றினான்’ என்கின்ற இப்படலத்துப்
பதினொராம்பாடலில் முடியும். ‘ஏ’ வினா? ‘கொல்’- ஐயம். ‘ஆம்’அசை  6              
             
படை வரக் கண்ட குகன் நினைவும் செயலும்

குகன் எனும் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான்
நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில்
புகை உறக் குனிப்புறும் புருவப் போர் விலான்.     7

உரை
 குகன் எனப் பெயரிய - குகன் என்ற பெயரை  உடைய;  கூற்றின்
ஆற்றலான் - யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்;
தொகை முரண் சேனையை - கூட்டமாகஉள்ள வலிமை படைத்த (பரதன்)
சேனையை;  துகளின் நோக்குவான் - ஒரு தூசி போலப்பார்ப்பவனாய்;
நகை மிக - (இகழ்ச்சிச்) சிரிப்பு அதிகமாக; கண்கள் தீ நாற -
கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; நாசியில் புகை உற - (உள்ளே
எரியும் கோபநெருப்பால்) மூக்கிலிருந்து புகை வெறிவர; குனிப்புறும் -
(கோபத்தால்) மேலேறிவளைந்த;  புருவப் போர்விலான் - புருவமாகிய
போர்க்குரிய வில்லை உடையனானான்.

     மேல் பாட்டில் ‘எடுத்த சீற்றத்தான்’ என்றார். குகனுக்கு வந்த
சீற்றத்தின்மெய்ப்பாடுகளை இங்கே கூறினார்.  சேனை வருவதை முன்னவர் வந்த ‘துகளினால்’ பார்த்தறிந்தான்என்றலும் ஒன்று. ‘புருவப் போர்வில் என்றது உருவகம். புருவத்துக்கு வில் உவமை.  வளைதல்தன்மையால்; போர்க்கு மேலும் வளைப்பர். அதுபோல இங்கே கோபத்தால் புருவம்  மேலேறி மேலும்வளைந்தது. அதனால், ‘போர்விலான்’ என்றார். இனி  அவன் சீற்றம் தொடர்வதைத்தொடர்ந்து கூறுகிறார்.    
             
மை உறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ ஐநூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான்.     8

உரை
 மைஉற - தீமை உண்டாக;  இறுதி உயிர் எலாம்வாங்குவான் -
இறுதிநாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின்
உடலிலிருந்து) வாங்குகின்ற; கை உறுகவர் அயில் பிடித்தகாலன்
தான்- கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தைஏந்தியயமனே;
ஐ- அழகிய; ஐ நூறாயிரம் உருவம் ஆயின - ஐந்து இலட்சம் வடிவம்
எடுத்தாற் போன்ற;  உறு மெய் தானையான்- வலிய உடம்புடைய
சேனையை உடையவன்; வில்லின் கல்வியான் -வில்வித்தையில்
தேர்ந்தவன்.

     ‘ஐ - இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர்’ என (1983) முன்னர்க்
கூறியது,  இருபதோடு ஐந்துவைத்துப் பெருக்க நூறு ஆகும். நூறு
ஆயிரவர் எனக் கூட்ட இலட்சம் ஆகும். முன்னர் உள்ள ‘ஐ என்றஐந்தால்
முரண ‘ஐந்துலட்சம் சேனை’ என வரும். அது  நோக்கி, இங்கும்
‘ஐந்நூறாயிரவர்’என்பதற்குப் பொருள் உரைத்தாம். முன்னர் உள்ள ‘ஐ’
அழகு, வியப்பு என்னும் பொருள் பற்றிவந்தது. எண் பற்றி வந்ததன்று.
எண்ணாகக் கொள்ளின் முன்பாடற் றொகையோடு மாறுபடும் ஆதலின்
என்க. குகனது சேனை வீரர்கள் காலனை ஒத்தவர்கள் என்று அவனது
சேனைப் பெருமை கூறினார்.    

கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
‘கிட்டியது அமர் ‘எனக் கிளரும் தோளினான்.       9

உரை
 கட்டிய - (இடைக்கச்சில்) கட்டப்பெற்றுள்ள; கரிகையன் -
உடையவாளை உடையவன்; கடித்த வாயினன் - (பற்களால்) உதட்டைக்
கடித்துக் கொண்டிருப்பவன்; வெட்டிய மொழியினன்- கடுமையாகப் பேசும்
சொற்களை உடையவன்;  விழிக்கும் தீயினன்- (கண்கள்) விழித்துப்
பார்க்கும் நெருப்புத் தன்மை  உடையவன்;  கொட்டிய துடியினன் -
அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்;  குறிக்கும் கொம்பினன் -
(போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘அமர்
கிட்டியது’ - ‘போர் அருகில்வந்துவிட்டது;’ எனக் கிளரும் தோளினான்-
என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன் (ஆகி..)
(வரும் பாடலில் முடியும்).

     உதட்டைப் பற்களால் கடித்தலும்,  உரத்த சத்தமிட்டுக் கடுமையாகப்
பேசுதலும், கண்கள்கனல் சிந்தச் சிவந்து  பார்த்தலும் கோபத்தின்
மெய்ப்பாடுகளாம். போர் கிடைத்தால்வீரர்களாயிருப்பார் மகிழ்தல் இயல்பு.
‘கிட்டியது அமர்’ என்றதால் குகனது  தோள்கள்கிளர்ச்சியுற்றன எனற்ார்.
“போரெனில் புகலும் புனைகழல் மறவர்” (புறம் 31) என்பதும் காண்க.
துடியும், கொம்பும் போர்க்காலத்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட
எழுப்பப்படும்வாத்தியங்களாகும். எனவே, இப்பாடலால் குகன் போருக்குச்
சித்தமானான் என்பதைக்கூறினார்.    
             
‘எலி எலாம் இப்படை; அரவம் யான் ‘என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்;
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே.      10

உரை
‘இப்படை எலாம் எலி - இந்தச் (பரதன்) சேனை முழுவதும்
எலிகளாகும்; யான்அரவம் - யான் இந்த எலிகளைத் தின்றொழிக்கும்
பாம்பாவேன்;’ என - என்று வீரவார்த்தை பேசி; வலி உலாம் - வலிமை
நிரம்பிய; உலகினில் வாழும் -உலகத்தில் வசிக்கின்ற; வள் உகிர்ப் புலி
எலாம் - வளவிய நகத்தை உடைய புலிகள்எல்லாம்; ஒரு வழிப் புகுந்த
போல- ஒரே இடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும்படி உள்ள; ஒலி
உலாம் சேனையை- (தனது) ஆர்ப் பொலி மிகுந்த(வேட்டுவச்) சேனையை;
உவந்து கூவினான் - மகிழ்ச்சியால் (போகுக்கு) அழைத்தன.(ஆகி).

     ‘இப்படை’ என்றது பரதன் சேனையை. படைகளை எலியாகவும்,
தன்னைப் பாம்பாகவும் உருவகித்தது எலிக்கு நாகம் பகை என்பதுபற்றி.
“ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை, நாகம் உயிர்ப்பக் கெடும்” (குறள்
763) என்பதனை ஈண்டு ஒப்பு நோக்குக. “அரவின் நாமத்தை எலி இருந்து
ஓதினால் அதற்கு, விரவும் நன்மை என்”, “புற்றில் நின்று வல் அரவினம்
புறப்படப் பொருமி, இற்றது எம்வலி என விரைந்து இரிதரும் எலி” (6238,
9325) எனக் கம்பர் பின்னும் கூறுவர். “பைரிவி நாகத் தைவாய்ப் பிறந்த,
ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல, ஒழிந்தோர் ஒழிய” என (பெருங். 1.56:
273 - 5) வருவதும் இக்கருத்தினதாதல் அறிக. நகத்துக்கு வளமாவது
கூர்மையாம். வாளுடைய வீரரைக் கூரிய நகம் உடைய புலியாக்கினார் என்க. உருவகம், உவமையாம். ‘வலிமை நிரம்பிய உலகம் என்றது உலகில் உள்ள  ஆற்றலை நோக்கி. இனி ‘வளி உலாம் உலகு’ என்பாரும் உளர். அது  பொருந்துமேற்கொள்க.    
             
மருங்கு அடை தனெ் கரை வந்து தோன்றினான்;
ஒருங்கு அடை நெடும் படை ஒல் என் ஆர்ப்பினோடு
அருங் கடை யுகம் தனில் அசனி மா மழை
கருங்கடல் கிளர்ந்து என கலந்து சூழவே.          11

உரை
 ஒருங்கு அடை நெடும் படை - ஒன்று சேர்ந்து  வந்த பெரிய
(வேட்டுவச்) சேனை; அருங் கடை உகம்தனில் - அரிய கடையூழிக்
கூாலத்தில்; அசனி மா மழை - இடியோடுகூடிய மேகமும்; கருங்கடல் -
கரிய கடலும்;  கிளர்ந்து  என - (ஒலித்து) மிக்குஎழுந்தார்  போல;
கலந்து சூழ - ஒன்று சேர்ந்து தன்னைச் சுற்றிவர; மருங்கு அடை-
பக்கத்தில் உள்ள; தென்கரை - (கங்கையாற்றின்) தெற்குக் கரையில்; வந்து
தோன்றினான் - (குகன் என முடிக்க)

     படைகளின் மிகுதியும், ஆரவாரம்சூழ்தலும் பற்றி  ஊழிக்காலத்து
இடிமேகமும், பொங்குங்கடலும் சேர்ந்தது போல என்று உவமை கூறினார்.
வந்து சேர்ந்தான் என்னாது ‘தோன்றினான்’என்றது, பரதனும் அவன்
சேனையில் உள்ளாரும், பிறரும் தனது பேராற்றலும் வீராவேசமும்
காணும்படி வந்தடைந்தான் என்பதுபற்றி. வடகரையில் பரதனும்,
தென்கரையில் குகனும் நின்றார் ஆதலின்‘தோன்றினான்’ என்றார் எனலும் ஆம்.
             
குகன் தன் படையினர்க்கு இட்ட கட்டளை

தோன்றிய புளிஞரை நோக்கிச் ‘சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென்; என் உயிர் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம் ‘என்றான்.      12

உரை
   (தென்கரை வந்து  சேர்ந்த குகன்) தோன்றிய புளிஞரை நோக்கி -
(தென்கரையில்தன்னால் அழைக்கப்பட்டுத் தன்முன் வந்து) தோன்றிய
வேடர்களைப் பார்த்து; ‘ஆன்ற பேர்அரசு - நிரம்பிய பெரிய
அரசாட்சியை;  என் உயிர்த் துணைவற்கு - என் உயிர்போலச் சிறந்த
தோழனாகிய இராமனுக்கு; ஈகுவான் - தருவதற்காக; சூழ்ச்சியின்ஊன்றிய
சேனையை - (அதனை அவன் பெறாமல் தடுக்கும்) ஆலோசனையோடு
எதிரில் (வடகரையில்)கால் ஊன்றி நிற்கும் (இப்பரதனது) சேனையை;
உம்பர் ஏற்றுதற்கு - (போரில்தொலைத்து) வீரசுவர்க்கத்தே செல்ல
விடுதற்கு;  ஏன்றனென் - தொடங்கியுள்ளேன்;  நீர் அமைதி ஆம்’ -
நீங்களும் இதற்கு உடன்படுவீர்களாக;  என்றான் - என்றுசொன்னான்.

     அரசன் கீழது சேனையாயினும், தன் கருத்தை அவர்கள்பால்
தெரிவித்து அவர்கள் உடன்பாடுவேண்டல் பண்பாட்டின் சிறப்பினைத்
தெரிவிக்கும்.  போரில் இறந்தார் வீரசுவர்க்கம்பெறுதல் நூல் முடிபு
ஆதலின் ‘உம்பர் ஏற்றுதல்’ என்று  அதனைக் கூறினான். ‘ஈகுவான்’
என்னும் வினையெச்சம், ‘ஏற்றுதற்கு’ என்னும் வினையொடு முடிந்தது.    
             
“துடி எறி; நெறிகளும் துறையும் சுற்றுற
ஒடி எறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி; கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி பட “ எனப் பெயர்த்தும் கூறுவான்.         13

உரை
 ‘துடிஎறி - போர்ப் பறைகளை அடியுங்கள்; நெறிகளும்துறையும்-
வருவதற்குரிய வழிகளையும் (தென்கரையில்) ஏறுதற்குரிய துறைகளையும்; ஓடியெறி - அழித்துநீக்கி, இல்லாமல் செய்யுங்கள்; அம்பிகள்யாதும்  ஒட்டலிர் - தோணிகளுள்ஒன்றையும் (கங்கையில்) ஓட்டாதீர்கள்; கடிஎறி  கங்கையின் - விரைந்து அலைவீசிவருகின்ற கங்கையாற்றின்;  கரை  வந்தோர்களை - தென்கரைக்கு (தரமாக முயன்று)வந்தவர்களை;  பிடி- பிடியுங்கள்; பட எறி’ - இறக்கும்படிஅழியுங்கள்; எனா - என்று (குகன்)கூறி;  பெயர்த்தும் - மேலும்; கூறுவான்- சில வீரவார்த்தைகளையும்  சொல்லுவான் ஆனான்.

     ‘துடி’ என்பது ஈண்டுப் போர்ப்பறைகளுக்கு உபலக்கணம். துடியொன்று
கூறவே மற்றப் பறைகளும் கொள்ளப்பட்டன. பரதனது சேனை இராமன்மேல் படையெடுத்து வந்துள்ளதாகக் குகன் கருதினான் ஆதலின், அச்சேனை தென்கரை அடையாதபடி எச்சரிக்கையாகத் தன் சேனைகளுக்குக் கட்டளை இடுகிறான் என்க. மேலும், அச் சேனை வீரர்கள் உற்சாகம் அடைவதற்காகச் சில வார்த்தைகள் மேல் கூறுகிறான். ‘கடி எறி’ காவலாக வை  என்றுரைப்பதும் உண்டு; அது பிடி என்பதற்குப் பின் உரைப்பின் பொருந்தும். ‘தோணிகள் ஓட்டாதீர்’ என்றான் ஆதலின் ‘விரைந்து அலைவீசி ஓடும்’ கங்கையில் தோணிகள் உதவியின்றித் தென்கரை அடைதல் இயலாது என்பதைப் பின்னர்க் கூறினான். அதனையும் மீறித் தம்  ஆற்றலால் வருவாரைப் ‘பிடி’, ‘பட எறி’ என்பது அதன்பின் கூறப்பட்டது.
குகனது ஆற்றொழுக்கான சிந்தனை யோட்டத்தை இப்பாடல் சுட்டிச்
செல்கிற அழகு காண்க. ‘எறி’, ‘பிடி’ என வீரரைத் தனித்தனி நோக்கி
ஒருமையிலும், ‘ஓட்டலிர்’ எனக் கூட்டமாக பார்த்துப் பன்மையிலும்
கூறினான் என்க. இனி ஒருமை பன்மை மயக்கம் எனினும் அமையும்.    
             
