Tuesday, March 20, 2018

பராபரக்கண்ணி -குணங்குடி மஸ்தான் பாடல்கள் (15 கண்ணிகள்)

குணங்குடி மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னை) ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்
குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் 'சுல்தான் அப்துல் காதிர்' என்பதாகும். இளமையிலேயே குர்ஆன் மற்றும் இசுலாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து 'ஆலிம்' (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார்.
பற்றறுத்த உள்ளத்துடனும், தந்தையின் ஆசியுடனும் தம்முடைய பதினேழாவது வயதில் ஞானபூமியாகத் திகழ்ந்த கீழக்கரை சென்று அங்கு 'தைக்காசாஹிபு' என்று அழைக்கப்பட்ட ஷைகு அப்துல் காதிரிலெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். 1813 ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் 'கல்வத்' எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். பின்னர் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய தாய்மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.
இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகக் காதல் போதையில் வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார். குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்தநடையையும் அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை 'மஸ்தான்' என அழைக்கலாயினர். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு)
ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். இறுதியில் சென்னையை அடைந்து இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆச்சிரமம் அமைத்துக் கொடுத்தார். இங்கே வாழ்ந்தபோது யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார். சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டாம். அப்படிச் செல்லும்போது ஒருமுறை அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள 'மஸ்ஜிதே மஃமூர்' என்ற பள்ளிவாசலுக்கும் வந்து சென்றதாகக் கூறுவர்.
குணங்குடியாரின் துறவு நிலையில் ஐயுற்ற சிலர் அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர். அவ்வாறு தீட்சை பெற்றவர்களுள் அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர். அவருடைய சீடர்களாக இசுலாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.
மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜமாதுல் அவ்வல் 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழு. அவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று.
படைப்புகள்
* நிராமயக்கண்ணி (100 பாடல்கள்)
* மனோன்மணிக்கண்ணி (100 பாடல்கள்)
* அகத்தீசர் சதகம் (100 பாடல்கள்)
* நந்தீசர் சதகம் (51 பாடல்கள்]
* ஆனந்தக் களிப்பு (38 பாடல்கள்)
நன்றி: விக்கிபீடியா



மின்னூல் இணைப்பை பதிவிறக்கhttps://drive.பராபரக்கண்ணி-குணங்குடி

பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு - நப்பூதனார்


முல்லைப்பாட்டு
(காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்பாடியது)

காத்திருக்கும் காதல்


உள்ளே
பொருளடக்கம்

  1. கார், மாலை
  2. விரிச்சி
  3. தாயை எதிர்நோக்கும் கன்று
  4. மாயோளின் புலம்புமுத்து
  5. பாடிவீடு
  6. போர்யானை
  7. அரணம்
  8. தலைவன் அகம்
  9. வாள்-மங்கையர்  விளக்குத் தூண்டல்
  10. மெய்காப்பாளர்
  11. கன்னல் நாழிகை
  12. யவனர்
  13. ஊமை மிலேச்சருடன் ஈரறைப் பள்ளி
  14. பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும்
  15. அரண்மனையில் தலைவி
  16. அரசனின் வெற்றி முழக்க ஒலி
  17. மழை பொழியும் மாதத்தில்  முல்லை நிலம்
  18. அரசனது தேரின் வருகை
தனிப்பாடல்


  


முதலில்
விளக்கம்

அடுத்து
முல்லைப்பாட்டு

என்னும் முறையில்
இந்த நூல்
அமைக்கப்பட்டுள்ளது


1
கார், மாலை

முல்லைத்திணைக்கு உரிய முதற்பொருளாகிய கார்காலப் பெரும்பொழுதும், மாலைக்காலச் சிறுபொழுதும் முல்லைப்பாட்டின் தொடக்கமாக அமைந்துள்ளது.
திருமால் அகன்ற உலகை வளைத்துக்கொண்டுள்ளான்.
சுழலும் திகிரிச் சக்கரத்தையும், சங்கையும் கைகளில் ஏந்திக்கொண்டுள்ளான்.
(வள்ளல் மாபலி) வார்த்த நீரை வாங்கிக்கொண்டு நிமிர்ந்தான் (விசுவரூபம்).
அந்தத் தோற்றம் போல, கடல்நீரைப் பருகி எழுந்த மழைமேகம் பெருமழை பொழிந்தது (கார்காலம்).
மழை பொழிந்த மாலை நேரம்.

'நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை 
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,   
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி 5
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,



2
விரிச்சி

கட்டுக்காவல் மிக்க பழமையான ஊர்.
அந்த ஊருக்கு வெளிப்புறம் பெருமுது பெண்டிர் (35 அகவை தாண்டிய மகளிர்) சென்றனர்.
நாழியில் கொண்டு சென்ற நெல்லையும், வண்டுகள் மொய்க்க மலரும் புத்தம்புது முல்லைப் பூவையும் தூவினர்.
கைகூப்பித் தொழுதவண்ணம் விரிச்சிக்காகக் காத்திருந்தனர்.
(விரிச்சி என்பது பிறர் வாயிலிருந்து விரியும் பேச்சுக் குரல்)

அருங் கடி மூதூர் மருங்கில் போகி, 
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,  
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப   




3
இன்னே வருகுவர் தாயர்

ஆய்மகள் பச்சைக் கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றிலே தொடுத்து வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக்கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தை அந்த ஆய்மகள் தன் கக்கத்திலே அணைத்துக்கொண்டு அதனைத் தேற்றும் சொற்களைப் பேசினாள். “கையில் வளைகோல் வைத்திருக்கும் கோவலர் பின்னிருந்து ஓட்டிக்கொண்டு வர உன் தாயர் (தாய்ப்பசு) இன்னே (இப்பொழுதே) வந்துவிடுவர்என்றாள். [இந்த நல்ல சொற்கள் விரிச்சி கேட்டுக்கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே அவர்கள் கேட்ட வரிச்சி]

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்   
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்  
நடுங்கு சுவல் அசைத்த கையள்,"கைய   
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர,   15
இன்னே வருகுவர், தாயர்" என்போள்
நன்னர் நல் மொழி கேட்டனம்: அதனால், 


4
மாயோளின் புலம்புமுத்து

இது நல்லவர் வாயிலிருந்து வந்தபுள்சகுனம்.
பகைவரைப் போர்முனையில் வென்ற தலைவர் தாம் மேற்கொண்ட வினை முடிந்து அவர்கள் தந்த திறையுடன் வருவது உறுதி.
மாயோய்!
(மாயோன் என்பதன் பெண்பாற் பெயர்.
முல்லைநிலப் பெயர்.
பசுமையான மாந்தளிரின் மாமை நிறம் கொண்டவள்)
உன் கவலையைப் போக்கிக்கொள்என்று விருச்சியைக் கேட்கும்படி பெண்கள் தலைவனைப் பிரிந்திருந்த மாயோளுக்குக் காட்டினர்.
அச் சொற்களைக் கேட்ட பின்னரும் மாயோளின் பூப்போன்ற கண்களிலிருந்து அவள் புலம்பும் முத்துக்ககள் உதிர்ர்ந்தன.

நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து 
வருதல், தலைவர், வாய்வது; நீ நின்  20
பருவரல் எவ்வம் களை, மாயோய்!' என, 
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,  
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப  




5
பாடிவீடு

பகைப்புலம் சென்ற தலைவன் பாடிவீட்டில் இருந்தான்.
அந்தப் பாடி-வீடு காட்டாறு பாயும் முல்லைநிலத்தில் இருந்தது.
மணம் கமழும் பிடவம் பூச்செடிகள் அழிக்கப்பட்டு அந்தப் பாடிவீடு அமைக்கப்பட்டிருந்தது.
வேட்டையாடும் விலங்குகள் அதில் நுழையாவண்ணம் முள்வேலிச் சுற்றுமதில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்தது.
காட்டாறு கடல்போல் அகன்றதாய் அதனைச் சுற்றிலும் ஓடும்படிச் செய்யப்பட்டிருந்தது.

கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி,    25
வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட  
இடு முள் புரிசை ஏமுற வளைஇ,   
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி




6
போர்யானை

பாடிவீட்டுத் தெருக்களில் உவலைக்கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன.
தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானை நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த யானைக்குக் கரும்பையும் கதிரோடு கூடிய நெல்லந்தாளையும் தழைகளையும் உணவாகத் தந்தனர்.
அவற்றை அந்த யானை தன் கைகளால் வாங்கி உண்ணாமல் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டது.
அதனை உண்ணும்படி, வடமொழிச் சொற்களைச் சொல்லி, கையில் கவைமுள் அங்குசம் வைத்திருந்த இளைஞர்கள் பயிற்றுவித்துக்கொண்டிருந்தனர்.

உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற  30
தேம் படு கவுள சிறு கண் யானை  
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,  
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,   
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35
கல்லா இளைஞர், கவளம் கைப்ப   



7
அரணம்

தலைவனுக்குப் பாதுகாப்பு அரணம் அமைக்கப்பட்டிருந்தது.
கல்லில் துவைத்துக் கட்டும் ஆடையை உடுத்திக்கொண்டு நோன்பிருக்கும் பார்ப்பான் முக்கோல் நடுவில் வைத்திருப்பது போல வில்லும் அம்பறாத் தூணியும் வைக்கப்பட்டிருந்தன.
வேல்களை (குந்தம்) நட்டு, அவற்றில் கேடயங்களை மாட்டி, அவற்றைக் கயிற்றால் பிணித்திருந்தனர்.
இதுதான் தலைவனுக்கு அமக்கப்பட்டிருந்த அரண்.

