Friday, October 21, 2022

பித்தன் -அப்துல் ரகுமான் (கவிதையும் விளக்கமும்)

 கவிஞர் அப்துல் ரகுமான்

பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில்

ஒதுங்கினான்.

குழந்தைகளின் கையிலிருந்த

புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்.

குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக

இருக்கிறார்கள்

அவர்கள் கையில் ஏன் காகிதக்

குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை

ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!

நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ இரவு பகல் என்ற ஏடுகள்

உங்களுக்காகவே புரளுகின்றன

நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர்மெய்

எழுத்துகள்

உங்கள் முன் நடமாடுகின்றன

நீங்களோ அவற்றைக் கற்றுக்

கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப்புத்தகமாக இருப்பதை

நீங்கள் அறிவதில்லை

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க

கற்றிருந்தால்

உச்சரிக்க முடியாத எழத்துகளில்

அதிகமான அர்த்தம் இருப்பதை

அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை

வாசிக்க முடிந்திருந்தால் ஒளியின் ரகசியத்தை

அறிந்திருப்பீர்கள் !

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்

படிக்கத் தெரிந்திருந்தால்

நீங்கள் மனிதனின் சாரத்தை

அறிந்திருப்பீர்கள் !

எழுத்துகளால் அல்ல

காயங்களால் கற்பதே கல்வி

என்பதை அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் புத்தகங்கள்

விளக்குகளாக இருக்கின்றன

சூரியனைக் காண விளக்குகள்

தேவைப்படுவதில்லை.


பாடலின் விளக்கம்

புத்தகம் என்ற தலைப்பில் கவிஞர் அப்துல்ரகுமான் அவர்கள் ஏட்டுக் கல்வியைவிட அனுபவக் கல்வியே சாலச் சிறந்தது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்.

பித்தன் என்பது குறியீடு

இக்கவிதை பித்தன் ஒருவன் கூறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்று கூறுபவனை இந்தச் சமூகம் பித்தன் என்றே அழைக்கிறது. ஆகவே, பித்தன் என்ற சொல் இக்கவிதையில் கருத்துகளை எடுத்துரைக்கும் குறியீடாக அமைந்துள்ளது.

குழந்தைகளே பாடப்புத்தகங்கள்

மழை பெய்தமையால் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான் ஒரு பித்தன். அங்கு வகுப்பறையில் குழந்தைகளின் கையில் இருந்த புத்தகங்களைக் காணுகின்றான். அப்புத்தகங்களிடம் “புத்தகங்களே சமர்த்தாய் இருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்” என்று கூறுகின்றான்.

பாடப் புத்தகங்களின் மூலமாக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டியங்கும் கற்றல் சூழலை சாடுகின்றார் கவிஞர்.  குழந்தைகளிடம் மிக இயல்பாக இருக்கின்ற ஒரு குணம் தேடல். எதையும் தேடித் தேடி ஆர்வமாகக் கற்கும் இயல்பு இயற்கையாகவே குழந்தைகளிடம் இருக்கிறது. குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள எண்ணற்ற செய்திகள் இருக்கின்றன. ஆனால் பாடப்புத்தகங்களை அவர்கள் கையில் கொடுத்து அவர்களின் தேடல்களை நாம் தடுத்து விடுகின்றோம் என்ற ஆதங்கத்தால் “அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்” என்று கேட்கிறார் கவிஞர்.

அனுபவங்களும் சிறந்த பாடம்

வாழ்க்கையில் ஏற்படும் பற்பல அனுபவங்கள் நமக்கு சிறந்த பாடங்களைக் கற்பிக்கின்றன. அதைக் கவனிக்காது பாடப்புத்தகங்களை மட்டும் நம்புபவர்கள், காகித ஓடங்களை நம்பிப் பயணம் செய்ய நினைப்பவர்கள் என்கின்றார். அந்த ஓடத்தை நம்பி எப்படி அக்கரைக்குச் செல்ல முடியாதோ, அதுபோல, வெறும் பள்ளிப் பாடங்களும், மதிப்பெண்களும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது என்பதே அவர் கருத்து.