குகன் மீட்டும் கூறல்

அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர்
    நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
    மன்னரும் வந்தாரே!
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன,
    செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய் குகன்“
    என்று எனை ஓதாரோ?                                     14

உரை
  ‘என் ஆருயிர் நாயகன் - என் அரிய உயிர்த் துணைவனாகிய;
அஞ்சனவண்ணன்- மை போலும் கரிய நிறமான திருமேனி அழகனாகிய
இராமபிரான்; அரசு ஆளாமே - ஆட்சிஉரிமை எய்தாதபடி;
வஞ்சனையால் - சூழ்ச்சியால்;  எய்திய -(அவ்வரசாட்சியைக் கைப்பற்றி)
அடைந்த; மன்னரும் - அரசரும் (பரதரும்);  வந்தாரே - (இதோ
என்னருகில்) வந்துள்ளார்கள் அன்றோ!;  தீ உமிழ்கின்றனசெஞ்சரம் -
நெருப்பைக் கக்குகின்றனவான (என்) சிவந்த அம்புகள்;  செல்லாவோ -
(இவர்கள் மேற்) செல்லாமல் போய்விடுமோ?-; இவர் உஞ்சு போய்விடின்-
இவர்கள்(என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும்
இடத்துக்குப்) போய்விட்டால்; ‘நாய்க்குகன்’ என்று - (உலகோர்) குகன்
றாய் போன்ற கீழ்த்தன்மை உடையவன் என்று;  எனை - என்னைப் பற்றி;
ஓதாரோ’ - சொல்லாமல் இருப்பார்களா? (தொடரும்)

     இவன் ஈடுபட்டது அவன் திருமேனி அழகில் ஆதலின், அது
தனக்கும் அவனுக்கும் ஒன்றாயிருத்தலின் ‘அஞ்சன வண்ணன்’ என்று இது
மேலிட்டு வந்தது என்க. இராமன் பெற வேண்டிய அரசைப் பரதன் பெற்றது
பற்றியது சீற்றம் என்பதைத் தெரிவித்தான். ‘நாய்’ என்பது ஒருவரைக்
கீழ்மைப்படுத்திப் பேசுதற்குப் பயன்படுவது ஆதலின் இங்கே ‘நாய்க்குகன்’
என்று உலகம் தன்னை இழித்துப் பேசும் என்றான். பரதன் படைகளைப்
போகவிடில் இராமன்பால் காட்டும் நன்றியுணர்வுக்கு மாறானது; அச்செயலைச் செய்யும் குகனுக்கு நன்றியுணர்வி்ல் சிறந்த நாயைக் கூறலாமோ எனின், அற்றன்று, நாய் நன்றியுணர்விற் சிறந்ததாயினும் தன் வீட்டுக்குடையவன்பால் காட்டும் நன்றியுணர்வைத் தன் வீட்டில் திருட வரும் திருடன் தனக்கோர் உணவு கொடுத்த வழி அவன்பாலும் நன்றி காட்டிக் குரைக்காது ஒரோவழி இருந்துவிடல் பற்றி அதன் நன்றியுணர்வும் சிறப்பின்மை கண்டு உலகம்  அதனைக் கீழ்மைப்படுத்திக் கூறுதல் தெளிவாம். ‘குகன் நாய்’ என்ற  சொல்வதினும் ‘நாய்க் குகன்’ எனல் மேலும் இளிவரலாம். உரையினும் ‘பாவத்துக்கே’ கம்பர் இது போன்ற இடங்களில் முதன்மை தருதல்  வெள்ளிடை. ஏகார, ஓகாரங்கள் ஐய, வினாப் பொருளில் வந்துள்ளன.
‘மன்னர்’ என்பது இகழ்ச்சிக் குறிப்பு. உயர்சொல்தானே குறிப்பு நிலையால்
இழிபு விளக்கிற்று (தொல். சொல். சிளவி. சேனா.27).                
             
ஆழ நெடுந்திரை ஆறு
    கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு
    விலங்கிடும் வில்லாேளா?
தோழமை என்று அவர் சொல்லிய
    சொல் ஒரு சொல் அன்றோ?
‘ஏழைமை வேடன் இறந்திலன் ‘
    என்று, எனை ஏசாரோ?                        15

உரை
‘இவர் -; ஆழம் - ஆழத்தையும்;  நெடுந் திரை - நீண்ட பெரிய
அலைகளையும்  உடைய; ஆறு - கங்கையாற்றை;  கடந்து - தாண்டி;
போவாரோ- அப்பால் ( தென்கரைப் பகுதிக்குச் ) செல்வார்களா?
(மாட்டார்);  வேழ நெடும்படை- யானைகளை உடைய நீண்ட பெரிய
சேனையை; கண்டு - பார்த்து (பயந்து);  விலங்கிடும்- புறமுதுகு காட்டி
விலகிச் செல்லுகின்ற;  வில் ஆளோ - வில் வீரனோ (நான்); ‘தோழமை’
என்று- (உனக்கும் எனக்கும்) நட்பு என்பதாக; அவர் சொல்லிய சொல்-
அந்த இராமபிரான் சொல்லிய வார்த்தை; ஒரு சொல் அன்றோ -
(காப்பாற்ற,மதிக்கப்பட வேண்டிய) ஒப்பற்ற வார்த்தை அல்லவா?
(அந்நட்புக்கு மாறாக இவர்களைப்போகவிட்டால்); ஏழைமை வேடன் -
அற்பனாகிய இந்த வேடன்;  இறந்திலன் -(இவ்வாறு இராமனோடு நட்புச்
செய்து, இப்பொழுது  சேனைக்குப் பயந்து இராமனை எதிர்க்கும்பரதனோடு
நட்பாய் மானங்கெட்டு வாழ்தலைவிட) இறக்கலாமே, அது தானும்
செய்தானிலனே; என்றுஎனை ஏசாரோ - என்றிவ்வாறு  உலகத்தார்
என்னைப் பழியாமல் விடுவார்களா - (பழிப்பர்)(தொடரும்)

     ‘போவாரோ’, ‘ஏசாரோ’ என்பனவற்றுள் எதிர்மறை இறுதியில்
ஓகாரங்கள் ஐயவினாப் பொருளில் வந்துள்ளன. இனி இரண்டு எதிர்மறை
உடன் பாட்டுப் பொருள் என்ற கருத்தில் ‘ஆ’ ‘ஓ’ என்ற இரண்டையும்
எதிர்மறை எனக் கொண்டு கூறலும் ஒன்று. இவ்வாறே முன்னுள்ளவற்றிற்கும், பின்வருவனவற்றிற்கும் காண்க. “ தோழமை என்று அவர் சொல்லிய  சொல்லைக்’ குகன் ‘செய்குவென் அடிமை’ (1969) என்றபொழுது அவன்கூறிய  கொள்கை (தொண்டன்) கேட்ட அண்ணல், அதனை விலக்கி “யாதினும்  இனிய நண்ப” (1970) என்றும், “என் உயிர் அனையார் நீ, இளவல் உன்  இளையான், இந் நன்றுதலவள் நின்கேள்” (1988) என்றும், “முன்பு உளெம்  ஒரு நால்வேம்.....இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்” என்றும் (1988) இராமன் கூறிவற்றைக் கொண்டு அறிக. “ ஏழை ஏதலன் கீழ்மகன்  என்னாது.....தோழன் நீ எனக்கு” (திவ்யப். 1418) என ஆழ்வார் கூறியதும்  இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. “ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ  தோழன்; மங்கை கொழுந்தி எனச் சொன்ன, வாழி நண்பு” (5091) என்று இவரே பிற்கூறியது கொண்டும் அறியலாம். ‘தோழமை’ என்றது பண்பாகு பெயராய்த் தோழன் என்பதைக் குறித்தது. காட்டிலே வாழும் வேடுவராகிய தமக்கு “வேழ நெடும்படை” ஒரு பொருட்டல்ல என்பது கருதி அதனைக் கூறினான். “யானை உடைய படை காண்டல் முன்னினிதே” (இனியவை 5) என்பதும் காண்க. ‘ஏழைமை’ என்பது அறியாமைப் பொருளதாயினும் ஈண்டு எளிமை, அற்பம் என இகழ்பொருளில் வந்தது.      
             
முன்னவன் என்று நினைந்திலன்;
    மொய் புலி அன்னான், ஓர்
பின்னவன் நின்றனன் என்றிலன்;
    அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது?
    இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில், வேடர்
    விடும் சரம் வாயாவோ?                 16

உரை
‘இவன் - இப் பரதன்; “முன்னவன்” என்று நினைந்திலன் -
(இராமபிரானைக்குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை;
“மொய் புலி அன்னான் ஓர் பின்னவன்நின்றனன்” - வலிமை
நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக உடன் உள்ளான்;  என்றிலன் - என்று கருதினானும் இல்லை; அன்னவை  பேசானேல் -அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி  நினைக்காமல் விட்டாலும்; என்னைஇகழ்ந்தது என் - (இடையே கங்கைக்கரை யுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல்)இகழ்ந்தது என  கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ - (இவன் இராமன்பால்  போர்செய்வது)இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?;  வேடர் விடும் சரம் - வேடர்கள்விடுகின்ற அம்புகள்; மன்னவர்
நெஞ்சினில் - அரசர்கள் மார்பில்;  வாயாவோ’ -தைத்து  உள் நுழைய
மாட்டாவோ?

     இராமனைத் தமையன் என்று கருதியிருந்தால் அரசை அவன்பால்
கொடுத்திருப்பான், புலி அன்னஇலக்குவன் இராமன் உடன் உள்ளான்
என்று கருதினால் போருக்கு வராமல் இருந்திருப்பான் என்றான்.என்
ஆற்றலையும் உணராதவனாய் உள்ளானே என்று இகழ்ந்தானாம் - இறுதியடி இகழ்ச்சிக்குறிப்பாகப் பேசிய வீரவசனம். ‘அன்னவை பேசானேல்’ பேசுதல்  எண்ணுதல் என்ற பொருளில்வந்துள்ளது. எண்ணுதலைப் பேசுதல் என்றது  உபசார வழக்கு ஆகும்.    
             
பாவமும் நின்ற பெரும்பழியும்
    பகை நண்போடும்
ஏவமும் என்பவை மண்ணுலகு
    ஆள்பவர் எண்ணாரோ?
ஆ! அது போக! என் ஆர் உயிர்த்
    தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும் ஆர்
    உயிரும் கொடு போயன்றோ?                    17

உரை
மண் உலகு ஆள்பவர் - (இப்) பூவுலகத்தை ஆள்கின்ற அரசர்கள்;
பாவமும் -(தாம் ஒரு செயலைச் செய்கிறபோது  அதனால் விளையும்)
பாவத்தையும்;  நின்ற பெரும் பழியும்- (செயல்முடிந்த பிறகு அதனால்)
தம்மேல் நின்ற பெரும் பழியையும்; பகை நண்போடும்-பகைவர் இன்னார்,
நண்பர்கள் இன்னார் என்பவற்றையும்; ஏவமும் - விளையும்குற்றங்களையும்;
என்பவை - என்று இதுபோலச் சொல்லப்படுபவைகளையும்; எண்ணாரோ-
நினைக்கமாட்டார்களோ?; ஆவது போக - அது கிடக்கட்டும்; என்
ஆருயிர்த்தோழமை தந்தான் மேல் போவது - எனக்கு அரிய
உயிரோடொத்த நட்புறவைத் தந்தஇராமன்மேல் படையெடுத்துச் செல்வது;
ஆர் உயிரும் சேனையும் கொடு போயன்றோ - தம்முடைய அரிய
உயிரையும் சேனைகளையும் (எனக்குத் தப்பி) உடன் கொண்டு சென்ற
பிறகல்லவா(முடியும்)?

     இங்கே அண்ணனைக்கொல்வதால் ஏற்படும் பழி, பாவம்
முதலியவற்றைக் கருதுகின்றானில்லை என்னும் கருத்தால் இவ்வாறு
கூறினான். பகை நண்பு என்பன போர்க்குச் செல்கிறவர் தம் எதிரிகளுக்குத்
தற்போது பகைவர் யார்? நண்பர் யார்? என்பதை அறிந்து சேறல்
வேண்டும் என்பது. அவ்வாறு அறியின் இராமனுக்கு நண்பன் குகன் என
அறிந்து சேறல் வேண்டும் என்பது. அவ்வாறு அறியின் இராமனுக்கு
நண்பன் குகன் என அறிந்து படையெடுத்துச் செல்வதைத் தவிர்ப்பான்
பரதன் என்றானாம். “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்” (குறள் 471) என்பதனுள் ‘துணைவலி’
என்றதனை இதன்கண் வைத்து அறிக. “செல்வம் வந்துற்ற காலைத்
தெய்வமும் சிறிது பேணார், சொல்வன நினைந்து சொல்லார் சுற்றமும்
துணையும் விளைவும் எண்ணார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்” (வில்லிபாரதம்27. 141) என்னும் பாடற் கருத்தைக் குகண் கூற்றோடு ஒப்புக்
காணலாம். ஏவம் - எவ்வம் என்பதன் திரிபு. குற்றம் அல்லது தீமை எனப்
பொருள்படும். “ஏவம் பாராய்” (1532)என்பது காண்க......‘ஆ அது போக’ -
அந்த அது  போகட்டும் ‘மேலே சொல்லியவைகளைஇவன் சிந்திக்காமல்
விட்டாலும் விடட்டும்’ என்றானாம் குகன். நான் இவனையும்
சேனையையும் உயிரோடு போகவிட்டால்தானே இராமன் இருக்கும்
இடம்வரை சென்று இவன் போர்செய் இயலும் என்றுகூறினான். ஓகாரங்கள் வினாப் பொருளன.        
             
அருந்தவம் என் துணை ஆள,
    இவன் புவி ஆள்வானோ?
மருந்து எனின் அன்று உயிர்; வண் புகழ்
    கொண்டு பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை உகந்தவர்
    தம்மொடு போகாதோ
இருந்ததும் நன்று கழிக்குவென்
    என்கடன் இன்றோடே.        18

உரை
 என் துணை - எனக்கு நண்பனாகிய இராமன்; அருந் தவம் ஆள-
அரியதவத்தைச் செய்துகொண்டிருக்க;  இவன் - இந்தப் பரதன்;  புவி
ஆள்வானோ? -உலகத்தை ஆட்சி செய்வானோ? (அதையும்
பார்த்துவிடுவோம்); உயிர் -  என்னுடையஉயிர்; மருந்து  எனின் -
(கிடைத்தற்கரிய) தேவர் அமுதமோ என்றால்;  அன்று -அல்ல (நான்
அப்படி அதை அரிதாக எண்ணிப் பாதுகாக்க நினைக்க வில்லை);
வண்புகழ்கொண்டு- (இராமனுக்காகப் பரதனை எதிர்த்து) அதனால் சிறந்த
புகழைப் பெற்று; பின் மாயேனோ- அதன் பிறகு உயிர் துறக்க
மாட்டேனோ?;  பொருந்திய கேண்மை - மிகவும் ஒட்டியஉறவை;
உகந்தவர் தம்மொடு - என்பால் கொண்டு மகிழ்ந்த இராம
இலக்குவர்களோடு; போகாதே - உடன் செல்லாமல்; இருந்தது நன்று -
(நான்) இங்கேயே தங்கியது நல்லதாய்ப் போயிற்று; என்கடன் - (நான்)
இராமனுக்குச் செய்ய வேண்டிய கடமையை; இன்றோடு கழிக்குவென் -
இன்றைக்கே செய்து முடிப்பேன்.

     என் துணை - என் அண்ணன் எனலும் ஆகும். ‘முன்பு உளெம், ஒரு
நால்வேம்; முடிவு உளது என உன்னா, அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளெர் ஆனோம்” (1995) என்பது கொண்டு இராமன் குகன்
அண்ணன் தம்பி முறையாதல் அறியலாம் . ‘உயிர் மருந்து எனின் அன்று’
என்பதற்கு, “மருந்தோ மற்று ஊன் ஒம்பும் வாழ்க்கை, பெருந்தகைமை, பீடு
அழிய வந்த இடத்து” (குறள் 968) என்பது பற்றி உரை காண்க. மருந்து -
உயிரைக் காப்பாற்றி நிறுத்தவல்ல சஞ்சீவினி போன்ற மருந்தும் ஆகும்.
‘நன்று’ என்பதற்கு ‘நன்றாயிருந்தது’ எனத் தன்னிகழ்ச்சியாகப் பொருள் கூறி, நான் அவர்களுடனேயே போயிருக்க வேண்டும், போகாமல் தங்கியது நன்று  என்று கூறுதல் உண்டு. அப்பொருள் இங்கு ஏற்குமேல் கொள்க.
இராமனுக்குப் பகைவராய் உள்ளாரை அழித்தலைப் தன் கடமை செய்தலாகக் குகன் கருதினன் என்க. ‘ஏ’காரம் ஈற்றசை.  
             
தும்பியும் மாவும் மிடைந்த
    பெரும்படை சூழ்வாரும்
வம்பு இயல் தார் இவர் வாள் வலி
    கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்! துறை
    ஓடம் விலக்கீரோ
நம்பி முன்னே இனி நம் உயிர்
    மாய்வது நன்று அன்றோ?                             19

உரை
 தும்பியும் - யானைகளும்;  மாவும் - குதிரைகளும்;  மிடைந்த -
நெருங்கிய; பெரும்படை - பெரிய சேனையால்;  சூழ்வு ஆரும் -
சுற்றப்படுதல்பொருந்திய;  வம்பு இயல் தார் இவர் - மணம் வீசுகின்ற
மாலையணிந்துள்ள இவர்கள்; வாள்வலி - படையின் ஆற்றல்;  கங்கை
கடந்து அன்றோ - இக் கங்கையாற்றைக்கடந்து  போன பிறகு அல்லவா
(காட்டமுடியும்?);  வெம்பிய வேடர் உளீர்! - (இவர்களைக்கண்டு) மனப்
புழுக்கம் அடைந்துள்ள வேடர்களாய் உள்ளவர்களே!; துறை ஓடம்
விலக்கீரோ - நீர்த்துறையிலே இவர்களுக்கு ஓடம் விடுவதை
நிறுத்திவிடுங்கள். (ஒருவேளை இவர் நம்மைத்தடுத்து மேற்செல்லும்
ஆற்றல் உடையவராயினும் இவரோடு போரிட்டு);  நம்பி முன்னே -
இராமபிரானுக்கு முன்னாலேயே;  நம் உயிர் மாய்வது - நமது உயிர்
அழிந்து போவது; இனி நன்று அன்றோ? - இனிமேல் நல்லது அல்லவா?

     “ஆழ நெடுந்திரை ஆறு கடந்து  இவர் போவாரோ”, “இவ் எல்லை
கடந்து  அன்றோ”, “சேனையும்ஆர் உயிரும் கொடு போய் அன்றோ”
என்பதனை ஒப்புக் காண்க. மணம் வீசும் மாலையைப்பரதனுக்குக்
குகன்தானே இட்டான் எனக் கொள்க; அவன் படை எடுத்து  வந்தான் என
நினைத்தலின், தந்தை இறந்ததோடு தமையன் காடு செல்லவும் தான்
காரணமாக இருத்தலின் பழிசுமந்தேன் என்று காடுநோக்கிக் கண்ணீரோடு
வருகின்ற பரதன்,  மணம் வீசும் மாலை அணிந்து  வந்தான் என்றல்
பொருந்தாதாதலின்,  ‘நீங்கள் ஓடம் ஓட்டாவிடினும் அவர்களே ஓடத்தைப்
பயன்படுத்தி அக்கரைசெல்லக்கூடும். ஆதலின், கங்கையில் ஓடங்களை
அப்புறப்படுத்துங்கள்’ என்று தன் சேனைவீரர்களுக்குக் குகன் கட்டளை
இட்டான். போரில் வெற்றி தோல்வி உறுதி அல்ல ஆதலின், ‘நம்பி முன்னே இனி நம் உயிர் மாய்வது நன்று’ என்றானாம். ‘ஓ’காரம் வினாப் பொருட்டு.
             
போன படைத் தலை வீரர்
    தமக்கு இரை போதா இச்
சேனை கிடக்கிடு; தேவர் வரின்,
    சிலை மா மேகம்
சோனை படக் குடர் சூறை
    பட சுடர் வாேளாடும்
தானை படத் தனி யானை
    படத் திரள் சாயேனோ.       20

உரை
 போன - (நம்முடன்) வந்துள்ள;  படைத்தலை  வீரர் தமக்கு -
சேனையின்கண் உள்ள வீரர்களுக்கு; இரை போதா - (ஒருவேளைப்)
போர்க்கும் பற்றாத; இச்சேனை - இந்தப் (பரதனது) சேனை; கிடக்கிடு-
கிடக்கட்டும்; தேவர்வரின்- தேவர்களே (படையெடுத்து) வந்தாலும்; சிலை
மா மேகம் - என் வில்லாகியகரிய மேகம்;  சோனை பட - அம்பு
மழையைச் சொரிய;  குடர் சூறைபட -எதிரிகளது  குடர்கள் சிதைந்து
அலைய;  தானை சுடர்வாளோடும் பட - எதிரிச் சேனைகள்தம்கையிற்
பிடித்த படைக்கலங்களோடும் இறக்க; தனி யானை பட - ஒப்பற்ற
யானைகள்அழிய; திரள் சாயேனோ - (அப்படைக்) கூட்டத்தை
நிலைகுலைக்காமல் விடுவேனோ?

     இரை என்பது உணவு. இங்கே வீரர்களுக்கு உணவாவது போர்
ஆதலின், ‘ஒருவேலைப் போர்’ எனப்பொருள் உரைத்தாம். ‘போன
படைத்தலை வீரர்’ இராம இலக்குவனர் என்றலும் ஒன்று. நம்மைத்தப்பிச்
சென்றாலும் இராம இலக்குவர்களோடு இரை போதா இச்சேனை என்றானாம்.
‘தேவர் வரின்’- வரினும் என்ற சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. ‘ஓ’
வினாப்பொருட்டு.    
             
நின்ற கொடைக் கை என் அன்பன்
    உடுக்க, நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர்
    பலத்தை, என் அம்பாலே
கொன்று குவித்த நிணம் கொள்
    பிணக் குவை கொண்டு ஓடித்
துன்று திரைக் கடல், கங்கை
    மடுத்து இடை தூராதோ?                                21

உரை
 அன்று- (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற
கை - (முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச்
செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்-என் அன்பிற்குரிய
இராமன்; நெடுஞ் சீரை உடுக்க - பெரியமரவுரியைஉடுக்குமாறு;
கொடுத்தவள் - (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்;  மைந்தர்
பலத்தை - மகனார் ஆன பரதன் சேனையை;  என்அம்பால் கொன்று
குவித்த - என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள்
பிணக்குவை - கொழுப்பு  மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை;
கங்கை - இந்தக் கங்கா நதி; கொண்டுஓடி - இழுத்துக் கொண்டு
விரைந்து சென்று; துன்று திரைக்கடல் - நெருங்கியஅலைகளை உடைய
கடலில்;  மடுத்து - அவற்றைச் சேர்த்து;இடை தூராதோ?- அக்கடல்
இடத்தைத் தூர்த்து விடாதோ? (தூர்த்துவிடும்)

     ‘நின்ற கொடைக் கை’ என்பதற்கு என்றும் வள்ளலாக நின்ற எனவும்
பொருள் உரைக்கலாம்.சீரை - மரவுரி.  அதன் பொல்லாங்கு கருதி நெடுஞ்
சீரை என்றான். குகன் தன் ஆற்றாமையால்.‘மைந்தா’ என்றது பரத சத்துருக்கனர்களையும் ஆம்.  சத்துருக்கனன் கைகேயியின் மகனல்லன்ஆயினும்  பரதன் துணையாதலின் ‘மைந்தர்’ என ஒன்றாக்கிக் குறித்தான் குகன் எனல்  அமையும்என்க. ‘பலம்’ என்றது சேனையை.
             
“ஆடு கொடிப் படை சாடி,
    அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார் ‘‘ எனும்
    இப் புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு
    இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி,
    எடுத்தது காணீரோ?                               22

உரை
 ஆடு - அசையும்;  கொடி - கொடிகளை உடைய; படை -
சேனைகளை;  சாடி - கொன்றழித்து;  அறத்தவர் ஆள - தருமத்தின்
துணைவர்களாய இராமஇலக்குவர்கள் ஆளும்படி; வேடு- வேடர்கள்; பார்
கொடுத்தது - (இந்தப்)பூமியை மீட்டுக் கொடுத்தனர்;  எனும் இப்புகழ்
மேவீர் - என்கின்ற இந்தப் புகழைஅடையுங்கள்;  நாடு கொடுத்த என்
நாயகனுக்கு - (இவர்கள் ஆளும்படி) தான் ஆட்சியுரியவேண்டிய
நாட்டைக் கொடுத்துவிட்டு வந்த என் தலைவனாகிய இராமனுக்கு;  இவர் -
இந்தப்பரதர்;  நாம் ஆளும் காடு - நாம் ஆட்சி செயும் நமக்கு
உரிமையாகிய இந்தக்காட்டையும்; கொடுக்கிலர் ஆகி - ஆட்சி செய்ய
மனம் பொறாதவராய;  எடுத்தது- படை எடுத்து  வந்த படியை;
காணீர் - காணுங்கள்.

     போர் வீரர்களைநோக்கி இதனுள் உள்ள நியாய அநியாயங்களை
அவர்களுக்கு விளக்கி,அவரவரது மனோநிலைக்கு ஏற்பத் தூண்டிப்
போர்க்கு அவர்களைத் தயார்  செய்வது  அறிந்துஇன்புறத்தக்கது. போர்
என்றால் தினவும் தோள்களை உடையவர்களைப் பார்த்து, “ஆடு கொடிப்
படைசாடி” என்றான். அறத்தின் பொருட்டுத் தம்முயிரையும் கொடுக்கும்
மனம் உடைய வீரர்களைநோக்கி, “அறத்தவரே ஆள” என்றான். புகழ்
ஆசை உடையாரைப் பார்த்து, “வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ்
மேவீர்” என்றான். தம்முடைமையைப் பறிப்பாரைப் பொறாத குணம் உடைய வீரரைப் பார்த்து நாம ஆளும் காடு கொடுக்கிலர் ஆகி” என்றான்.
இவ்வாறு பல்வேறு மனநிலையை வீரர்களையும் அவரவர்க்கு ஏற்பப் பேசிப் போர்க்குத் தயார் செய்வதாகக் குகனைப்பேச வைத்தகம்பர் கவி இனிமை தேரும்தொறும் இனிதாம் தமிழ்க்கு எடுத்துக் காட்டாகும். ‘ஏ’தேற்றம். ஓகாரம் வினாப் பொருட்டு.      
             
மா முனிவர்க்கு உறவு ஆகி,
    வனத்திடையே வாழும்
கோ முனியத் தகும் என்று,
    மனத்து இறை கொள்ளாதே,
ஏ முனை உற்றிடில், ஏழு
    கடல் படை என்றாலும்
ஆ முனையின் சிறு கூழ் என
    இப்பொழுது ஆகாதோ?                      23

உரை
 ‘மா முனிவர்க்கு - பெரிய தவசிகளுக்கு; உறவாகி - இனிய
சுற்றமாகி; வனத்திடையே வாழும் - காட்டிடத்தில் வாழும்; கோ -
இராமன்; முனியத் தகும்’- (தன் தம்பியான பரதனை எதிர்த்தால் என்னை)
வெறுத்துக் கோபிப்பான்; என்று -; மனத்துஇறை கொள்ளாது -
மனத்தின்கண் சிறிதும் நினையாமல்; ஏ முனை உற்றிடில் - போர்முனையில்சென்று (பரதனைச்) சந்தித்துப் போரிட்டால்; இப்பொழுது -இந்நேரத்தில்; ஏழு கடற் படை என்றாலும் - ஏழு கடல் அளவு சேனை என்றாலும்; ஆ  முனையின் சிறு கூழ் என - பசு தின்பதற்கு முனைந்தவழி அதன் எதிரில்  கிடந்த சிறிய புல்என்று சொல்லும்படி; ஆகாதோ - அனைத்தும் அழிந்து  போகாதோ (போகும்.)

     இராமனது குணங்களைக் குகன் நன்குணர்ந்தவன் ஆதலின்,
இராமனுக்கு உதவுவதாக, நன்றிக்கடன்செய்வதாக இதுகாறும் கூறிப் பரதனை எதிர்க்கத் துணிந்தவன், அச்செயல் இராமனுக்கு உகப்பாகாது என்பதையும் அறிந்து வைத்துள்ளான் என்க. அது இடைப்புகுந்த வழி போரின் வேகம்  குறையும்தளர்ச்சி வரும் ஆதலின், மனத்திற் சிறிதும் அக்கருத்திற்கு இடம் கொடுக்காது போர்செய்தல்வேண்டும் என்றானாம். பசித்த பசுவின் பசுவின் முன் சிறிய பயிர் உண்ணப்பட்டுமாய்ந்து போதல் போல என்முன் இச்சேனை கணத்தில் அழியும் என்றாள். ‘கொள்ளாதே’ ‘ஏ’காரம் அசை.    
             
சுமந்திரன் பரதனிடம் குகன் தன்மை சொல்லல்

என்பன சொல்லி, இரும்பு அன
    மேனியர் ஏனோர் முன்
வன் பணை வில்லினன், மல் உயர்
    தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது
    கண்டு, அரி ஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன்
    மூரிய தேர் வல்லான்.        24

உரை
 வன் பனை வில்லினன் - வலிய கட்டமைந்த பருத்த வில்லை
உடையவனும்;  மல்உயர் தோளினன் - மல் தொழிலால் சிறப்புற்ற
தோளை உடையவனும்;  வாள் வீரற்குஅன்பனும் - வாளாற் சிறந்த
வீரனாகிய இராமனுக்கு அன்பு  பூண்டவனும் ஆய குகன்;  இரும்பு
அனமேனியர் ஏனோர்முன் - இரும்பை ஒத்த வலிய உடம்பை உடைய
வேடுவ வீரர்களுக்கு முன்னால்; என்பன சொல்லி - என்ற இச்
சொற்களைச் சொல்லி;  நின்றனன் -;  நின்றது கண்டு - (குகன்) நின்ற
படியைப் பார்த்து;  மூரிய தேர்வல்லான் - வலிய தேரைஓட்டுதலில்
வல்லவனாகிய சுமந்திரன்;  அரி ஏறு அன்ன முன்பனில் - ஆண்
சிங்கத்தைஒத்த வலிமை படைத்த பரதனுக்கு முன்னால்; வந்து
மொழிந்தனன் - வந்து  சிலசொற்களைக் கூறுவானானான்.

     இதன்முன் பத்துப் பாடல்களால் குகன் தன் படைவீரர்களை நோக்கிக்
கூறிய வீரவாசகங்களைக் கூறி, அவற்றை “என்பன சொல்லி” என
இச்செய்யுளில் வாங்கினார். மேற்செயல்கருதி நின்றான் ஆதலின்,
‘நின்றனன்’ எனப் பெற்றது. இனிப் பரதனது உண்மை நிலையைத்தெரிவது
கருதிப்போர்க்கு விரையாது  நின்றான் எனலும் ஆம்.  மூரிய -
தொன்மையான எனலும்ஆம். சுமந்திரன் சூரியகுலத்து அரசர்க்குத்
தொன்றுதொட்டுத் தேர்வல்லான் ஆதலின்,அப்பொருளும் பொருந்தும்,
குகன் கூறிய அனைத்தும் பரதனை அழிப்பதாகக் கூறினவும் இராமன்பாற்
கொண்ட பேரன்பாற் கூறியனவேயன்றி வேறன்று என்பதனை
உணர்த்துதற்காக,  ‘வாள் வீரற்குஅன்பனும்’ என்று பாடலில் குகனைக்
கம்பர் குறிப்பிட்டார் என்னலாம்.                  
             
“கங்கை இருகரை உடையான்,
    கணக்கு இறந்த நாவாயான்,
உங்கள் குலத் தனி நாதற்கு
    உயிர் துணைவன், உயர் தோளான்,
வெம் கரியின் ஏறு அனையான்,
    வில் பிடித்த வேலையினான்,
கொங்கு அலரும் நறும் தண் தார்க்
    குகன் என்னும் குறி உடையான் ‘‘       25

உரை
 ‘கங்கை- கங்கையாற்றின்;  இருகரை - இரண்டு கரைப்பகுதியில்
உள்ளநிலங்களையும்; உடையான் - தனக்குச்சொந்தமாக உடையவன்;
கணக்கு  இறந்த -அளவில்லாத;  நாவாயான்- படகுகளை உடையவன்;
உங்கள் குலத் தனி நாதற்கு -உங்கள் சூரியவம்சத்தில் திருவவதாரம்
செய்தருளிய ஒப்பற்ற தலைவனான இராமனுக்கு;  உயிர்த்துணைவன் -
ஆத்ம நண்பன்;  உணர் தோளான் - உயர்ந்ததோள்களைஉடையவன்;
வெங்கரியின் ஏறு அனையான் - (மதம் பிடித்த)கொடிய ஆண்
யானையைஒத்தவன்; வில் பிடித்த வேலையினான்-வில்லைக் கையில்
பிடித்துக் கொண்டுள்ள (வேட்டுவவீரராகிய) சேனைக் கடலை உடையவன்;
கொங்கு அலரும் நறுந் தண்தார்- மணம் வீசித்தேன் பிலிற்றும்
குளிர்ந்த மாலையைஅணிந்துள்ள; குகன் என்னும் குறி உடையான்-
குகன் என்கின்ற பெயரை உடையவன்;’ (அடுத்த பாட்டில் முடியும்)

     இராமனைக் காணும் விரைவில் நிற்கின்ற பரதனுக்கு முதலில்
தேவைப்படுவது கங்கையைக் கடந்து அக்கரை செல்வதே ஆதலால் எடுத்த
எடுப்பில் “கங்கை இரு கரை உடையான், கணக்கு இறந்த நாவாயான்”
என்று அவற்றை முதலிற் கூறினான். இராமன்பால் அன்புடையார் எல்லாம்
பரதனால் அன்பு செய்யப்படுவார் ஆதலின் ‘தனி நாதற்கு உயிர்த்
துணைவன்’ என்று அதனை அடுத்துக் கூறி, நின் அன்புக்குப் பெரிதும்
உகந்தவன், இராமனை மீண்டும் அழைத்து வரும் உனது குறிக்கோளைக்
கங்கையைக் கடத்திவிடுவதோடு அன்றித் தொடர்ந்து வந்தும்
முடிக்கவல்லவன் என்பது தோன்றக் கூறினான். அடுத்து, குகனது
பேராற்றலும், அவன் படைப்பெருமையும், அவனது பெயரும் கூறுகிறான்.
‘தேர்வலான்’ ஆகிய சுமந்திரன் மதியமைச்சனும் ஆதலின் சொல்வன்மை
விளங்கப் பேசினன் எனலாம். இங்கும் இராம நண்பன் என்கின்ற
காரணத்தால் குகனுக்குத் தேர்வலான் ‘கொங்கலரும் நறுந் தண் தாரை’
அணிவித்தான் என்க. இனி, இத் தேர்வலான் ஆகிய சுமந்திரன் மந்திரி
என்பதனை ‘மந்திரி சுமந்திரனை’ (1856) என்பதால் அறிக. குகன்
இராமனோடு நட்புக் கோடற்கு மிக முன்னரே இராமனைக் கானகத்தே
விட்டுச் சென்ற சுமந்திரன் ‘உங்கள் குலத்தனிநாதற் குயிர்த்துணைவன்’
என்று பரதன்பால் கூறியது எப்படி என்னும் வினா எழுதல் இயல்பே.
அமைச்சராவார் அனைத்தையும் உணர்தல் வேண்டும் ஆதலின் இராமனது
பயணவழியில் கங்கையைக் கடக்கின்றவரை நிகழ்ந்த நிகழ்ச்சி களையும்
அவன் முன்னரே அறிந்திருத்தலில் வியப்பு இல்லை என அறிக. வான்
மீகம். ‘குகனோடு சுமந்திரன் சிலநாள் உடனிருந்து பிறகே வெறுந்தேருடன்
மீண்டான்’ என்று கூறுதல் காண்க.    
             
“கல் காணும் திண்மையான்,
    கரை காணாக் காதலான்,
அல் காணில் கண்டு அனைய
    அழகு அமைந்த மேனியான்,
மல் காணும் திரு நெடுந்தோள்
    மழை காணும் மணி நிறத்தாய்!
நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் ‘‘ என்றான்.   26

உரை
 ‘மல்காணும் திரு நெடுந்தோள் - மற்போரில் எல்லை கண்ட
அழகிய நெடிய தோளைஉடைய; மழை காணும் மணி நிறத்தாய்-
கார்மழையைக் கண்டால் போன்ற நீலமணி போலும்நிறம் வாய்ந்த
திருமேனி அழகனே!;  கல்காணும் திண்மையான்- மலையைக் கண்டாற்
போன்ற வலிமை உடையவன்; கரை காணாக் காதலான்- (இராமன் பால்)
எல்லை காணமுடியாத பேரன்பை உடையவன்;  காணில்- வடிவத்தைப்
பார்த்தால்;  அல் கண்டு அனைய அழகு அமைந்த மேனியான்-
இருளைக் கண்டாற்போன்ற அழகு பொருந்திய உடம்பை உடையவன்
(ஆகிய இத்தகைய குகன்);  நெறி எதிர் -நீசெல்கின்ற வழியின்
எதிரில்; நின்காணும் உள்ளத்தான் - உன்னைப்பார்க்கும் மனம்
உடையவனாய்; நின்றனன் ‘என்றான் - நின்றுகொண்டுள்ளான்’ என்று
சொன்னான்சுமந்திரன்.

     குகன் பரதனை எதிர்க்க நின்றவனே ஆயினும் இராமன்பால்
பேரன்புடையவனாக அச்சுமந்திரனால்அறியப்பட்டவன் ஆதலால்
இராமனை வரவேற்கச் செல்லும் பரதனை எதிர்பார்த்துக் கண்டு மகிழவே
நின்றதாகச் சுமந்திரன் தன் போக்கில் கருதினான் என்க. பரதன் கங்கையின்
வடகரைப்பகுதியில் கங்கைக் கரையோரமாக நில்லாமல் உள்ளே தள்ளி
நிலப்பகுதியில் சிறிது தொலைவில் நிற்றலின் காண்பார்க்குக் குகனது சீற்றத்
தோற்றம் புலனாகாமையும் பொதுத்தோற்றமே அறியப்படுதலும்
உண்டாயிற்று. மேனி அழகாலும், நிறத்தாலும் இராமன், குகன், பரதன்
மூவரும் ஓர் அணியாதல் பெறப்படும்.      
             
பரதன் குகனைக் காண விரைதல்

தன்முன்னே, அவன் தன்மை
    தன் துணைவன் முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
    துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக் கொண்ட
    மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே; அவற் காண்பென்
    யானே சென்று ‘என எழுந்தான்.    27

உரை
 தன்முன்னே - தன் எதிரில்;  அவன் தன்மை - அந்தக் குகனது
நல்லியல்புகளை; தந்தை துணை - தன் தந்தையாகிய தயரதனின்
நண்பனான சுமந்திரன்; முந்து  உரைத்த - முற்பட்டுச் சொல்லிய;
சொல்முன்னே - சொல்லுக்கும் முன்பாக;உவக்கின்ற - மகிழ்ச்சி
அடைகின்ற; துரிசு இலாத் திரு மனத்தான் - குற்றம்சிறிதும் இல்லாத
நல்ல மனத்தை உடையவனாகிய பரதன்; ‘மன் முன்னே தழீஇக்
கொண்ட -நம் அரசனாகிய இராமன் வனம் புகுந்த முன்னமே (அன்பு
செய்து) தழுவிக் கொண்டுள்ள; மனக்குஇனிய துணைவனேல் - அவன்
மனத்துக்கு இனிய துணைவன் ஆனால்; என் முன்னே - என்னை(அவன்
வந்து பார்ப்பதற்கு) முன்னமே; யானே சென்று அவற் காண்பென்’ -
நானே(முற்பட்டு) சென்று அவனைக் காணுவேன்;’ என - என்று சொல்லி;
எழுந்தான் -புறப்பட்டான்.

     இராமன்பால் அன்புடையான் குகன் ஆதலின் அவனை முற்பட்டுச்
சென்று காணப் பரதன்விரைந்தான். ‘இராமன் அன்பினால் குகனைத்

துணைவனாகத் தழுவிக்கொண்டான்’ என்ற சொல் செவிப்படும்
முன்னமேயே பரதனது உள்ளம் உவகையால் நிறைந்தது என்பது பரதன்
இராமன்பால் கொண்ட பேரன்பை எடுத்துக்காட்டும். பாகவதர்களாய்
உள்ளார் ஒருவர் ஒருவரினும் முற்படுதல் இயல்பு. ‘என் முன்னே’ என்பதற்கு,
அந்தக் குகன் இராமனால் தழுவிக் கொள்ளப்பெற்ற துணைவனேல்
என்னுடைய முன் பிறந்த தமையனே ஆவான் எனப் பொருள்படுதல் இங்கு
மிகவும் பொருந்தும். தமையனைத் தம்பி சென்று காணுதல் பொருந்தும்
அன்றித் தம்பியைத் தமையன் வந்து பார்த்தல் பொருந்தாது ஆதலின்
யானே சென்று காண்பன் என்றானாம். ‘என் முன்னே’ என்று குகன்
பரதனின் தமையன் ஆதலை, ‘இன் துணைவன் இராகவனுக்கும்;
இலக்குவற்கும், இளையவற்கும், எனக்கும் மூத்தான்’ (2367) என்று கோசலா
தேவியிடத்துக் குகனைப் பரதன் அறிமுகப்படுத்தியவாற்றான் அறிக.
சுமந்திரன் தயரதனது மந்திரி ஆதலின் ‘தந்தை துணை’ ஆயினன். பின்னர்ப்
பரதன் “எந்தை இத்தானை தன்னை ஏற்றுதி” (2349) என அவனைத்
தந்தையாகவே கூறுமாறும் இதனால் அறிக. பரதன்மாட்டுக் குகன் ‘துரிசு’
நினைத்தான் ஆதலின், அக்குறிப்புப் பொருள் பற்றித் ‘துரிசு இலாத் திரு
மனத்தான்’ என்றது இங்கு மிகவும் பொருந்தும்.    
             
