Tuesday, January 29, 2013

நளவெண்பா - கலிநீங்கு காண்டம்
தமயந்தி, நளனைத் தேடற்கு ஆளனுப்பல்
என்னை இருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானாள் உணர்ந்து.                 1
குளிர்ச்சி பொருந்திய கூந்தலையுடைய தமயந்தியானவள்,  மின்போன்று ஒளிவிட்டெறிக்கின்ற வேற்படை தாங்கிய (தன் தந்தையாகிய) வீமமன்னனுடைய புரோகிதனுக்கு என்னைப் பெரிய கானத்தில் விட்டுப்பிரிந்த போர்மன்னனாகிய நளமன்னனை, நீ தேடிக்கொணர்ந்து வாவென்று, (அவன் தேடற்குரிய ஆற்றல் உள்ளவன் என்பதை) நன்கு தெளிந்து இவ்வாறாகக் கூறத் தொடங்கினாள்.

தமயந்தி, நளனைக் கண்டு தெளிதற்குப் புரோகிதனுக்கு யோசனை கூறல்
காரிருளிற் பாழ்மண்ட பத்தேதன் காதலியைச்
சோர்துயிலில் நீத்தல் துணிவன்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தால் நேர்நின் றெதிர்மாற்றம் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து                               2

கரியநிறமுள்ள இருட்டில் (நள்ளிராப் பொழுதில்) பாழடைந்த ஓர் மண்டபத்திடத்து தன் காதல் மனைவியை அயர்ந்த உறக்கத்தின் போது விட்டுவிட்டுச் செல்லுதல் தேரையுடைய மன்னனுக்கு ஒத்த செயலாகுமோஎன்று நீ கூறினால் (அதைக் கேட்டவருள்) அதற்கு மறுமொழியாக உரைக்கின்றவர் எவராக இருப்பினும் அவரை நீ போய் அறிந்து கொண்டு வருகவென்று நன்கு உணர்ந்து கூறினாள்.

புரோகிதன், நளனைத் தேடிச் சென்று அயோத்தி நகர் அடைதல்
மின்னாடு மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடும் கானகமும் நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தான் அயோத்தி நகர்                                               3

புரோகிதனானவன் மின்னல் ஒளி யெறிக்கின்ற மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலைகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும், கடல்சூழ்ந்த பல்வகை நல்ல நாட்டுப்புறங்களிலும்காடுகளிலும்பார்த்துக்கொண்டே சென்று நிலைபெற்ற மதநீர் ஒழுகுகின்ற மயக்கத்தையுடைய ஆண் யானைகளையுடைய நள மன்னனைத் தேடி, அயோத்தி நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தான்.

புரோகிதன், ‘மனைவியைக் காட்டில் விட்டுச்செல்லல் அரசர்கட்குத் தகுமோ?’ எனல்
கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப்
போனதூஉம் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினான் அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர்                                                   4

புரோகிதனானவன் அவ்வயோத்தியில்  காட்டினிடத்தே நள்ளிரவில் தன் மனைவியைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு பிரிந்து சென்ற நிலை அரசனுக்குப் பொருத்தமாமோ? என்று கூறினான். நளமன்னன் அந்தச் சொற்களைத் தன் காதினுள் ஏற்றுக்கொண்டு அவனுக்கு முன்னிலையில் வந்து சேர்ந்தான்.

நளன், புரோகிதனிடம் விடை கூறல்
ஒண்தொடி தன்னை உறக்கத்தே நீத்ததூஉம்
பண்டை விதியின் பயனேகாண் - தண்தரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தானென் றையுறேல் நீ.                                                   5

வாகுகனாகிய நளன் புரோகிதனைப் பார்த்து குளிர்ச்சி பொருந்திய முத்துக்களால் கோக்கப்பட்ட மாலைகளைக்கொண்ட வெண்கொற்றக் குடையையுடைய வீம மன்னனின்திருமகள் போன்ற புதல்வியாகிய தமயந்தியை, கொடிய காட்டிடத்தே விட்டுவிட்டுச் சென்றானென்று கருதி ஐயப்படாதே நீ, ஒளிபொருந்திய வளையலையுடைய தமயந்தியை அவள் தூங்குங்கால் விட்டுப் பிரிந்ததும் முன்செய்த ஊழ்வினையின் பயனேயாகும் என்பதை அறிவாயாக.