இரவு பகல்

இரவு பகல் இரண்டுமே வாழ்க்கையின் இருவேறு பக்கங்களைக் கற்றுத்தருகின்றன. இரவு இல்லையெனில் பகல் இல்லை. பகல் இல்லையெனில் இரவு இல்லை. அதுபோலதான் இன்பமும், துன்பமும், வெற்றியும் தோல்வியும் என்ற உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள இரவும் பகலும் துணைபுரிகின்றன.

உயிர் மெய்

உயிரும் மெய்யும் இல்லையெனில் உயிர் மெய் எழுத்துகள் இல்லை. தாயும் தந்தையும் இல்லையெனில் நாம் இல்லை. நம் கண்முன் நடமாடுகின்ற அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்குச் சிறந்த பாடங்கள் என்பதை நாம் உணர்வதேயில்லை என்று ஆதங்கம் கொள்கின்றார் ஆசிரியர்.

மலர்கள்

மலர்களின் வாழ்நாள் ஒரு நாள் மட்டுமே. ஆயினும் மலர்ந்து மணம் வீசி மக்களுக்கு மனநிறைவைத் தருகின்றன. மண்ணில் உதிர்ந்தாலும் எருவாகி மண்ணுக்கு உரமாகின்றன. நம் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளதாக வாழ்வதில்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்ற பாடத்தை மலர்கள் கற்றுத்தருகின்றன. ஆனால் நாம் அதைக் கவனிப்பதேயில்லை என்கின்றார்.

நட்சத்திரங்கள்

இரவில் மட்டுமே தோன்றுகின்ற நட்த்திரங்கள் அளவில் சிறியவை. ஆனால் வானத்திற்கே அழகு தருபவை. நட்சத்திரம் இல்லா வானம் வெறுமையாகவே தோன்றும். அதுபோல உச்சரிக்கக் கடினமாகவோ, முடியாததாகவோ இருக்கும் ழ, ள, ல, ர, ற, ந, ன, ண போன்ற எழுத்துக்களின் ஆழங்களை அறிந்து கொண்டால், இவை இல்லையெனில் தமிழில் அழகு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்கின்றார் ஆசிரியர்.

மின்னல்கள்

மழை வரும்போது மட்டுமே மின்னுகின்ற மின்னல்களின் மொழியினை அறிந்து கொண்டால், இருளை நீக்கும் ஒளியின் மரமங்களை நாம் அறிந்து கொள்ள முடியும் என்கின்றார்.

கண்ணீர்

பிற உயிர்களின் கண்ணீர் துளிகளைக் கண்டு அவற்றின் துயரம் அறிகின்ற வல்லமை இருந்தால் மட்டுமே மனித வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு என்பதை நிறுவுகின்றார் ஆசிரியர்.

முடிபு

பாடப்புத்தகங்கள்   வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் மட்டுமே. அனுபவப் பாடங்கள் உலகிற்கு வெளிச்சம் தருகின்ற சூரியனைப் போன்றது. அனுபவம் என்று சூரியனைக் காண விளக்காகிய பாடப்புத்தகங்கள் தேவைப்படுவதில்லை என்கின்றார். ஆகவே, எழுத்துக்களால் மட்டும் ஒருவன் கல்வி கற்க முடியாது. வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இன்னல்கள், காயங்கள், தோல்விகள் ஆகியவைதான் வாழ்க்கை எனும் கல்வியை முழுமை பெறச் செய்கின்ற பாடங்கள் என்பதை உணர வேண்டும். அனுபவப்பாடங்களே வாழ்க்கைக் கல்விக்கு மிக முக்கியம் என்ற கருத்தை இக்கவிதையின் மூலம் தெரிவிக்கின்றார் கவிஞர் அப்துல் ரகுமான்.

 

No comments:

Post a Comment