பரதன் தோற்றம் கண்ட குகன் நிலையும் செயலும்
(2418-2421)

என்று எழுந்து தம்பியொடும்
    எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது எனக்
    குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான்,
    திருமேனி நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங்குஞ்சி
    எயினர்கோன் துண் என்றான்.       28

உரை
  (பரதன்) என்று - இவ்வாறு சொல்லி;  எழுந்த தம்பியொடும் -
தன்னுடன்புறப்பட்ட சத்துருக்கனனொடும்;  எழுகின்ற காதலொடும் -
(இராமனிடத்தில்அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப்
பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம்என்று) உள்ளே
மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது
என -ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர்
கங்கைக் கரை குறுகி- குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி;
நின்றவனை - நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்-
நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடையவேடர் தலைவனாய  குகன்; நோக்கினான் - கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்;
திருமேனி நிலை - வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின்
வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் - திடுக்குற்றான்.

     பரதனைத்பற்றித் தான் எண்ணியதற்கும், அவன் நிலைக்கும் மிகவும்
மாறுபாடாக இருந்தது கண்டு துணுக்குற்றான் என்க. இராம இலக்குவர்
போலே பரத சத்துருக்கணர் ஆதலின், ‘எழுந்த தம்பி’என்று பரதன்
கட்டளை இட வேண்டாது அவன் குறிப்புணர்ந்து சத்துருக்கனன்
புறப்பட்டான்.        
             
வற்கலையின் உடையானை
    மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன
    நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற
    துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ,
    விம்முற்று நின்று ஒழிந்தான்.      29

உரை
 வற்கலையின் உடையானை - மரவுரியாலாகிய ஆடையை
உடுத்துள்ள; மாசு அடைந்தமெய்யானை - புழுதி படிந்த உடம்பை
உடைய;  நற் கலை இல் மதி என்ன - நல்லகலைகளில்லாத (ஒளியற்ற)
சந்திரன் போல;  நகை இழந்த முகத்தானை - ஒளி இழந்தமுகத்தை
உடைய; பரதனை; கண்ணுற்றான் - (குகன்) கண்ணால் சந்தித்துப் பார்த்து;
கையினின்று வில்இடை வீழ - தன் கையிலிருந்து  வில்லானது  தானே
சோர்ந்து  நிலத்தின்கீழ் விழும்படி; விம்முற்று - துன்பத்தால் கலக்கமுற்று;
நின்று ஒழிந்தான் -ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

     பரதன் திருமேனி நிலை எவ்வாறு இருந்தது என்பதை இச் செய்யுள்
விவரிக்கிறது. பரதனது நிலை இராமன் வனத்தின்கண் சென்றதனால்
அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தைக் காட்டுவதாக இருந்ததுஆதலின்,
இப்படிப்பட்டவனை எப்படி நினைத்துவிட்டோம் என்ற தன்னிரக்கமும்
சேர்ந்து கையறுநிலையைக் குகனுக்கு உண்டாக்கியது ஆதலின் நின்றவன்
நின்றவாறே உள்ளான் என்ற வாறாம்.மதிக்குக் கலையால் ஒளி கூடுதலின்
ஒளி குறைந்த முகத்தைக் கலை இழந்த மதியோடு உவமித்தார்.
எப்பொழுதும் தன்னிடத்திருந்து நீங்காது உறுதியாகப் பிடித்திருக்கும்
வில்லும் தன்னை மறந்ததுயரநிலையில் குகன் கையிலிருந்து நழுவிக் கீழே
தானே விழுந்தது என்பது குகனது நிலையைத்தெளிவாகக் காட்டும்.
அதனாலேயே. ‘நின்றான்’ என்னாது ‘நன்ளொழிந்தான் என்றார்; ஒரு
சொல்லாக்குக.      
             
“நம்பியும் என் நாயகனை
    ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
    தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
    திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
    இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்.   30

உரை
  ‘நம்பியும் - ஆடவரிற் சிறந்த இப்பரதனும்;  என் நாயகனை - என்
தலைவனாகியஇராமனை; ஒக்கின்றான் - ஒத்திருக்கிறான்; அயல்
நின்றான் - அருகில்இருக்கின்றவன் (ஆகிய சத்துருக்கனன்); தம்பியையும்
ஒக்கின்றான் - இராமனது உடன்பிரியாத் தம்பியாகிய இலக்குவனை
ஒத்திருக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான் - (இப்பரதன்)
தவத்துக்குரிய வேடத்தை மேற்கொண்டுள்ளான்; துன்பம் ஒரு முடிவு
இல்லை -(இப் பரதன்) படுகிற துன்பத்துக்கோ ஓர் அளவே இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்- இராமன் சென்ற திசையாகிய
தென்திசையைப் பார்த்து  அவ்வப்போது வணங்குகிறான்; (இவற்றால்இவன்
துயர்நிலை விளங்குதலின்) எம்பெருமான் - எம்கடவுளாகிய இராமனுக்கு;
பின்பிறந்தார் - தம்பிகள்; பிழைப்பு இழைப்பரோ’ - (தவறு
செய்வார்களா)’தவறு  செய்வர் என்று  நான் எண்ணியது பெரும் தவறு);
என்றான் - என்று நினைத்தான்.

     பரத சத்துருக்கனர்கள் இராம இலக்குவர்களைப் போன்றனர் என்றான்.
தவ வேடமும் அவ்வாறேஒத்தது. துயர்நிலை இராமனுக்கு இல்லாதது.
இராமனைப் பிரிந்ததனால் பரதனுக்கு உளதாயது. திசைநோக்கித் தொழுதல்
இராமபக்திக்கு அடையாளம். மூத்தோர்பால் இளையார் காட்டும் ஒரு மரபு
எனலாம். “மன் பெரிய மாமனடி மகிழ்ந்து திசை வணங்கி” (சிந்தா. 849)
காண்க. இராமனுக்குப்பரதன் தீங்கு செய்ய வந்துள்ளதாகக் கருதிய தனது
பேதைமையைக் குகன் தனக்குள்ளே விசாரித்தான்.ஆதலின், “எம்பெருமான்
பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” என்றான். பரதனைச்சந்தேகித்தற்குக்
குகன் வருத்தம் உறுதல்வெளிப்படை.  
             
“உண்டு இடுக்கண் ஒன்று; உடையான்,
    உலையாத அன்புடையான்
கொண்ட தவவேடமே
    கொண்டிருந்தான்; குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்;
    காமின்கள் நெறி; “ என்னாத்
தண் துறை ஓர் நாவாயில்
    ஒரு தனியே தான் வந்தான்.       31

உரை
  ‘உண்டு இடுக்கண் ஒன்று உடையான்- புதிதாக உண்டாகிய துன்பம்
ஒன்றை உடையவனும்;  உலையாத அன்பு உடையான் -இராமன்பால்
சிறிதும் தளர்ச்சியுறாத அன்பு கொண்டவனும்; கொண்ட தவவேடமே -
(அந்த இராமன்) கொண்டிருந்த தவ வேடத்தையே; கொண்டிருந்தான்-
தானும்கொண்டுள்ளவனும் ஆகிய இப்பரதனது; குறிப்புஎல்லாம் - மனக்
கருத்து எல்லாம்; கண்டு- நேரில் பார்த்து அறிந்து; உணர்ந்து- அதனை
என் அநுபவத்தாலும் நுகர்ந்து; பெயர்கின்றேன் - திரும்பி வருகின்றேன்;
நெறி காமின்கள் - (அதுவரை) வழியைப்பாதுகாத்திருங்கள்;’என்னா -
என்று சொல்லி; தண்துறை - (கங்கையின்) குளிர்ந்தநீர்த்துறையில்; தான்
ஓர் நாவாயில் ஓரு தனியே வந்தான்- (குகன்) தான் ஒருபடகில் வேறு
யாரும் இன்றித் தனியே வந்து சேர்ந்தான்.

     தோற்றத்தால் விளங்காத பல செய்திகள் நெருக்கத்தால்
விளங்கக்கூடும் ஆதலின் பரதன் மனக்கருத்து எல்லாம் ‘கண்டு உணர்ந்து
பெயர்கின்றேன்’ என்று குகன் கூறினான். இங்கே ‘அறிந்து’ என்னாது
‘உணர்ந்து’ என்றது சிறப்பு. துக்காநுபவம் ஆகிய அன்பின் செறிவு
உணர்ச்சியொத்தவரிடையே அநுபவம் ஆதல் அன்றி, அறிவினால்
ஆராய்ந்தறியும் பொருள் அன்று ஆதலின், இடுக்கணும், உலையாத அன்பும்
உடைய பரதனை, அதுபோலவே இடுக்கணும், உலையாத அன்பும் உடைய
குகன் உணர்ச்சியொத்தலால் உணர்ந்து பெயர்கின்றேன் என்கிறான்; இந்நயம்
அறிந்து உணரத் தக்கது.‘ஒரு தனியே தான் வந்தான்’ என்றது இதுகாறும்
பரதனை மாறாகக் கருதித் தன் படை வீரர்களிடம் பேசியவன் ஆதலின்,
தன் கருத்து மாற்றம் அவர்க்குப் புலப்படாமை கருதியும், அவர்களால் வேறு
தொல்லைகள் உண்டாகாமை கருதியும், அவர்களுள் யாரையும் உடன்
கொள்ளாது தனியே வந்தான் என்க. அதுபற்றியே கம்பரும் ‘தனியே’
என்னாது ‘தான்’ என்றும், ‘ஒரு தனியே’ என்றும் அழுத்தம் கொடுத்துக்
கூறினார். அரசராவார் தம் கருத்தையும் தம் மன மாற்றத்தையும் தம்கீழ்
வாழ்வார் அறியாதவாறு போற்றிக் காத்தல் வேண்டும் என்னும் மரபறிந்து
மதிப்பவர் கம்பர் என்க. ‘துன்பம் ஒரு முடிவு இல்லை’ என்றவர், ‘உண்டு
இடுக்கண் ஒன்று உடையான்’ என்று மீண்டும் கூறியது, இராமன் வனம்
போவதால் ஏற்பட்ட துன்பம் இராமனைக் கண்டு மீண்டு போம்போது
குறைதல் கூடும் ஆயினம் இவற்றுக்கெல்லாம் ‘தான் காரணமானோம்’ என்று
கருதும் பழிபடப் பிறந்தேன்’ என்ற இடுக்கண் என்றும் மாறாது கிடத்தலின்’
உண்டு இடுக்கண் ஒன்று உடையான்’ என்று அதனையும் கருதிப் பரதனது
புறத் தோற்றத்தையும் அகத் தோற்றத்தையும் புலப்படுத்தியதாக அமைகிறது.
உலையாத அன்பு - வேறு காரணங்களால் நிலைகுலையாமல், என்றும்
ஒருபடித்தாக இருக்கும் தளர்ச்சியில்லாத அன்பு என்றவாறாம்.      
             
பரதன் வணங்கக் குகன் தழுவுதல்

வந்து, எதிரே தொழுதானை
    வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும்
    அவனும், அவனடி வீழ்ந்தான்;
தந்தையினும் களி கூரத்
    தழுவினான், தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும்
    வீற்றிருக்கும் சீர்த்தியான்.          32

உரை
 வந்து - (கங்கையின் வடகரைக்கு) வந்து;  எதிரே தொழுதானை -
தன்னைஎதிரிலே கும்பிட்ட பரதனை; வணங்கினான் - (குகன்) தானும்
வணங்கினான்; மலர்இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவனும் -
(திருமாலின் திருவுந்தித்) தாமரையில்வீற்றிருக்கும் வேதியனாகிய பிரமனும்
தன்னை வணங்கும் சிறப்புப் பெற்ற பரதனும்; அவன் அடிவீழ்ந்தான் -
அந்தக் குகனது அடித்தலத்தில் விழுந்து வணங்கினான்;  (அதுகண்டு) தகவு
உடையோர் சிந்தையினும் சென்னி யினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் -
நடுவுநிலைமையிற்சிறந்த மேலோர்களது மனத்திலும், தலையிலும் ஏற்றிப்
போற்றப்படும் புகழ் உடைய பண்பு நலம்செநிந்த உத்தமனாகிய குகனும்;
தந்தையினும் களிகூர - பெற்ற தந்தையினும் மகிழ்ச்சிமிக; தழுவினான் -
(அந்த அடி வீழ்ந்த பரதனை எடுத்து) மார்போடு அணைத்துக்கொண்டான்
(தொடரும்)