புரோகிதன் சென்றதும் தமயந்தி அவனை வினாவல்
எங்கண் உறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தம் காவலனை - அங்குத்
தலைப்பட்ட லாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையாள் ஆங்கு.                               6

கண்களின் நீரானது அலைபோற் பெருக்கெடுத்தோடுகின்ற கொங்கைகளையுடையளாகிய தமயந்தியானவள், (புரோகிதனாகிய சுவேதனைக் கண்டபோது), எவ்வெவ்விடத்தே தங்கியிருந்தாய்கங்கைநீர்வளம் பெருக்கும் நிடதநாட்டுக்குரிய மன்னனை எந்தெந்தத் திக்குகளெல்லாஞ் சென்று போய்த் தேடி வந்தனை, அந்த இடங்களிலெல்லாம் என் நாயகர் உனக்கு நேரே தென்பட்டதுண்டோ கூறுக என்று வினவினாள்.

புரோகிதன், தமயந்திக்கு விடை கூறுதல்
வாக்கினான் மன்னவனை ஒப்பான் மறித்தொருகால்
ஆக்கையே நோக்கின் அவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாகன் என்றுரைத்தான்
ஏந்துநூல் மார்பன் எடுத்து.                                                     7

பூணூலணிந்த மார்பை யுடையவனாகிய புரோகிதன் (தமயந்தியை நோக்கி), மலர்மணம் கமழுகின்ற கூந்தலையுடைய தமயந்தி!, (நான், அயோத்தி மாநகரில் கண்ட) அவ்வுயர் குலத்தோன்றலாகிய தேரோட்டியொருவன், தன் மொழிகளினால் நளமன்னனையே ஒத்திருக்கின்றான்,  மீட்டும் ஒருமுறை அவன் உடம்பை உற்றுப் பார்த்தால் அம்மன்னவன் அல்லாதவனாக இருக்கின்றான் என்று விளக்கமாகக் கூறினான்.

தமயந்தி, தன் இரண்டாம் சுயம்வரத்தை அறிவியெனல்
மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்தூரம் தேர்க்கோலங் கொள்வான்
படைவேந்தன் என்றாள் பரிந்து.                                           8

(தமயந்தி அந்தணனை நோக்கிமறையவனே !, வீமமன்னனுடைய அழகுள்ள மகளாகிய தமயந்தியானவள் மறுமுறையும் ஒரு சுயம்பரத்திருமணத்தை மேற்கொண்டாளென்று நீ அயோத்திக்குச் சென்று கூறுவாயானால்  பெருங் கொடை மிக்கவனாகிய இருதுபன்ன வேந்தனுக்கு, இவ்வளவு தொலையுள்ள இவ்விடத்துக்குப் படைகளையுடைய என் காதற் கணவன் தேரோட்டியாக அமைந்து வருவான் என்று அன்புடன் கூறினாள்.

மறையவன், அயோத்தி சென்று தமயந்திக்குச் சுயம்பரமென வீமன் பறையறைவித்தான் எனல்
எங்கோன் மகளுக் கிரண்டாம் சுயம்பரமென்
றங்கோர் முரசம் அறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை அளவென்றான் அந்தணன் போய்த்
தென்னாளும் தாரானைச் சேர்ந்து.                                     9

மறையவன் (தமயந்தி கூறியவாறு அயோத்திக்குச்) சென்று அழகுமிக்க மலர்மாலையணிந்த இருதுபன்ன மன்னனைச் சேர்ந்துமுறையுடைய ஆட்சிகொண்ட வேந்தனே!, எம் விதர்ப்ப நாட்டு வேந்தனான வீமனானவன் தன் மகள் தமயந்திக்கு இரண்டாவது திருமணம் நிகழ்கின்றதென்று கூறி அவ்விதர்ப்ப நாட்டில் ஒரு பறையறைவித்து யாவர்க்கும் தெரியப்படுத்தினான், அச்சுயம்வரத் திருநாளும் (நெடு நாட்களில் இல்லை) நாளையளவிலேயே இருக்கின்றதென்று கூறினான்.

அதுகேட்ட வாகுகன், இருதுபன்னனிடம் கூறல்
குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத எந்திழையாள் இன்று - பறிபீறி
நெல்லிற் பருவரால் ஓடும் நெடுநாடா
சொல்லப் படுமோஇச் சொல்.                                               10

 (நளமன்னன் ஆகிய வாகுகன் அது கேட்டு இருதுபன்னனை நோக்கி) - (மீன் பிடிக்கும் கருவியாகிய) ஊற்றாலைக் கிழித்துக்கொண்டு நெற்பயிர்கள் வளர்ந்துள்ள வயல்களின் பெரிய வரால்மீன்கள் தப்பிக்கொண்டு செல்கின்ற (நீர்வளம் மிக்க) பெரிய கோசலநாட்டுக்கு வேந்தே!, நிறைந்த கற்புடையாளும், தன்னை மனையாளாகக் கொண்ட கணவனுக்கே யல்லாமல் (பிறர் யார் பொருட்டும் தன்னுயிரை) விடுவதற்குத் துணியாத தன்மையுடையவளுமாகிய மங்கையானவள்(தன் கணவனை விட்டுப்பிரிந்து தனித்திருக்கின்ற) இக்காலத்தில் (இரண்டாம் சுயம்வரம் என்று சொல்லப்படுகின்ற) இச்சொல்லையும் துணிந்து தன் வாயாற் சொல்லத்தக்கதோ? (தகாது என்றபடி.)

