Monday, July 18, 2016

அலகு-2 - புதுக்கவிதைகள்

அலகு -2 - புதுக்கவிதைகள்

1.செருப்புடன் ஒரு பேட்டி
உங்கள் இனத்தைப் பற்றி நீயே ஏதேனும்
உரைக்க முடியுமா?
உழைப்பதற்காகவே விலைக்கு வாங்கப்படும்
அடிமைகள் நாங்கள்!
மனிதரின் பாதங்களுக்குப் பயண வாகனங்கள்
கடைவீதிகள் காட்டிக் கொடுக்கக்
காலணிஆதிக்கத்தால் கைது செய்யப்படுகிறோம்
உள்ளே ஒருவர்
இருக்கிறாரா இல்லையா என்று அறிவிக்கும்
பித்தளை போர்டுகள் பின்னால் வந்தவை!
நாங்களோ
வெகு காலமாக அந்த வேலையைச் செய்கிறோம்!
காலடியில் மிதிபட்டுக் காலமெல்லாம் உழைத்தாலும்
வாசலில் மட்டுமே வாசம் புரிகிறோம்
உழைப்பதற்காகவே விலைக்கு வாங்கப்படும்
அடிமைகள் நாங்கள்!
காலில் மிதிபடுவதாய்க்
கண்ணீர் விடுகின்றீர்களே -
உங்களைக் கைகளில் தூக்கி
நாங்கள் கௌரவிப்பதில்லையா?
சில சமயங்களில்...
கைகளில் தூக்கிக் காப்பாற்றி வைப்பது
மீண்டும் எங்களை மிதிப்பதற்காகவே!
போகட்டும்...
ஒப்பற்ற உழைப்புக்கு உங்களைத் தானே
உவமானம் சொல்கிறோம்!
உவமானங்களால் மட்டுமே எங்கள்
அவமானங்கள் அழிந்து விடுவதில்லை
அதோடு இழிவுபடுத்தவும் எங்களைத் தானே
எடுத்துக்காட்டுகிறீர்கள்.
சரி சரி.
குறைகளைப் பற்றி உங்கள் இனத்தவர்
கூடிப் பேசிடலாமே!
எவ்வித முன்னறிவிப்புமின்றி
எங்கள் கூட்டங்களைக்கூட நீங்களே
ஏற்பாடு செய்துவிட்டு
தீர்மானம் நிறைவேற்றும் முன்
திடீரென்று கலைத்து விடுகிறீர்களே!
நீங்கள் கூடும்போது
பார்வையாளர்கள் பங்கு கொள்வதுண்டா?
கோயில் வாசலில்... வைபவ நெரிசலில்...
நாங்கள் கூட்டம் போடும்போது
எங்களில் கன்னிமை கழியாத புதியவர்களை
சில கொள்ளைக்காரர்கள்
நோட்டம் போடுகிறார்கள்.
தனியாக உங்களுக்கென்று
தத்துவப் பார்வை உண்டா?
உண்டு.
சருகை மிதித்தால் சப்திக்கும் நாங்கள்
மலரை மிதிக்கும்போது மௌனம் சாதிக்கிறோம்.
வாங்கிய புதிதில் காலைக் கடிக்கும்
வழக்கம் எதற்காக?
எங்களுக்கும் ரோசம்
இருக்கிறதென்பதைக் காட்டிக்கொள்ளவே
ஆரம்பத்தில் கொஞ்சம் கடித்துப் பார்க்கிறோம்
தொடர்ந்து போராடும்தோல்வலிமையற்றதால்
பாதம் படப் படப் பணிந்து விடுகிறோம்!
திடீரென அறுந்து போய் நடுவீதியில்
எங்களைத் திண்டாட வைப்பது ஏன்?
நாங்கள்
ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் போதுதான்
தெருவோரத் தொழிலாளியின்
வயிற்றுப்பாட்டுக்கு வழி பிறக்கிறது!
பழசாகிப் போனதெனும் காரணம் காட்டி
உங்களை நாங்கள் ஒதுக்கி விடும்போது?
உங்களால் ஒதுக்கப்பட்டவர்
எங்களை
உபயோகித்துக்கொள்வர்!
இனிய நினைவுகள் வாழ்வில் ஏதேனும்?
நாணத்தில் கவிழும் தாமரைக் கண்கள்
உங்களைச் சந்திக்கும் முன்பாக
எங்களைத்தான் சந்திக்கின்றன!
தீவிரமாக எதைப்பற்றியாவது நீங்கள்
சிந்திப்பதுண்டா?
உண்டு!
சில தேசங்களையும் சில ஆட்சிகளையும்
பார்க்கும்போது
மீண்டும் நாங்களே
சிம்மாசனம் ஏறிவிடலாமா
என்று யோசிப்பதுண்டு!
கவிதை: மு.மேத்தா
  
2. வைரமுத்து

மழைக்காலப் பூக்கள்- வைரமுத்து
அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்

ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே


கார்க்காலம்.

மரம்
வணக்கம்...
மரங்களைப் பாடுவேன்.
வாரும்  வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை  என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அவ்வளவு மட்டமா?
வணக்கம்,அவ்வையே நீட்டோலை  வாசியான் யார் என்றீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அத்தனை இழிவா?
பக்கத்தில் யாரது பாரதி தானே?
பாஞ்சாலி மீர்க்காத பாமரரை என்ன வென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்!
மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா?
மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சிரியகுறி,
நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம்,
விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்,
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்,
உயிர் ஒழுகும் மலர்கள்,
மனிதன் தரா ஞானம் மரம் தரும் எனக்கு!
மனிதன் தோன்றும் முன் மரம் தோன்றிற்று!
மரம் நமக்கு அண்ணன், அண்ணனை பழிக்காதீர்கள்!
மனித ஆயுள் குமிழிக்குள் கட்டிய கூடாரம்,
மரம் அப்படியா?
வளரும் உயிர்களில் ஆயுள் அதிகம் கொண்டது அதுவேதான்!
மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால் முற்றுப் புள்ளி.
மரம் இருக்கும் வரை பூ பூக்கும் இறக்கும் வரை காய் காய்க்கும்.
வெட்டி நட்டால் கிளை மரமாகுமே,
வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா?
மரத்தை அறுத்தால் ஆண்டு வளையம் வயது சொல்லும்.
மனிதனை அறுத்தால் உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும்.மரத்திற்கும் வழுக்கை விழும் மறுபடி முளைக்கும்.
நமக்கோ உயிர் பிரிந்தாலும்  மயிர் உதிர்ந்தாலும்.
ஒன்றென்று அறிக!மரங்கள் இல்லையேல் காற்றை எங்கே போய் சலவை செய்வது?
மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது?
மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே ஏதப்பா ஏறி?
பறவைக்கும் விலங்குக்கும் மரம் தரும் உத்திரவாதம் மனிதர் நாம் தருவோமா?
மனிதனின் முதல் நண்பன் மரம்!
மரத்தின் முதல் எதிரி மனிதன்!
ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்!
உண்ண கனி,
ஒதுங்க நிழல்,
உடலுக்கு மருந்து,
உணர்வுக்கு விருந்து,
அடைய குடில்,
அடைக்க கதவு,
அழகு வேலி,
ஆட தூலி,
தடவ தைலம்,
தாளிக்க எண்ணை,
எழுத காகிதம்,
எரிக்க விறகு,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!
பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்,
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்,
எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்,
மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்,
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்,
துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின் உபயம்,
நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்,
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம்,
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!!

3.சுந்தரராமசாமி- ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள்
தாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க
தங்கள் ஆணையை என் ரத்தத்தில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
மேன்மை தங்கியவரே
குதிரைகளின் புட்டங்களில்
குதிரைகளின் முகங்கள் உரச
தாண்டிக் கெக்ணடிருக்கிறோம்
கடைசிக் குதிரை தாண்டியதும்
பாலம் பறந்து நதியில் மூழ்கும்.
தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன்
தங்களிடம் சேதி சொல்ல
எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன்
என்று அவன் கேட்கவில்லை.
தான் செல்லப் பாலங்கள் இருக்குமா
செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா
என்று அவன் கேட்கவில்லை
தன் குதிரை இருக்குமா
என்று அவன் கேட்கவில்லை
தாங்கள் இருப்பீர்களா
என்று அவன் கேட்கவில்லை.

மேன்மை தங்கியவரே
தகர்ப்பது பெரிது இல்லை.
கேட்கப்படாத இந்தக் கேள்விகள்
அவற்றின் தகர்ப்பு...
கவிஞர் : சுந்தர ராமசாமி

4. இன்குலாப்-ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்-(கவிதை)
ஒவ்வொரு புல்லையும்...
பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
ஒவ்வொரு புல்லையும்...

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
ஒவ்வொரு புல்லையும்...

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
ஒவ்வொரு புல்லையும்...

