Tuesday, December 11, 2012

புறநானூறு(212-216)


புறநானூறு

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.

பாடியவர்கள்

இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

நூல் அமைப்பு

இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர்,வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்ப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.

புறநானூறு வழி அறியலாகும் செய்திகள்

அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.

இப்புறநானூற்றில் நமக்கு பாடப்பகுதியாக அமைந்திருப்பது, உணர்ச்சியொத்த நட்பிற்கு எடுத்துகாட்டாய்த் திகழ்ந்த பிசிராந்தையார் பாடலும், கோப்பெருஞ்சோழனின் பாடல்களும் ஆகும்.


212
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,
வைகு தொழில் மடியும் மடியா விழவின்                  5
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி,
கோழியோனே, கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.                    10


திணை - அது; துறை - இயன்மொழி.

கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

(இ - ள்.) உம்முடைய இறைவன் யார்தானென்று கேட்பீராயின், எம்முடைய இறைவன் களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை ஆமையிறைச்சியுடனே வேட்கைதீர அக்களமர் உண்டு ஆரன்மீனாகிய கொழுவிய சூட்டை அழகிய கதுப்பகத்தேயடக்கி மதுவுண்ட மயக்கத்தால் வைகுந்தொழிலொழியும் நீங்காத விழவினையுடைய புது வருவாயுளதாகிய நல்ல சோழநாட்டுள்ளும் பாணருடைய வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப் பகையாய் உறையூரென்னும் படைவீட்டிடத்திருந்தான், கோப்பெருஞ்சோழன்; புரையில்லாத நட்பினையுடைய பொத்தியென்னும் புலவனொடு கூடி மெய்ம்மையார்ந்த மிக்கமகிழ்ச்சியை நாடோறும் மகிழ்ந்து-எ - று.

கோழி - உறையூர்.

நுங்கோ யாரென வினவின், எங்கோக் கோப்பெருஞ்சோழன், அவன் பசிப்பகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத்திருந்தான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.



213
மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள்,
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,                                 
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்,         5
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்;
நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடு மான் தோன்றல்!
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ                                     
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும்                                     10
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே:
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே!
நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த                                     
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்,                            15
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே?
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து   
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு                  20
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால், நன்றே வானோர்
அரும் பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே.

திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி.

அவன் மக்கண்மேற் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.




(இ - ள்.) மடுத்தெழுந்த போரின்கட் கொன்ற மிகுதிபொருந்திய வலியமுயற்சியையுடைய வெண்கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும் வென்றியையுடைய வேந்தே! கிளர்ந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்ட இப்பரந்தவிடத்தையுடைய உலகத்தின்கண் நின்னிடத்துப் போர்செய்யவந்த இருவரையும் கருதின், பழையதாய்த் தங்கப்பட்ட வலியை யுடைய நின் பகைவேந்தராகிய சேரபாண்டியருமல்லர், போரின்கண் விரும்பிய காட்சியுடனே நின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்தாம்; நினையுங்காலத்து நீயும் அவர்க்கு அத்தன்மையையாகிய பகைவனல்லை; பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ! நீ பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தித் தேவருலகத்தின்கட் போய்ப் பின்பு நீ ஒழித்த அரசாட்சியுரிமை அவர்க்குரித்து; ஆதலால், அப்பெற்றித்தாதலும் அறிவோய்! பெரிதும் இன்னமும் கேட்பாயாக; புகழை விரும்புவோய்; நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின்புதல்வர் தோற்பின் நினது பெரிய செல்வத்தை அவர்க்கொழிய யாவர்க்குக் கொடுப்பை? போரை விரும்பிய செல்வ! நீ அவர்க்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர் உவப்பப் பழியை உலகத்தே நிறுத்துவை; ஆதலான், ஒழிவதாக நின்னுடைய மறன்; கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக; நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அஞ்சினோர்க்கு அரணாகும் நினதடிநிழல் மயங்காமற் செய்தல்வேண்டும், நல்வினையை; விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்தவர் விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள-எ - று.


214
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;                         
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே:                 5
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு,
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,                           
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;                                    10
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.

திணை - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி.

அவன் வடக்கிருந்தான் சொற்றது

(இ - ள்.) அறவினையைச்செய்வேமோ அல்லேமோவென்று கருதி ஐயப்பாடு நீங்கார் அழுக்குச்செறிந்த காட்சிநீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாதோர்; யானைவேட்டைக்குப்போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்; அதனால் உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தலுண்டாமாயின் அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலுங் கூடும் (பி-ம். கூட்டும்); அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின், மாறிப் பிறத்தலிலேகூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங்கூடும்; மாறிப்பிறவாரென்று சொல்லுவாருள ராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடிநின்று இறத்தல் மிகத் தலையாயது; அதனால் எவ்வாற்றானும் நல்வினைசெய்தல் அழகிது-எ - று.


215
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை                       
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்                             5
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன்மன்னே.

திணை - பாடாண்டிணை;    துறை - இயன்மொழி.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வாராரென்ற சான்றோர்க்கு அவர் வருவாரென்று சொல்லியது,

(இ - ள்.) கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும் தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை வெளிய தயிரின்கட் பெய்து இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும் அவரை கொய்வார் நிறையவுண்ணும் தென்திக்கின்கட் பொதியின்மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டினுள்ளும் சேய்த்தாகிய பிசிரென்னும் ஊரிடத்தானென்று சொல்லுவார், என்னுயிரைப் பாதுகாப்போனை; அவன் எமக்குச் செல்வ முடைய காலத்து நிற்பினும் யாம் இன்னாமை யுறுங்காலத்து ஆண்டு நில்லான்-எ - று.


216
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய,
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று,                 
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்!                                 5
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே;
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர்
பேதைச் சோழன்' என்னும், சிறந்த                                       
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை,                       10
இன்னது ஓர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தான் பிசிராந்தையார்க்கு இடனொழிக்க வென்றது.

(இ - ள்.) ‘நின்னை அவன் கேட்டிருக்கும் அளவல்லது சிறிது பொழுதும் காண்டல்கூடாது பல்யாண்டுசெல்லத் தவறின்றாக மருவிப்போந்த உரிமையையுடையோராயினும் அரிதே தலைவ! அவ்வழுவாத கூற்றிலே படவொழுகுதல்’ என்று கருதி ஐயப்படாதொழிமின்; நிறைந்த அறிவினையுடையீர்! அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய் இனிய குணங்களையுடையன்; பிணித்த நட்பினையுடையன்; புகழ் அழியவரூஉம் பொய்ம்மையை விரும்பான்; தனது பெயரை பிறர்க்குச் சொல்லும்பொழுது என்னுடைய பெயர் பேதைமையையுடைய சோழனென்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமையையுமுடையன்; அதற்கு மேலே இப்படி யான் துயரமுறுங்காலத்து ஆண்டு நில்லான்; இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடம் ஒழிக்க-எ - று.

முற்றும்


தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைப்பு:
http://www.tamilvu.org/library/libindex.htm

பிசிராந்தையார் நாடகம் இணைப்பு:
http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114503.htm

விக்கிபீடியா இணைப்பு:
http://ta.wikipedia.org/s/4h7

புறநானூறு வேறு உரைக்கான பிடிஎஃப் கோப்பு பதிவிறக்க இணைப்பு
புறநானூறு


No comments:

Post a Comment