     குகனும் பரதனும் மிகச் சிறந்த பாகவத உத்தமர்கள்; இராமன்பால்
ஆழங்காற்பட்ட அன்பினைஉடையவர்கள்; ஒருவரை ஒருவர் தம்மிற்
பெரியராக நினைப்பவர்கள். இப்பண்பு நலன்களை உடையஇருவர்
சந்திப்பில் அளவு கடந்த அன்பின் பெருக்கால் நிகழும் நிகழ்ச்சிகளே
இப்பாடலில்வருகின்றன. இப்பாடலில் வணங்கினான், அடிவீழ்ந்தான்,
தழுவினான் என்று மூன்று  நிகழ்ச்சிகள்முக்கிய இடம் பெறுகின்றன.
முன்னைய பாடலில் படகில் தனியே வந்தான்’ எனக் குகன் வந்ததாக
முடித்திருப்பதும்,  குகனே பரதனைத் ‘திசை நோக்கித் தொழுகின்றானாகக்’
கண்டு கூறுவதும்இப்பாடற் பொருளைத் தெளிவு செய்கின்றன. எதிரே
தொழுதானை என்பது  பரதனை எனவும்,வணங்கினான் குகன் எனவும்
ஆகிறது. வணங்குதலாகிய குகன் செயலை அடுத்து  நிகழ்வது  பரதன்
செயலாகும் அன்றோ. ‘மலர் இருந்த அந்தணனும் தனை வணங்கும்
அவனும்’ என்பது பரதனைக் குறித்தது.அப்பரதன் அவன் (குகன்) அடியில்
வீழ்ந்தான் என ஆற்றொழுக்காக முடிந்தது.  பரதன் ‘மன் முன்னேதழீஇக்
கொண்ட மனக் கினிய துணைவன்’ எனக் குகனைக் குறித்து ‘என் முன்னே’
என்று தனக்குத்தமையனாகவும் கொண்டான்; அதுவும் அன்றி,
‘இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும்  மூத்தான்’(2367) என்று பின்னால்
தாயருக்கும் அவ்வாறே அறிமுகம் செய்விக்கிறான். ஆகவே, அண்ணன்
காலில் தம்பி விழுவதே முறை எனக் கருதி அடி வீழ்ந்தான் பரதன் என்க.
தன்னடியில் வீழ்ந்தபரதனைக் குகன் குகனைத் ‘தகவுடையோர் சிந்தையினும்
சென்னியினும் வீற்றிருக்கும்சீர்த்தியான்’ என்று கம்பர் கூறுவது
சிந்திக்கத்தக்கது. பிறப்பால் வேடனாகிய குகன் தன்னடிவீழும் பரதனைத்
தந்தைநிலையில் இருந்து தழுவினான் என்பதை ஏற்புடைத் தாக்கவே
சிறப்பால்மேலானோர் மனத்திலும், தலையிலும் ஏற்றிப் போற்றும்
குணங்களால் உயர்ந்த புகழ் உடையவன்என்று குகனை நமக்குக் காட்டினார்
கம்பர். இனி, இதனையும் பரதன் மேற்றாகவே கொண்டு கூறுவாரும் உளர்.
அது ஏற்புடைத்தாகுமேல் அறிந்து கொள்க.
             
குகன் வினாவும் பரதன் கூறும் விடையும்

தழுவின புளிஞர் வேந்தன்
    தாமரைச் செங்கணானை
‘எழுவினும் உயர்ந்த தோளாய்!
    எய்தியது என்னை? ‘என்ன,
‘முழுது உலகு அளித்த தந்தை
    முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன், அதனை நீக்க
    மன்னனைக் கொணர்வான் ‘என்றான்.     33

உரை
தழுவின புளிஞர் வேந்தன்- (அவ்வாறு பரதனைத்) தழுவிக்
கொண்ட வேடர் தலைவனான குகன்; தாமரைச் செங்கணானை -
செந்தாமரை போலும் கண்களை உடைய பரதனைப் (பார்த்து);  ‘எழுவினும்
உயர்ந்த தோளாய்!- கணைய மரத்தினும் வன்மைமிக்குயர்ந்த தோள்களை
உடைய பரதனே!;  எய்தியது  என்னை’ என்ன- (கங்கைக் கரைக்
காட்டிற்கு) நீ வந்த காரணம் என்ன என்று வினாவ; (பரதன்) உலகு முழுது
அளித்த தந்தை - உலகம் முழுவதையும் ஒரு குடை நீழலில் ஆட்சி செய்த
சக்கரவர்த்தியாகியஎன் தந்தை தயரதன்; முந்தையோர் முறையினின்றும்
வழுவினன் - தன் மரபில் முன்னுள்ளாரது நீதிமுறையிலிருந்தும்
தவறிவிட்டான்; அதனை நீக்க - அந்த அநீதியை நீக்கும் பொருட்டு;
மன்னனைக் கொணர்வான்’ - முறைப்படி அடுத்து அரசனாகிய
இராமனைத் திரும்ப அழைத்துக்கொண்டு செல்வதற்காக (வந்தேன்);
என்றான் - என்று சொன்னான்.

     தந்தை என்ற நிலையிலிருந்து  முந்தையோர் முறையில் தயரதன்
வழுவினானே அன்றி மன்னன்என்ற நிலையில் இருந்து  அன்று  என்பது
போல் கூறியது  ஒரு நயம். பின்னரும் ‘அண்ணனைக்கொணர்வான்’
‘இராமனைக்கொணர்வான்’ என்று கூறாமல் ‘மன்னனைக் கொணர்வான்’
என்றது காட்டில்இருப்பினும், நாட்டில் இருப்பினும் இராமனே அயோத்திக்கு
அரசன் என்பதில் பரதனுக்குள்ள உறுதிவிளங்குகிறது.  இராமன் திரும்ப
அயோத்திக்குச் செல்கிற அளவிலேயே முந்தையோர் முறைசரியாகிவிடும்
என்று பரதன் கூறியது சிந்திக்கத்தக்கது. இப்பாடலில் ‘தழுவின’ என்பதற்குத்
‘தழுவப்பட்ட எனப் பொருள் பட்டவன், தழுவியவன் இருவருள்
தழுவியவனே முதலில் பேச இயலும் என்பது தழுவப்பட்டவன் உரையாற்ற
முடியும் என்பதும் அறிந்ததே. குகனைத் தன் அண்ணனாகக் கருதும் பரதன்
முற்பட்டுக் குகனைத் தழுவுதல் எங்ஙனம்? எங்கும் தழுவல் கம்பர்
வழக்கிலும் இல்லையென்பதுமுன்னும் பின்னும் வரும் கம்பர் கூற்றுகளாலும்
உணரப்படும்.  
             
பரதன்பால் தீதின்மை கண்ட குகன் வணங்கிக் கூறல்

கேட்டனன் கிராதர் வேந்தன்;
    கிளர்ந்து எழும் உயிரன் ஆகி,
மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான்;
    விம்மினன், உவகை வீங்கத்
தீட்ட அரு மேனி மைந்தன்
    சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன் பொய் இல்
    உள்ளத்தன் புகலல் உற்றான்.      34

உரை
 கிராதர் வேந்தன்- வேடர் தலைவனாய குகன்; கேட்டனன் -
(பரதன் சொல்லிய வார்த்தைகளைக்) கேட்டு; கிளர்ந்து எழும் உயிர்ப்பன்
கி - மேல் எழுந்து  மிகும் பெருமூச்சு உடையவனாகி; மீட்டும் - (முன்
வணங்கியதோடு அன்றித்) திரும்பவும்; மண் அதனில் வீழ்ந்தான்-
பூமியில் விழுந்து  வணங்கி; உவகை வீங்க - மன மகிழ்ச்சி மேல் பெருக;
விம்மினன் - உடம்பு பூரித்து; தீட்ட அரு மேனி மைந்தன் -
எழுதலாகாததிருமேனியையுடைய பரதனது; சேவடிக் கமலப் பூவில் -
திருவடிகளாகிய தாமரை மலரில்; பூட்டிய கையன் - இறுக அணைத்த
கையுடனே;பொய்யில் உள்ளத்தன் - பொய்யற்ற புரைதீர்ந்த மனத்தால்;
புகலல் உற்றான் - சில வார்த்தைகள் சொல்லலானான்.

     ‘மீட்டும்’ - என்பதற்குத் ‘திரும்பவும் மண்ணில் விழுந்து வணங்கினான்’
எனப் பொருள் உரைத்து, உம்மையால் முன்பொருமுறை ‘அடி
வீழ்ந்ததோடன்றி’ என்றுரைத்து2334 ஆம் பாடலில் ‘அடி வீழ்ந்தான்’
என்பது குகன் செயலே என்பார் உளர். ‘மீட்டும்’ என்பதில் ‘ம்’ என மகர
ஒற்றுக் கொள்ளுதலும் கொள்ளாமையும் உண்டு. இருவகைப் பாடத்தினும்
மகர  ஒற்றுக் இன்றி மீட்டு’ என்ற பாடமே சிறந்ததாகும். ஓசை நயம்
உணர்வார்க்கு ‘மீட்டு மண்’ என நிற்றலே ஏற்புடைத்தென அறிவர். ‘மீட்டு’
என்பது  உயிர்ப்பை மீட்டு என உரை பெறும். பரதன் கூறிய
வார்த்தைகளைக் கேட்டுக் கிளர்ந்தெழும் உயிர்ப்பைப் பெற்ற குகன்,
அவ்வுயிர்ப்பை மீட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே வேறு
செயல் செய்யமுடியும். ஆதலின், அவ்வுயிர்ப்பை மீட்டு (10161, 10162
பாடல்களை இங்கு நோக்குக). மண்ணதனில் வீழ்ந்தான் என்றது பொருந்தும்.
‘மீட்டும்’ என்று இருப்பினும் முன்பு வணங்கினான் இப்போது ‘மண்ணதனில்
வீழ்ந்தான்’ என்று அதன் வேறுபாட்டை உணர்த்துமே அன்றி வேறன்று.
மூத்தவனாகிய குகன் இப்போது மண்ணில் வீழ்ந்து வணங்குதல் தகுமோ
எனின், இருவர் இணையும்போது முதற்கண் இளையோர் மூத்தோரை
வணங்குதலும், அவ்வாறு வணங்கிய இளையோரை மூத்தோர் எடுத்துத்
தழுவி விசாரித்தலும் இயல்பு. இங்கு, தான் வந்த நோக்கத்தைப் பரதன்
கூறக் கேட்ட குகனுக்குப் பரதன் பரதனாகவே காட்சி அளிக்கவில்லை.
அவன் தம்பி முறையும் புலனாகவில்லை. அவனை ஆயிரம் இராமர்களுக்கும்
மேலாகவே கருதுகிறான். அதனால் ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ
தெரியின் அம்மா’ என்று வியந்து பேசுகிறான். ஆகவே, ஆயிரம்
இராமர்களுக்கும் மேம்பட்டவனாகப் பரதனை எண்ணிய குகன், இராமன்
காலில் விழுந்து பணிவது முறையானாற் போல, பரதன்
காலிலும் விழுந்து பணிந்தான் ஆதலின் தகும் என்க. இதனை விளக்கவே
கம்பர் கவிக் கூற்றாகப் “புளிஞர்கோன் பொருஇல் காதல் அனையவற்கு
அமைவின் செய்தான்; ஆர் அவற்கு அன்பிலாதார்? நினைவு
அருங்குணங்கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல்” (2339) என்று
தாமே முன்வந்து பேசுவாராயினர். பரதனது குணங்களில் ஈடுபட்டு
அவனைப் பணிந்தான்; இராமகுணங்கள் எங்கிருந்தாலும் அங்குப் பணிதல்
இராமனைப் பணிதலே அன்றோ? ஆகவே, அது தகாதது செய்ததாகாது;
அமைவிற் செய்ததாகவே ஆகும். விடை கொடுத்த படலத்துத் தன்
அடியனாய அனுமனை இராமன் “போர் உதவிய திண் தோளாய்
பொருந்துறப் புல்லுக” (10351) என்று தன்னைத் தழுவிக் கொள்ளச்
சொல்லியதையும் இங்குக் கருதுக. பொது நிலையில் முதற்காட்சியில்
அண்ணனாகிய குகனைப் பரதன் வணங்கினான் என்றும், சிறப்பு நிலையில்
இராம குணாநுபவத்தின் எல்லையைப் பரதன்பால் கண்ட குகன் இராமனிலும்
மேம்பட்டவனாகக் கருதி வேறு எதுவும் நோக்காது அன்பினான் அடியற்ற
மரம்போல் வீழ்ந்து கைகளைத் திருவடியிற் பூட்டி நெடிது கிடந்தான் என்றும்
கொள்க. அங்ஙனம் கிடந்த குகனைப் பரதன் எடுத்துத் தழுவியதாகக் கம்பர்
கூறாமையும் காண்க. “நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்” (2332) எனக்
குகன் முன்னரே கூறுதலின், இராமன் “எழுதரிய திருமேனி” (656)
உடையவனானாற்போல, “எள்ளரிய குணத்தாலும் எழிலாலும்.....வள்ளலையே,
அனையா’னா (657) கிய பரதனும், ‘தீட்டரு மேனி மைந்தன’் ஆயினன்.
“எழுது அரு மேனியாய்” (2105) என்று பள்ளி படைப் படலத்தின்கண்
கூறியதை ஈண்டு ஒப்பு நோக்குக.      
             
தாய் உரை கொண்டு, தாதை
    உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
    சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து,
    புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
    ஆவரோ? தரெியின் அம்மா!         35

உரை
  ‘புகழினோய்! - புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு - (உன்)
தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு;  தாதை
உதவிய - (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த;  தரணி தன்னை -
(கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து - தீயவினை வந்து
சேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி -
முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை - (வனத்துக்கு) வந்தாய்;
என்ற போழ்து - என்ற காலத்தில்; தன்மை கண்டால் - (உனது)
நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் - ஆராய்ந்தால்; ஆயிரம்
இராமர் நின்கேழ்ஆவரோ - ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின்
ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -.

     தந்தைமட்டுமே அளித்த அரசை வெறுத்து வந்த இராமனிலும், தாயும்
தந்தையும் இணைந்து அளித்த அரசை வெறுத்த பரதன் மேன்மை புலப்பட
இவ்வாறு கூறினான். “தாமரைக் கண்ணன், காதல் உற்றிலன் இகழ்ந்திலன்“
(1382) என்ற இராமனது மனநிலையும், ‘தீவினை என்ன நீத்து’ என்ற பரதனது
மனநிலையும் ஒப்பிடுக. இவையெல்லாம் இராமபிரானைக் குறைத்துக்
கூறுவேண்டும் என்று குகன் கருதியதன்று; பரதனது மேன்மைக் குணத்தைப்
பாராட்டும் முகமாகக் கூறியதாம்; எங்ஙனமெனின் இத்தகைய
குணச்சிறப்புகளால் உயர்ந்த பரதனைப் பாராட்டப்படும்பொழுதும் “ஆயிரம்
இராமர்” என்று குகனுக்கு இராமனே அளக்கும் பொருளாய் வந்து நிற்பது
கொண்டு அறியலாம். “உள்ளத்தின் உள்ளதை உரையின் முத்துற, மெள்ளத்
தம் முகங்களே விளம்பும்” (6452) “அடுத்தது காட்டும் பளிங்குபோல்
நெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்” (குறள். 706) ஆதலின், பரதனது உள்ளத்
துன்பம் அவனது முகத்தில் நின்றபடியைச் ‘சிந்தனை முகத்தில் தேக்கி’
என்றுரைத்தார். ‘அம்மா’ என்பது வியப்பிடைச் சொல்.    
             
