Saturday, October 14, 2017

நாற்காலிக்காரார் - ந.முத்துசாமியின் நவீன நாடகம்

நாற்காலிக்காரர் 
இணைய செய்திகள்:
 நாற்காலிக்காரர் நாடகத்தில், அரசியல் அபத்தம் அதில் தோலுரித்துக்காட்டப்படுகிறது. காலத்தைக் கழிக்க சுவாரஸ்யம் தேவைப்படுகிறது. மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். கோலிக்குண்டு, சீட்டுக்கட்டைவிடவும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விளையாட்டு விளையாடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள் ! வாழ்க, ஒழிக கோஷம் போடுகிறார்கள். சுவாரஸ்யத்தைக் கூட்ட வெற்றி தோல்வி வேண்டும் என்கிறார்கள். அதுபொருட்டு வாக்கு கேட்கிறார்கள். வாக்குறுதி அளிக்கிறார்கள்.  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டபின் வாக்காளன் பலியாடாகிறான். அரசியல் நடப்பின் அபத்தம் !
‘’ஒரு பார்வைக்கு வெளிப்படையாகத் தெரிகிற ஒரு அர்த்தத்தையும் இன்னொரு பார்வைக்கு அர்த்தங்கள் கிளைத்துக் கொண்டு போகிற பூடகமான வகையிலும் எழுதப்பட்டுள்ள ஒரு காட்சிப் படிமம் இது’’ என்று இளங்கோவனின் ஊடாடி நாடகத்திற்கான முன்னுரையில் ந.முத்துசாமி எழுதியிருப்பது இவரது நாற்காலிக்காரர் நாடகத்திற்கும் சாலப்பொருந்தக்கூடியதுதான்.
‘கலை’ என்ற சொல்லிற்கு ‘கலைத்துப் போடுதல்’ என்கிற அர்த்தமும் உண்டு. ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற மதிப்பீடுகளை, செய்துகொண்டிருக்கிற சமாதானங்களை நோக்கித் துல்லியமாக எறியப்பட்ட ஒரு கல்… நாற்காலிக்காரர் !
மரபிலிருந்து மாறுபட்டிருந்த ந.முத்துசாமியின் நாடகங்கள் மேடையேற்றம் காணும் வாய்ப்பற்று இருந்தன. நண்பர்கள் சிலரோடு சேர்ந்து  1977 –ல் அவர் ‘கூத்துப்பட்டறை’ எனும் நாடக அமைப்பை உருவாக்கினார். அவரது நாடகங்களை நடிப்பதற்கான பிரத்யேகமான நடிகர்கள் பயிற்சியினால் உருவாக்கம்பெறத் துவங்கினார்கள். நவீன நாடகமேடையும் உயிர்கொண்டது.
ந.முத்துசாமி எழுதிய நாடகங்களில் பிற நாடகக் குழுக்களாலும் அதிகளவில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நாற்காலிக்காரரும் ஒன்று. எழுதிய காலகட்டத்திலிருந்து சமகாலப் பொருத்தப்பாடுடைய நாடகம் இது.
தகவல் தளம்:http://malaigal.com/?p=7370
நாற்காலிக்காரர் நாடகம் - பகுதி-1


நாற்காலிக்காரர் நாடகம் - பகுதி-2

நாற்காலிக்காரர் நாடகம்- பகுதி-3


காணொளிகள்: Youtube தளம்

Tuesday, October 3, 2017

மெய்ப்பொருள் நாயனார் புராணம் - பெரிய புராணம் - சேக்கிழார்

மெய்ப்பொருள் நாயனார் புராணம்


திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ள நடு நாடு. இந்நடு நாட்டிற்குச் சேதி நாடு என்றும் மற்றொரு பெயர் உண்டு. இருநாடுகளுக்கு நடுவிலே அமைந்திருப்பதால் நடு நாடு என்றும், சேதியர் என்ற ஒரு வகை மரபினர் வாழ்வதால் சேதி நாடு என்றும் பெயர் பெற்ற இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர். 

இஃது தென்பண்ணை ஆற்றின் தென்கரையில் சிறப்புடன் விளங்கியது. இந்நகரில் மலாடர் என்னும் மரபினோர் செங்கோலோச்சி வந்தனர். சிவநெறியில் சிறந்து நிற்போரும், அடியார்கள் கருத்தறிந்து ஏவல் புரியும் சுற்றமும் பெற்ற இம்மரபில் தான் மெய்ப்பொருள் நாயனார் தோன்றினார். அம்மன்னர் சிவனடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் என்று கருதி வந்ததால் மெய்ப்பொருள் நாயனார் என்னும் திருநாமத்தைப் பெற்றார். 

இவர் திருக்கோவிலுரைத் தமது ராஜதானியாகக் கொண்டு அறநெறி வழுவாது மக்களைக் காத்து அரசாட்சி புரிந்து வந்தார். மெய்ப்பொருளார் அரசியல் நெறி பிறழா அரும் காவலன். மக்களுக்காக, நன்னெறியில் வாழ்ந்து காட்டும் குடிமன்னன்! வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்ட அஞ்சா நெஞ்சன். இம்மன்னன் அடியார்களை அல்லும் பகலும் போற்றிப் பணியும் சிவநேசச் செல்வன்! ஞானத்தவக் கொழுந்து. 

இம்மன்னனின் மனதில் சிவனடியார்களின் தோற்றப் பொலிவு, கல் மேல் எழுத்துப் போல் நிலைத்திருந்தது. மன்னவரின் செல்வக் குவியல் கோவில் திருப்பணிக்கும் பயன்பட்டு வந்தது! இவ்வாறு பண்போடும் பக்தியோடும் வாழ்ந்து வரும் புரவலனுக்கு ஓர் சோதனை ஏற்பட்டது! இம்மன்னனின் பகை அரசனான முத்தநாதன், பன்முறை போர் புரிந்து புறமுதுகு காட்டி ஓடியவன்! இவன் சூழ்ச்சியால் மெய்ப்பொருளாரைப் பழிவாங்க எண்ணம் கொண்டான். 

முத்தநாதன் சைவ வேடம் பூண்டான். திருநீற்றை விதிமுறைகளோடு, எந்தெந்த அங்கங்களில் எவ்வாறு பூசிக்கொள்ள வேண்டும் என்பதை அறியாத அந்நாத்திகன், திருநீற்றை மேனி முழுவதும் வாரிப் பூசிக் கொண்டான். கையிலே ஓலைக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அந்த ஓலைக் கட்டுக்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். இத்தகைய, போலித் தோற்றத்துடன் முத்தநாதன் திருக்கோவிலூர் நகரத்தை அடைந்தான். 

மன்னவனைப் போலவே, பக்தி மிகுந்த குடிமக்கள், இக்கபட வேடதாரியை, உண்மையான சைவ சன்மார்க்கத் தவசி என்று எண்ணிக் கைகூப்பி வணங்கினர். காண்போர் அனைவரும் உள்ளெழுந்தருள்க என்று வாழ்த்தி வழி காட்டியதால், தங்குதடை ஏதுமின்றி முத்தநாதன் மன்னரின் மாளிகையை அடைந்தான். பள்ளியறை வாயிலிலே மன்னவனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு நின்று கொண்டிருந்தான். 

முத்தநாதன், மன்னனை உடனே பார்க்க வேண்டும்! என்ற எண்ணம் முகத்திலே பிரதிபலிக்க, தத்தனை ஏற இறங்கப் பார்த்தான், குறிப்பால் அப்பொருளை உணர்ந்த தத்தன், முத்தநாதனை நோக்கி, என் தலைவர் அகத்தே துயில்கின்றார். காலம் அறிந்து தேவரீர் உள்ளே எழுந்து அருளுதல் வேண்டும் என்றான். தத்தன் வார்த்தைகளை அம்மூடன் செவிமடுப்பதாக இல்லை. அவன் தடையையும் மீறி மன்னவர்க்குத் தருமத்தை அருளிப் போகவே இங்கு எழுந்தருளியுள்ளோம் என்று கூறியவாறே கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தான். 

மலர் மஞ்சத்திலே மன்னவன் அருகே அமர்ந்திருந்த அரசியார், சப்தம் கேட்டுத் திரும்பி, சிவனடியார் ஒருவர் வருகிறாரே என்று அஞ்சியவராய், சட்டென்று மஞ்சத்தினின்றும், துணுக்குற்று எழுந்தாள். தம் தலைவரையும் எழுப்பினாள். திடுக்கிட்டு எழுந்தார் மன்னர். சிவாயநம என்று குரல் கொடுத்தான் முத்தநாதன். அடியவர் குரல்கேட்டு மன்னர் அகம் மகிழ்ந்தார். திரும்பிப் பார்த்தார். 

தம் எதிரில் சிவனடியார் நிற்பதைக் கண்டார்! கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட அரசர், திருநீறு அணிந்து வந்த முத்தநாதனை, முக்கண்ணன் அடியார் என்றெண்ணி, தமது முடிபட அவனது கால்களிலே விழுந்து வணங்கினார். ஐயனே தாங்கள் எழுந்தருளியது யாது கருதியோ? என்று மலையமநாட்டு மன்னர் பணிவுடன் வினவினார். 

முத்தநாதன் நா கூசாமல் சிவபெருமான் பண்டை காலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று எம்மிடம் உள்ளது. அதனை உனக்கியம்பி உமக்கு மோட்ச பதவியை அளிக்கவே யான் வந்துள்ளேன் என்று கூறியபடியே தன் கையிலிருந்த ஏட்டுச் சுவடிக்கட்டைக் காண்பித்தான். முத்தநாதனின் கபட வார்த்ததைகளை உண்மை என்று நம்பி மோசம் போன மன்னர் முகம், பகைதனை வென்ற வீரனின் முகம்போல் மலர்ந்தது. 

அரசியாரின் முகமும் கதிரவனைக் கண்ட கமலம் போல் பூரித்தது. அரசர், இரு கை கூப்பி வணங்கியபடியே, இம்மையில் இவ்வடியேனுக்கு இதனினும் உயர்ந்த பேறு வேறு எதுவுமே இல்லை, தேவரீர் அம்பலவாணர் அருளிச் செய்த ஆகம நூலை வாசித்து அடியேனுக்கு அதன் பொருளையும் அருளிச் செய்தல் வேண்டும் என்று கூறினார். 

முத்தநாதனுக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்து, அரசியுடன் தாம் தரையில் அமர்ந்து கொண்டார் மன்னர். உயர்ந்த ஆசனத்தில், தாழ்ந்த உள்ளத்தோடு அமர்ந்திருந்த முத்தநாதன் வஞ்சகப் புன்னகையை உதட்டிலே நெளியவிட்ட வண்ணம், மன்னரையும், அரசியாரையும் மாறி மாறிப் பார்த்தான். எதைப்பற்றியோ சிந்திப்பவன் போல் பாசாங்கு செய்தான். 

முத்தநாதனின் செயலைக் குறிப்பால் உணர்ந்த மெய்ப்பொருளார், தேவரீர்! யாது சொல்லத் தயங்குகிறீர்! என்று கேட்டார் மன்னர்! பக்தா! இவ்வாகம நூலைப் போதிக்கும் போது, மலர் மாலை சூடிய கூந்தலையுடைய தங்கள் அரசியார் பக்கத்தில் இருக்கக்கூடாது. இதை நான் சொல்லவில்லை. ஆகம நெறிதான் இவ்வாறு எடுத்து இயம்புகிறது. என்று முத்தநாதன் சொன்னான். உடனே மன்னர். திருமகளைப் போல் அருகே நின்று கொண்டிருந்த அரசியாரைப் பார்த்தார். கணவரின் கட்டளையைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட கற்புடைச் செல்வியான அரசியார், அரசரையும், முத்தநாதனையும் தொழுதுவிட்டு, அந்தப்புரம் நோக்கிச் சென்றாள். 

முத்தநாதன் சங்கரா சிவ! சிவா! என்று பலமாக இறைவனின் திருநாமத்தை ஓதியபடியே, திருவெண்ணீற்றை எடுத்த உடம்பிலும் நெற்றியிலும் தேய்துக் கொண்டு மன்னனுக்கும் கொடுத்தான். திருவெண்ணீற்றை வாங்கி, பயபக்தியோடு நெற்றியிலும், மேனியிலும், முறையோடு விதிப்படி ஐந்தெழுத்தை மனதில் நினைத்தபடியே அணிந்து கொண்டார் மன்னர்! ஐயனே! இவ்வடியேனுக்கு அருள் செய்தல் வேண்டும் என்று பணிவுடன் வேண்டி நின்றார் மன்னர். 

மன்னவர் சிரம் தாழ்த்தி முத்தநாதனை வணங்கிய போது அப்பகையரசன் ஏட்டுச் சுவடியைப் பிரிப்பது போல் அதனுள் இருந்த உடைவாளை வெளியே எடுத்தான். மன்னர் தலைவணங்கி நின்ற தருணம் பார்த்து அந்த வஞ்சகன் தான் நினைத்தபடியே செய்தான். அந்நிலையிலும், மன்னர் மனம் அவன் மீது சற்று கூட வெறுப்போ, வேதனையே, கோபமோ, கொள்ளவில்லை. மெய்ப்பொருளார், மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கூறி அவனைத் தொழுதார்.

குருதி வெள்ளத்திலே மிதந்த நாயனார் அக்கொடியவனின் திருநீறு அணிந்த உடம்பைப் பார்த்துச் சிவனையே நினைத்தார். முத்தநாதன் வாளெடுத்து மன்னரைத் தாக்கியதை மறைந்திருந்து பார்த்து மெய்க் காப்பாளன் தத்தன் நொடிப் பொழுதில், உள்ளே நுழைந்து, முத்தநாதனைக் கொல்லத் தன் உடைவாளை உருவினான். குருதி கொட்ட, தரையில் சாய்ந்து வீழ்கின்ற மெய்பொருளார் அந்த நிலையிலும் தமது வீரக்கரங்களை உயர்த்தி அவனைத் தடுத்து தத்தா நமர் என்று கூறிச் சாய்ந்தார். 

தத்தா! இவர் நம்மைச் சேர்ந்தவர் என்ற பொருளை உணர்ந்த தத்தா நமர் என்று பகர்ந்து, நிலத்தில் சாய்ந்த மன்னனின் அன்பின் ஆழத்திற்கும், பக்தியின் உயர்விற்கும் அடிபணிந்தான் தத்தன், தலை வணங்கினான். அவன் உள்ளம் கோபத்தால் துடி துடித்த போதும், தாபத்தால் உள்ளம் உருக, கண்கள் நீரைச் சொரியத்தான் செய்தன. கைகள் தளர, உடைவாளை உறையில் போட்டபடியே அரசரைத் தாங்கிப் பிடித்தான் தத்தன். 

மன்னர் தாங்க முடியாத வேதனையையும் தாங்கிக் கொண்டு, தத்தனிடம், தத்தா! இவ்வடியார்க்கு எவ்வித இடரும் நேராவண்ணம் நம் எல்லை வரைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவாயாக! என்று ஆணையிட்டார். மறுமொழி பேசாது, அப்படியே ஆகட்டும் வேந்தே! என்றவாறே அரசரை வணங்கிவிட்டு அந்த அரக்கமனம் கொண்ட பகையரசனோடு புறப்பட்டான் தத்தன். 

மன்னர்க்கு ஏற்பட்ட துன்பம் காட்டுத் தீபோல் நாடு நகரமெங்கும் பரவியது. அரசியார் செய்தியறிந்து அந்தப்புரத்தில் இருந்து உள்ளம் பதைபதைக்க ஓடோடி வந்தாள். ஐயனை மடிமீது தாங்கி பலவாறு புலம்பி அழுதாள். முத்தநாதனின் கொடிய செயலைக் கேள்வியுற்றுக் கொதித்தெழுந்தனர் மக்கள். தத்தன் மக்களிடம் மன்னர் ஆணையை எடுத்துக் கூறினான். அனைவரும் வேதனையோடு மன்னரைக் காண அரண்மனைக்கு வெள்ளம் போல் திரண்டு சென்றனர். 

தத்தனும் முத்தநாதனை நகரின் எல்லையைக் தாண்டி கொண்டு போய் சேர்த்தான். காற்றிலும் கடுகி அரண்மனை விரைந்தான். தத்தன் வரும்வரை மன்னர் உயிர் துடித்துக் கொண்டே தான் இருந்தது. மன்னரது கவலை எல்லாம் முத்தநாதனுக்கு எவ்வித பேராபத்தும் நேரக்கூடாதே என்பதுதான்! தத்தன், விரைந்து வந்து, மன்னரை வணங்கி, அரசே! தங்கள் ஆணைப்படி அத்தவசியை நல்ல முறையில் ஆபத்து எதுவுமின்றி எல்லையைக் கடந்து அனுப்பி வைத்தேன் என்றான். 

மன்னர் நாக்குழற, இன்றைக்கு என் ஐயன் செய்தது யாரே செய்யவல்லார் என்று கூறியவாறே தலையைச் சாய்த்தார். அவரது ஆவியும் பிரிந்தது. அப்பொழுது அவ்வறையிலே பேரொளி பிறந்தது. இடபத்தின் மேல் எம்பெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளினார். எம்பெருமான் திருவருளால் மெய்பொருளார் புதுப்பொலிவுடனும், இளமையுடனும் உயிர் பெற்று எழுந்தார். 