இருதுபன்னன், தமயந்தி சுயம்பரமாலை முன் தனக்கே கிடைக்க வேண்டியதெனல்
என்மேல் எறிகின்ற மாலை எழில்நளன்றன்
முன்னே விழுந்ததுகாண முன்னாளின் - அன்னதற்குக்
காரணந்தான் ஈதன்றோ என்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தான் அன்னான் மதித்து.                                       11

மதநீரைப் பொழிகின்ற ஆண்யானையை ஒத்தவனான இருதுபன்னன் தமயந்தியினால் என்மேல் வீசியெறியப் பட்ட சுயம்வர மணமாலை,  அழகு பொருந்திய நளன்மேல் முன்சுயம்பரம் நாளிற்போய் விழுந்தது என்று அறிக (வாகுகனே),  அப்படி நான் எண்ணுதற்குரிய காரணமாக இவ்விரண்டாஞ் சுயம்வரம் இருக்கின்றதல்லவா எனப் புரோகிதன் கூறியதை ஆராய்ந்து கூறினான்.

வாகுகன், தமயந்தி இரண்டாஞ் சுயம்வரம் குறித்துப் பலவாறாக நினைத்தல்
முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண இசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை உலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ இது.                                                  12

தமயந்தியின் குலமுறைக்கு ஏற்காத (இம்மறு சுயம்வரமென்னும்) சொல், உலகில் நிலவிவருவது இச்சொல் (அக்குலம்) முன்செய்த தீவினை விளைவினால் ஏற்பட்டதோ, தமயந்தியானவள் என்னைக் காண்பதற்காகவே உரைத்த மாற்றமோ இது எந்தவிதமோ அறிகின்றிலேன் (எனத் தனக்குள் எண்ணி இரங்கினான் நளன்.)

வாகுகன், இருதுபன்னனுக்குத் தேரோட்டிச்செல்லலே தன் கடன் என எண்ணல்
காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவல் முடிப்பென் இனியென்று - மாவைக்
குலத்தேரில் பூட்டினான் கோதையர்தம் கொங்கை
மலர்த்தேன் துளிக்குந்தார் மன்.                                           13

மங்கையர்களின் கொங்கை முற்றத்திடத்தே தன் மலர்களிலுள்ள தேனைச் சொரிகின்ற மாலையணிந்த மார்பினனாகிய நளமன்னன் இவ்வயோத்தி வேந்தனாகிய இருதுபன்னனுக்கு நான் பணி செய்யுங் கடமையை மேற்கொண்டுள்ளேன்இனிமேல் அவன் கட்டளைப்படி செய்து முடிப்பேனெனக்கருதி, குதிரைகளைச் சிறந்த தேரில் பூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினான்.

வாகுகன் ஓட்டுகின்ற தேர், விரைந்து செல்லும் சிறப்புரைத்தல்
முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றான் ஊர்கின்ற தேர்.                                               14

அழகும் மணமும் பொருந்திய மாலையை மாறாதுகொண்ட மெல்லிய கூந்தலையுடைய தமயந்தி (இரண்டாம் சுயம்வரத்தை) நாடிய செயலைப்பற்றியே,  தன் மனத்திடத்தே யெண்ணியெண்ணி அதைக் குறித்தே ஆராய்ந்து கொண்டிருக்கின்ற வாகுகனான நளமன்னன் செலுத்திச் செல்கின்ற தேரானது, பழவினையானது தன்னை நெருங்கிவருதலால் (அதனால் தன் மானமிழக்கவேண்டித் தமயந்திபால்) அளவு கடந்த காம மயக்கத்தைக் கொண்டவனான இருதுபன்னனது, மனத்தின் விரைவைப் பார்க்கினும் மிக விரைவாகப் போயிற்று.

இருதுபன்னனுடைய மேலாடை விழ, அதை எடுக்குமுன் தேர் பத்துக்காதம் செல்லல்
மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதின்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.                              15

வெற்றி மிக்கவனான இருதுபன்னன் ஏறிவருவதற்கு, கொடுமை பொருந்திய கலியின் வஞ்சமுள்ள சூதாட்டத்தின்மீது, மயக்கங் கொண்ட வாகுகனாகிய நளமண்ணன் முட்கோல் கொண்டு முடுக்கி ஓட்டிய குதிரைகள், (இருதுபன்னன்) தன் மேலாடை கீழே விழுந்துவிட்டது அதனை எடுவென்று வாகுகனை நோக்கிக் கூறினான், அது சொல்லி முடிப்பதற்குள்,  பத்துக்காத தூரம் பறந்து சென்றன (என்றான்).

