Thursday, August 2, 2012

திருக்குறள்



திருக்குறள் அன்புடைமை (அதிகாரம்-8  -மு.வ. உரை )
1.   அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்?ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு  கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

2.    அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்பு உடையார்
என்பும் உரியர், பிறர்க்கு.
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

3.   'அன்போடு இயைந்த வழக்கு' என்ப-'ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு'.
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

4.    அன்பு ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும்,
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

5.   'அன்புற்று அமர்ந்த வழக்கு' என்ப-'வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு'.
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

6.   'அறத்திற்கே அன்பு சார்பு' என்ப, அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

7.    என்பு இலதனை வெயில் போலக் காயுமே-
அன்பு இலதனை அறம்.
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

8.   அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று.
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

9.    புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்-யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு?.
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

10. அன்பின் வழியது உயிர்நிலை; அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு.
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.



        திருக்குறள் - கல்வி (அதிகாரம் 40 - மு.வ. உரை)

1.கற்க, கசடு அற, கற்பவை! கற்றபின்,
 நிற்க, அதற்குத் தக!.  
 கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற  பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

2.'எண்' என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும்
 ‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு.  
 எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய   இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

3.கண் உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு
 புண் உடையர், கல்லாதவர்.  
 கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே;    கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

4.உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல்
 அனைத்தே-புலவர் தொழில்.  
 மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம் என்று)  வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்;
 கடையரே, கல்லாதவர்.  
 செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து  நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.

6.தொட்டனைத்து ஊறும், மணற் கேணி;-மாந்தர்க்குக்
 கற்றனைத்து ஊறும், அறிவு.  
 மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல்,  மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

7.யாதானும் நாடு ஆமால்; ஊர் ஆமால்; என், ஒருவன்
 சாம் துணையும் கல்லாதவாறு?.  
 கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும்  நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?

8.ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
 எழுமையும் ஏமாப்பு உடைத்து.  
 ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும்  அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.

9.தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு,
 காமுறுவர், கற்று அறிந்தார்.  
 தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக்  கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.

10.கேடு இல் விழுச் செல்வம் கல்வி; ஒருவற்கு
 மாடு அல்ல, மற்றையவை.
 ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி  தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.



                                    திருக்குறள் - கேள்வி (அதிகாரம் -42)

 1. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
    செல்வத்து ளெல்லாந் தலை.

செவியால் கேட்டறியும் செல்வம்,    செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். 

2. செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது,
    வயிற்றுக்கும் ஈயப்படும்.
    
 செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

3.        செவியுணவின் கேள்வி உடையார், அவியுணவின்          
           ஆன்றாரொடு ஒப்பர், நிலத்து.

செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர். 

4.        கற்றிலன் ஆயினும் கேட்க; அஃது ஒருவற்கு          
           ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை.  
     
 நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும். 

5.        இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே-
           ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.  
  
       ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.

 6.        எனைத்தானும் நல்லவை கேட்க! அனைத்தானும்         
           ஆன்ற பெருமை தரும்.

      எவ்வளவு சிறிதேயாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும். 

7.        பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்-இழைத்து உணர்ந்து
           ஈண்டிய கேள்வியவர். 

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார். 

8.        கேட்பினும் கேளாத் தகையவே-கேள்வியால்           
           தோட்கப் படாத செவி.

          கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள்  கொண்டு ஒசையைக்) கேட்டறிந்தலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

 9.        நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய          
            வாயினர் ஆதல் அரிது.

   நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது. 

10.     செவியின் சுவை உணரா, வாய் உணர்வின், மாக்கள்          
         அவியினும் வாழினும் என்.

        செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?




திருக்குறள் - அறிவுடைமை (அதிகாரம் 43)

1.   அறிவு, அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்.
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

2.   .சென்ற இடத்தால் செலவிடா, தீது ஒரீஇ,
நன்றின் பால் உய்ப்பது-அறிவு.
மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

3.   எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது-அறிவு.
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

4.   எண் பொருளவாகச் செலச் சொல்லி, தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது-அறிவு.
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

5.    உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது-அறிவு.
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.

6.    எவ்வது உறைவது உலகம், உலகத்தொடு
அவ்வது உறைவது-அறிவு.
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

7.    அறிவு உடையார் ஆவது அறிவார்; அறிவு இலார்
அஃது அறிகல்லாதவர்.
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

8.    அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல், அறிவார் தொழில்.
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.

9.    எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை-
அதிர வருவதோர் நோய்.
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

10.  அறிவு உடையார் எல்லாம் உடையார்; அறிவு இலார்
என் உடையரேனும் இலர்.
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

No comments:

Post a Comment