கலிங்கத்துப் பரணி/போர் பாடியது
பின்வரும் குறிப்புகள் தமிழ் இணையக்கல்வி கழகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
https://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01241l2.htm
பரணி நூல்களில் காலத்தால் முற்பட்டது இந்நூல். முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். இந்த வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே கலிங்கத்துப் பரணி ஆகும். நண்பர்களே இனி வரும் பாடப்பகுதியில் கலிங்கத்துப் பரணி பற்றி மூன்று நிலைகளில் செய்திகளை அறிய இருக்கிறோம். 1) கலிங்கத்துப் பரணி - நூலாசிரியர் வரலாறு கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் சயங்கொண்டார் ஆவார் 'பரணிக்கு ஓர் சயங்கொண்டான்' என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இவரைப் பாராட்டி உள்ளார். இவரது இயற்பெயரை அறிய முடியவில்லை. புலவர் பலரும் சொற்போர் நிகழ்த்துவது வழக்கம். இத்தகு சொற்போரில் வென்றதால் இவருக்குச் சயங்கொண்டார் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பர். இவருடைய ஊர் தீபங் குடி./
குலோத்துங்கன் கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்றான். வெற்றிக்குப் பின்பு சயங்கொண்டாரோடு உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது புலவரை நோக்கி, 'புலவரே! கலிங்கத்தைச் சயங்கொண்டமையால் நானும் சயங்கொண்டான் ஆயினேன்' என்று கூறினான். இதனைக் கேட்ட சயங்கொண்டார் உளம் மகிழ்ந்தார். 'அப்படி ஆனால் சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுவது மிகப் பொருத்தம்' என்று கூறிக் கலிங்கத்துப் பரணியைப் பாடினார் என்பர்.
சயங்கொண்டார் பரணி பாடி முடித்தார். பின்பு குலோத்துங்கன் அவையில் அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஒருவர் நூல் செய்தால் பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும்; பலரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இம்மரபினைத் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் இருந்தே காண்கிறோம். |
சயங்கொண்டார் புகார் நகரத்து வணிகரைப் புகழ்ந்து 'இசை ஆயிரம்' என்ற நூலைப் பாடி உள்ளார். விழுப்பரையர் மீது 'உலாமடல்' என்ற நூலையும் இயற்றி உள்ளதாகத் தெரிகிறது. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் முதல் குலோத்துங்க சோழன். இவன் இராசேந்திர சோழன் மகள் சோழ இளவரசி அம்மங்கைக்கும் சாளுக்கியர் குல இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன். இவன் மாமன் வீரராசேந்திர சோழன் இறந்த பின்பு அவன் மகன் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான். இவனும் சில திங்களில் இறந்தான். சோழ நாடு வாரிசு இல்லாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது. குழப்பத்தை நீக்கச் சாளுக்கியர் குலத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் பட்டம் ஏற்றான்.
கலிங்கத்துப் பரணி உருவானதற்கான காரணம் பற்றிக் கதை ஒன்று உண்டு. குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான். அப்போது தென்னவர், வில்லவர் முதலிய மன்னர்கள் திறை (தோற்ற மன்னர் தன்னை வென்றமன்னர்க்குக் கொடுக்கும் நிதி) செலுத்திப் பணிந்தனர். வட கலிங்க மன்னன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான். இதனை அறிந்த குலோத்துங்கன் சினம் கொண்டான். அவன் சினத்தைக் கண்டு ஏனைய மன்னர்கள் நடுங்கினார்கள். 'வட கலிங்க மன்னனின் அரண்கள் (மதில்கள்) வலிமை உடையனவாம்! அவற்றை அழித்து வாருங்கள்; அவனுடைய யானைகளை வென்று வாருங்கள்' என்று கூறினான். அந்த அளவில் குலோத்துங்கன் தளபதி கருணாகரன் எழுந்து நானே சென்று கலிங்கனை அடக்குவேன் என்று சபதம் இட்டான். பின்னர்க் கலிங்கப் போர் மூண்டது. சோழர்கள் வெற்றி வாகை சூடினர் என்று கதை முடிகிறது.
|
கலிங்கத்துப் பரணி
மூலம் பின்வரும் இணைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது
https://ta.wikisource.org/s/2sz
போரின் பேரொலி
404
எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1
405
வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2
இருபடைகளும் குதிரைகளும்
406
எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. 3
யானைப் படையும் குதிரைப் படையும்
407
கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே. 4
வீரர்களும் அரசர்களும்
408
பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே. 5
விற்போர்
409
விளைகனல் விழிகளின் முளைக்கவே மினலொளி கனலிடை யெறிக்கவே
வளைசிலை யுருமென விடிக்கவே வடிகணை நெடுமழை படைக்கவே. 6
குருதி ஆறு
410
குருதியின் நதிவெளி பரக்கவே குடையின நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுட லடுக்கியே கரையென விருபுடை கிடக்கவே. 7
யானைப் போர்
411
மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே. 8
மாணவர்களால் எழுதப்பெற்ற பாடக்குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment