Saturday, December 15, 2012

கலித்தொகை



கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன,

பாடல் தொகைகள்
கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், குறிஞ்சிக்கலியில் 23 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும், பாலைக்கலியில் 35 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

கலித்தொகை காட்டும் சமூகம்
களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றி செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.

வரலாற்று, புராணச் செய்திகள்
கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.


பாலைக்கலி(9)
பாடலை இயற்றியவர்- நல்லந்துவனார்
செவிலியின் வினவலும் அந்தணரின் வழிப்படுத்தும் பேச்சும்
கற்பறம் பூண்டார்
எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைச் கொளைநடை அந்தணீர்! –
வெவ்இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ்இடை,               5
என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம் அறிபுணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணீரோ? - பெரும!’
காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய                  10
மாண் இழை மடவரல் தாயிர் நீர்போறிர்
பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,                   15
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே.
ஏழ்புணர் இன்இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே                  20
என ஆங்கு –
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைப்பிரியா ஆறும் மற்று அதுவே.’

துறை: உடன் போய தலைவியின் செவிலி இடைச்சுரத்து முக்கோற் பகவரைக் கண்டு இவ்வகைப்பட்டாரை ஆண்டுக் காணீரோவென் வினவியாட்கு. ”அவரைக் கண்டு அஃதறமெனவே கருதிப் போந்தோம்; நீரும் அவர் திறத்து எவ்வம் பட வேண்டா” என எடுத்துக்காட்டி அவர் தெருட்டியது.
துறைவிளக்கம்: களவொழுக்கத்தில் தலைவிக்கும் தலைவனுக்கும் இடையூறு உண்டாகியது. அதனால் தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போயினன். அதனை அறிந்த செவிலித்தாய் தலைவியைத் தேடிச் செல்லும் போது முக்கோல் பகவரைக் கண்டு வினவ, அவர் ”நீங்கள் சொல்லிய இருவரையும் கண்டோம், அவர்கள் செயல் அறநெறிப்பட்டது. நீங்கள் துன்பப்டவேண்டாம்” என்று கூறுவது.
கருத்துரை
எறித்தலை தருகின்ற ஞாயிற்றின் வெம்மையைத் தாங்குவதற்காக ஏந்திய குடையின் நிழலில் உறியிலே வைத்த கமண்டலமும், புகழுக்குச் சான்றாக விளங்கும் முக்கோலையும் முறையாக தோளிலே வைத்துக் கொண்டு வேறு ஒன்றும் அறியாத நெஞ்சினராய், நீர் குறித்தவாறு ஏவல் செய்யும் ஐம்பொறிகளையும், உமக்கென்று கொள்கையினையும் ஒழுக்கத்தினையும் உடைய அந்தணீர்! நீவீர் வெம்மையான காட்டிடத்தே செல்லுகின்றவர் என்பதால் உம்மைக் கேட்கின்றேன். இக்காட்டுவழியிலே என் மகள் ஒருத்தியும் வேறொருத்தி மகன் ஒருவனும் தமக்குள்ளே பிறரறியாதவாறு கூடினர். இப்பொழுது அவர்கள் கூடியதைப் பிறரும் அறிந்துவிட்டனர். அவர்கள் இருவரையும் நீவீர் கண்டீரோ?பெரும! என்றவுடன் அவரும்,

“காணாமல் இருந்தேன் அல்லேன். கண்டேன். காட்டிடையே ஆண்மகனுக்குரிய அழகினையுடைய தலைவனோடு அரிய சுரத்தைக் கடந்து போகக் கருதிய மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்த மடப்பத்தையுடைய பெண்ணின் தாயா் போல்வீர்!

நறுமணப்பொருட்கள் விரவிய சந்தனம், உடம்பில் பூசிக் கொள்பவருக்குப் பயன் கொடுக்கிறதே தவிர, மலையிடத்து பிறந்திருந்தாலும் அச்சந்தனம் மலைக்கு என்ன செய்யும்? நினைத்துப் பார்த்தால் உம் மகளும் நுமக்கு அதைப் போன்றவளே!

சிறப்பான வெண்முத்தம் அணிவார்க்குப் பயன்படுகிறதே ஒழிய, கடல்நீரிலே பிறந்ததாயினும் நீருக்கு அவை என்ன செய்கின்றன? ஆராயுங்கால், நும் மகளும் உமக்கு அத்தன்மையானவளே!

ஏழுநரம்புகளால் கூட்டப்பட்ட இனிய இசை பாடுவோருக்கே பயனினைத் தருகின்றது. அது யாழுலே பிறந்திருந்தாலும் யாழுக்கு அது எதைச் செய்கின்றது? சிந்தித்துப் பார்க்கின் நும் மகளும் உமக்கு அதைப் போன்றவளே! என்பதால்,
மிக உயர்ந்த கற்பினையுடைய அப்பெண்ணுக்குத் துன்பத்தைத் தராதீர்! அவளோ, சிறந்தவன் பின்னே சென்றனள். அறத்திலிருந்து மாறுபடாது செல்லும் சிறந்த வழியும் அதுவேயாகும்.” என்றார்.

இப்பாடல் விளக்கத்தின் இணைப்பு:
http://kalithogai.blogspot.in/


நெய்தற்கலி(133).
16-தலைவியை மணக்கும்படி தலைவனுக்கு தோழி அறிவுரை கூறல்!
மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த
நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப்
பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்;
ஆற்றுதலென்பதொன் றலந்தவர்க் குதவுதல்                 6     
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுத
லன்பெனப் படுவது தன்கிளைசெறாஅமை
அறிவெனப்படுவது பேதையார் சொன்னோன்றல்            10     
செறிவெனப்படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறரறியாமை
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;
ஆங்கதையறிந்தனி ராயினென் றோழி                     15
நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க
தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத
னின்றலை வருந்தியா டுயரஞ்
சென்றனை களைமோ பூண்கநின் றேரே

துறை: ‘‘வரைவுவுடம் பட்டோர்க் கடாவல் வேண்டினும்என்பதனால் தலைவன் தெருளாதவனைத் தெருட்டி வரைவுகடாயது.
துறை விளக்கம்: தலைவன் களவொழுக்கத்தை உடையவனாய்த் தலைவியை மணந்து கொள்ளாமல் ஒழுகிவந்தான் அதனால் தோழி உலகியலை எடுத்துச் சொல்லி மணந்து கொள்ளும்படி கூறித் தலைவனைத் தெருட்டியது.

கருத்துரை: 
    கருமையையுடைத்தாகிய மலரையுடைய கழிமுள்ளி தில்லையோடே சேரச் சூழ்ந்த கானலிடத்துத் திரையிட்டமணல் மேலே காற்றாலுயர்ந்த மணலிலே உடனின்ற, புகழ் மிகுகின்ற தலைமையினையுடைய தக்கணா மூர்த்திதேவர் தாமிருந்த ஆலமரத்தே தாமிருப்பதற்கு முன்னே தூக்கிவைத்த நீர்நிறைந்த குண்டிகை போலப் பழந்தூங்கும் முடத்தையுடைய தாழைப்பூ அலர்ந்தவைபோலக் குருகினம் அத்தாழைமேலே தங்குந் துறைவனே! யான் கூறுகின்றதனைக்கேள்,

     இல்வாழ்க்கைநடத்துதல் என்று சொல்லுவது மிடித்தவர்க்கு யாதானும் ஒன்றை உதவுதலை; ஒன்றைப் பாதுகாத்தல் என்று சொல்லுவது கூடினாரைப் பிரியாதிருத்தலை; மக்கட்பண்பு என்று சொல்லப்படுவது உலகவொழுக்கம் அறிந்தொழுகுதலை; அன்பு என்று சொல்லப்படுவது தன்சுற்றத்தைக் கெடாதிருத்தலை; அறிவு என்று சொல்லப்படுவது அறியாதார் தன்னைப் பார்த்துச்சொல்லுஞ் சொல்லைப் பொறுத்தலை; ஒருவரோடு ஒருவர்க்கு உறவுஎன்று கூறப்படுவது கூறியதொன்றைத் தாம் மறாதிருத்தலை; நிறை என்று சொல்லப்படுவது மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதலை; முறை என்று சொல்லப்படுவது நமரென்று கண்ணோட்டஞ்செய்யாது அவர் செய்த குறைக்கேற்ப அவர் உயிரைக்கொள்ளுதலை; பொறை என்று சொல்லப்படுவது பகைவரைக் காலம் வருமளவும் பொறுத்திருத்தலை அப்படியே அக்குணத்தை நீரே அறிந்தொழுகினீராயின் அவ்வொழுக்கத்திற்கு ஏற்பது ஒன்று கூறுவேன்; கொண்க! என்றோழியது நன்னுதலின் நலத்தை நுகர்ந்து அவளைத் துறத்தல், இனியதாகிய பாலை யுண்ணுமவர்கள் பாலையுண்டு அதனைக்கொண்டிருக்குங் கலத்தைக் கவிழ்த்துவிடுதல் போல்வதொன்று; ஆகையினாலே, நின்னிடத்து வருந்தினவள் துயரத்தை வரைந்து சென்றனையாய்க் களைவாய்; அங்ஙனங் களைதற்கு நின் தேர் புரவியைப் பூண்பதாகவெனத் தெருட்டி வரைவுகடாயினாள்.
இப்பாடல் விளக்கத்தின் இணைப்பு:
விக்கிபீடியா இணைப்பு:
http://ta.wikipedia.org/s/o3e
பிடிஎஃப் வடிவில் விரிவுரையுடன் படிக்க மற்றும் பதிவிறக்க:

1 comment: