Tuesday, October 5, 2010

தமிழ்த் தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! 


- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்
பொருள் :
நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திய நிலமாகிய பெண்ணின் அழகு மிளிரும்
சிறப்புப் பொருந்திய முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில்,  தென்னாடும் அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம்வீசும் திலகமாகவும் திகழ்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் இனிமையான நறுமணத்தைப் போல அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த (இருக்கின்ற) பெருமை மிக்க தமிழ்த்தெய்வமே! தமிழ்த்தெய்வமே!
இன்றும், என்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

தாழிசைகள்


கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில் 
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே

ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென்று அறைவதுவும் அற்புதமாமே

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவா காரணத்தின் அறிகுறியே

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள் 
உடையார் உன்வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே

தக்கவழி விரிந்திலங்கும் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலம் சிறந்த உந்தன் மெய்சரித வியஞ்சனமே

பொருள்:
கடலையே குடித்த ஆற்றல் வாய்ந்தவர் குடமுனிவராகிய அகத்தியர், அப்படிப்பட்ட திறம் வாய்ந்த அகத்தியரே தமிழை அறிந்துகொள்ளும் பொருட்டு தமக்கு குருவாக இறைவனை நாடினார் என்றால் சகடர்களால் தோண்டப்பட்ட கடலைத் தமிழே உனக்கு உவமையாகச் சொல்வது உனக்கு புகழாகுமா? என்றால் நிச்சயம் புகழாகாது.

பாண்டியன் அவைக்களத்தில் தருமிக்காக இறைவனாகிய சிவபெருமான் எழுதிக்கொடுத்த ”கொங்குதேர் வாழ்க்கை” எனத்தொடங்கும் பாடலில் தமிழ்ப் புலவராகிய நக்கீரர் பிழைக்கண்டு இறைவனிடம் வினவ, அதற்கு தகுந்த பதிலளிக்க இயலாது இறைவனே விழித்தாரென்றால் தமிழே உனதிலக்கணத்தின் சிறப்பையும் அதன் அற்புதத்தையும் எப்படிப் புகழ்வது.

வேதங்களும் வேதமொழியான வடமொழியும் வருவதற்கு முன்பாக உலகம் முழுவதும் ஆதிக்கம் பெற்று கோலோச்சிய ஒரே மொழியாகத் தமிழே நீயே விளங்கினாய் என்பது உன் பழைமையின் சிறப்பை விளக்குவதாய் திகழ்கின்றது.

சைவர்களுக்கும் சமணர்களுக்கும் அனல்வாதம் புனல்வாதம் ஆகியவற்றின் மூலமாக சமயச்சாடல்கள் ஏற்பட்டுவந்தது, அவ்வமயம் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் ஏற்பட்ட புனல்வாத்தில் சைவத்தமிழ் பனுவல்களும் , பிறமொழி சமணப் பனுவல்களும் வையை ஆற்றில் விடப்பட்டது அதில் தமிழ் பனுவல்கள் நீரில் எதிரேறி கரையை அடைந்தது.  இச்சம்பவம் தமிழானது வையை நதியை மட்டும் எதிரேறவில்லை காலம் என்னும் நதியையையும் எதிரேறி பன்னேடுங்காலம் கன்னித்தமிழாய் நடைபோடும் என்பதற்கு அறிகுறியாய் அமைந்துள்ளது என்பதை விளக்குகின்றது.

கடையூழிக்காலத்தில் அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபெருமான் தன் பணியின் பொழுது ஏற்படும் சோர்வை தணிப்பதற்கு அரிய தமிழ் பனுவலாம் திருவாசகத்தைத் தானே தன் கைப்பட ஒரு பிரதி எடுத்துக்கொண்டார் என்றால் தமிழே உன் சிறப்பை என்னவென்று புகழ்வது.

சங்ககாலத்தில் புலவர்கள் கூடும் அவையில் வைக்கப்பட்டிருந்த சங்கச்சிறுபலகையானது தன்மீது வைக்கப்படுவது தகுதியுடைய தமிழ் நூலாயின் விரிந்து இடம்கொடுத்தது, தகுதியற்றதாயின் சுருங்கி புறம்தள்ளியது எனக்கூறப்படும் செய்தி தகுதியுடையதை மட்டுமே தமிழ் கொண்டுள்ளது என்பதை சிறப்புற விளக்கி நிற்கின்றது.

Wednesday, September 22, 2010

கல்லூரித் தமிழ் - அறிமுகம்




கல்லூரிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்கான தமிழ் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு,  மாணவர்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகளையும், விளக்கங்களையும் இதில் உள்ளீடு செய்யலாம் என்ற எண்ணத்தோடு இந்த வலைப்பூவினை உருவாக்கியுள்ளேன்

முடிந்தவரை அவர்களது பாடங்களுக்கான செய்யுள் மூலமும் அதன் உரையையும் தமிழ் இணையக் கல்விக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்களில் இருந்து எடுத்து ஒரே பக்கத்திலான பதிவாக மாணவர்கள் பயன்கருதி உள்ளிட்டுள்ளேன். மாணவ சமுகம் பயன் பெறட்டும். வாழ்த்துக்கள்

இவ்வலைப்பூ அனைத்து விதத்திலும் வெற்றி பெற தமிழ் கூறு நல்லுலகின் கருத்துக்களையும், உதவிகளையும் இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்.
     இவண்
ஈகைவேந்தன்