Saturday, December 1, 2012

திருநாவுக்கரசர் தேவாரம்



தமிழ் முதலாமாண்டு – இரண்டாம் பருவம்
திருநாவுக்கரசர் தேவாரம் – நான்காம் திருமுறை
நமச்சிவாயத் திருப்பதிகம் -10 பாடல்கள்

பாடல் எண் : 1
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொழிப்புரை :
வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய , பொலிவுடைய , தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும் .

குறிப்புரை :
சொல் துணை வேதியன் - சொல்லளவான வேத முதல்வன் . வேதம் ( வாசகம் ) சொல்வடிவாகத்தான் அச்சொல்லின் ( வாச்சியப் ) பொருள் வடிவானவன் என்க . சோதி - பரஞ்சோதி . வானவன் - அழியாத வீட்டுலகினன் . பொன் துணை திருந்து அடி - பொன்னடி , துணையடி , திருந்தடி எனப் பொலிவும் இணையும் செம்மையும் கொள்க . அடி பொருந்தக் கைதொழலாவது உள்ளத்தை அடியும் அடியை உள்ளமும் பற்றக் கொண்டு , கை குவித்து வணங்குதல் . கையொன்று செய்யக் கருத்தொன்று எண்ணலாகாது . கல்துணைப் பூட்டி - கல்லைத் துணையாகப் பூணச்செய்து . கல்லொடு கட்டி என்றபடி . கடலிற் பாய்ச்சினும் கை அடிதொழ நற்றுணையாவது திருவைந்தெழுத்து . கடலிற் பாய்ச்சிய மெய்ம்மை , ` கல்லினோ டெனைப் பூட்டி அமண்கையர் , ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் , நெல்லு நீள்வயல் நீலக்குடியரன் , நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே ` என்றுள்ள வாய்மையால் உண்மையாதல் உணர்க . இருவினையாகிய பாசத்தால் , மூன்று மலமாகிய கல்லொடு கட்டியிருத்தலின் , மாறி மாறி வருகின்ற பிறவிப் பெருங்கடலில் வீழ்கின்ற அறிவிலுயிர்களும் பேரின்பக் கரை ஏறிட அருளும் அத்தகைய பேராற்றல் உடைய திருவைந்தெழுத்து , உணர்வுருவான நாவுக்கரசரை மிகச் சிறிய இவ்வுவர்க் கடலில் ஒரு கல்லின்மேல் ஏந்திக் கரையேற்றிடலை உரைத்தல் வேண்டுமோ ? ` இருவினைப் பாசம் மும்மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய்யஞ்செழுத்து அரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ ` ( தி .12 பெரியபுராணம் . 1394). திருவைந்தெழுத்து இருவினைக் கயிற்றால் மலங்களாகிய மூன்று கல்லொடு கட்டி வீழ்த்தப் பெற்ற அஞ்ஞானியரைப் பவசாகரத்தினின்று முத்திக் கரையிலேற்றும் ஆற்றல் வாய்ந்தது . அப் பிறவிப் பெருங்கடலிலே மூன்று கல்மேல் ஏறிய அஞ்ஞானத்தரையும் முத்திக் கரை ஏற்ற வல்ல மெய்யெழுத்து , மெய்ஞ்ஞானத்தரசை இச்சிறு கடலிலே ஒரு கல்லின் மேல் ஏற்றி யிடலைச் சொல்லாதே அறியலாம் . ஒரு கல் முக்கல் என்னும் நயம் அறியாமல் , ` இருவினைப் பாசமும் ` எனப் பிரித்துப் பொருந்தா உரை யெழுதியிருத்தல் சேக்கிழார் திருவுள்ளத்துக்கு ஏலாது . ` நற்றுணை ` என்பதற்கு ` நற்றாள் ` என்றதற்குப் பரிமேலழகர் உரைத்ததுரைத்துக் கொள்க . ( தி .7 ப .35 பா .8.) ( பேரூர்ப் . நிருத்தப்படலம் - 74).

பாடல் எண் : 2
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.

