Tuesday, December 16, 2014

நற்றிணை - இரண்டாமாண்டு தமிழ் -இரண்டாம் பருவம் 2013-14

  நற்றிணை

 திணை : பாலை.
    துறை : இஃது, உடன்போக்குந் தோழி கையடுத்தது.
     (து - ம்.) என்பது, தலைவி விரும்பியவாறு தோழி இருவரையும் ஒருப்படுத்தி, வைகிருளிலே தலைவியைத் தலைவன்பாற் சேர்த்துக் கையடுத்தல் செய்து, இருவரையும் வலஞ்செய்து நின்று நின் மாறுபடாத மொழியைத் தெளிந்து புகல்புக்க இவளை முதுமையெய்தினும் கைவிடாது பாதுகாப்பாயாக வெனத் தலைமகனுக்கு ஓம்படுத்துக் கூறாநிற்பது.
     (இ - ம்.) இதற்கு, “தலைவரும் விழுமம்” (தொல்-அகத்- 35) என்னும் நூற்பாவின்கண் "விடுத்தற்கண்ணும்" என்னும் விதிகொள்க.
அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் 
நீத்த லோம்புமதி பூக்கே ழூர!
இன்கடுங் கள்ளி னிழையணி 1 நெடுந்தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி 2 தேறிய இவட்கே

     (சொ - ள்.) பூக் கேழ் ஊர - மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரையுடையோனே !; இன் கடுங் கள்ளின் இழையணி நெடு தேர் கொற்றச் சோழர் - இனிய கடுப்புடைய கள்ளுணவையும் இழையணிந்த நெடிய தேர்களையுமுடைய வலிமிக்க
     (வி - ம்.) அண்ணாத்தல் - நிமிர்தல். வனம் - அழகு. மதி: முன்னிலையசை. கடுங்கள் - முற்றிக் கடுப்பேறிய கள். தேறுதல் - தெளிதல். பழையன் வேல்தப்பாதவாறு நின் தப்பாத சொல்.
     "எஞ்ஞான்றும் மூப்புப் பிணி சாக்காடின்றி இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய், இவளும் பன்னீராட்டைப் பிராயத்தளாய், ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும், ஒத்த செல்வமும் ஒத்த கல்வியுமுடையராய்ப் பிறிதொன்றற்கு ஊனமின்றிப் போகந்துய்ப்பார்" என்றதற்கு மாறாக இவள்காட்டவே. ஒருகால் "தளரினும் முடிப்பினும்" என உம்மைகொடுத்துக் கூறினார்; அவ்வண்ணங் கூறியதும் அவன் கைவிடாது காத்தற்பொருட்டேயாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஓம்படுத்துரைத்தல். இதனை இத்துறைக்கே மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொ-பொ- 39. உரை.)
     (பெரு - ரை.) கொடித் தேர் என்றும், போஒர் கிழவோன் பழையன் என்றும் பாடம். இவற்றிற்கு நிரலே, கொடியையுடைய தேர் என்றும் போர்த் தொழிலையே தனக்குரிமையாகவுடையோனாகிய பழையன் என்றும் பொருள் கூறுக.
(10)

 (பாடம்) 1.  

நெய்த்தோர் வல்லியம்;

  2. 

தேரிய.
“அண்ணாந் தேந்திய”
எனத் தொடங்கும் பாடல் (நற்றிணை-10) (ஆசிரியர் பெயர் காணப்படவில்லை).
 திணை : பாலை
 கூற்று : உடன்போக்கும் தோழி கையடுத்தது.
அதாவது தலைவியின் விருப்பப்படி அவளைத் தலைவனிடம் கைபிடித்துக் கொடுத்த தோழி ‘உன் சொல்லை நம்பி உன்னுடன் வரும் இவளை முதுமை எய்திய பிறகும் கைவிடாது பாதுகாப்பாயாக’ என்று சொல்லி இரவில் வழியனுப்பியது. (உடன்போக்கு: மணந்து கொள்வதற்காக யாருமறியாமல் தலைவன் தலைவியை அழைத்துச் சென்று விடல்: கையடுத்தல்: கைபிடித்துக் கொடுத்தல்)
தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள். ‘தலைவ! இனிய, கடுப்பு மிகுந்த கள்ளையும் அணிமணிகள் பூண்ட பெரிய தேர்களையும் உடைய சோழ மன்னர்கள் கொங்கரை வென்று அடக்குவதற்காக ஒரு மாவீரனைப் பணியமர்த்தினர். அவன் யானைகள் நிறைந்த பேஎர் எனும் ஊரின் தலைவனான பழையன் ஆவான். அவனது தனிச்சிறப்பு அவனிடமிருந்த குறிதப்பாத வேற்படை. அந்த வேல்போல என்றும் தவறாதது உன் வாக்குறுதி எனத் தலைவி நம்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் இத்தலைவியின் அண்ணாந்து உயர்ந்த மார்புகள் தளர்ந்தாலும், பொன்மேனியில் நீலமணிபோலப் படர்ந்து கிடக்கும் நீண்ட அழகிய கூந்தல் நரைத்தாலும் இவளைப் பிரியாமல் பாதுகாப்பாயாக !‘
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்....
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
என்ற அடிகளில் தோழி வெளிப்படுத்தும் உணர்வு உண்மைக் காதலின் உயர்வைப் புலப்படுத்துகிறது. வரலாற்றுத் தலைவனான பழையனின் குறிதப்பாத வேலை உவமையாக்கியதன் மூலம் தலைவன் தலைவிக்குத் தந்த வாக்குறுதியின் தீவிரத் தன்மை புலப்படுத்தப்படுகிறது.
மூலம்: தமிழ் இணையக் கல்விக்கழகம்
இணைப்பு:http://www.tamilvu.org/courses/degree/d011/d0111/html/d0111111.htm

No comments:

Post a Comment