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்  
முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி 
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை     40
பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணம் ஆக,

8
தலைவன் அகம்

தலைவனுக்கென்று தனிப் பாடிவீடு இதுந்தது.
அது உயர்ந்த தூண் நிறுத்திய அகம்.
பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.

வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,  
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,

9
வாள்-மங்கையர் விளக்குத் தூண்டல்

கச்சுடை அணிந்து, முதுகுப்புறம் கூந்தல் புரள, கையில் வளையலுடன் வாளேந்திய மங்கையர் சுரைக்குடுக்கையில் கொண்டுவந்த எண்ணெய்யை இரவினைப் பகலாக்கும் வகையில் எரியும் விளக்குகளில் ஊற்றி சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தனர்.

குறுந் தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்   
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,




10
மெய்காப்பாளர்

நீண்ட நாக்கினை உடைய மணி.
இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது.
பூத்திருக்கும் அதிரல் கொடி சிதைக்கும் காற்றில் ஆடுவது போல, முடி போட்டுப் போர்த்தியிருக்கும் துணி அக்காற்றில் ஆடும்படி பெருமூதாளர் (மெய்க்காப்பாளர்) தலைவனுக்குப் பாதுகாவலாக நடந்துகொண்டிருந்தனர்.

நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள்,    50
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர் 
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ

11
கன்னல் நாழிகை

பிழையின்றிக் காலத்தைக் கணித்தறியும் நாழிகைக் கணக்கர் கைகளால் தலைவனை வாழ்த்தித் தொழுதுகொண்டுஉலகம் வெல்ல வந்துள்ளவரே! குறுநீர்க் கன்னல் இத்தனை நாழிகை காட்டுகிறதுஎன்று இசைப்பாட்டு ஒலியோடு தெரிவித்தனர்.

பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள்,    55
தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,
'எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின் 
குறு நீர்க் கன்னல் இனைத்து' என்று இசைப்ப  



12
யவனர்

இடையில் கச்சமாகக் கட்டிய உடை, உடலில் மெய்ப்பைச் சட்டை, அச்சம் தரும் தோற்றம், வலிமை மிக்க உடம்பு, உறுதி கொண்ட நெஞ்சுரம் ஆகியவற்றைக் கொண்ட யவனர் பழகிய புலியை சங்கிலித் தொடரிலிருந்து விடுவித்து அரசன் படுக்கைக்குக் காவல் புரிந்தனர்.

மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,  
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து,   60
வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்   
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,



13
ஊமை மிலேச்சருடன் ஈரறைப் பள்ளி

அரசனின் பள்ளியறை திரையால் இரண்டு அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது.
ஒருபக்க அறையில் அரசன் படுத்திருந்தான்.
மறுபக்க அறையில் ஊமை மிலேச்சர் மணிவிளக்கம் வைத்துக்கொண்டு மெய்க்காப்பாளராக விளங்கினர்.

திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண் 
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்   
உடம்பின் உரைக்கும், உரையா நாவின்,     65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, 

14 பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும்

போரைப் பற்றிய நினைவு.
அரசனுக்குத் தூக்கம் வரவில்லை.
வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை ஒருபக்கம். 
வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு பதைப்பது போல் துடித்த காட்சி ஒருபக்கம். 
அரசனின் வெற்றியை வாழ்த்திக்கொண்டே செஞ்சோற்றுக்கடன் கழித்து மாண்டவர்களின் காட்சி ஒருபக்கம். 
தோலிலே அம்பு பாய்ந்த வலியால் உணவு கொள்ளாமல் தள்ளாடிச் செவிகளைச் சாய்த்துக்கொண்டு கிடக்கும் குதிரைகள் ஒருபக்கம்.
ஆகியவற்றை அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான். 
ஒரு கை அவன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தது. 
மற்றொரு கையின் விரல் நண்டுக் கொடுக்கு போல் பகைவரைச் சுட்டிய வண்ணம் இருந்தது.
அரசன் பள்ளியில் கிடந்தான்.
அவன் சுட்டிக்காட்டிய அரசர்கள் அவனது வெற்றியைப் பாராட்டிக்கொண்டு நடுங்கியவண்ணம் நின்றனர்.

மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது, 
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,   
பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்   
பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய,     70
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,   
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு
வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்;
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை           75
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து  
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,  
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,   
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை


15
அரண்மனையில் தலைவி

பாசறையில் இருக்கும் தலைவன் பிரிவால் தலைவிக்கு உறக்கம் வரவில்லை.
கவலை மேலிடுகிறது.
நெஞ்சை அவனிடம் செலுத்திப் புலம்பும் நீண்ட நினைவோடு தன்னைத் தானே தேற்றிக்கொள்கிறாள்.
கழன்றோடும் வளையல்களைத் திருத்திக்கொள்கிறாள்.
என்றாலும் ஆசை விடவில்லை.
ஒய்எனப் பெருமூச்சு விடுகிறாள்.
அம்பு பாய்ந்த மயில் போல நடுங்குகிறாள்.
அணிகலன்கள் கழன்று விழுகின்றன.
அருகில் பாவை-விளக்கு ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
இவள் இருக்கும் எழுநிலை மாடத்தின் (ஏழடுக்கு மாளிகையின்) வளைந்த பகுதி ஒன்றில் அருவி கொட்டும் ஓசையைக் கேட்டு நினைவை மாற்ற முயன்றுகொண்டிருக்கிறாள்.

இன் துயில் வதியுநன் காணாள், துயர் உழந்து,   80
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,  
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,  
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல,     85
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்

16
அரசனின் வெற்றி முழக்க ஒலி

அருவி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்த தலைவியின் காதுகள் நிறையும்படி அரசனின் வெற்றி முழக்க ஒலி கேட்கிறது.
பகைவரின் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்களின் படையையும் தன் படையுடன் சேர்த்துக்கொண்டு, வெற்றிக்கொடியை உயர்த்தியவண்ணம் மீள்வோர் சங்கும், கொம்பும் முழங்கும் ஒலி கேட்கிறது.

அஞ்செவி நிறைய ஆலின வென்று, பிறர்
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு,  90
விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு, 
வயிரும் வளையும் ஆர்ப்ப, அயிர   




17
மழை பொழியும் மாதத்தில் முல்லை நிலம்

காயா அஞ்ச நிறத்தில் (கருநீலம்) பூத்தது.
கொன்றை பொன் நிறத்தில் பூத்தது.
கோடல் பூ கைவிரல்கள் போல் விரிந்து பூத்தது.
தோன்றிப் பூ குருதி நிறத்தில் சிவப்பாகப் பூத்தது.
இப்படிப் பூத்திலுக்கும் முல்லை நிலத்தின் வரகுக் கொல்லையில் மான்கள் துள்ளி விளையாடின.
வெண்ணிற மழை பொழிந்துகொண்டிருந்தது.

செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால,
கோடல் குவி முகை அங்கை அவிழ, 95
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,   
கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்,   
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில்,   100




18
அரசனது தேரின் வருகை

வள்ளிக் கிழங்கு முதிர்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனின் தேர்க்குதிரைகளைத் தேரோட்டி விரைவாகச் செலுத்துக்கொண்டிருந்தான்.
அந்தத் தேர் விரைந்து வரவேண்டும்.

இவ்வாறு தோழி கூறுவதாகப் பாட்டு அமைந்துள்ளது.

முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே.

தனிப்பாடல்கள்

இந்நூலின் இறுதியில் இரண்டு தனிப்பாடல்கள் உள்ளன.
அவைபத்துப்பாட்டுஎன்னும் தலைப்பிட்டுப் பத்து நூல்களைத் தொகுத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டவை.
இந்தப் பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.
அவை இந்தப் பாட்டுக்கு அமைந்த ஒருவகை விளக்கம்போல் காணப்படுகின்றன.

முதல் வெண்பா

கன்றைக் குணிலாக்கிக்கொண்டு எறிந்து விளாங்கனியை உதிர்த்தும், குன்றைக் குடையாக்கிப் பிடித்தும் நின்ற மாயவனே!
ஆய்ச்சி விரிச்சி கேட்டுக்கொண்டு நின்றாளே, அவள் கேட்ட விரிச்சிச்சொல் நிறைவேறப்போவது என்றோ?
நீயே அறிவாய்.

வண்டு அடைந்த கண்ணி வளர் ஆச்சி வால் நெடுங் கண் 
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,   
குன்று எடுத்து நின்ற நிலை?  

இரண்டாம் வெண்பா

பகைவர் படையை வென்று அவர் படையையும் தன் படையுடன் சேர்த்துக்கொண்டு, தன் தேரில் பூட்டிய பொன்னணிக் குதிரையைத் தூண்டி ஓட்டிக்கொண்டு மீண்டு வருவதற்கு முன்பு கார்காலம் வந்துவிட்டதே!

புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர்
துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாரா முன்னம்,  
கடல் முகந்து வந்தன்று, கார்!

முற்றும்

நன்றி: செங்கை பொதுவன் விளக்கம் -http://freetamilebooks.com/ebooks/mullai-pattu/


மின்னூல் வடிவில் பதிவிறக்கம் செய்ய: முல்லைப்பாட்டு மின்னூல்