மதுரைச்சொக்கநாதர்
கலிவெண்பா
|
1.
|
சீர்கொண்ட
கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண்
|
|
|
2.
|
டிசையுந்
தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே
|
|
|
3.
|
செய்யசிவ
ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற்
|
|
|
4.
|
கூடல்
புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா
|
|
|
5.
|
மன்னுமூ
வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே
|
|
|
6.
|
மூன்றுவிழி
யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால்
|
|
|
7.
|
தேடிமுடி
யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி
|
|
|
8.
|
மட்டோலைப்
பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் – முட்டாதே
|
|
|
9.
|
ஒல்காப்
பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் – மல்காச்சொற்
|
10.
|
பாத்திரங்கொண்
டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு
சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம்
|
|
|
|
|
11.
|
தீதில்
கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவ ரனைவோருஞ் - சாதியுறும்
|
|
|
|
|
12.
|
தந்திரத்தி
னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் – செந்தமிழிற்
|
|
|
|
|
13.
|
பொய்யடிமை
யில்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்
|
|
|
|
|
14.
|
காடவருஞ்
செஞ்சொற் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாவருங்
|
|
|
|
|
15.
|
கல்லாதார்
சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்
எல்லாரு நீயா யிருந்தமையாற் - சொல்லாரும்
|
|
|
|
|
16.
|
என்னடிக
ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் - பன்னியமென்
|
|
|
|
|
17.
|
பஞ்சிபடா
நூலே பலர்நெருடாப் பாவேகீண்
டெஞ்சியழுக் கேறா வியற்கலையே - விஞ்சுநிறந்
|
|
|
|
|
18.
|
தோயாத
செந்தமிழே சொல்லே ருழவரகந்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயா
|
|
|
|
|
19.
|
தொருகுலத்தும்
வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் - இருநிலத்துப்
|
|
|
|
|
20.
|
புண்ணியஞ்சே
ருந்திப் புலத்தே வளிதரித்துக்
கண்ணிய வாக்காங் கருப்பமாய் - நண்ணித்
|
|
|
|
|
21.
|
தலைமிடறு
மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி
|
|
|
|
|
22.
|
ஏற்பமுதன்
முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே
|
|
|
|
|
|
23.
|
எண்முதலா கப்பகரு மீரா றெனும்பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணியோற்
|
|
|
24.
|
பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தித்
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு
|
|
|
25.
|
மஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே
|
|
|
26.
|
பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ - முன்னே
|
|
|
27.
|
நினையும் படிப்பெல்லா நின்னைப் படிப்பார்
உனையும் படிப்பிப்பா ருண்டோ - புனைதருநற்
|
|
|
28.
|
செய்யுட்சொன் னான்குமுயர் செந்தமிழ்ச்சொல் லோர்நான்கும்
மெய்யுட் பொருளேழ் விதத்திணையும் – மையிலெழுத்
|
|
|
29.
|
தாதியாப் பெட்டு மலங்கார மேழைந்தும்
பேதியாப் பேலெழின்மாப் பிள்ளையாய்ச் - சாதியிலே
|
|
|
30.
|
ஆங்கமைசெப் பற்பண் ணகவற்பண் டுள்ளற்பண்
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத்
|
|
|
31.
|
தெண்கருவி யைந்தீன் றிடுநூற்று மூன்றான
பண்களும்பின் கல்யாணப் பாவையரா - யெண்கொளும்
|
|
|
32.
|
நற்றா ரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்றகலாப்
|
|
|
33.
|
பண்கள்முதற் பெண்களொடும் பாலரொடு நாடகமாம்
பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழத்
|
|
|
34.
|
தாழ்விலா வட்டா தசவன் னனைகளெனும்
வாழ்வெலாங் கண்டு மகிழ்ந்தாயே – ஆழ
|
|
|
35.
|
நெடுங்கோல வையையிலென் னேசர்மேற் பட்ட
கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய் – அடங்காத
|
36.
|
எங்கோவே பத்தென் றியம்பு திசைக் குள்ளேநின்
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன்
|
|
|
|
|
|
1 -
8: சீர்கொண்ட...................
பகர்ந்தோரும்
(பொழிப்புரை) சிறப்புப் பொருந்திய கூடலென்ற சிவராசதானியைக்
காத்து அழகு பொருந்திய சங்கத்திற்
புலவராயிருந்தவரும், பல திசைகளிலுஞ்
சென்று போர்புரிந்து வாய்ந்த தமிழரசி யென்று
பலரும் வாழ்த்தித் துதிப்பத்
திசைதோறும் தன் வெற்றியைத் தோற்றுவித்த
பெண்ணரசியும்,
விருப்பமுறும்படி திருத்தமான சிவஞானத் தொகுதியுடைய ஏட்டுச் சுவடிகளில்
ஓர் ஏட்டினைக் கையிலெடுத்தெறிந்த கணபதியும், உண்மையருளால்
மதுரையை அரசு புரிந்து ஒருகாலத்தில்
மதுரைச் சங்கப் புலவரெதிரமர்ந்து
பாடலின் சிறப்பையுணர்த்திய வேற்படையுடைய முருகக்கடவுளும், மனையை விட்டு நீங்காத இளமைவாய்ந்த மூன்றாண்டுப்
பருவத்தின் வடமொழி நூல்களும் தென்மொழி நூல்களும் தாயாகிய உமையம்மையா ரூட்டிய ஞானத்தோடு கலந்த முலைப்பாலானறிந்தவரும், மூன்றாண்டுக்கு முன்னர் முதலையுண்ட பிள்ளையை மூன்று விழியார்முன் கவிபாடிப்
பின்பெற்றுத் தரும்படி தமிழாலுரைத்தவரும், பிரமனும் திருமாலுந் தோன்றும்படி தேடியும் அறியமுடியாத சிவபெருமான் திருவடியைத் திரு நல்லூரிற் செய்யுள்பாடித் தம் முடியாகப் பெற்றுக் கொண்டவரும், ஆய்ந்து தம் முடியில்
மணமுள்ள தாழம்பூவைச் சூடாதவராகிய சிவபெருமான் ஓலையை வாரிச் சேர்த்துத்
தம் பட்டோலையில் எழுதிக் கொள்ளுமாறு செய்யுள்
பகர்ந்தவரும்.
(விளக்கம்) கூடல் - மதுரை. சிவராசதானி
மதுரை சிவபெருமான்
சுந்தரராக வந்து அரசு புரிந்த
இடம் ஆதலின், சங்கத்திருந்தோர் என்றது
சிவபெருமானை. நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களுள் ஒருவராக
(இறையனார் என்ற பெயருடையவராக) இருந்தனரென்பது
வரலாறு.
போர்கொண்டு என்பது திசைதோறுஞ் சென்று
பல மன்னர்களுடன் போர்
புரிந்ததை யுணர்த்தியது. மின்: உவமையாகு பெயராய்த்
தடாதகைப்
பிராட்டியாரை யுணர்த்தியது; தமிழரசி என்று ஏத்தெடுப்பத்
திக்கு விசையஞ்
செலுத்தியவர் அவரேயாதலின், நசை - விருப்பம். முன்னொருகாலத்திற்
சிவபெருமான் உமையாளுக்குச் சிவாகமப் பொருள் கூறினர் என்பதும்,
அதனைப் பாராமுகமாகக் கேட்டதையுணர்ந்து வலைஞர் மகளாகப் பிறத்தி
நீ
என உமையைச் சபித்தனர் என்பதும்,
தந்தை சபித்ததை யுணர்ந்து தந்திமுகக்
கணபதி ஆகமச் சுவடிகளைத் துதிக்கையாலெடுத்துக்
கடலில் வீசியெறிந்தனர் என்பதும் வரலாறு. அதனாற் “கையிலெடுத்த
கணபதியும்” என்றார். அதன் விரிவு திருவால. திருவிளை. வலைவீசின படலம் காண்க. பாடலறிவித்த படைவேள் என்பது முருகக்கடவுளை. முருகக்கடவுள்
முன் தாடதகையின் புதல்வன் உக்கிரகுமாரபாண்டியனாக வந்து மதுரையை யாண்டு
பின்னர் உப்பூர் கிழார் மகன் ஊமை
உருத்திரசன்மனாக வந்து இறையனாரகப் பொருளுரைகளுள் நல்லுரை யுணர்த்தினன் என்பது
வரலாறு. திருவால. ஊமை தமிழறிந்த, உக்கிரன் பிறந்த திருவிளையாடல் காண்க.
மூன்றாண்டுப் பருவத்தின் அன்னை முலைப்பாலினறிந்தோர் திருஞான
சம்பந்தர்; “முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன்” என்ற தேவாரப்பாவால் வடகலையும் தென்கலையும் அறிந்தனர் என்பதும், ஞான முணர்ந்தனர் என்பதும் “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானம், உவமையிலாக் கலைஞான
முணர்வரிய மெய்ஞ்ஞானம், தவ முதல்வர் சம்பந்தர்
தாமுணர்ந்தாரந் நிலையில்” என்ற சேக்கிழார் திருவாய் மொழியான் உணர்க.
முதலையுண்ட
பிள்ளையைப் பின் ஈன்று தரச்
சொல்லினிசைத்தோர்
சுந்தரமூர்த்தியாவர். “கரைக் கான் முதலையைப்
பிள்ளைதரச் சொல்லு
காலனையே” என்பது அவர் பாடல்.
அடியை முடியாப் படைத்தோர் என்றது
திருநாவுக்கரசரை. திருநல்லூரில் அப்பர் திருக்கோயிலிற் கண்வளரும்போது
சிவபெருமான் வந்து தம் திருவடியை
முடியில் வைத்தனர் என்பது வரலாறு.
அதற்கு அறிகுறியாக அவ்வூரில் திருவடிநிலை உள்ளது. தாழம்பூ பிரமனுக்குச் சான்றாக வந்து பொய்கூறியதென்பதும் அன்றுமுதல்
தாழம்பூவை முடியிற் புனையாது விடுத்தார் சிவபெருமான் என்பதும் பண்டை வரலாறு. மட்டு
- தேன். ஓலைப்பூ - தாழம்பூ. பனையோலையை நீளமாக ஒன்றுபோலச் சேர்ப்பதை ‘வார்ந்து’ என்றார். பட்ட + ஓலை = பட்டோலை
வார்ந்து சேர்த்து பட்டோலை எழுதிக் கொள்ளப்
பகர்ந்தோர் எனக் கூட்டுக.
பகர்ந்தோர் - மணிவாசகர். சிவபெருமான் ஒரு மறையவர் போலுருவங்
கொண்டு தில்லையில் மணிவாசகப் பெருமான்பால் வந்து நின்று பாவை
பாடிய வாயாற் கோவைபாடுக என்றிரந்து
கோவைப்பா நானூறும் ஓலையில்
வரைந்து கையெழுத்திட்டு வைத்து மறைந்தனர் என்பது
அன்னார் வரலாற்று
நிகழ்ச்சி இது தமிழ் விடுதூது
ஆதலின் தமிழை முன்னிலைப்படுத்துச்
சொக்கநாதர்மீது காதல் கொண்ட தலைவி
கூறுவதாகப் பொருளமைந்துள்ளது.
“தமிழே” என (கண்ணி 62) வந்துள்ள
விளியை முதலில் வைத்துப் பொருள்
கூட்டுக. தமிழே சங்கப்புலவர் இறையனாரும்,
தடாதகைப் பிராட்டியாரும்,
கணபதியும், படைவேளும், சம்பந்தரும், சுந்தரரும், நாவுக்கரையரும்,
மணிவாசகரும் “எல்லாரும் நீயா யிருந்தமையால்” (கண்ணி
15) எனக் கூட்டுக.
8-15: முட்டாதே....................யிருந்தமையால்
(பொ
- ரை.) தடைபடாமல் குறையாத பெருமைத் தமிழ்
மூன்றினையும்
ஓதிய பெரிய முனிவனும், தொல்காப்பியம்
என்ற இலக்கணத்தைக் கூறிய
பழைய முனிவனும், குறையாத சொல்லமைந்த பாவின்
நிலைமையைக்
கொண்டு முதல்வன்பாற் செல்லும் உயிர்களை (அவற்றின் இயலை)
பன்னிரண்டு நூற்பாவைக் கொண்டு முடித்த தூய்மையுடையவரும்,
இருவிழிகளாகிய குற்றமில்லாத கவிதை பாடும் திருமாளிகைத்
தேவர் முதலிய முனிவர் யாவரும், குலத்தாலும் உற்ற சூழ்ச்சியாலும் நீங்காத
உயிர்களைச் சாரும் வினைகளையெல்லாம் தாம் சாற்றிய மந்திரம்
என்ற நூலினால் நீக்கிய வல்லவரும், செந்தமிழிற் பொய்யடிமையில்லாத புலவரென்று புலவர்களாற் புகழ்ந்து கூறப்பட்ட உண்மைத் தொண்டராகிய சங்கப்
புலவர்களும், ஐயடிகள் காடவர்கோன் என்பவரும், செம்மையான (திருத்தமான) சொற்களையுடைய கழறிற்றறிவார் என்பவரும், பாடுவதற்கு அருமையான தெய்வமொழிப் பாவலரும், ஆராய்தற்கு அருமையான கல்லாத மூடர்கட்குச் சிங்கம்
போன்ற கல்வி கேள்வியிற் சிறந்த எல்லாரும் நீயாயிருந்தமையால்.
(வி
- ம்.) ஒல்கா - குறையாத. தமிழ்
மூன்று - இயல், இசை, நாடகம்.
இவற்றை முதலில் ஓதியவர் அகத்தியர்.
தொல்லை + முனி = தொன்முனி.
தொல்லை - பழமை, தொன்முனி: தொல்காப்பியர்.
அல்கா - குறையாத.
மல்கா எனப் பிரித்து நிறையாத
எனப் பொருள் கொள்ளலுமாம். திரம்
-
உறுதிநிலை. பாவின் உறுதி கொண்டு,
நிலைகொண்டு என்க. பதி - கடவுள்.
பசு - உயிர். கடவுள்பாற் செல்லும்
உயிரைப் பன்னிரண்டு நூற்பாக்களைக்
கொண்டு அமைத்தவர். இவர் மெய்கண்ட தேவர்.
தலைவன்மேற் பாயும்
பசுவைப் பன்னிரண்டு கயிற்றாற் கட்டியவர் என மற்றொரு பொருளும்
வெளியே தோன்றிற்று. இதனைத் தொனிப்பொருள் என்பர்.
நேத்திரம் - கண்.
கண்ணாக விளங்குங் கவிதைகள் பாடிய திருமாளிகைத் தேவர்
முதலிய
முனிவர் என விரித்துக் கொள்க.
திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடிய
ஒன்பதின்மரையும் ஈண்டுக் கொள்க. திருமாளிகைத்தேவர்,
சேந்தனார்,
கருவூர்த்தேவர், காடவர் கோன் பூந்துருத்தி
நம்பி, கண்டராதித்தர்,
வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருசோத்தம நம்பி, சேதிராயர்
என்பவர். சாதி - குலம்; உயர்வு.
தந்திரம் - நூல்; சூழ்ச்சி. திருமந்திரம்
என்ற
நூலாற் சார்வினையை யொழித்த வல்லோர் எனக்
கூட்டுக. இவர் மூலர்.
சங்கத்து மேலோர்; சங்கப் புலவர்
நாற்பத்தொன்பதின்மர். கபிலர், பரணர்,
நக்கீரர்
முதலியவர்கள் எனக் கொள்க. ஐயடிகள்
காடவர் கோன்: சேத்திரத்
திருவெண்பாப் பாடியவர். கழறிற்றறிவார் சேரமான் பெருமாணாயனார்.
அயலார் கூறியவற்றையெல்லாம் இருந்த விடத்திலேயே அறியும்
அறிவு
இறைவனாலருளப்பட்டது ஆதலின் இவர் கழறிற்றறிவார்
என்ற பெயர்
பெற்றார். கழறிற்று - சொல்லியசொல். தெய்வ மொழிப் பாவலர்
என்றது
வள்ளுவரை. தேவர் எனவும் தெய்வப்
புலவர் எனவும் இவர் பெயர்
வழங்குவதறிக. கல்லாதார்க்குச் சிங்கம் என்று சொல்லும்படியிருக்கும்
எல்லாரும் என்று விரித்துக் கொள்க.
எனவே சங்கத்திருந்தோர் முதலாகத்
தெய்வப் பாவலர் இறுதியாகக் கல்வி
கேள்விக்குரியவர் எல்லாரும்
நீயாயிருந்தமையால் எனத் தமிழ்மொழியை உயர்த்தினர்
தமிழேயுருவமாக
இருந்தனர் எல்லாரும்; நீ வேறு அவர்கள்
வேறாக எண்ணற்க
இடனில்லையென்பது கருத்து. “தமிழே” எனப் பின்னர்
(கண்ணி 62)
வருவதை முன்னர் வைத்துப் பொருளுரைக்க.
15-16: சொல்லாரும்....................போற்றினேன்
(பொ
- ரை.) புகழ் நிறைந்த எனக்கு
வாய்த்த தெய்வமே உன்னைக்
கண்டு துதித்தால் என் குறைகள் எல்லாம்
நீங்கும் என்று கருதி நின்
பொன்
போன்ற திருவடிகளையே புகலாகக் கொண்டு போற்றுகின்றேன்.
(வி
- ம்.) சொல் ஆரும் சொற்கள்
நிறைந்த என்றும் ஒரு பொருள்
கூறலாம். பொன் அடி அழகிய
அடி எனவும் பொருள் தரும்.
போற்றினேன்
- வணங்குகின்றேன்; துதிக்கின்றேன். இது பின்வருமாறு துதிப்பதை
யுணர்த்தியதாம்.
16-19: பன்னியமென்..................வந்தாய்
(பொ
- ரை.) நெருங்கிய மெல்லிய பஞ்சியால் நூற்கப்படாத
நூலே!
பலரால் நெருடப்படாத பாவே! கிழிந்து குறைந்து
அழுக்குப்படாத இயல்புள்ள
கலையே! மிஞ்சிய நிறம் தோயாத
செந்தமிழே! சொல்லினை ஏராகக்
கொண்டுழும் புலவர் மனம் கருகாது
சொல்லை விளைக்கும் செய்யுளே! ஒரு
குலத்தினும் பிறவாமல் இறவாமல் உயிர்க்குயிராக நின்றாய்.
வந்த குலங்கள் ஐந்தாகவும் தோன்றிவளர்ந்தாய்.
(வி
- ம்.) பஞ்சி - பஞ்சு. பன்னிய
- சொல்லிய எனலுமாம். நெருடுதல்
- தடவுதல். நூல் அறுந்தபோது நாவில்
நக்கிக் கையால் உருட்டிப்
பொருத்திப் பரப்புவது பா. கலை - ஆடை,
உடை. கிழிதலும் குறைதலும்
அழுக்குப் படிதலும் கலைக்குப் பொருந்திய இயல்பு. நூல்களுக்குப் பலவகை
நிறம் தோய்ப்பது இயற்கை. செய்யுள் - பாட்டு;
விளைநிலம். பிறந்தும் இறந்தும்வருகின்ற மக்கள் குலத்திற் பிறவாதும்
இறவாதும் உயிர்க்குள்ளுயிராய்ப் பிறந்து வருகின்றாய். குலம் பிறப்பில் இல்லையெனினும்
பின் ஐந்து குலமாகவும் வந்து வளர்ந்தாய். ஐந்து
குலம் என்றது, ஐந்து பாக்களை: வெண்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா,
மருட்பா என்பன அவற்றின் பெயர். தமிழே! நீ நூல் எனவும்
பா எனவும், கலை எனவும்,
செய்யுள் எனவும், பெயர் பெற்றாய்; ஆயினும் அவற்றின் பண்பு
நினக்கில்லை; நீ தனிப் பண்புடையாய் என்க. சொல்லேருழவர் - புலவர். சொல்லினை ஏராகக்
கொண்டுழுது பொருட்பயனை மக்கள் மனத்தில் விளைப்பவர்
என்ற காரணம் தோன்றிற்று. “சொல்லேருழவர் பகை” (திருக்குறள் 872) இந்நூலிற்
சொல்லேருழவர் எனப் (கண்ணி 64) பின்னும் வருவது காண்க. சொல்
நெல் எனவும் பொருள்படும்; ஆதலின் உழவரகம் தீயாது நெல்விளைகின்ற
வயலே என மற்றுமொரு பொருள் வழங்குவது காண்க.
19 - 22 : இருநிலத்து.................பிறந்தாய்
(பொ
- ரை.) பெருமை தங்கிய புவியிற்
புண்ணியம் வாய்ந்த
உந்தியிடத்தில் காற்றுத் தங்கிப் பின் வாக்கு
ஆகிய சூற் கொண்டிருந்து
தலையும் கழுத்தும் மூக்கும் மார்பும் ஆய நான்கிடத்தினும் சார்ந்து
உதடும்
நாக்கும் பல்லும் கெடாத மேல்
வாயும் ஆய கருவிகளால் வடிவமாகித்
தலையினின்று மீண்டு ஏற்குமாறு முதலெழுத்து
முப்பதாகவும் சார்பெழுத்து
இருநூற்று நாற்பதாகவும் நன்றாகப் பிறந்தாய்.
(வி
- ம்.) புண்ணியம் - அறம்; தூய்மை. புண்ணியஞ்
சேருந்தி என்றது
நிறையுயிரின் உந்தியை. முற்செய்த புண்ணியமுடையவரே எண்வகை
யுறுப்புக்குறை நீங்கிப் பிறப்பார் என்ற கருத்தினையுட் கொண்டது.
உறுப்புக்
குறைவில்லா உடம்பின் உந்தி எனக் கொள்க.
உறுப்புக் குறைவுடைய
உடம்பின் உந்தியினின்று வளி மேலெழினும் எழுத்துவடிவமாகத்
தோன்றாது
என அறிக. பவணந்தி முனிவர்
“ிறையுயிர் முயற்சியின்” என்றதும்
அக்கருத்தினை விளக்கும். வளி - காற்று. இது
உதானன் என்ற
காற்றினையுணர்த்தும். பிராணன், அபானன், சமானன், உதானன்,
வியானன்,
நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்துவகை
எனவும், அவைகள் இன்ன இன்னவிடங்களின்
நிற்கும் எனவும்; உதானன்
என்னும் காற்று உந்தியில் நிற்கும்
என்றும் காற்றினியல் கூறும் தத்துவ நூல்
கூறுவது காண்க. உந்தி - கொப்பூழ்.
“உந்தியிற் றோன்று முதான
வளிப்பிறந்து, கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து
- வந்தபின், நாசிநாவண்ண
மிதழெயிறு மூக்கெனப், பேசுமெழுத்தின் பிறப்பு” என்பர் நேமிநாத
நூலுடையார். “ிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப, வெழுமணுத்
திரளுரங்
கண்ட முச்சி, மூக்குற் றிதழ்நாப்
பல்லணத் தொழிலின், வெவ்வேறெழுத்தொலி யாய்வரல் பிறப்பே” என்ற நன்னூற் கருத்தும்
நோக்குக. வாக்கு நான்கு வகைப்படும்; பரை, மத்திமை, வைகரி,
பைசந்தி என. நன்னூலிலக்கணத்தின்படி
சார்பெழுத்து முந்நூற்றறுபத்தொன்பதாம், தொல்காப்பியத்தின்படி மூன்றாம்,
உயிர்மெய் யெழுத்துக்களைக் கூட்டினும் இருநூற்றுப் பத்தொன்பதாம்.
இந்நூலாசிரியர் இலக்கண விளக்கம் என்ற
நூலிற் கூறியபடி தொகை
காட்டினர். அந்நூலுள் உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு; உயிரளபெடை 7,
ஒற்றளபெடை 11, குற்றியலுகரம் 1, குற்றியலிகரம் 1, ஆய்தம் 1, ஐகாரக்
குறுக்கம் 1, ஒளகாரக் குறுக்கம் 1, மகரக்
குறுக்கம் 1 எனப் பகுத்துத்
தொகுத்து இருநூற்று நாற்பது என எண்ணிய
முறையறிக (சூத். 5).
எழுத்துக்களின் பிறப்பு மக்கட் பிறப்புப்போல
வெளிப்படுமாறு வளிதரித்து,
கருப்பமாய், வண்ணத்துருவாய்த் தலைதிரும்பிப் பிறந்தாய் என வமைத்திருக்கும் சொன்னயங்
காண்க.
22 - 27 : மேற்படவே.......................படிப்பிப்பாருண்டோ
(பொ
- ரை.) இவ்வாறு நீ பிறந்ததற்கு
மேற்பட்டு எண் முதலாகச்
சொல்லும் பன்னிரண்டு பகுதிகளாகச் செய்து மண்ணுலகிற் பிறந்த
முதன்மையுடையோர் வளர்க்குங்காலத்தில் ஆசிரியர்கட்குக் கண்மணிபோல் விளங்கிப் பள்ளிக்கூடத்தில் அசையாம் பலப்பல தொட்டில்களிற்
படுப்பித்துச் சிறுவர் கூடித் தள்ளித் தாலாட்டி
உள்ளிடம் விளங்கும்படி மஞ்சளாற்றேய்த்துக் கழுவி மையிட்டு மூன்று பாலும் மிகுதியாகப்
புகட்ட உயர்ந்து வளர்ந்தாய். மைந்தர்களையே பத்துப் பருவமாக்கி நீ
வளர்க்கின்றாய்; அத்தகைய இயல்பு வாய்ந்த நின்னையொருவரால் வளர்த்துவிடக் கூடுமோ? கூடாதன்றோ?
முதலில் நினைக்கும் கல்வியெல்லாம் நின்பாலே யுள்ளனவெனவுணர்ந்து
நின்னைப் படிக்கும் இயல்புடையவரே மனிதர் எல்லாரும். உனக்குக்
கற்பிப்பவர் ஒருவருண்டோ? இல்லை.
(வி
- ம்.) எண் முதலாக ஈராறு
பருவம் என்றது: “எண் பெயர்
முறைபிறப் புருவ மாத்திரை, முதலீ
றிடைநிலை போலியென்றா, பதம்புணர்
பெனப்பன் னிருபாற் றதுவே” என நன்னூலார்
எழுத்திலக்கணம் பன்னிரு
பகுதியுடையது எனப் பிரித்தமையைக் குறித்தது.
மண் முதலோர் என்பதை
மண்ணிலுள்ள முதன்மையுடையார் என விரித்துப் புலவர்க்குப்
பொருத்துக.
அசை என்பது ஏட்டுச் சுவடிகளைத்
தூக்கும் பலகையாம். அசையாம்
தொட்டில் என உருவகமாகக் கொள்க.
தால் ஆட்டி - நாவினால் அசைத்து.
(ஒலித்து). அ, ஆ, இ,
ஈ என ஒலிப்பதைக்
காட்டிற்று. அஃது, பண்டைக்
காலத்து ஏட்டுச் சுவடிகளில் எழுத்தெழுதி
அவை நன்கு விளங்குவதற்கு
மஞ்சளையரைத்துப் பூசுவதும் கரியைக் கரைத்துப் பூசுவதும்
வழக்கமாம்.
இக்கருத்துக் குறிப்பால் விளங்க “ஞ்சட் குளிப்பாட்டி
மையிட்டு” என்றார்.
மையிடுதல் - கரிபூசுதல் முப்பால்: அறம், பொருள், இன்பம்
என்ற
பொருள்களை. சிறுவர்கட்கு ஊட்ட அதனால் நீ
பெருகினை யெனத் தமிழ்க்குக் கொள்க.
மைந்தர் - மஞ்சர் எனப் போலியாய்
நின்றது. மைந்தர்
என்றது ஆண் பெண் என்ற
குழந்தைகளை. பத்துப் பருவம் இட்டு
வளர்த்தாய் என்றது, காப்புப் பருவ
முதலாகக் கூறும் பத்துப் பருவங்களையும்
இயற்றிப் பிள்ளைத் தமிழ் என்ற பேரிட்டு
ஆடவர் பெண்டிர் என்ற
மக்களைப் புகழால் வளரும்படி செய்தாய்
என்ற கருத்தினையுட் கொண்டது.
தமிழை வளர்க்கின்றேன் என்று கூறுவது பொய்யுரையும்
புனைந்துரையுமாம்
என்பது விளங்க “உன்னை வளர்த்துவிட
வொண்ணுமோ” என்றார், நினையும்
படிப்பு - எண்ணுங் கல்வி, கலை,
எல்லாம்: எல்லாவற்றையும் உணர்வதற்கு
எனச் சொல் வருவித்துக் கொள்க.
மக்களை வளர்ப்பது போல வெளியே
பொருள் தோன்றுமாறு பருவஞ்செய்து வளர்க்கு நாள், தொட்டிலிற் கிடத்தி,
தாலாட்டி, மஞ்சட் குளிப்பாட்டி, மையிட்டு,
முப்பாலும் மிகப் புகட்ட நீ
வளர்ந்தாய் என்ற சொற்சுவை காண்க.
முப்பால் என்பதும் பிள்ளைகட்குப்
புகட்டும் தாய்ப்பால், பசுப்பால், ஆட்டுப்பால் எனப் பொருள் தருமாறு
புணர்ந்திருப்பதும் காண்க.
27 - 34 : புனைதருநற்...................மகிழ்ந்தாயே
(பொ
- ரை.) அணிசெய்கின்ற செய்யுட்குரிய சொற்கள் நான்கும்,
உயர்ந்த செந்தமிழ்ச் சொற்கள் நான்கும், மெய்யாகிய
உட்பொருளில்
எழுவகைத் திணைகளும், குற்றமில்லாத எழுத்து முதலாகிய யாப்பின்
உறுப்புக்கள் எட்டும், அலங்காரம் முப்பத்தைந்தும் இயைந்து வேறுபட்டுப்
பேரழகு வாய்ந்த மாப்பிள்ளையாகிக் குலமாகிய
அப்பாவின்கண் அமைந்த
செப்பலோசையும், அகவலோசையும், துள்ளலோசையும், தூங்கலோசையும்
ஆகிய பண்கள் பட்டத்துத் தேவியராகவும்,
உயர்ந்த மனத்தாலாய்ந்த ஐந்து
கருவிகளைப் பெற்ற நூற்று மூன்றாகிய
பண்களும் பின்னர் வரைந்த
மனப்பாவையராகவும் கொண்டு மதிக்கப்படும் நல்ல
ஆதரவால் ஒன்பது
சுவையாகிய மக்களைப் பெற்றெடுத்தாய், பெருமையாகிய வாழ்வினைப்
பெற்றாய்; பொருந்தி நின்னைவிட்டு நீங்காத பண்கள் முதலாகிய
பெண்டிர்களொடும் பிள்ளைகளொடும் நாடகமாகிய பெண்கள் கொலுவில் வீற்றிருக்கப்பெற்றாய்.
உலகத்தோர் புகழும்படி தாழ்வில்லாத பதினெட்டு வகைச் சிறப்புக்களாகிய வாழ்வெல்லாம்
நோக்கி மகிழ்ந்தாய்.
(வி
- ம்.) மக்கள் பிறந்து வளர்ந்து
அணி முதலியவை புனைந்து
மணமகனாகிப் பெண்களை மணந்து காமக்
கிழத்தியரையும் மணந்து
மக்கட்பேறு பெற்றுப் பின் உலக வாழ்வில்
இன்பங்கண்டு மகிழ்ந்திருப்பது
போலத் தமிழும் பிறந்து வளர்ந்து
பின்னர் வாழ்வு கண்டு மகிழ்ந்ததாக
உருவகப்படுத்துகின்றார் ஆசிரியர். முன்னர் வளர்ச்சி கூறி
முடித்தார்.
மாப்பிள்ளையாய்ப் பெண்களை மணந்து மகப்பேறு
பெற்று வாழ்வுபெற்ற
முறை ஈண்டுக் கூறுகின்றார். தமிழ்
மொழியை மாப்பிள்ளையாக
உருவகப்படுத்தி அதற்கு அணிகலன்களாக்கினார்; செய்யுட்சொல்
நான்கு,
செந்தமிழ்ச் சொல் நான்கு, பொருளில்
உள்ள எழுவகைத் திணைகள், எழுத்து
முதலிய யாப்புறுப்புக்கள் எட்டு, அலங்காரம் முப்பத்தைந்து
ஆகிய இவற்றை.
பேதியா - பேதித்து; வேறுபட்டு. பல்வகையணிகலம் புனைந்ததனால்
வேறுபட்டுப் பேரழகுடைய மாப்பிள்ளையானது தமிழ் என்பது விளங்கிற்று.
செய்யுட் சொல் நான்காவன:- “இயற்சொல்
திரிசொல் திசைச்சொல்,
வடசொலென், றனைத்தே செய்யு ளீட்டச்
சொல்லே” என்பதனாலறிக.
செந்தமிழ்ச் சொல் நான்காவன: பெயர்,
வினை, இடை, உரி என
வகுத்த
சொற்கள். மெய்யுட்பொருள் என்றதை தமிழ்மொழியின் உடலுள்
அமைந்த
பொருள் எனக் கொள்க. உண்மையாகிய
அதனுள்ளிருக்கும் பொருள் எனக்
கொளலுமாம். அகம் புறம் என்ற
பொருளியலில் வகுத்த எழுவகைத்
திணைகள். அகத்திற்குரியவை கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் பெருந்திணையென்பன, புறத்திற்குரியவை வெட்சி, காஞ்சி, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை
என்பன. எழுத்து, அசை, சீர், தளை,
அடி, தொடை, ஓசை, இனம் என்பன
யாப்புறுப்புக்கள். அலங்காரம்
முப்பத்தைந்தாவன தன்மை யணிமுதற் பாவிக
மிறுதியாகத் தண்டியலங்கார
நூலிற் கூறப்படுவனவாம். செப்பலோசை வெண்பாவிற்குரியது. அகவலோசை அகவற்பாவிற்குரியது. துள்ளலோசை
கலிப்பாவிற்குரியது.
தூங்கலோசை வஞ்சிப்பாவிற்குரியது. இந்நான்கு பண்களையும் தமிழ்
மணமகனுக்குப் பட்டத்து மனைவியராக உருவகப்படுத்தினர். தோகையர் -
மயில்போன்ற சாயலுடையவர் என்ற காரணப் பெயர்;
இஃது இடுகுறியளவாய்ப் பெண் என்ற பொருள் தந்தது.
மனத்தெண் கருவி ஐந்து என்றது,
தோற் கருவி, துளைக்கருவி, கஞ்சக் கருவி, நரம்புக்
கருவி, மிடற்றுக் கருவி என்பவற்றை. மனத்து எண்கருவி என்பதை
மனத்தால் எண்ணப்படும்
கருவியென்றாவது, மதிக்கப்படுங் கருவியென்றாவது பொருள் கொள்க.
ஈன்றிடும் - பெற்ற. இடு: துணைப்
பகுதி. ஐங்கருவிகளுங்கூடிப் பெற்ற நூற்று
மூன்று பண்கள் என்க. இசையரங்கில்
ஐவகைக் கருவிகளும் அமைத்துப்
பாடுமுறை சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையிற் காண்க. குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி,
தாரம் என்ற ஏழிசைகளையும் “ன்னிரு
காற்றிரிக்கப் பன்னிரு பாலை பிறக்கும்”
எனவும், “ன்னிரு பாலையினுரு
தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்று மூன்றாதற்குக்
காரணமாமெனக் கொள்க” எனவும் அடியார்க்கு
நல்லார் உரைப்பது அறிக.
(அரங்கேற்று காதை 70 - 94 உரை.) கல்யாணப் பாவையர்
- வதுவைக்குரிய
பெண்கள். ஒரு தலைவனுக்கு மனைவியர்
சிலர் என்பதும், பின் முறையே
அவன் காமக் கிழத்தியர் காதற்
பரத்தையர் பலரை மணந்து வாழ்வான்
என்பதும் இலக்கிய மரபு. நம்பியகப்
பொருளில் “காதற் பரத்தையர், காமக்
கிழத்தியர்” எனவும், “அவருளும் வரைதற்குரியோருளரே” எனக்
கூறியிருப்பதும் காண்க. எனவே நூற்று
மூன்று பண்களும் மணமகனுக்குப்
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியர்
எனக் கொள்க. “ாடுமிசை
யெல்லாமுன் பாவையராச் சேர்த்தாய்” என்பர் (164) பின்னும். இயல் இசை
நாடகம் என்ற முத்தமிழில் நடுநின்ற
இசை சிறப்புடையது ஆதலின்
பண்களையெல்லாம் பெண்களாகக் கொண்டார்; பெண்கள் உடற்கு
இன்பந்தருவது போலப் பண்கள் செவிக்
கின்பந்தருவது குறித்து. எண்கொளும் - மதிப்புப் பெற்ற. தாரகம் - ஆதாரம். நவரசம் - ஒன்பது சுவை. இவை
பண்கள் என்ற பெண்களை ஆதாரமாகக் கொண்டு பிறந்த பிள்ளைகள். வீரம்,
அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, சாந்தம் என்பன
பெயர். பண்களுடன் பாடியபோதுதான் சுவை தோன்றும்; பண்களின்றிச்
சுவை தோற்றுவித்தல் இயலாது. நன்மகப்பேறு பெற்றவரே பெருவாழ்வு பெற்றவராவர் என்பது தோன்றப் “பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே” என்றார். முற்கூறிய பெண்கள் பிள்ளைகளுடன் நாடகமாகிய கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாய் என்க. நாடகத்தைக் கொலுக்கூடமாக உருவகம் கொள்க. பெண்கள்
கூடிய கொலு என அடையாக்குக. பெண்கள் மிகுதியாகக் கூடிய
கொலு “பெண் கொலு” என்க. கொலு - அரங்கு, நாடக
மேடை. அட்டாதசம் - பதினெட்டு; அட்டம் - எட்டு; தசம் - பத்து. எட்டுடன்
சேர்ந்த பத்து என்க. வன்னனை
-
வருணனை என்ற வடமொழியின் சிதைவு.
சிறப்பு என்பது பொருள். மலை,
கடல், நாடு, நகர், பெரும்பொழுது
ஆறு, சிறுபொழுது ஆறு, சூரியன் சந்திரன்
ஆகியவை. காப்பியங்களில் வருணிக்கப்படுவன பெரும்பாலும் இவை.
“லைகடனாடு வளநகர் பருவ, மிருசுடர்த்
தோற்றமென் றினையன புனைந்து”
என்றார் தண்டியாசிரியரும். தமிழே நீ இத்தகைய
சிறந்த வாழ்வெல்லாங்
கண்டு மகிழ்ந்தாயே என்று தமிழின் சிறப்புரைத்தார்.
இங்ஙனம் உருவகம்
செய்த அருமை நனி பெரிதும்
போற்றிப் பாராட்டற்பாலது.
34
- 41 : ஆழநெடுங்..................பார்வேந்தோ
(பொ
- ரை.) ஆழமான நீண்ட அழகுடைய
வையையாற்றி
லென்னுடைய அன்பர் சிவபெருமான் மேற்பட்ட
கொடிய பிரம்படியைச்
செங்கோல் போல ஏற்றுக் கொண்டாய்!
அடங்காத வலிமையுள்ள எமது
மன்னனே, பத்தென்று கூறுந் திசைக்குள்ளே நின்னாட்சி
செல்லாத
இடமொன்றுண்டோ! இங்கே யுன் தேசம்
ஐம்பத்தாறில் வழங்கும் திசைச்
சொற்கள் பதினேழும் குற்றமற நீ அரசு
புரியவைத்த குறுநில மன்னர்களோ!
அலைவீசுகின்ற மேல்கடலும் கீழ்கடலும் முதன்மையான தென்குமரியாறும் வடவேங்கட மலையும் எல்லையாக வகுத்தாய். இவற்றின் நடுவேயிருந்த தென்பாண்டி முதல் புன்னாடு முடிவான பன்னிரண்டு நாடுகளும்
அத்தமிழ் நாட்டின் பகுதிப்பட்ட நாடுகளோ! அந்நாடுகளுள் வையை, கருவை, மருதாறு,
மருவூர் இவற்றின் நடுவே அரசே நீ
வாழும் அரண்மனையுளதோ! மூவேந்தரை ஊர்தியாகக் கொண்டு மூன்றுலகமும் போய்ச்
சுற்றிவந்த பாவேந்தனே! நீ பெரிய பார்வேந்தனோ! (நானறியேன்)
(வி
- ம்.) கோலம் நீர்க்கரையுமாம். செந்தமிழின்
பொருட்டு
மணிவாசகப் பெருமான் பாடல் கேட்டிரங்கிச் சிவபெருமான்
மண் சுமக்க
வந்தமையாற் பிரம்படியைத் தமிழ் ஏற்றுக்கொண்டதாகக் கூறினர்.
தமிழ்ப்
பற்றுடையார் சிவபெருமான் ஆதலின் மணிவாசகருக்காகப் பிரம்படிபட்டார்
என்பது கருத்து. மேல் கீழ் என்ற
இடங்களை எட்டுத்திசையுடன் கூட்டப்
பத்தாம். செங்கோல் என்பது ஆட்சியைக் குறித்தது.
மொழியாட்சி தமிழ்
மொழிபேசாத திசையொன்று மின்று என்பது கருத்து.
ஒரு காலத்தில் இந்நாடு
ஐம்பத்தாறு தேசங்களாகப் பகுக்கப்பட்டிருந்தன வென்பதும் அவற்றுள்
தமிழ்மொழி வழங்கும் நாட்டினைச் சார்ந்தன பதினேழு எனவும்
தோன்றுகின்றது. “சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனம்
துளுக்குடகங்,
கொங்கணம் கன்னடங் கொல்லந் தெலுங்கங்
கலிங்கம்வங்கம், கங்க
மகதங்கவுடங் கடாரங் கடுங்குசலந், தங்கும்
புகழ்சேர் தமிழ்சூழ் பெரும்
புவிதா மிவையே” என்பதனாலறிக. பதினேழு
நாட்டு மொழிகளும் உனக்குச்
சிற்றரசரோ என்றார், நெருங்கிய தொடர்புடைய மொழிகளெனக் கருதி.
மன்னியர் - மன்னர், அரசர். கோக்குமரி
என்றது தலைமையான
குமரியாற்றினை. “வட வேங்கடந் தென்குமரி
யாயிடைத் தமிழ்கூறு
நல்லுலகம்” எனத் தொல்காப்பியத்திற் பாயிரம்
வகுத்தபடியிது. குடக்கு -
மேற்கு. குடக்குக் கடல் குடகடல் என்று
புணர்ந்து நின்றது. வடவரை -
வடக்கின்கண் உள்ள மலை. இது
குறிப்பால் வேங்கடத்தையுணர்த்திற்று.
முன்னுறும் - நினைக்கின்ற; கருதுகின்ற. “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி,
பன்றி யருவாவதன் வடக்கு - நன்றாய, சீத மலாடு புனனாடு
செந்தமிழ்சே ரேதமில் பன்னிருநாட் டெண்”
எனக் கூறியவற்றைத் தென்பாண்டி முதற் புனனாடீறான பன்னிரண்டு
எனப்
பகர்ந்தார். அப்பால் + நாடோ. அப்பகுதியினுட்பட்ட நாடோ.
ஐய - அரசனே
இது விளி. வையை யாற்றின்
வடக்கும் கருவூரின் கிழக்கும் மருதயாற்றின்
தெற்கும் மருவூரின் மேற்கும் ஆகிய எல்லையையுடைய நடுவிடத்தை
“டுவே” என்றார். இஃது செந்தமிழ் நாட்டெல்லையென்பது.
கருவை -
கருவூர். இவ்வெல்லை” அவற்றுள், இயற்சொற்றாமே” என்ற தொல்காப்பியச்
சூத்திரத்திற்கு இளம்பூரணர் முதலிய உரையாசிரியர் கூறியபடியாம்.
மூவேந்தர்: சேரன், சோழன், பாண்டியன் என்ற
தமிழ் நாட்டரசர். வாகனம் - ஊர்தி. அம்மன்னர் வாயிலாகத் தமிழ்மொழி எங்கணும் சுற்றிவந்தது என்பது கருத்து. இமயமுதற் குமரிவரை ஒருமொழி வைத்துலகாண்ட சேரலாதன்
எனவும், திருக்கைலாயஞ் சென்று ஞானவுலா அரங்கேற்றினர்
சேரமான்
பெருமாணாயனார் எனவும் வரலாறு தோன்றுதலால்
“மூவுலகும் போய்
வளைந்த பாவேந்தே” என்றார். பெரிய பார் வேந்தோ
என்பதிலுள்ள ஓகாரம்
வியப்புப்பொருளைக் காட்டிற்று. மன்னியரோ, பானாடோ, அரண்மனையோ
என்பவற்றிலுள்ள ஓவும் அன்ன. நீ
பேரரசனாக இருப்பதனால் உனக்குக் கீழ்ச்
சிற்றரசரும் பன்னிரண்டு நாடுகளும் உள, அரண்மனையும் நடுவேயுளது,
நின்
செங்கோல் செல்லாத திசையும் இல்லை
எனப் பொருள் கொள்க. மூவேந்தர்
மண், விண் பாதலம் என்ற
மூன்றுலகங்களினும் சென்றபோது தமிழும்
அவர்களுடன் சென்றது என்க. சோழன்
கிள்ளி பாதலத்திற் சென்று நாக
கன்னியை மணந்ததும், முசுகுந்தன் விண்ணுலகு சென்று அசுரர்களை வென்று தேவர்களைக் காத்ததும், நிலந்தருதிருவிற் பாண்டியன் மேலுலகு சென்று தேவர் அசுரர் பகையைத் தீர்த்ததும்,
சேரர்களிற் சிலர் வானளவும் சென்று வென்று வானவரம்பன் என்ற பெயர் பெற்றதும்
இவைபோன்ற வரலாறுகள் தமிழ் நாட்டரசர் மூவுலகுஞ் சென்றனர் என்பதைப் புலப்படுத்துகின்றன. பத்துத் திசையும் தமிழரசன் செங்கோல் சென்றது வரலாறுகளால் உணர்க.
முற்றும்