பொழிப்புரை :
பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும் . பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல் . அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம் . நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :
அருங்கலம் ( தி .4 ப .11 பா .5) விலைமதிப்பரிய ஆபரணம் , பூக்களுக்குத் தாமரையும் , ஆக்களுக்கு அரன் ஆடும் ஐந்தும் , ( பஞ்சகவ்வியமும் ) கோக்களுக்குக் கோட்டமில்லாமையாகிய செப்பமும் , நாக்களுக்குத் திருவைந்தெழுத்தும் பெறற்கரிய பூணாகும் . ஆகவே , பூக்களுள் தாமரையும் , ஆக்களுள் அரன் ஆடும் அஞ்சினையும் அளிக்கும் ஆவும் , கோக்களுள் கோட்டமில்லாத செங்கோல் வேந்தும் போல நாக்களுள் நமச்சிவாய என்னும் நாவே நன்னா என்றவாறாம் . தாமரை பிற மலர்கட்கும் , அரன் ஆடும் ஐந்தும் ஆவிற்கும் , வளைவிலியாம் பெருமை மன்னற்கும் அருங்கலமாதல் போல , நாக்கிற்கு நமச்சிவாய மந்திரமே அருங்கலம் என்றலும் பொருந்தும் . கோட்டம் - வளைவு , சலம் ` வளைவிலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை ... திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே ` ( திருத்தாண்டகம் .) பின்னர்ச் ` சலமிலன் ` என்றலும் உணர்க .

பாடல் எண் : 3
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

பொழிப்புரை :
வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும் . இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :
` விண் உற அடுக்கிய விறகு ` என்றதால் , அடுக்கிய அவ்விறகின் மிகுதியையும் , ` வெவ்வழல் உண்ணிய ( விறகு அடுக்கிற் ) புகில் அவை (- அவ்விறகுகள் ) ஒன்றும் இல்லையாம் என்றதால் , தீச்சிறிதாயினும் எல்லா விறகுகளையும் எரித்தொழிக்கும் பெருவன்மையுடைமையையும் உணர்த்தி உவமம் ஆக்கினார் . பலவுலகிற் பலபிறவியிற் பண்ணிப்பண்ணிப் பயின்ற பாவங்களை யெல்லாம் பொருந்தி நின்று அவை அற்றொழிய ஒழிக்கவல்லது திருவைந்தெழுத்து . இது பொருள் ( உவமேயம் ). விண்ணுற அடுக்கிய விறகு போல்வது பண்ணிய உலகினிற் பயின்ற பாவம் . அவ்விறகின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாதல் போல்வது திருவைந்தெழுத்து அப் பாவத்தை நண்ணி நின்று அறுக்கப் பாவம் முற்றும் அற்றொழிதல் . விறகு x பாவம் . அழல் x அஞ்செழுத்து . உண்ணிய புகில் :- சிவஞானபோதக் காப்புரையில் \'\' அருளிய என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் . ` உண்ணிய புகில் ` என்றாற்போல \'\' என்றுள்ளதுணர்க . பண்ணியவுலகு - செய் வினைக்குத்தக அமைத்த புவனம் . ` பண்ணிய சாத்திரப் பேய்கள் ` என்புழிப் போல மாயாகாரியம் என்றதாம் .

பாடல் எண் : 4
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
பொழிப்புரை :
எவ்வளவு வறுமைத் துன்பத்தால் நலிவுறினும் எம்பெருமானை விடுத்து வேறுயாரையும் இரந்து ` என் துன்பத்தைப் போக்கினால் நீ எம்பிரானே ` என்று கூறித் துயரத்தைப் போக்கு எனக் கேட்போம் அல்லோம் . மலையின் அடியில் அகப்பட்டுக் கிடந்தாலும் அருளினால் நமக்கு ஏற்படும் நடுக்கத்தை நீக்குவது திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :
அடுக்கல் - மலை . இராவணனைப்போல ஒரு மலைக் கீழ் அகப்பட்டுத் துன்புற்றுக் கிடந்தாலும் , நாம் அடைந்த இறப்பச் சத்தாலான மெய்ந்நடுக்கத்தைக் கெடுத்துக் காப்பது திருவஞ்செழுத்து . ` அந் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் ` அதனால் , ` அஞ்சுவது யாதொன்றும் இல்லை ` ` இடுக்கண் பட்டு இருக்கினும் . சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சுடைமையின் நீங்கி யாரையும் இரந்து என் துன்பத்தை விடுக்கின் நீ பிரானே என்று கூறி நீக்கு எனக் கேட்போம் அல்லோம் . அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றும் இலோம் . நாம் உற்ற நடுக்கத்தை அருளின் கெடுப்பது . திருவைந்தெழுத்து .

பாடல் எண் : 5
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.

பொழிப்புரை :
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும் . நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும் . பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும் . எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :
விரதிகள் - விரதத்தை மேற்கொண்டவர்கள் . ` விரதங்களாவன இன்ன அறம் செய்வல் எனவும் இன்ன மறம் ( பாவம் ) ஒழிவல் எனவும் தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன .` ( திருக்குறள் , துறவறவியலின் தொடக்கம் , பரிமேலழகருரை ) அவ்விரதங்கள் , வினைமாசு தீர்ந்து அகக் கருவிகள் தூயன ஆதற்பொருளனவாய்க் காக்கப்படுவன , விரதங்களால் உள்ளம் முதலிய உட்கருவிகள் தூயன ஆயவழி உணர்வு தோன்றும் . அவ்வுணர்வு மெய்யுணர்வு . அவ்வுணர்வால் உணரப்பெற்றது மெய்ப்பொருள் . அப்பொருளை மறவாது நினைப்பூட்டுவது திருவெண்ணீறு . அதனால் , விரதிகட்கெல்லாம் திருவெண்ணீறு அருங்கலம் ஆயிற்று . திருநீறணிந்த விரதிகளைக் கண்ட நல்வினை , யாவர்க்கும் மெய்ப்பொருளை நினைப்பிக்கும் அருட்பொருள் ஆதலின் , அதனினும் அருங்கலம் பிறிதில்லை . ` பராவணம் ஆவது நீறு ` ஆதலின் , அதுவே வண்ணம் நிறைந்த அருங்கலம் . அந்தணர்க்கு அருமறைகளும் ஆறங்கங்களும் அருங்கலம் . பிறைக்கு இறைவன் திருமுடி அருங்கலம் . முடிக்குப் பிறை கலம் என்னாமை அறிக . சைவர் எல்லோரையும் உளப்படுத்தி நங்களுக்கு நமச்சிவாய மந்திரம் அருங்கலம் என்றருளியது உளங்கொளத் தக்கது . ` சைவ பூடணம் ` எனப்படும் திருநீறும் கண்டிகையும் புறத்தருங்கலம் . திருவைத்தெழுத்து நாவினுக்கும் அகத்தினுக்கும் உயிர்க்கும் உணர்விற்கும் உரிய அகத்தருங்கலம் . ( தி .4. ப .11. பா .2)

பாடல் எண் : 6
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

பொழிப்புரை :
மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான் , தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான் . அவர்களுக்கு நாடோறும் விரும்பியதனை நல்காது வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான் . உயர்ந்த குடும்பத்தில் அடியவர்கள் பிறந்தவர் அல்லராயினும் நற்குலத்துக்குரிய நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :
சலம் - கோட்டம் . ` சலங்கெடுத்து நலங் கொடுக்கும் நம்பி ` ( தி .6 ப .20 பா .6) சலத்தாற்பொருள் செய்தே ( குறள் 660) என்புழித் ` தீயவினைகள் ` என்றும் சலம் பற்றிச் சால்பில செய்யார் ( குறள் 956) என்புழி வஞ்சனை என்றும் உரைத்தார் பரிமேலழகர் . முன்னதன் விளக்கத்தில் , முன் ஆக்கம்போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால் அவை ( அத் தீயவினைகளில் ) சலம் எனப்பட்டன என்றும் உரைத்தார் . வெளியே காணப்படுவதற்கு வேறாக உள்ளே இருப்பது சலம் என்பர் வடமொழிப் புலவர் . சிவஞானபாடியத்தில் , ` சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதல் ` என்னும் திருவெண்பா உரைக்கண் , தம்பால் அடைக்கலம் எனச் சார்ந்தாரைக் காப்பது உத்தமராயினார்க்குக் கடன்மையாகலான் , முதல்வன் தன்னைச் சார்ந்தவரையே பாதுகாப்போன் ஆகியும் அதுபற்றிக் கோட்டம் உடையன் அல்லனாய்த் தன்னைச் சார்ந்து தன்னடிப் பணியின் நிற்கவல்ல அடியார் தானேயாய் நிற்குமாறு நிறுவி , அவர்க்கு வரும் ஆகாமிய வினையைக் கெடுத்து , அது செய்யவல்லரல்லாத பிறர்க்கு வரும் ஆகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பன் என்றும் , ` சாராதாரை ஒழித்துச் சார்ந்தாரையே பாதுகாப்பது நடுவுநிலை அன்று என்பாரை நோக்கி அவ்வாறு கொள்ளினும் அஃது ஆண்டைக்குத் தலைமைக் குணம் ஆவது அன்றி இழுக்கு அன்மையான் அமையும் என்பார் , சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் எனப் பழமொழி எடுத்துக் காட்டி , உண்மையான் நோக்கவல்லார்க்கு அது நடுவு நிலைமையே கோட்டம் அன்று என அறிவுறுத்துவார் , சார்ந்தடியார் தாம் தானாகச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் என வேறுபடுத்துக் காட்டினார் . சார்ந்தடியார் தாம் தானாகச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் உண்டு என்பதூஉம் , அது நடுவுநிலைமையே கோட்டம் அன்று என்பதூஉம் , ஏனைச்சமயத் தார்க்கும் உடன்பாடாகலின் , அஃது ஈண்டைக்கு உழமை ஆயிற்று ` என்றும் உரைத்தருளினமை உணர்க . ` சலமிலனாய் ` எனத்தொடங்கும் சிவஞானசித்தியையும் அதனுரையையும் ஈண்டு உணர்க . சங்கரன் - ` சுகத்தைப் பண்ணுகின்றவன் ` ( சிலப்பதிகாரம் . நாடுகாண்காதை :- 186. அடியார்க்கு நல்லாருரை ) சம் - சுகம் , இன்பம் . கரன் - செய்பவன் . சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன் - ஞானத்தால் தனை அடைந்தவர்க்கே அவர்தம் இருவினையும் நீக்கிப் பேரின்ப நலம் அருள்வோன் . சலம் என்பதன் விளக்கத்தில் ஈதும் அடங்கும் . ` தயாமூல தன்மம் என்னும் தத்துவத்தின்வழி நின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் கொடுக்கும் நலம் ` ( தி .6 ப .20 பா .6) சார்ந்தோர்க்கே உண்டு . நாள்தொறும் நல்குவான் நலன் :- ` இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ` ` என்றும் இன்பம் பெருகும் இயல்பு .` ( தி .12 பெரிய . புரா .12). ` நெல்லு நீள்வயல் நீலக்குடி யரன்நல்லநாமம் நவிற்றியுய்ந்தேன் நன்றே ` என்புழியும் ஈண்டுப் பிரிப்பதுபோற் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும் . குலம் இலர் ஆகிலும் :- ` ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும் ` என்றபடி குலத்துக்கு தொண்டர் குழாஅத்துக்கு ` குலங்கள் என்செய்வ குற்றங்கள் என்செய்வ ` ( தி .5. ப .77 பா .8) ` ஏகம்பம் மேவினாரைத் தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குத் தலைவர் ` ` புனிதனைப் போற்றுவார் மனிதரிற் றலையான மனிதரே ` ` தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொலோ ` ` குலவராக குலம் இலரும் ஆக குணம் புகழுங்கால் உலகினல்லகதி பெறுவரேனும் ... ... அடிகள் பாதம் நினைவார்களே ` ( தி .2 ப .115 பா .6) ` பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே ` ( தி .7 ப .72 ப .11) என்ற குலமே சைவ குலம் ; சிவத் தொண்டக்குலம் . ` நலம் இலராக , நலமது உண்டாக , நாடவர் நாடறிகின்ற குலம் இலராக , குலமது உண்டாக ` அவற்றைப் பொருட்படுத்தாமல் அவரது தவத்தையே பொருட்படுத்தி அத் தவம் பணி குலச்சிறை குணமே அடியார் திறத்தில் அனைவர்க்கும் வேண்டும் . அதற்கு ஏற்பதோர் நலம் ` சங்கரன் ` என்னும் பெயர்க்கண் முதற்சொல்லின் பொருளாம் . சங்கரன் தரும் நலனெல்லாம் அவனது திருவைந்தெழுத்து நல்கும் . ` கொல்வாரேனும் ` ( தி .3 ப .49 பா .5) ` நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் ` ( தி .3 ப .49 பா .7) என்று அருளிய ஆளுடையபிள்ளையார் திருப் பாடல்களையும் இங்குக் கருதுக .