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
ஒவ்வொரு புல்லையும்...
கவிஞர்-இன்குலாப்

5. மனுஷ்யபுத்திரன் - கால்களின் ஆல்பம்
ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின் ஆல்பம்

எப்போதும்
முகங்களுக்கு மட்டும்தான்
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன்
எண்சாண் உடலுக்குக்
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள்
நடனமாடும் கால்கள்
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள்
பூஜை செய்யப்படும் கால்கள்
புணர்ச்சியில் பின்னும்
பாம்புக் கால்கள்

கறுத்த வெறுத்த சிவந்த
நிறக் குழப்பத்தில் ஆழ்த்துகிற
மயிர் மண்டிய வழுவழுப்பான
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள்
தத்துகிற பிஞ்சுக் கால்கள்
உலகளந்த கால்கள்
அகலிகையை எழுப்பிய கால்கள்
நீண்ட பயணத்தை நடந்த
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள்
மெட்டி மின்னுகிற கால்கள்
ஆறு விரல்களுள்ள கால்கள்
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல் நகம் சிதைந்த
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற
(ஒருவர்கூட மற்றவரைப் போல நடப்பதில்லை)
பாடல்களுக்குத் தாளமிடுகிற
நீந்துகிற மலையேறுகிற
புல்வெளிகளில் திரிகிற
தப்பியோடுகிற
போருக்குச் செல்கிற
(படை வீரர்களின் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற
சிகரெட்டை நசுக்குகிற
மயானங்களிலிருந்து திரும்புகிற
விலங்கு பூட்டப்பட்ட
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற
வரிசையில் நிற்கிற
தையல் எந்திரத்தில் உதறுகிற
சுருங்கிய தோலுடைய
நரம்புகள் புடைத்த
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிடத் தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஒட்டுவேன்
என் கால்களின் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்துவைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்
கவிஞர் – மனுஷ்யபுத்திரன்

5. செல்வி-சிவரமணி - கவிதைகள்
1. அவமானப்படுத்தப்பட்டவள்
(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)
உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

2. எனக்குள்ளே
பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென
எனது மனமும் கொதிக்கும்; குமுறும்
பார்; நீஒரு நாள்
வாமனன் நானென நினைக்கும் உமது
எண்ணங்கள் யாவையும் பொடிப் பொடியாக்குவேன்
வானமெங்கும் அதற்கப்பாலும்
நீண்டு நீண்டு விரிக்கும் என் கைகள்
பாதாளத்துக்கும் அதற்கும் ஆழமாய்
எனது கால்கள் அழுந்திப் புதையும்
பூமிக்குள் குழம்பெனக் கொதிக்கும் தழல்போல்
சீறியெழுந்து எரிமலையாவேன்
அன்றேயுமது சாத்திரம் தகரும்;
அன்றேயுங்கள் சடங்குகள் மாளும்
இன்னதின்னதாய் இருப்பீரென நீர்
எழுதிய இலக்கியம் நெருப்பினில் கருகும்.
வானம் பொழியும்; எரிமலைக் குழம்பிலே
ஆறுபாயும்-
அதில் நான் நீந்துவேன்-
சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும்
தனித்தே சுற்றுவேன்
இனிய மாலை, எழில் மிகு காலைஎல்லாம்

எனது மூச்சிலே உயிர்க்கும்.

3 comments:

 1. கவிஞர் மு.மேத்தா
  கவிஞர் மு.மேத்தாவை பற்றி
  http://saravananmetha.blogspot.in/2014/08/blog-post.html
  http://saravananmetha.blogspot.in/2015/01/blog-post.html
  http://saravananmetha.blogspot.in/2013/08/blog-post_3587.html
  http://saravananmetha.blogspot.in/2015/02/blog-post.html

  பெண்ணிய கவிதை
  ஆண்வழிச்சேறல்
  http://saravananmetha.blogspot.in/2015/10/blog-post_47.html

  கவிஞர்கள் செல்வி மற்றும் சிவரமணி பற்றிய என் கட்டுரை பின்வரும் வலைப்பூ முகவரியில்
  http://saravananmetha.blogspot.in/2018/05/blog-post_11.html


  ReplyDelete
 2. என்ற தலைப்பினால் ஆன கவிதையை எழுதிய கவிஞர் மு.மேத்தா வின் பெயரை குறிப்பிட

  மறந்து உள்ளீர்கள் . சரிசெய்ய வேண்டுகிறேன் . நன்றி .

  ReplyDelete
 3. “செருப்புடன் ஒரு பேட்டி “

  என்ற தலைப்பினால் ஆன கவிதையை எழுதிய கவிஞர் மு.மேத்தா வின் பெயரை குறிப்பிட

  மறந்து உள்ளீர்கள் . சரிசெய்ய வேண்டுகிறேன் . நன்றி .

  ReplyDelete