கலி, நளனைவிட்டு நீங்குதல்
வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி                                          16

நளமன்னனிடம் பொருந்தியிருந்த கலியென்னும் துன்பம், வண்டுகள் மொய்க்கின்ற நீர்வளம் மிக்க வயல்கள் சுற்றியிருக்கின்ற,  மள்ளுவநாட்டை ஆட்சி புரிகின்ற எம் தலைவனான குளிர்மை பொருந்திய மலர் மாலையணிந்த சந்திரன் சுவர்க்கியென்னும் அரசனால் பாராட்டப்படுகின்ற, பாவாணனிடத்தில் நிலைத்திருந்த பசிகெட்டொழிந்தாற்போலத் தீர்ந்தது.

இருதுபன்னன், வீமமன்னனுடைய நகரடைதல்
ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்றன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட் டெழுங்கூற்றம்
அன்னகரி ஒன்றுடையான் ஆங்கு.                                     17

போரினை விரும்பி மேலெழுந்து வருகின்ற இயமனையொத்த, பட்டத்து யானை ஒன்றையுடையவனாகிய இருதுபன்ன மன்னன், ஆமையின் முதுகினிடத்தே நண்டுகள் உறங்குகின்ற நீர்வளமிக்க, அழகான பெரிய கோசல நாட்டைவிட்டு நீங்கி, வீமமன்னனுடைய விதர்ப்ப நாட்டின் அழகிய நகரான குண்டினபுரத்தின் இடத்தே சென்று சேர்ந்தான்.

இருதுபன்னன், தேரினின்றும் இறங்கிச் செல்லுதல்
வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து.                                                  18

ஆட்சிச்சிறப்புப் பொருந்திய வெற்றிமாலையணிந்த இருதுபன்ன மன்னன், வெற்றி பொருந்திய ஒப்பற்ற தன்னுடைய தேரினை, வீமமன்னனுடைய பெரிய அரண்மனை வாசலின் முன்பாக நிறுத்தச்செய்து, நடுவுநிலையோடு ஆட்சி புரிகின்ற மன்னனான வீமனுக்குதன் வருகையை அறிவிக்கும்படி (வாயில் காவலர்கட்குக்) கட்டளையிட்டு அனுப்பி, (தான் தேரினின்றும் கீழிறங்கிச் சென்று),  மகிழ்வுகொண்டு தான் மட்டும் (அரண்மனையினுள்) சென்றான்.

இருதுபன்னனை வீமன் வினவுதல்
கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்
நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்.                                        19

(இருது பன்னனை வீமன் நோக்கி) தாமரை மலரில் உள்ள புதிய மணமுள்ள தேனைக் குடித்து,  அதில் இருந்து தூங்கியெழுந்த பொறிவண்டுகள், அதன் பின்பும் (நெய்தல் நிலத்துக்குச்) சென்று அங்குள்ள கருங்குவளை மலர்த்தேனை உண்பதற்கு விரும்புகின்ற பெரிய கோசல நாட்டுக்கு வேந்தே, நீ என்னிடத்தே வருவதற்கு விரும்பிய காரணமென்ன ? (என்று கேட்டான்.)

இருதுபன்னன் மறுமொழி கூறல்
இன்றுன்னைக் காண்பதோர் ஆதரவால் யான்இங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மேல் உள்ளந் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய்.                                               20

ஒளிபொருந்திய வேல்போன்ற கண்களையுடைய தமயந்தியிடத்துத் தன் உள்ளம் சென்றமையால், முன் ஆராய்ச்சியின்றி வந்தவனான இருதுபன்ன வேந்தன், மணங்கமழும் மலர்மாலையணிந்த அரசனே ! இன்றைக்கு உன்னைக் காணவேண்டுமென்னும் ஓர் ஆசை மிகுதியினால், நான் இங்கே வந்து சேர்ந்தேன் என்று கூறினான்.

வாகுகன், குதிரைகளை அவிழ்த்துக் கட்டிவிட்டுச் சமைக்க ஒருப்படல்
ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவைஆற்றிக்
கோதில் அடிசில் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயில் கார்நீலம் கண்விழிக்கும் நாடன்
மடைவாயில் புக்கான் மதித்து                                           21

எருமைகளின் கடைவாயிடத்தே (மேய்ந்து குதட்டுகின்றபோது) கருங்குவளை அரும்பானது பூவாக மலருகின்ற நிடதநாட்டு வேந்தனான நளன், முதன்மையான நீண்ட தேரில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு அவைகளை இளைப்பாற்றி, குற்றமற்ற சமையல் முடித்தலாகிய தான் செய்யவேண்டிய வேலையின் அறுகுறையை முழுதும் முடிப்பதற்கு எண்ணங்கொண்டு  சமையலறைக்குச் சென்றான்.

தமயந்தி, தன் தோழியிடம் கூறல்
இடைச்சுரத்தில் தன்னை இடையிருளில் நீத்த
கொடைத்தொழிலன் என்றயிர்த்த கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற எல்லாம் தெரிந்துணர்ந்து வாவென்றான்
நைகின்ற நெஞ்சாள் நியந்து.                                     22

தன் கணவன் பிரிவினால் வருந்துகின்ற மனத்தையுடையவளாகிய தமயந்தியானவள்,  விரும்பி, நடுக்காட்டில் அரைநடு இரவில் தன்னைத் தனியே விட்டுப்பிரிந்தஈகையானாகிய நளமன்னனென்று தன்னால் ஐயங்கொள்ளப்பட்ட (வாகுகனென்னும்) தலைவனுடையசமையல் முறைகளையெல்லாம் கண்டு அறிந்து உணர்ந்து வருவாயாக என்று தன் தோழியொருத்திக்குச் சொல்லி அனுப்பினாள்.

தமயந்தி, மற்றொரு தோழியை அனுப்பி வாகுகனிடம்தன் மக்களை விட்டுவரக் கூறுதல்
கோதை நெடுவேல் குமரனையும் தங்கையையும்
ஆதி அரசன் அருகாகப் - போத
விளையாட விட்டவன்றன் மேற்செயல்நா டென்றாள்
வளையாடும் கையாள் மதித்து.                                           23

வளையல்கள் மேற் போவதும் கீழிறங்குவதுமாக அசைந்தோடிக் கொண்டிருக்கின்ற கைகளையுடைய தமயந்தியானவள் நன்றாக எண்ணி முடிபு செய்து, மலர் மாலையணிந்த நீண்ட வேலினையுடைய மகன் (இந்திரசேனனையும்) அவன் தங்கை (இந்திரசேனை) யையும், நம் முன்னை அரசனென்று கருதப்படுகின்ற வாகுகன் பக்கத்தில் விளையாடும்படி விட்டுவிட்டு,  அதற்குமேல் அவனுடைய செய்கைகளைக் கண்டறிந்து வருகவென்று (பின்னுமோர் தோழியிடம்) சொல்லியனுப்பினாள்.

வாகுகன், மக்களைத் தழுவிக்கொண்டு அவர்களை வினவல்
மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்கள் என்றுரைத்தான்
வன்மக் களியானை மன்                                                       24

பகைமைத் தன்மை கொண்ட மதயானையையுடைய வாகுகனான நளமன்னன், தன் புதல்வர்களைத் தன் எதிரே கண்டு, (வருத்தங்கொண்டு) மனம் பதைத்துப் பெரு மூச்சுவிட்டு, (விரைந்து அவர்பாற்) சென்று அவர்களைத் தூக்கியெடுத்து வீரமிக்க தன் தோள்களில் அணைத்துக்கொண்டு, குழந்தைகளே ! நீவிர் இருவரும் என் புதல்வர்களைப் போலவே இருக்கின்றீர், (நீவிர்) யார் பெற்ற மக்கள் என்று கேட்டான்.

வாகுகனுக்குப் புதல்வர்கள் மறுமொழி கூறல்
மன்னன் நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்
அன்னை தனைக் கான்விட் டவன்ஏக - இந்நகர்க்கே
வாழ்கின்றோம் எங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் என்றார் அழுது.                                             25

(பிள்ளைகள் நளனை நோக்கி) நாங்கள் பேரரசனும் நிடத நாட்டு மக்கள் வாழ்வுக்குக் காரணனுமாகிய நளமன்னனுடைய புதல்வராவோம் அவ்வேந்தன் எம் தாயாகிய தமயந்தியைக் காட்டில் விட்டுவிட்டுப் பிரிந்து செல்ல, இந்தக் குண்டினபுரத்தில் (எம் அன்னையாரோடு) வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்,  எங்களுடைய செழிப்புமிக்க நிடத
நாட்டை வேறோர் அரசன் இப்போது ஆட்சிபுரிந்து வருகின்றான் என்று அழுதபடியே கூறினார்கள்.

மக்கள் மொழியைக்கேட்ட வாகுகன் வருந்துதல்
ஆங்கவர் சொன்ன உரைகேட் டழிவெய்தி
நீங்கா உயிரோடு நின்றிட்டான் - பூங்காவின்
வள்ளம்போல் கோங்கு மலரும் திருநாடன்
உள்ளம்போல் கண்ணீர் உகுத்து.                                         26

பூஞ்சோலைகளில் கிண்ணம் போன்று கோங்கரும்புகள் மலர்கின்ற அழகிய நிடதநாட்டு வேந்தனாகிய நளன், அவ்வாறு அழுதபடியே அக்குழந்தைகள் கூறிய சொற்களைக் கேட்டுணர்ந்து மனச்சோர்வுற்று வருந்தி, தன்மனம் உருகி வழிவதுபோலத் தன் கண்ணீர் கலகலவென்று பாய்ந் தோடச்சொரிந்து, தன் உடலை விட்டுச் செல்லாமல் (ஊசலாடிக்கொண்டிருக்கின்ற) உயிரோடு ஒன்றும் தோன்றாமல் அசைவற்று நின்றுகொண்டிருந்தான்.

வாகுகன், குழந்தைகளைப் பார்த்து வினாவுதல்
உங்கள் அரசொருவன் ஆளநீர் ஓடிப்போந்
திங்கண் உறைதல் இழுக்கன்றோ - செங்கை
வளவரசே என்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து                                                  27

(வாகுகனாகிய நளன் தான்) பெரிய தவத்தால் பெற்றெடுத்த, (தன் மகனாகிய இந்திரசேனனென்னும்) இளவரசனைப் பார்த்து, சிவந்த கைவளமுடைய இளவேந்தே!, உங்களது உரிமையாகிய அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்டு வேறொருவன் ஆண்டுகொண்டிருக்க, நீங்கள் (அவனுக்கு அஞ்சி) ஓடிவந்து, (உன் தாய் பிறந்த இடமாகிய) இந்த நகரில் வாழ்ந்திருத்தல் மானக் குறைவன்றோ என்று விளக்கமாகக் கூறினான்.

இந்திரசேனன் சினந்து வாகுகனுக்கு மறுமொழி கூறுதல்
நெஞ்சால்இம் மாற்றம் நினைந்துரைக்க நீஅல்லால்
அஞ்சாரோ மன்னர் அடுமடையா - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலாய் எங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.                                                 28

இளவரசன் நளனை நோக்கிசமையல் தொழில்புரிகின்றவனே! எப்போதும் தவறாமல் இழிவேகொண்ட கீழ்மையான தொழில்களையுடையவனே !, இவ்வாறு (நீங்கள் ஓடிப்போந்து இங்கண் உறைதல் இழுக்கென்று) கூறுஞ் சொல்லை மனத்தால் நினைந்து சொல்வதற்கு, நீயேயல்லாமல் அரசர்களும் கூடக் கூறுவதற்குக் கூசமாட்டார்களோ ?,  எம் அரசனாகிய நளனின் உண்மை நெறியே உறுதியாகும் என்பதை நீ அறிவாயாக. (மற்றவைகளை அவன் மதித்து நடப்பதில்லை யென்றபடி.)

இதுவும் அது
எந்தை கழல்இணையில் எம்மருங்கும் காணலாம்
கந்து சுளியும் கடாக்களிற்றின் - வந்து
பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்
மணிமுடியில் தேய்ந்த வடு.                                                  29

(வாகுகனே ! இன்னும் எந்தை பெருமையைக் கேள்) ஆதிசேடனென்னும் பாம்பால் சுமக்கப்படுகின்ற உலகமன்னர் யாவரும், கட்டுத்தறியை முறிக்கின்ற இயற்கையையுடைய வலிமை பொருந்திய ஆண் யானையின்மீது ஏறிவந்து, வணங்குதலால் மணியழுத்திய முடிகள்பட்டு அழுத்தி உண்டான சுவட்டுத் தழும்பினை, எந்தந்தையாகிய நளமன்னன் திருவடிகள் இரண்டிலும் எல்லாப் பக்கங்களிலும் அடையாளமாகப் பார்க்கலாம். (எந்தை, அரசர்கள் வணங்கும் ஆண்டகை என்றபடி.)

வாகுகன் மறுமொழி கூறல்
மன்னர் பெருமை மடையர் அறிவரோ
உன்னை அறியா துரைசெய்த - என்னை
முனிந்தருளல் என்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.                                                    30

(இளவரசனை வாகுகன் நோக்கி) அரசர்களுடைய அருமை பெருமைகளை அடுமடையர் அறிவார்களோ ?,  உன் பெருமையறியாமல் பேசிய என்னை சினந்துகொள்ள வேண்டாவென்று கூறி, மனம் தளர்ந்து கரையக் கண்களிலிருந்து நீர் (தாரைதாரையாகப்) பெருக்கெடுத்தோடத் தலைவணங்கி நின்றான்.