என் புகழ்கின்றது ஏழை
    எயினனேன்? இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை
    ஒளிகளைத் தவிர்க்குமா போல,
மன் புகழ் பெருமை நுங்கள்
    மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
    உயர் குணத்து உரவு தோளாய்!     36

உரை
 ‘உயர் குணத்து உரவுத் தோளாய்!- உயர்த்த உத்தமக்குணங்களையும்,  வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயினனேன் - அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? - எவ்வாறு
புகழ முடியும்; இரவிஎன்பான் தன்- சூரியன் என்று சொல்லப்படுகிறவனது;
புகழ்க் கற்றை- புகழாகியஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா
போல் - மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக்
கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல;மன் புகழ் பெருமை
நுங்கள் மரபினோர்  புகழ்கள் எல்லாம் - எல்லா அரசர்களாலும்
பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய
அரசர்களது  எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் -
உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய்.

     ‘ஏழை எயினன்’ - குகன் தன்னடக்கமாகக் கூறிக்கொண்டான்.
சூரியனுக்குப் புகழ் என்பது ஆதலின் அதனைப் ‘புகழ்க்கற்றை’ என்றார்.
மரபினோர் புகழ்கள் முன்பு பேசப்பட்டன; இனி, பரதன் புகழே பேசப்படும்
என்பதாகும்.    
             
பரதன்பால் குகன் ஒப்பற்ற அன்பு கொள்ளுதல்
என இவை அன்ன மாற்றம்
    இவைவன பலவும் கூறிப்
புனை கழல் புலவு வேல் கைப்
    புளிஞர் கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவில் செய்தான்;
    ஆர் அவற்கு அன்பு இலாதார்?
நினைவு அருங்குணம் கொடு அன்றோ
    இராமன்மேல் நிமிர்ந்த காதல். 37

உரை
  புனை கழல்- அலங்கரிக்கப் பெற்ற வீரக்கழலை அணிந்த; புலவு
வேற்கை - புலால் மணம் வீசும்வேலைப் பிடித்த கையை உடைய; புளிஞர்
கோன் - வேடர் தலைவனாகிய குகன்; என இவைஅன்ன மாற்றம்
இயைவன புலவும் கூறி - என்று இதுபோன்ற பொருந்திய சொற்கள்
பலவற்றையும்சொல்லி; பொரு இல் காதல் அனையவற்கு -
இராமன்பாலும் அதனால் தன்பாலும் ஒப்பற்றபேரன்பினை உடையனாகிய
பரதனுக்கு;  அமைவின் செய்தான் - பொருந்தியநல்லுபசரிப்புகளைத்
தகுதியாகச் செய்தான்; அவற்கு அன்பு இலாதார் யார்-அப்பரதனிடத்தில்
அன்பு செலுத்தாதவர் யார்உளர்?; இராமன் மேல் நிமிர்ந்த காதல்-
இராமனிடத்து  மேல் சென்று உயர்ந்த அன்பு (அவன் சக்கரவர்த்தித்
திருமகள் என்பதாலா?அன்று); நினைவு அருங் குணம்கொடு அன்றோ-
நினைக்கவும் முடியாத நற்குணங்களின்நிலையமாக அவன் இருந்தான்
என்பதனால் அல்லவா? (அக்குணங்கள் இவன்பாலும் இருத்தலால்
இவனிடமும் அன்பு நிமிர்ந்தது.)

     ‘அமைவின் செய்தான்’ என்பது பரதன் தகுதிக்கும், அவன்
குணநலத்துக்கும், அப்போதையதுக்கத்துக்கும் ஏற்ற வகையில் வழுவாது
உபசரித்தான் குகன் என்பதைக் காட்டும். இராமனிடத்துஎந்தக்
குணங்களைக் கண்டு குகன் அன்பு செலுத்தினானோ அதே குணங்கள்
இவன்பாலும் இருத்தலின்இவனிடத்தும் அந்த அன்பு கண்ட அளவிலே
உண்டாயிற்று என்றார். இங்கு ‘எள்ளரிய குணத்தாலும்எழிலாலும்
இவ்விருந்த வள்ளலையே அனையானைக் கேகயர் கோன் மகள் பயந்தாள்”
(657.) என்பதனைக் கருதுக. ‘பொரு இல் காதல்’ என்பதனைக் குகன்மேல்
ஏற்றி உரைப்பதும்உண்டு.  
             
இராமன் உறைந்த இடத்தைப் பரதனுக்குக் குகன் காட்டுதல்
அவ் வழி அவனை நோக்கி,
    அருள் தரு வாரி அன்ன
செவ்வழி உள்ளத்து அண்ணல்,
    தனெ் திசைச் செங்கை கூப்பி,
‘எவ்வழி உறைந்தான் நம் முன்? ‘
    என்றலும், எயினர் வேந்தன்,
‘இவ்வழி வீர! யானே
    காட்டுவல்; எழுக ‘என்றான்.         38

உரை
 அருள் தரு வாரி அன்ன - கருணைப் பெருங்கடலை ஒத்த;
செவ்வழி உள்ளத்து அண்ணல் - நேரிய வழியிற் செல்லும்மனத்தை
உடைய பரதன்;  அவ் வழி - அப்போது; அவனை நோக்கி - குகனைப்
பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி - இராமன் சென்றுள்ள
தென்திசையைப் பார்த்துத்தன் சிவந்த கைகளைக் குவித்து  வணங்கி;
‘நம்முன் - நம்முடைய அண்ணன்; எவ்வழிஉறைந்தான்?’ - எந்த
இடத்தில் தங்கியிருந்தான்?; என்றலும் - என்றுகேட்டவுடனே; எயினர்
வேந்தன் - வேட அரசனாகிய குகன்; ‘வீர! - வீரனே!; இவ் வழி -
இவ்விடத்தில்; யானே காட்டுவல் - நானே (அவ்விடத்தை உனக்குக்)
காண்பிப்பேன்;  எழுக’ - என்னுடன் புறப்படுவாயாக;என்றான் -.

     ‘தென் திசைச் செங்கை கூப்பி’ - ‘திசை நோக்கித் தொழுகின்றான்’
(2332.)  எனமுன்னர் வந்ததும் காண்க. ‘இவ்வழி’ என்பதற்கு ‘இந்த
இடமாகும்’ என்று குகன் அவ்விடத்தையும்காட்டிச் சுட்டிச் சொல்லியதாக
முடித்துக் காட்டலும் ஒன்று.                                

இராமன் வைகிய இடம் கண்ட பரதன் நிலையும் நினைவும்
             
இராமன் பள்ளிகொண்ட இடம் கண்ட பரதனுடைய செயலும் சொல்லும்

கார் எனக் கடிது சென்றான்;
    கல் இடைப் படுத்த புல்லின்
வார் சிலைத் தடக்கை வள்ளல்
    வைகிய பள்ளி கண்டான்;
பார் மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
    பருவரல் பரவை புக்கான்.
வார் மணிப் புனலால் மண்ணை
    மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்.     39

உரை
  (குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் -
மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் -
கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய -
தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே
பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் - பார்த்து;
பார்மிசை - பூமியின் மேல்; பதைத்து - துடித்து; வீழ்ந்தான் - விழுந்து;
பருவரல் பரவை புக்கான் - துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப்
புனலால்- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்;

மண்ணை - பூமியை; மண்ணு நீர் ஆட்டும் - திருமஞ்சனத் தண்ணீரால்
குளிப்பாட்டுகின்ற; கண்ணான் - கண்ணுடையவனாக ஆனான்.

     பரதன் மனத்தின் பதைபதைப்பும், அதனால் ஏற்பட்ட துன்பமும்,
அதன்வழி உண்டாகின்ற கண்ணீர்ப்பெருக்கும் மிகுந்த படியைக் கூறினார்.
இராமபிரான் வைகியஇடத்தைத் திருமஞ்சனம் ஆடடினான் என்பது
போலக் கூறியது கவிநயம் - “ மண்ணக மடந்தையை மண்ணுநீர் ஆட்டி
(பெருங். 1-49-89) என்பது போல. ‘கார் என’ என்கின்ற உவமை பரதனது
திருமேனிநிறம், அவன் விரைந்து சேறல், பின் நீர்பொழிதல் (கண்ணீர்)
ஆகிய அனைத்துக்கும்பொருந்துதல் அறிந்து மகிழத்தக்கது.    
             
இயன்றது என் பொருட்டினால் இவ்
    இடர் உனக்கு என்ற போழ்தும்,
அயின்றனை கிழங்கும் காயும்
    அமுது என, அரிய புல்லில்
துயின்றனை எனவும், ஆவி
    துறந்திலென்; சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும்
    செல்வமும் கொள்வென் யானே.    40

உரை
  உனக்கு இவ் இடர் என்பொருட்டினால் இயன்றது என்ற
போழ்தும் - (இராம!) உனக்கு இவ் வனவாசமாகிய துன்பம் என்காரணமாக
உண்டாகியது  என்று அறிந்த அந்தநேரத்திலும்; (அதன் பிறகு) கிழங்கும்
காயும் அழுது என அயின்றனை - கிழங்கு, காய்முதலியவற்றை
(அரண்மனையில் இருந்து உண்ணும்) அமுது  போல உண்டாய்; அரிய
புல்லில்துயின்றனை- உறங்குதற்கு இயலாத புற்படுக்கையில் உறங்கினாய்;
எனவும் - என்றுஅறிந்த இந்த நேரத்திலும்; யான் ஆவி துறந்திலென்-
யான் உயிர் போகப் பெற்றேன்இல்லை, (அம்மட்டோ); சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் - ஒளி விடும் பொன்னாற்செய்யப்பெற்று உயர்ந்த
திருமுடியை; சூடும் செல்வமும் கொள்வேன் - சூட்டிக்கொள்ளும்அரசச்
செல்வத்தையும் ஏற்றுக் கொள்வேன் போலும்.

     பரதன் தன்னைத் தானே நொந்து  உரைத்துக்கொள்வதாகக் கொள்க.
தன்னால்தான்இத்தகைய துன்பங்கள் இராமனுக்கு உண்டாகின என்று
நைகிறான். அரண்மனையில் உண்பது அமுது ஆதலின்வனத்தில் உண்ணும்
கிழங்கும் காயும் அமுதாயின. இன்னும் உயிர் வைத்திருப்பதும் உயிர்
போகாமல் இருப்பதும் அரசுச் செல்வத்தையும் அநுபவிக்கவோ என்று
நொந்து உரைத்தானாம்.  
             
பரதன் இலக்குவன் இரவை எங்கே கழித்தான்? எனக் குகன் கூறல்

தூண் தர நிவந்த தோளான்
    பின்னரும் சொல்லுவான், ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
    இது எனில், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே
    போந்தவன், பொழுது நீத்தது
யாண்டு? ‘என இனிது கேட்டான்;
    எயினர் கோன் இதனைச் சொன்னான்.    41

உரை
தூண்தர - தூணை ஒப்பாக;  நிவந்த தோளான் - உயர்ந்த
தோள்களை உடையபரதன்; பின்னரும் சொல்லுவான் - மீண்டும்
குகனைப் பார்த்துப் பேசுவான்; ‘அந்நீண்டவன் துயின்ற சூழல் இது
எனின் - அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம்இது என்றால்;
நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன்- (அவ்
இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து
அவன் பின்னேயேவந்தவனாகிய இலக்குவன்; பொழுது  நீத்தது - இரவுப்
பொழுதைக் கழித்தது; யாண்டு?’- எவ்விடத்தில்?; என - என்று; இனிது
கேட்டான் - இனிமையாக வினாவினான்;எயினர்கோன் - வேட
வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் - இந்த விடையைக்கூறினான்.

     நெடியோன் என்று இராமனைப் பலவிடங்களிலும் கம்பர் குறிப்பர்.
அதனால் நீண்டவன்என்றார். நிமிர்தல் மேல் செல்லுதல் ஆதலின் உயர்ந்த
அன்பு என்றாகும். இலக்குவனைப்பற்றிவினாவுகிறபோது பரதனுக்கு ஏற்படும்
உள்ள நெகிழ்வைப் புலப்படுத்தவே ‘இனிது கேட்டான்’என்றார்.      
             
