குறுந்தொகை
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. . ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.இந்நூலில் அமைந்துள்ள பல் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
நூலமைப்பு
நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல்,கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னனியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.
2. குறிஞ்சி – தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.)
1கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்தி, தனது அன்பு தோன்ற நலம் பாராட்டியது
ஆசிரியர்: இறையனார்
விளக்கம்: பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும் உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக: நீ அறியும் மலர்களுள், எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போல நறுமண முடைய பூக்களும், உள்ளனவோ?
3. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே நின்றதை அறிந்த தோழி அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் உடையவளாகி அவன் செவியில் படும்படி அவனது நட்பைப் பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு மிகச் சிறப்புடையது என்று உணர்த்தியது.)
2நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
துறை: என்பது தலைமகள் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித்தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது.
ஆசிரியர்: இறையனார்
விளக்கம்: மலைப் பக்கத்தில் உள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது, பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.
16. பாலை – தோழி கூற்று
(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று கூறி ஆற்றுவித்தது.)
3உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர் நுதி புரட்டு மோசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே. 5
துறை: பொருள்வயிற் பிரிந்த இடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது.
ஆசிரியர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ.
விளக்கம்: தோழி ஆறலை கள்வர் செப்பஞ் செய்யும் பொருட்டு இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை நக நுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல, செம்மையாகிய காலை உடைய ஆண் பல்லியானது, தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய, கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள் வயிற் சென்ற, அழகிய அடியை உடைய தலைவர் நம்மை நினையாரோ?
20. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, என்பாலுள்ள அருளையும் அன்பையும் நீக்கிப் பிரிவது அறிவுடையோருக்கு ழகன்று” என்று தலைவி உணர்த்தியது.)
4அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!
துறை: செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. –
ஆசிரியர்: கோப்பெருஞ் சோழன்
விளக்கம்: தோழியே, அருளையும் அன்பையும் துறந்து தம் துணைவியை விட்டு பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு பிரியும் செயலை உடைய தலைவர் அறிவுடையவராயின், அந்த ஆற்றலை உடையோர் அறிவுடை யவரே ஆகுக! அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம் அறிவிலேம் ஆகுக!
31. மருதம் - தலைவி கூற்று
(அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும் இயல்புடையேன்; என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
5மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த 5
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.
துறை: நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.
ஆசிரியர்: ஆதிமந்தி
விளக்கம்: மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனை வீரர் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும் ஆகிய எவ்விடத்தும் கண்டேனில்லை; யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே; என் கையில் உள்ள, சங்கை அறுத்துச் செய்து விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும் ஆடுகின்ற களத்தில் உள்ள ஒருவனே.
40. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தெய்வத்தாலாகிய கூட்டத்தின்பின்பு தலைவி, தலைவன் பிரிவா னோவென ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)
6யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. 5
துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது
ஆசிரியர்: செம்புலப் பெயல்நீரார்
விளக்கம்: என்னுடைய தாயும், நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தையும், நின் தந்தையும், எந்த முறையில் உறவினர்? இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல, அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.
49. நெய்தல் - தலைவி கூற்று
(தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)
7அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 5
துறை: தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது.
ஆசிரியர்: அம்மூவனார்
விளக்கம்: அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையை உடைய தலைவ இப்பிறப்பு நீங்கப்பெற்று, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!
69. குறிஞ்சி - தோழி கூற்று
(இரவுக்குறியை விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வாரற்க" என்று தோழி மறுத்துக் கூறியது.)
8கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட நடுநாள் 5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
துறை: தோழி, இரவுக்குறி மறுத்தது.
ஆசிரியர்: கடுந்தோட் கரவீரனார்
விளக்கம்: கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்து பாட்டை அடைந்ததாக, கைம்மைத் துன்பத்தைப் போக்கமாட்டாத, விருப்பத்தையுடைய பெண்குரங்கானது மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, சுற்றத்தினிடத்து கையடையாக ஒப்பித்து ஓங்கிய மலைப் பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும், சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே, நள்ளிரவில், வாரற்க; அங்ஙனம் நீவரின் நினக்குத் தீங்குண்டாகு மென்றெண்ணி நாம் வருந்துவோம் நீ தீங்கின்றி வாழ்வாயாக!
124. பாலை - தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)
9உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
துறை: புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
ஆசிரியர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ.
விளக்கம்: தலைவ உப்பு வாணிகர் பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும், விரிந்த இடத்தையும் பெற்ற குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய, ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள், இன்னாமையையுடையன என்று கூறித்தனியே செல்லக் கருதினீராயின் தலைவரைப் பிரிந்த தனிமையையுடைய மகளிருக்கு வீடுகள் இனிமை தருவனவோ? அல்ல.
167. முல்லை – செவிலித்தாய் கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)
10முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின் 5
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.
துறை: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.
ஆசிரியர்: கூடலூர் கிழார்.
விளக்கம்: தோழி முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை துடைத்துக் கொண்ட ஆடையை துவையாமல் உடுத்துக் கொண்டு குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிதென்று உண்பதனால் தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது.
முற்றும்
இணையத்தமிழ் கல்விக் கழகம் பிடிஎஃப் இணைப்பு:
சிறப்பு .ஒவ்வொரு பாடலுக்கும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கிறன்
ReplyDeleteஆம்
ReplyDelete