பாடல் எண் : 7
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.

பொழிப்புரை :
மேம்பட்ட தொண்டர்கள் உலகப்பற்றுக்களை நீக்கிவிட்டனர் . அவர்கள் மேம்பட்ட வீட்டு நெறியையே அடைந்தனர் . அடியவர்கள் கூட அடியேனும் ஓடிச் சென்று எம்பெருமான் திருவுருவத்தை அகக்கண்ணால் கண்டேன் . அங்ஙனம் கண்டவுடன் திருவைந்தெழுத்தை நாடினேன் . நாடிய என்னை அத்திருவைந்தெழுத்தும் நாடியது .

குறிப்புரை :
வீடினார் உலகினில் - உலகப்பற்றினை விடுதலுற்றார் . உலகு - கட்டு . வீடினார் - விடுதலைச் செய்தார் . உலகினில் விடுதலே வீடுபெறும் நெறி . விட்டவர் விழுமியோர் . விட்டது உலகினை . பெற்றது பேரின்பத்தை . விள்ளற்பாலதனை விண்டு அதனால் வருந்துன்பத்தினீங்குதல் வீடு . கொள்ளற்பாலதனைக் கொண்டு அதனால் வரும் இன்பத்தைப் பெறுதல் பேறு . ( சிவஞானபாடியம் . சூ . 9) அது பெற உலகப் பற்றை விட்டுச் சென்ற நெறியே ` அந்நெறி ` எனச் சுட்டப்பட்டது . சிவநெறி சருவலோக பிரசித்தமாதலின் அதனை ` அந்நெறி ` எனல் வழக்கம் ( பதி . பா .9.) ` முழுமுதலை அந்நெறியை அமரர் தொழும் நாயகனை `. அதைக் கூடினார் விழுமிய தொண்டர்கள் . கூடிச் சென்றவுடனே , யானும் ஓடினேன் . ஓடிச்சென்று உருவம் கண்டேன் . கண்டவுடன் நாடினேன் நமச்சிவாய மந்திரத்தை . நாடிய என்னை அதுவும் நாடிற்று . உருவம் காண்டல் :- திருவைந்தெழுத்துள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறித்தலின் , அதனதன் உருவம் தெரிந்து கணித்தல் வேண்டும் . ` உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் ` ( தி .4 ப .94 பா .6) பயின்ற நாமம் ` சிவாயநம என்று நீறணிந்தேன் ` என்பதிற் காண்க . நாடிற்று :- சிவகதி தரக் கருதிற்று . ( தி .4 ப .11 பா .7) முன்னெறி ( சிவன் ) அம்முக்கண்ணன்றன்நெறி , அந்நெறியே சரணாதல் திண்ணம் . அடைந்தவர் எல்லார்க்கும் நன்னெறி என்று பின் உள்ளதும் ( ப .11. பா . 9) உணர்க . ` வீடினார் உலகினில் ` என்றதற்கு உலகில் இறந்தார் என்றுரைத்து , ` செத்தாரே கெட்டார் கரணங்கள் ` ( திருக்களிற்றுப்படியார் . 47) என்னுங் கருத்துணர்த்தியதாகக் கொள்ளலும் பொருந்தும் .

பாடல் எண் : 8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொழிப்புரை :
வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம் . சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய் , ஒளியுடைய தாய் , பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே .

குறிப்புரை :
இல் - வீடு . உயிர்க்குத் துச்சில் உடல் ஆதலின் ` இல் ` என்றார் . அக விளக்கு - உள்ளே விளங்கி விளக்கும் விளக்கு . அகமாகிய இல்லின் விளக்குமாம் . புறத்திருளைப் போக்கும் விளக்கேபோல் அகத்திருளை அழிப்பது . சொல்லின் அகத்தும் நின்று விளக்குவது . சோதி உள்ளது . ஏனைய சோதிகளுக்கு அச்சோதி முன் இல்லாது பின் வந்ததாம் . திருவைந்தெழுத்தின் சோதி முக்காலத்தும் உள்ளது . உயிர்கள் எண்ணில்லாதன . அவற்றின் அகமெல்லாம் விளக்கும் ஒளியாதலின் ` பல்லக விளக்கு ` ஆயிற்று . பலரும் - எல்லாச் சமயத்தாரும் . காண்பது - தம்மையறியாமலே காண நிற்பது . அழியாதது . யகாரம் , நகாரம் , மகாரம் மூன்றில் மற்றெல்லாச் சமயங்களும் அடங்கி விடுகின்றன . வகாரம் சிகாரம் இரண்டும் சைவத்திற்கே உரிய தனிச் சிறப்புடையன . நல்லக விளக்கு :- ஞானரூபத்தினுள்ளே விளங்கும் விளக்கு . ஞானம் நிறைந்த அகமே நல்லகம் . ` ஆன்மாப் பாசம் ஒருவி ஞானக் கண்ணினிற் பதியைச்சிந்தை நாடுக ` என விதித்த விதியின்படியே ஓதும் திறத்திற்குரியது முத்தி பஞ்சாக்கரம் . அஞ்செழுத்து ஓதும் முறையால் ஒரு குறியின் வைத்து அன்றி முதல்வனைக் காண்டல் செல்லாது .` ( சிவஞானபோதம் . சூ .9. அதி .3. பேருரை பார்க்க ). சுட்டறிவு இறந்து ஞானத்தான் ஞேயத்தைக் கண்டு எங்கும் தானாக நிட்டை கூடிய வழியும் , தொன்றுதொட்டுவரும் ஏகதேசப் பழக்கம் பற்றிப் புறத்தே விடயத்திற் சென்று பற்றுவதாகிய தன் அறிவை அங்ஙனம் செல்லாது மடக்கி , அகத்தே ஒரு குறியின் கண் நிறுத்தி , நிட்டைகூடிநிற்கும் முறைமையை அஞ்செழுத்து ஓதும் முறைமையில் வைத்துக் கண்டு சிந்திக்கச் சிந்திக்கச் சிவதரிசனத்தை விளக்குவதால் ` விளக்கு ` எனப்பட்டது . வாதனைவயத்தால் , புறத்திற் சென்று பற்றும் ஏகதேச அறிவைப் பற்றறத் துடைத்துப் பூரண நிலையிற் கொண்டு செல்வதால் , அது வாசனையை நீக்குவதற்குரிய சிறந்த சாதனமாம் . ( சிவஞானபோதம் சூ . 9. அதி . 3. பேருரை ). உணர்விற்கு விடயமாகக் காணப்படும் பசுபாசங்களோடு ஒப்ப வேறு காணப்படாத பதிப்பொருளாகிய முதல்வனைத் தன் அகத்தின்கண் அஞ்செழுத்து ஓதும் முறையால் காணும் ஆயின் , கோலை நட்டுக் கயிற்றினாற் சுற்றிக் கடையவே விறகினின்றும் தோன்றும் தீயைப்போல அம் முதல்வன் அங்குத் தோன்றி , அறிவிற்கு அறிவாய் விளங்கிநிற்கும் ஆதலின் , ` நல்லக விளக்கு ` எனப்பட்டது .

பாடல் எண் : 9
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.

பொழிப்புரை :
முந்துறமுன்னம் வீடுபேற்றிற்கு வழிகாட்டிய முதல்வன் முக்கட்பிரானாவான் . அவன் அருளிய வழியே உறுதியாகப் பற்றுக் கோடாவது . அந்த வழியிலே சென்று அப்பெருமானுடைய திருவடிகளை அடைபவருக்கு எல்லாம் , சிறந்த வழியாக உதவுவது திருவைந்தெழுத்து மந்திரமே .

குறிப்புரை :
முன்னெறியாகிய முதல்வன் என்றும் முன்னெறியாகிய முக்கண்ணன்நெறி என்றும் இயைக்கலாம் . முதல்வனை ` முன்னிலை ` ` முன்னெறி ` என்றும் முன்னோர் குறித்தனர் . ` நெறியே நின்மலனே ` ( தி .7 ப .24 பா .9) என்று அழைக்கப்பெறும் முதல்வனை ` முன்னெறி ` என்றலில் வியப்பென்னை ? முக்கணன்றன் நெறியே சரணாம் . அது சரணாதல் திண்ணம் . உயிர்கட்கு வீடுபேறு உண்டாக வேண்டின் , முன்னெறி யாகிய முதல்வன்றன் நெறியே சரணாதல் திண்ணம் . அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர் எல்லார்க்கும் நமச்சிவாயவே நன்னெறியாவது . ` நன்மையெனப்படுவன எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை எனப்படுவது வீடுபேறு என்ப . அதனைத் தலைப்படுதற்கு ஏதுவாய்ச் சிறந்த நெறியாகலின் , ஞானம் ` நன்னெறி ` எனப்பட்டது . ( மாபாடியம் . சூ .8 ) ஞானம் வேறு நமச்சிவாயம் வேறு ஆயினும் , ஞானம் விளங்கி ஞேயம் காட்சிப்பட்ட இடத்தும் பயிற்சி வயத்தான் முன்னர்த் தான் நோக்கிய பாசத்தை நோக்கும் நோக்கமாகிய வாசனையை நீக்குதற்குரிய சாதகம் ஆகிய திருவைந்தெழுத்தும் ஞானத்திற்கு ஒப்பாதலின் ` நன்னெறி ` யாயிற்று ( மாபாடியம் . சூ .9 ). ` காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது ` ஆதலின் , அதுவே ` நன்னெறி ` யாவது என்றாரெனலுமாம் .

பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

பொழிப்புரை :
மான்குட்டியைக் கையிலேந்திய , பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டா .

குறிப்புரை :
மாதியலும் பாதி - முதல்வனுடைய இடப்பாகம் , அப்பாகத்துக் கையில் உள்ளது மான்பிணை . மாதொரு பாகமே மானேந்திய பாகம் ஆதலின் , ` தழுவிய ` என்னும் எச்சம் ` மாதொர் பாகத்தான் ` என்ற பெயர் கொண்டது . ` மான்பிணை தழுவிய மாது ` எனக் கருதி உவமம் ஆக்கலும் கூடும் . பூப்பிணை - மலர்மாலை . நாப்பிணை தழுவிய நமச்சிவாயப்பத்து - நாவைப் பிணைந்து தழுவிய நமச்சிவாயப் பதிகம் . பத்தும் ஏத்த வல்லார்க்கு இடுக்கண் இல்லை . மேல் ( தி .4 ப .11 பா .10) முன்னீரடியும் , பின்னீரடியும் வெவ்வேறெதுகை யானவாறு , இதன் ஈற்றடி வேற்றெதுகைத்தாயினும் , இரண்டனுள்ளும் இனவெதுகை அமைந்திருத்தல் காண்க . ( தி .4 ப .8 பா .8 இல் உள்ள எதுகையை உணர்க ). இடுக்கண் - ( இடுங்கு கண் ) துன்புற்ற போது கண் இடுங்குதல் துன்பக் குறி . ` இடுங்கு கண் ` என்பதன் மரூஉவே இடுக்கண் .

                             முற்றும்

இப்பாடல்களும் அதன் விளக்கமும் இடம்பெற்றுள்ள இணைப்பு :

6 comments:

  1. நன்றி ஐயா!!!!!!!!
    இது மிகவும் உதவிகரமாக இருந்து.

    ReplyDelete
  2. Maaeru naalam ellam padal vilakkam please

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. படிக்க படிக்க பரமானந்தம். நன்றிகள் பல.

    ReplyDelete