அரசியார் அகம் மகிழ்ந்தார்கள். தத்தன் ஆனந்தத்தால் தத்திக் களித்தான். மக்கள் மனம் மகிழ்ந்தனர். மெய்ப்பொருளார்க்கு ஆனந்தக் காட்சி அளித்த அம்பலத்தாண்டவன் அச்சிவனருட் செல்வர்க்கும், அவரது அருமை மனைவியர்க்கும் எப்பொழுதும் தம்மோடு வாழும் சிவப்பேற்றினை அருளினார். உயிர் போகின்ற சமயத்திலும் கூட, சிவனடியார்களிடத்தும், வெண்ணீறு அணிந்தவர்களிடத்தும் பக்தியுடையவராய் வாழுங்கள் என்று வாழ்ந்து காட்டி, உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் என்றால் அவரது பக்தி எத்துணைச் சிறப்பு மிக்கது என்பதனை அளவிடயாரேவல்லார்.

கதைச்சுருக்கம் கையாளப்பெற்ற இணையதளம்:http://rbrseetha.blogspot.in/2016/07/05.html


மெய்ப்பொருள் நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.

பொழிப்புரை :

நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

பாடல் எண் : 2

அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந் தோளால் வென்று
மாற்றலர் முனைகள் மாற்றி
உரைதிறம் பாத நீதி
ஓங்குநீர் மையினின் மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
வேடமே சிந்தை செய்வார்.

பொழிப்புரை :

அவர், நல்லாட்சி செலுத்துதற்குரிய அரசியல் நெறியில் நின்றும், வழிவழியாகப் போற்றி வரும் அறநெறியைத் தவறாமல் பாதுகாத்தும், மலையனைய நெடிய தம் தோள்வலியால் பகைவரை வென்று அப்பகைவரின் படைவலியை அழித்தும், தாம் கூறிய சொற்களினின்றும் வேறுபடாது நன்னெறிகளைப் போற்றி வரும் குணங்களால் உயர்ந்தும், அலைவீசுகின்ற கங்கையைத் தாங் கிய திருச்சடையையுடைய சிவபெருமானின் அடியவர் திருவேடத் தையே சிந்தை செய்தும் வருவார்.

பாடல் எண் : 3

மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.

பொழிப்புரை :

உமையம்மையாரை ஒரு கூற்றில் வைத்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயில்கள் அனைத்தினும் நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் குறையாது நடத்தி, ஏழிசையோடு கூடிய பாடல்களும், ஆடல்களும் மேன்மேலும் சிறப்பாக ஓங்க அவற்றைப் பாதுகாத்து வாழ்கின்றவர். தம் தலைவராகிய சிவபெரு மானின் அடியவர் திருவடிகளையன்றி வேறொரு பற்றுக் கோடும் இல்லாதவர்.

பாடல் எண் : 4

தேடிய மாடும் நீடு
செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்
காவன ஆகும் என்று
நாடிய மனத்தி னோடு
நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
குறைவறக் கொடுத்து வந்தார்.

பொழிப்புரை :

அவர், தாம் தேடிய செல்வங்களும், தம் முன்னோ ரால் ஈட்டப் பெற்று வழிவழியாகக்காத்துவரும் மற்ற செல்வங்களும் தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடல் செய்தருளுகின்ற பெருமானின் அடியவர்களுக்கே உரியனவாம் என்று விரும்பிய மனத்தினோடு, சிவனடியார்கள் தம்மிடத்திற்கு எழுந்தருளும் பொழுது, தம் உள்ளத் தில் நிறைந்த அன்பின் மகிழ்ச்சி மிக, வேண்டிய பொருள்களை யெல்லாம் குறைவின்றிக் கொடுத்து வந்தார்.

பாடல் எண் : 5

இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்.

பொழிப்புரை :

இவ்வாறாக இவ்வடியவர் தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், அவரைத் தான் போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான். 

பாடல் எண் : 6

இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.

பொழிப்புரை :

இவ்வாறு பலகாலும் தோல்வியடைந்த அப் பகைவன், தன்வலியினால் வெல்ல இயலாதனவாகி, மெய்ப்பொருள் நாயனாருக்கு அடியவர்மீது இருக்கும் பத்திமையை உணர்ந்து, வெண் ணீறு அணிதலாகிய அடியவர்களின் பெருமையான திரு வேடத்தை வஞ்சனையாக மேற்கொண்டு, அவ்வஞ்சனையைப் பிறர் அறியாத வாறு, காலமறிந்து வெல்லும் கருத்துடையனாக வாயினாற் சொலற்கரிய தீமையைச் செய்யக் கருதித் திருக்கோவலூரை அடைவானாயினன்.

பாடல் எண் : 7

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.

பொழிப்புரை :

தன் உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.