தமயந்தி, இச்செய்திகள் கேட்டுத் துயருறல்
கொற்றக் குமரனையும் கோதையையும் தான்கண்டு
மற்றவன்தான் ஆங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தார்அம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தாள் அழுது.                                              31

(முன் அனுப்பிய தோழியர்கள் தமயந்தியிடத்திற் சென்று) வெற்றிக்கேற்ற பண்புள்ள தன் மகனையும் தன் மகளையும் வாகுகன் பார்த்து, அவ்விடத்தில் அவன் கூறிய மொழிகளை,  முழுதும் விடாமற் கூறினார்கள், அவ்வுரைகளை, அவர்கள் சொல்லி முடிப்பதற்கு முன்பே, (அவள்) மனமுடைந்து அழுதபடியே கீழே விழுந்தாள்.

தமயந்தி, தன் தந்தையிடம் கூறதல்
மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவற்குக்
கொற்றத் தனித்தேரும் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்காண் எங்கள்
கொடைத்தொழிலான் என்றாள் குறித்து.                                                32

(தமயந்தி தன் தந்தையை நோக்கி) இந்தச் சிறந்த நகரத்துக்கு வந்து சேர்ந்த இருதுபன்ன மன்னவனுக்கு, வெற்றி பொருந்திய ஒப்பற்ற தேரையும் செலுத்திக்கொண்டுவந்து, (அதற்கு) மேலும் சமையல் தொழிலும் செய்கின்ற வேந்தனே, ஈகையிற் சிறந்தவனாகிய எங்கள் நளமன்னனாவான் என்று உறுதிப்படுத்திக் கூறினாள் தமயந்தி.

வீமமன்னன், வாகுகனிடம் செல்லல்
போதலரும் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்க்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஓதம்
வரிவளைகண் டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து.                                          33       

பூவரும்புகள் மலர்கின்ற மாலையையுடையவனாகிய வீமமன்னன், போர்த்தொழிலில் வல்ல வேந்தர்களெல்லாம் தன்னைப் பின் தொடர்ந்து வரச்சென்று, தன் மகளாகிய தமயந்தியின் கணவனைக் கண்டான், (பார்த்தவன்)  கடல் தன் அலைகளினால் கீற்றுகள் உள்ள சங்கினங்களை வாரிக் கொண்டு கரைகளின் மேலேறிச் செல்கின்ற நீர் வளப்பமுள்ள நிடதநாட்டுக்கு வேந்தனான நளனை, அடையாளம் அறிந்துகொள்ள இயலாமல் மயங்கி நின்றான்.

வீமன், வாகுகன் பேச்சால் நளனே எனத்தெளிதல்
செவ்வாய் மொழிக்கும் செயலுக்கும் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினான் நோக்கித் தெளிந்தான் நுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து                                             34

(வீமன் வாகுகன் தன்மையைக் கண்டுஇவன் கொண்டுள்ள உருவமானது, இவனுடைய செம்மையான சொற்களுக்கும் செய்கின்ற தொழிற் சிறப்புக்கும் எண்ணத்துக்கும் பொருந்தாததாக இருக்கின்றதென்று, எல்லாத்தன்மைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்தான், ஆராய்ந்து நுட்பமான சிறந்த சொல்லாளனாகிய வாகுகனை (நளனேயாவான் என) எண்ணி உறுதிகொண்டான்.

வீமன், வாகுகனிடம் வேண்டிக் கேட்டல்
பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்கும் திருநாடா உன்னை
ஒளியாது காட்டுன் உரு.                                                         35

(பின்னும் வீமன் வாகுகனை நளனெனவே தெளிந்து) பெண் குரங்கானது கமுகமரத்தின் அழகிய மேலிடத்திலுள்ள பாளையை, நஞ்சுப் பையைத் தன்னிடத்து உடைய நாகப்பாம்பின் படமென ஐயங்கொண்டு, மனத்துணிவில்லாமல் (அச்சமுற்று) இருக்கின்ற அழகிய வளப்பமிக்க நிடதநாட்டுக்குரிய நளவேந்தே, உன்னை இன்னும் மறைக்காமல் உன் உண்மை வடிவத்தை எங்கட்குத் தெரிய வெளிப்படுத்திக் காட்டுவாயாக (என்றான்).