‘அல்லை ஆண்டு அமைந்த மேனி
    அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்
    வெய்து உயிர்ப்போடும் வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!
    கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
    இமைப்பு இலன் நயனம் ‘என்றான். 42

உரை
  ‘கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- மலையைக் கீழ்ப்படுத்தி
உயர்ந்ததோள்களை உடையவனே!;  அல்லை ஆண்டு அமைந்தமேனி
அழகனும்-இருளைப் பயன்படுத்தி அமைத்தால் ஒத்த கரிய
திருமேனியுடைய அழகிற் சிறந்த இராமனும்; அவளும்- அந்தப்
பிராட்டியும்;  துஞ்ச - உறங்க; வீரன் - இலக்குவன்; வில்லைஊன்றிய
கையோடும்- வில்லின் மேல் வைத்த கையுடன்; வெய்துஉயிர்ப்போடும்-
வெப்பமான மூச்சுடையவனாய்; கண்கள் நீர் சொரிய- தன்னிரண்டு
கண்களும் நீரைச்சொரிய; கங்குல் எல்லை காண்பளவும்- இரவு தன்
முடிவான விடியலைப் பார்க்குமளவும்; நயனம் இமைப்பிலன்- கண்கள்
இமைகொட்டாமல் (உறங்காமல்); நின்றான்’-நின்றுகொண்டே (காவல்
செய்து) இருந்தான்;  என்றான் -

     அவள் - நெஞ்சறிசுட்டு. அஃதாவது  சொல்லும் குகனுக்கும், கேட்கும்
பரதனுக்கும் கேட்டஅளவிலே அது யாரைச்சுட்டுவது என்பது அவர்கள்
மனத்தால் அறியப்படுதலின், ‘வில்லை ஊன்றிய கை’என்றது  நெடுநேரம்
நிற்பதற்கு ஊன்றுகோலாக வில்லக் கொண்டகை என்பதாம். ‘நயனம்
இமைப்புஇலன்’ சினைவினை முதலொடு முடிந்தது “சினைவினை
சினையொடும் முதலொடும் செறியும்” ஆதலின்.(நன். 345.) ‘கண்கள் நீர்
கொரிய’ என்றவர், மீண்டும் ‘இமைப்பிலன் நயனம்’ என்றது இலக்குவன்
உறங்காதிருந்து காத்த பேரன்பில் குகனது  ஈடுபாட்டை உணர்த்தியது.
இலக்குவன்உறங்காது காத்தமையைக் கங்குல் எல்லை காண்பளவும் கண்டு
குகன் கூறினான். ஆகவே, குகனும்உறங்காதிருந்தமை தானே பெறப்படுதல்
காண்க. “வரிவில் ஏந்திக் காலைவாய் அளவும் தம்பிஇமைப்பிலன் காத்து
நின்றான்”  “துஞ்சலில் நயனத் தைய சூட்டுதி மகுடம்” என (1974, 6505.)
வருவனவற்றையும் இங்கு ஒப்பிட்டுக் காண்க. பிராட்டியை இங்கே குகன்
‘அவள்’ என்ற சேய்மைச்சுட்டால் கட்டியது தேருந்தொறும் இன்பம்
பயப்பது.  ஐந்து  வார்த்தைகளால் இராமனைக் கூறியவன்பிராட்டியை
எட்டியும் கட்டியம் சொல்ல இயலாது  எட்ட நின்றே பேசுகிறான். - கம்பர்
இராமனை‘மையோ மரகததோ மறிகடலோ மழைமுகிலோ” (1926.) என்று
சொல்லிப் பார்த்துப் பிறகு ‘ஐயோ’என ஆற்றாமை மேலிட்டார் - ஆனால்,
பிராட்டியைச் சொல்லமாட்டாமலே  “ஒப்பு எங்கே கண்டுஎவ்வுரை நாடி
உரைசெய்கேன்” என்று  நாத் தழுதழுக்கக் (503) காண்கிறோம். ஆகவே,
வரம்பில்லாப் பேரழகினாளை எதனால் எவ்வாறு  சொல்வது  என்றறியாத
ஏழைமை வேடன் ‘அவள்’ என்ற வார்த்தையால் சொல்லி அமைத்தான்
என்னலே போதுமானது.        
             
பரதன் இலக்குவன் நிலை கண்டு பாராட்டுதலும்
தன் நிலை கண்டு நொந்து கூறலும்

என்பத்தைக் கேட்ட மைந்தன்,
    “‘இராமனுக்கு இளையார் ‘என்று
முன்பு ஒத்த தோற்றத் தேம் இல்,
    யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்;
    அவன் அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ?
    அழகிது என் அடிமை‘‘ என்றான்.    43

உரை
என்பத்தை- என்று (குகன் ) சொன்னதை;  கேட்ட மைந்தன் -
கேட்ட பரதன்; இராமனுக்குஇளையார் என்று - இராமனுக்குத் தம்பிகள்
என்று சொல்லும்படி; முன்பு ஒத்ததோற்றத்தேமில் - பிறக்கும்பொழுது
ஒத்த தன்மையான பிறப்பைப் பெற்ற எங்கள்இருவரிலும்; யான் -
பரதனாகிய யான்; என்றும் முடிவு இலாத துன்பத்துக்கு ஏது ஆனேன்-
எக்காலத்தும் கரைகாணாத பெருந்துன்பத்தை இராமன் அடைதற்குக்
காரணமாக ஆய்விட்டேன்; அவன் -அந்த இலக்குவன்; அது -
அத்துன்பத்தை; துடைக்க நின்றான் - இராமனிடமிருந்து நீக்கத் துணையாக
இராமனுடன் நின்றான்; அன்புக்கு எல்லை உண்டோ? - அன்புக்கு ஒரு
வரையறை உள்ளதோ; என் அடிமை அழகிது’ - நான் இராமனுக்குச்
செய்யும் அடிமைத்திறம்நன்றாயிருந்தது;  என்றான் - என்று கூறினான்.

     “அன்பத்துக்கு எல்லை உண்டோ” இலக்குவன் செயல் குறிதத்து.
‘என்பது’ ‘என்பத்து’ எனவிரித்தல் விகாரம் செய்யுள் நோக்கி வந்தது.
அன்புக்கு என்பது அன்பத்துக்கு என அத்துச்சாரியை பெற்றது. பிறப்பால்
இருவரும் ஒரு தன்மையர் ஆயினும் அவன் சிறப்பாகிய அன்பினால்
எல்லையின்றி உயர்ந்தான்;  யான் அடிமையில் தாழ்ந்தேன் என்று பரதன்
தன்னை நொந்துகூறினான்.            
             
பரதன் கங்கை கடத்துவிக்குமாறு குகன்பால் வேண்டுதல்

அவ் இடை, அண்ணல் தானும்,
    அன்று அரும் பொடியின் வைகித்
‘தவெ் இடைதர நின்று ஆர்க்கும்
    செறி கழல் புளிஞர் கோமாஅன்!
இவ்விடைக் கங்கை யாற்றின்
    ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி,
    வேந்தன்பால் விடுத்தது ‘என்றான்.       44

உரை
அண்ணல் தானும்- பரதனும்; அவ் இடை - அந்த இடத்தில்;
அன்று - அன்றையிரவு; அரும்பொடியின் வைகி- தற்குதற்கியலாத புழுதி
மண்ணில் தங்கியிருந்த, (பொழுதுவிடிந்ததும்); ‘தெவ் இடை தர -
பகைவர்கள் தோற்றோடும்படி; நின்று ஆர்க்கும்செறிகழல்- தங்கி ஒலிக்கும்
கட்டப்பட்ட வீரக்கழல் அணிந்த; புளிஞர் கோமாஅன்! -வேடர்களுக்கு
அரசனாகிய குகனே!;  இவ் இடை - இந்த நேரத்தில்; கங்கை ஆற்றின்-
கங்கை ஆற்றிலிருந்து; எம்மை ஏற்றினை ஆயின்- எம்மைப் கரையேற்றிச்
(தென்கரை)சேரச் செய்தால்; வெவ இடர்க்கடல் நின்று ஏற்றி - கொடிய
துயரக் கடலிலிருந்துகரையேற்றி; வேந்தன்பால் விடுத்தது’ - இராமன்பால்
அனுப்பியது ஆகும்;’ என்றான்- என்று சொன்னான்.

     இவ் இடை என்பது காலம் இடமாயிற்று. இராமன் வைகிய இடம்
கண்ட பரதன் அந்த இடத்திலேயே புழுதி மண்ணில் தங்கினானாம். கங்கை
ஆற்றைத் தாண்டித் தென்கரை விடுதல் - துன்பக் கடலைத் தாண்டி
இராமனிடம் சேர்பித்ததாகும் என்றானாம் இராமனை வேந்தன், மன்னன்
என்றே குறித்துச் செல்லும் பரதனது உளப்பாங்கை இங்கு அறிக. ஆற்றின்
ஏற்றுதல் என்பது ஆற்றிலிருந்து கரை யேற்றுதல் என்பதனைக்
குறித்தவாறாம்.
             
குகன் கட்டளையால் நாவாய்கள் வருதல்

‘நன்று ‘எனப் புளிஞர் வேந்தன்
    நண்ணினன் தமரை; ‘நாவாய்
சென்று இனி தருதிர் ‘என்ன,
    வந்தன; சிவன் சேர் வெள்ளிக்
குன்றெனக் குனிக்கும் அம்பொற்
    குவடு எனக் குபேரன் மானம்
ஒன்று என நாணிப் பல வேறு
    உருவு கொண்டனைய ஆன.        45

உரை
  (பரதன் கூறியது  கேட்டு) புளிஞர் வேந்தன் - வேடர் வேந்தனாய
குகன்; ‘நன்று’- நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை
நண்ணினன் - தன் இனத்தவரைஅடைந்து; ‘சென்று இனி நாவாய்
தருதிர்’ என்ன - (நீங்கள்) சென்று  இனிமேல்படகுகளைக் கொண்டு
வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள்) சிவன் சேர் வெள்ளிக் குன்று
என- சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்)
வெள்ளிமலை போல; குனிக்கும் அம்பொன் குவடு என -
(அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த(மகா மேரு
மலையாகிய) பொன்மலை போல;  குபேரன் மானம் என - (வடதிசைக்கு
அதிபனாகிய) குபேரனது  புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி -
(இவையெல்லாம்) தாம்ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு
உருவு கொண்டனைய ஆன - அவை தாமேஒவ்வொன்றும் பல்வேறு
வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன-
(கங்கையின் கண்) வந்து சேர்ந்தன.

     பல்வேறு வடிவும் நிறமும் பருமையும் உடைய படகுகளை
வெள்ளிமலை, பொன்மலை, புஷ்பக விமானம் பல்வேறு வடிவுகொண்டு
வந்துள்ளதாகக் கற்பனை செய்தார்; இது தற்குறிப்பேற்றம் உவமையணியுடன்
வந்தது. ‘குபேரன் மானம் என’ என்று ‘என’ வைப் பிரித்துக் கூட்டுக.  
             
நங்கையர் நடையின் அன்னம்
    நாண் உறு செலவின் நாவாய்,
கங்கையும் இடம் இலாமை,
    மிடைந்தன கலந்த எங்கும்;
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும்
    அமைதியின் அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும்
    இரு வினை என்னல் ஆன.        46

உரை
 நங்கையர் நடையின்- பெண்கள் நடைபோன்ற நடையையும்;
அன்னம் நாணுறு செலவின் - அன்னப் பறவைகள்நாணப்படும் படியான
நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்; அங்கொடு இங்கு - அக்கரையில்
உள்ளாரை  இக்கரையிலும்; இழித்தி ஏற்றும் அமைதியின் - ஏற்றி
இறக்கும்தன்மையினால்; அமரர் வையத்து அங்கொடு - தேவருலகமாகிய
அவ்வுலகத்தோடு;  இங்கு - இவ்வுலகில்உள்ளாரை; இழித்தி ஏற்றும் -
ஏற்றி இறக்கும்; இருவினை - புண்ணியம்,  பாவம்என்னும் இருவினை;
என்னல் ஆன - என்று  சொல்லும்படியாக இருந்தனவாய்; கங்கையும்
இடம் இலாமை மிடைந்தன- கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி
நெருங்கின;  எங்கும் கலந்தன - எல்லா இடங்களிலும் சேர்ந்தன.

     ‘அங்கொடு இங்கு’ என்று பொதுவாகக் குறிப்பிடினும், கங்கையின்
வடகரை நின்று தென்கரைக்குச் சேறலே இங்கு வேண்டப்படுதலின்
வடகரையில் ஏற்றித் தென்கரையில்இறக்குதலே இங்கு உண்டு;
தென்கரையில் ஏறுவார் இலர் ஆதலின், புண்ணியம் மிக்கார் பூவுலகில்
நின்று அமரருலகு ஏறலும், புண்ணியம் அநுபவித்துத் தொலைத்த பிறகு
மீண்டும் பாவத்தை அநுபவிக்கமண்ணுலகு சேறலும் ஆகியவற்றுக்கு
இருவினை காரணமாக ஆதலின் இருவினைகளே மேலும் கீழும் ஏற்றி
இறக்குவ என்பது  கொண்டு அவற்றை நாவாய்களுக்கு உவமை ஆக்கினார்.
‘இழித்தி ஏற்றும்’ என்பது‘ஏற்றி இழித்து’ என மாற்றி உரைக்கப்பெற்றது.
இனி தென்கரையில் நின்று வடிகரையில்இறங்குவார் உளராயின்
இருதலையும் கொள்ளுத்லும் ஒன்று. அது உவமையோடு முழுதும்
பொருந்திற்றாம். நாவாய்களின் நடை நங்கையர் நடை போன்றது.
செல்கை அன்னம்  நாணப்படும்படி  உள்ளது  என்க;மெல்ல மெல்ல,
அசைந்து  செல்லுதலால். “அன்னப்பேட்டை சிறை இலதாய்க் கரை,
துன்னிற்றென்னவும் வந்தது தோணியே” (2372.) என்றதும் நோக்குக.  
             
குகன் நாவாய்கள் வந்தமை கூற, அவற்றில் படைகளை
ஏற்றும்படி பரதன் சுமந்திரனிடம் சொல்லுதல்

‘வந்தன வரம்பு இல் நாவாய்;
    வரி சிலை குரிசில் மைந்த!
சிந்தனை யாவது? ‘என்று
    சிருங்கிபேரியர் கோன் செப்பச்
சுந்தர வரி விலானும்
    சுமந்திரன் தன்னை நோக்கி,
‘எந்தை! இத் தானை தன்னை
    ஏற்றுதி, விரைவின் ‘என்றான்.      47

உரை
  சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில்
உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்;  (பரதனை நோக்கி) ‘வரிசிலைக்
குரிசில் மைந்த - கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி
பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன - கணக்கில்லாத படகுகள்
வந்துள்ளன; சிந்தனையாவது’ - (உன்) மனக்கருத்து என்ன?; என்று
செப்ப - என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் - அழகிய கட்டமைந்த
வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி - (மதியமைச்சருள்
மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை - என்தந்தையே!;
இத்தானை தன்னை - இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப்
படகில் ஏற்றுக; என்றான் - என்று சொன்னான்.

     சிருங்கி பேரன் என்பது குகனது நாட்டின் தலைநகரம். ‘வரிசிலைக்
குரிசில்’ என்று தயரதனைக் கூறியதற்கேற்பச் ‘சுந்தர வரிவிலானும்’ என்று