பாடல் எண் : 8

மாதவ வேடங் கொண்ட
வன்கணான் மாடந் தோறும்
கோதைசூழ் அளக பாரக்
குழைக்கொடி யாட மீது
சோதிவெண் கொடிகள் ஆடும்
சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில்
திருமணி வாயில் சேர்ந்தான்.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய தவவேடத்தைத் தாங்கிக் கொண்டு வந்த கொடியவனாகிய முத்தநாதன், மேல் மாடங்கள் தொறும் மாலைகள் சூழ்ந்த கூந்தலையும் குழைகளையும் உடைய கொடிபோலும் அசைதலை யுடைய மகளிர்கள் நடனமாட, அவற்றின் மீது வெண்மையாக ஒளி விளங்கும் கொடிகள் அசைய, காண்டற்கு இடனாய ஒளிபொருந்திய நீண்ட வீதியில் சென்று, சேதி நாட்டு அரசராய மெய்ப்பொருள் நாயனாரது அழகிய மணிகள் பொருந்திய அரண்மனை வாயிலை அடைந்தான்.

பாடல் எண் : 9

கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.

பொழிப்புரை :

அரண்மனை வாயில்கள் தொறும் காவல் செய்து கொண்டிருப்பவர்கள் கைகுவித்து வணங்கி விலகிநின்று நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார் ஒருவர், தாமே வலிய எழுந்தருளினார் என்று கூறி, உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ள, இவ்வாறாய வாயில்கள் பலவற்றையும் கடந்து சென்ற பின்பு இறுதியாக உள்ள தனிவாயிலில் காவல்புரிந்து நிற்கும் தத்தன் என்பான், `உட்செல்லுதற்குரிய அமையம் தெரிந்து எழுந்தருள வேண்டும்; இதுபொழுது அரசர் துயில் கொள்கின்றார்` என்று கூறினான்.

பாடல் எண் : 10

என்றவன் கூறக் கேட்டே
யானவற் குறுதி கூற
நின்றிடு நீயு மென்றே
அவனையும் நீக்கிப் புக்குப்
பொன்றிகழ் பள்ளிக் கட்டிற்
புரவலன் துயிலு மாடே
மன்றலங் குழல்மென் சாயல்
மாதேவி இருப்பக் கண்டான்.

பொழிப்புரை :

தத்தன் இவ்வாறு கூறக் கேட்டமுத்தநாதன், `யான் அவ்வரசனுக்கு உறுதி கூற வந்துள்ளேன், ஆதலின் நீ தடை செய்யாது இங்கு நிற்பாயாக` என்று கூறியவாறு, அத்தத்தனை விலக்கிக் கொண்டு உள்ளே சென்று பொன்னாலாய விளக்கம் பொருந்திய பள்ளிக் கட்டிலில் மெய்ப்பொருள் நாயனார் துயிலவும், அவர் அருகில் நறுமணம் பொருந்திய கூந்தலையும் மென்மையையும் உடைய அவர் மனைவியார் இருக்கவும் கண்டான்.

பாடல் எண் : 11

கண்டுசென் றணையும் போது
கதுமென எழுந்து தேவி
வண்டலர் மாலை யானை
எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர்நா யகனார் தொண்ட
ராம்எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று
கொள்கையின் வணங்கி நின்று.

பொழிப்புரை :

மன்னவன் துயிலவும் அருகில் மாதேவி இருக் கவும் கண்டும், திரும்பாமல் மேலே சென்று, அக்கட்டிலை நெருங்க வும், விரைந்து எழுந்த அத்தேவியார், வண்டுகள் மொய்த்தற்கு இடனாக அலர்ந்த மாலையை அணிந்த மெய்ப்பொருளாராய தம் தலைவரை எழுப்பிடத் துயிலுணர்ந்த அம்மன்னர், `சிவபெருமானின் அடியவர் இவர்` என்று தலைமீது குவித்த சிவந்த திருக்கரங்ளை உடையவராய்ப் பள்ளிக் கட்டிலினின்றும் எழுந்து நின்று.

பாடல் எண் : 12

மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.

பொழிப்புரை :

`மங்கலம் பெருக என்வாழ்வே ஓர் உருவெடுத்து வந்தாற்போல, இவ்விடத்திற்கு எழுந்தருளப் பெற்றது யாது கருதியோ?` என்று மெய்ப்பொருளார் வினவ, முத்தநாதன், `உங்கள் தலைவர் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறு எங்கும் கிடைத்திராத அரியதொரு நூலைக் கொண்டு வந்தேன்; உமக்கு உபதேசிப்பதற்காக` என்றனன்.

பாடல் எண் : 13

பேறெனக் கிதன்மேல் உண்டோ
பிரானருள் செய்த இந்த
மாறில்ஆ கமத்தை வாசித்
தருள்செய வேண்டு மென்ன
நாறுபூங் கோதை மாதுந்
தவிரவே நானும் நீயும்
வேறிடத் திருத்தல் வேண்டும்
என்றவன் விளம்ப வேந்தன்.

பொழிப்புரை :

இவ்வாறு எழுந்தருளி உபதேசிப்பதினும் உயர்ந்த பேறு வேறு அடியேனுக்கு உண்டோ? (இல்லை). சிவபெருமான் அருளிச் செய்த குற்றமற்ற இச்சிவாகம நூலை வாசித்து அதன் பொருள் விளங்க அருளிச் செய்ய வேண்டும் என்று வேண்ட, நறுமணம் கமழ் கின்ற மலரணிந்த கூந்தலையுடைய உன் தேவி இவ்விடத்தினின்றும் நீங்க, நானும் நீயும் தனியிடத்து இருக்கவேண்டும் என அம்முத்த நாதன் சொல்ல மெய்ப்பொருள் நாயனாரும். 

பாடல் எண் : 14

திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.

பொழிப்புரை :

திருமகளைப் போல அங்கு நிற்கும் தம் மனைவியாரைப் பார்த்து, அருளுரை கேட்கும் பெருவிருப்பால், அவரை விரைவாக அந்தப்புரத்திற்குப் போகுமாறு பணித்து, இயல் பாகவன்றி வலிய எடுத்துக்கொண்ட தவவேடமுடைய முத்தநாதனை ஓர் இருக்கையின்மீது இருக்கச் செய்து, தாம் வெறுநிலத்திலிருந்து வழி பட்டவாறு, இனி அருள் செய்ய வேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டார்.

பாடல் எண் : 15

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.

பொழிப்புரை :

அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனையாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள்ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாயனார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

பாடல் எண் : 16

மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.

பொழிப்புரை :

உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தனே! அவர் நம்மவர்` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.

பாடல் எண் : 17

வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.

பொழிப்புரை :

இக்கொடுஞ்செயலால் வருத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரால் `தத்தா நமர்` என்றுகூறித் தடுக்கப் பெற்ற அவரை, (வேந்தரை) அடியவனாகிய தத்தன் என்பவனும் தலையால் வணங்கி, அவர்தம் தலையைத் தம் கையால் தாங்கிய வண்ணம் `அடியேன் செய்யும் பணி யாது?` என்று வினவ, `எம் தலை வனாய சிவபெருமானின் அடியவராகிய இவர் (முத்தநாதன்) செல்லும் பொழுது இடையில் எவரும் மேற்சென்று விலக்காதவாறு இவரைக் கொண்டுபோய் விடுவாயாக என்று கட்டளையிட்டார்.

பாடல் எண் : 18

அத்திறம் அறிந்தார் எல்லாம்
அரசனைத் தீங்கு செய்த
பொய்த்தவன் தன்னைக்
கொல்வோம் எனப்புடை சூழ்ந்த போது
தத்தனு மவரை எல்லாம்
தடுத்துடன் கொண்டு போவான்
இத்தவன் போகப் பெற்ற
திறைவன தாணை என்றான்.

பொழிப்புரை :

அச் செய்கையை அறிந்தவர்கள் எல்லாரும், நம் அரசனுக்கு தீங்கு செய்த பொய்ம்மையான தவ வேடத்தையுடைய இவனைக் கொல்வோம் என்று அவர் அருகில் சூழ்ந்த பொழுது, தத்தன் என்பான், அவர்களை யெல்லாம் தடுத்துத் தன்னுடன் அவனைக் கொண்டு போகின்றவனாய், அவர்களை நோக்கி, இப் பொய்த் தவத்தினை உடையான் உயிருடன் போதல் இறைவனது ஆணை யாம் என்று கூறினன்.

பாடல் எண் : 19

அவ்வழி அவர்க ளெல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன்
திருநகர் கடந்து போந்து
கைவடி நெடுவா ளேந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் தன்னை
விட்டபின் மீண்டு போந்தான்.

பொழிப்புரை :

இறைவன் ஆணையென்று கூறியதும் அவனைச் சூழ்ந்தவர்களெல்லாம் அஞ்சி அவ்விடத்தினின்றும் பெயர்ந்து செல்ல, செல்லுதற்குப் பாதுகாப்பாய வழியில் தத்தன் என்பான் அந்நகரத்தைக் கடந்து சென்று, கையிடத்துக் கூரிய நீண்ட வாளை ஏந்திய வண்ணம், மனிதர்கள் இயங்காத காட்டை அடைந்து தீத்தொழிலினனாய அக் கொடியவனை விடுத்து மீண்டு வந்தான்.

பாடல் எண் : 20

மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.

பொழிப்புரை :

தத்தன் தான் அழைத்துக் கொண்டு சென்ற வஞ்சனையான வேடத்தையுடைய முத்தநாதனை, சினந்து எதிர்த்த வர்களை விலக்கி, குற்றம் நேராதவாறு விட்ட நற்சொல்லின் வகைமை யைக் கேட்க விரும்பி, உடலை விட்டு நீங்குதற்குரிய உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் நாயனார் முன்பு, அவர்தம் குறிப்பில் நிற்கும் தத்தன் போய் நின்றான்.

பாடல் எண் : 21

 சென்றடி வணங்கி நின்று
செய்தவ வேடங் கொண்டு
வென்றவற் கிடையூ றின்றி
விட்டனன் என்று கூற
இன்றெனக் கையன் செய்த
தியார்செய வல்லா ரென்று
நின்றவன் தன்னை நோக்கி
நிறைபெருங் கருணை கூர்ந்தார்.

பொழிப்புரை :

தத்தன் மெய்ப்பொருள் நாயனாரிடத்து அணுகச் சென்று, அவர் திருவடிகளை வணங்கி நின்று, செயற்கையாக மேற் கொண்ட தவவேடத்தைத் தாங்கித் தன்னளவில் வென்றதாகக் கருதிய அம் முத்தநாதனுக்கு, யாதொரு இடையூறுமின்றித் தொலைதூரத்தில் கொண்டு சென்று விட்டனன், என்று விண்ணப்பிக்க, நாயனாரும், இன்று என் தலைவனாக விளங்கும் நீ செய்த உதவியை யாவர் செய்ய வல்லவர்? என்று கூறி, தன்முன் நின்ற தத்தனைப் பார்த்துத்தம் மனம் நிறைந்த பெருங் கருணையைச் செய்தார்.

பாடல் எண் : 22

அரசிய லாயத் தார்க்கும்
அழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை
விளம்புவார் விதியி னாலே
பரவிய திருநீற் றன்பு
பாதுகாத் துய்ப்பீர் என்று
புரவலர் மன்று ளாடும்
பூங்கழல் சிந்தை செய்தார்.

பொழிப்புரை :

தம் வழி அரசு இயற்றுதற்குரிய இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம் பிரிவால் வருந்தி நிற்கும் அரசமா தேவியார், ஏனைய சுற்றத்தார் முதலியோர்க்கும் தம் உள்ளத்தில் கருக்கொண்டு நிற்கும் கொள்கையைக் கூறுபவராய், `முறையாகப் போற்றிக் காக்கத் தக்க திருநீற்றினிடத்து வைத்து வாழும் அன்பில் சோர்வு வாராது அதனை என்றும் பாதுகாத்து, இவ்வுலகில் கொண்டு செலுத்தக் கடவீர்` எனும் கட்டளையைக் கூறியபின், மெய்பொரு ளார், திருமன்றில் அருட்கூத்து இயற்றுகின்ற பெருமானின் அழகிய வீரக்கழலினை அணிந்த திருவடியை மனத்தகத்து எண்ணியிருந்தார்.

பாடல் எண் : 23

தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.

பொழிப்புரை :

அம்மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

பாடல் எண் : 24

 இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்ப ரென்றே
நன்னெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என்னுரை செய்தே னாக
இகல்விறன் மிண்டர் பொற்றாள்
சென்னிவைத் தவர்முன்
செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.

பொழிப்புரை :

தம் இன்னுயிர் நீங்குமாறு உடைவாளால் சிதைக்கக் கண்டும், எம் சிவபெருமானுடைய அடியாரென்ற திருவேடமே மெய்ப்பொருள், எனத்தாம் கொண்ட நெறியைப் பாதுகாத்த சேதி நாட்டின் அரசராகிய மெய்பொருள் நாயனார் பெருமையில் என்னால் இயன்றவகையில் ஒரு சிறிது சொன்னேன்: இனி வலிமை யுடைய விறன் மிண்ட நாயனாரின் அழகிய திருவடிகளைத் தலைமேற் கொண்டு அவர் முன் செய்த திருத்தொண்டைச் சொல்லத் தொடங்கு கின்றேன்.

     பாடலும் விளக்கமும் இணைப்பு: http://www.thevaaram.org/thirumurai_1