வாகுகன், கார்க்கோடகன் தந்த ஆடைகளை உடுத்தல்
அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி உடுத்தான் - ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையால் பூண்டளிக்கும்
கோத்தாயம் முன்னிழந்த கோ.                                            36

(இவ்வாறு இருதுபன்னன் வேண்டியகாலை) பகைமையை விளைவிக்கும் கலியினது வஞ்சச் குழ்ச்சியினால், சூதுவிளையாடலைத் தனக்கு உரிமையாகக் கொண்டு தான் யாவரையும் பாதுகாக்கின்ற அரசாட்சியுரிமையை அக்காலத்தின் (எளிதாக) இழந்துவிட்டவனான நளமன்னன், பாம்புக்கு வேந்தனான கார்க்கோடகன் தனக்கு முன்புதந்த அழகிய மெல்லிய ஆடைகளுள், ஓர் ஆடையை யெடுத்துத் (தன் அரையில்) கட்டிக் கொண்டான், மற்றொன்றை (மேலாடையாகப்) போர்த்துக் கொண்டான்.

வாகுகன் உரு நீங்கி, நளன் உருவாகத் தோன்றல்
மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோர் அருவினைபோல் போயிற்றே - அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு                                                37

(இவ்வாறு நளன் அவ்வாடைகளை அணிந்தவுடன்) அந்தக் காலத்தில், தன் காதலியாகிய தமயந்தியைக் காட்டிடத்தே விட்டுப் பிரிந்து,  மறைந்து வாழ்கின்ற குதிரை பூட்டிய தேர்ப்பாகனாகிய வாகுகன் உருவமானது, தேவர்களுட் சிறந்தவனாகிய திருமாலின், உலகம் முழுதையும் (குறளுருவெடுத்து மூவடி யளவினதாகஅளந்த உண்மைத் திருவடிகளே பற்றுக்கோடாகக் கொண்டு(விடாதுபற்றிச்) சார்ந்த அடியார்களின் தீராத தீவினைகள் தீர்ந்து ஒழிவதுபோல விட்டு நீங்கிற்று. (பழைய தன்னுருவம் வந்தெய்திற்று.)

நளன் புதல்வர்கள், தந்தையைக் காண்டல்
தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்
போதலரும் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையா ளோடும் விழுந்து.                                       38

நாளரும்புகள் மலர்கின்ற மயிர்முடிப்பையுடைய இந்திரசேனன், தன் தந்தையாகிய நளனைக் கண்டவுடனே, (அன்பினால்) தாமரை மலர்போன்ற தன் கண்களிலிருந்து நீர் பெருக,  மின்னற்கொடி போன்ற இடையையுடைய தன் தங்கை இந்திரசேனையுடனும்,  சென்று தன் தந்தையைக் கட்டித் தழுவி, கீழ்விழுந்து வணங்கி, குற்றமற்ற அழகிய திருவடிகளைத் தன் கண்ணீரால் அலம்பினான்.

தமயந்தி, நளன் காலடியில் வீழ்ந்தழுதல்
பாதித் துகிலோடு பாய்ந்திழியும் கண்ணீரும்
சீதக் களபதனம் சேர்மாசும் - போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீர் அவற்கு.                                              39

(தமயந்தி தன் கணவனைக் கண்டதும்)  (நளன் அறுத்துவிட்டுச் சென்றதான கிழிந்த) அரை ஆடை உடுத்த கோலத்துடன் கீழே பாய்ந்தோடுகின்ற கண்களின் நீரும், குளிர்ச்சி பொருந்திய கலவைச் சாந்தணிகின்ற கொங்கைகளில் படிந்துள்ள அழுக்கும், (தன் உடலில்) பொருந்த,  அரும்பு விரிந்த பூமாலை யணிந்த நளமன்னனின் தாமரை மலர்போன்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள், அந்நளமன்னனுக்கும் (இதைக்கண்டவுடன்) கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் பெருக்கெடுத்தோடிற்று.

வானவர், நளன்மேற் பூமாரி பொழிதல்
உத்தமரில் மற்றிவனை ஒப்பார் ஒருவரிலை
இத்தலத்தில் என்றிமையோர் எம்மருங்கும்-கைத்தலத்தின்
தேமாரி செய்யும் திருமலர்த்தார் வேந்தன்மேல்
பூமாரி பெய்தார் புகழ்ந்து.                                            40

தேவர்கள்இம்மண்ணுலகத்தில் சிறந்தவர்களுள் இவனோடொத்த பண்புடையார் எவருமே இல்லை,  என்று கூறிக்கொண்டாடி,  தேனானது மழைபோல் பெய்கின்ற அழகிய மலர்மாலையணிந்த நளவேந்தன்மீது,  தத்தம் கைகளினால் அள்ளி அள்ளி எல்லாப் பக்கங்களிலும் மலர் மாரியைப் பெய்தார்கள்.
                                                                               
                              முற்றும்

மூலமும் விளக்கமும் எடுத்தாளப்பெற்ற இணைப்பு:
தமிழ் இணையக் கல்விக்கழகம்
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=103&pno=461

No comments:

Post a Comment