Thursday, August 16, 2012

மணிமேகலை - உலக அறவி புக்க காதை


17. மணிமேகலை  - உலக அறவி புக்க காதை


[ஆதிரை யளித்த பிச்சையை முதலில் மணிமேகலை ஏற்ற பின்பு, அமுதசுரபியிலுள்ள சோற்றுத் திரளை, அறநெறியி லீட்டிய பொருள் வழங்குந்தோறும் குறையாமல் வளர்வதுபோல எடுக்க எடுக்கக் குறைவின்றி வளர்ந்து ஏற்போர் பசியைப் போக்கி விளங்கிற்று. அது கண்ட காய சண்டிகை வியந்து மணிமேகலையை வணங்கி, ''அன்னையே! எனது தீராப் பசியையும் தீர்த்தருள்க'''' என்று வேண்ட, உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒரு பிடி யமுதையெடுத்து அவள் கையிலிட்டாள். அதனை யுண்டு பசி நோய் தீர்ந்து மகிழ்ந்த காயசண்டிகை ''''வடதிசைக் கண்ணே விஞ்சைய ருலகிலுள்ள காஞ்சனபுரமென்பது என்னுடைய ஊர் ; தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்களைக் காண்டற்கு விரும்பிக்கணவனும் யானும் புறப்பட்டுப் போந்து இடையேயுள்ள கான்யாறொன்றின் கரையிலிருந்தோம் ; இருக்கையில், விருச்சிகனென்னும் முனிவனொருவன் பாரணஞ் செய்தற்குப் பனங்கனி போன்ற பருத்த நாவற் கனியொன்றைத் தேக்கிலையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். அக் கனியின் இயல்பினை யறியாத நான் பழவினையால் அதனைக் காலாற் சிதைத்துக் கெடுத்தேன். நீராடி மீண்டு வந்த முனிவன் அக் கனி என்னாற் சிதைந்தமையை அறிந்து சினந்து, என்னை நோக்கி, ''தெய்வத்தன்மை யுடையதும் பன்னீராண்டிற் கொருமுறை ஒரே கனியைத் தருவதுமாகிய நாவல் மரத்திலுண்டானது இக்கனி ; இதனை யுண்டோர் பன்னீராண்டு பசி யொழிந்திருப்பர் ; யானோ பன்னிரண்டாண்டு பட்டினியிருந்து ஒருநாளுண்ணும் நோன்புடையேன் ; உண்ணும் நாளும் இந்நாளே ; உண்ணக் கருதிய கனியும் இக்கனியே; இதனை நீ யழித்துவிட்டாய்; ஆதலால், நீ வான் வழியே செல்லும் மந்திரத்தை மறந்து, யானைத்தீயென்னும் நோயால் பன்னிரண்டாண்டு தீராப் பசி கொண்டுழந்து, பின்பு இக்கனியை யான் உண்ணும் நாளில் பசியொழியப் பெறுவாய்'' என்று கூறி வருந்திப் போயினன். உடனே பெரும் பசி என்னைப் பற்றியது ; அதனால் மிக வருந்தினேன் ; அது கண்ட என் கணவன் காய் கனி கிழங்கு முதலியவற்றை மிகக் கொணர்ந்து என்னை உண்பிக்கவும் அப்பசி தீராதாயிற்று. அந்தரஞ் செல்லும் மந்திரமும் என் நினைவுக்கு வந்திலது. அதனால் வருந்திய என் கணவன், ''நீ நடந்து சென்று தமிழ் நாட்டிலே ஆற்றா மாக்கட்கு அருந் துணையாகிச் செல்வர்கள் வாழ்ந்திருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து அங்கே தங்குவாயாக'' என்று சொல்ல, நான் அவ் வண்ணமே போந்து இங்கிருக்கின்றேன். ஒவ்வோராண்டிலும் இங்கு இந்திரவிழா நடக்கும்பொழுது என் கணவன் வந்து என் வருத்தத்தைப் பார்த்துத் தானும் வருந்திப் பின்வரும் யாண்டினை எண்ணிச் செல்வன். தணியாத வெம்பசியைத் தணித்தனை. யான் என் பதிக்கேகுவேன். இந் நகரிலே முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டம் என்ப தொன்றுண்டு; அதன்கண் பலரும் வந்து புகுதற்காகவே எப்பொழுதும் வாயிற் கதவு திறந்துள்ள உலகவறவி யென்னும் அம்பலம் ஒன்றுண்டு ;
                ''''ஊரூ ராங்கண் உறுபசி யுழந்தோர்.
                 ஆரு மின்மையி னரும்பிணி யுற்றோர்
                  இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால்.
       ஆதலின் அவ்விடத்திற்குச் செல்வாயாக''''   என்று கூறிவிட்டு, அவள் தன்னூருக்குச் சென்றனள். பின் மணிமேகலை வீதியின் ஒருபக்கத்தே ஒதுங்கிச் சென்று உலக வறவியை அடைந்து மும்முறை வலம்வந்து பணிந்து, அதிலேறிச் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வணங்கி, வெயிலாற் கரிந்த காட்டிலே மழை தோன்றினாற்போலப் பசியால் வருந்திய மக்கட்கு அமுதசுரபியோடு தோன்றி, ''''இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் ; உண்ணுதற்கு விருப்பமுள்ள யாவரும் வருக'''' என்று கூற, பலரும் வந்து உண்பாராயினர் ; ஆதலின் அவ் வம்பலத்தில் உண்ணு மொலி மிகுந்தது.]
 [மணிமேகலை காயசண்டிகை என்னும் விச்சாதரி வயிற்று யானைத்தீஅவித்து அம்பலம் புக்க பாட்டு ]

பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல                       5
வாங்குகை வருந்த மன்உயிர்க்கு அளித்துத
தான்தொலைவு இல்லாத் தகைமை நோக்கி,

உரை
 பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற - கற்பிற் சிறந்த ஆதிரை நல்லாளாற் பகுத்துண்ணும் உணவினைப் பெற்ற, பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை-அமுதசுரபியிலுள்ள பெரிய சோற்றுத்திரளை, அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் - அறநெறியினாலீட்டப்பட்ட ஒள்ளிய பொருள், அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல - அறஞ் செய்வோன் கருத்தின் வழியே சென்று பயன்படுமாறு போல, வாங்கு கை வருந்த மன்னுயிர்க்கு அளித்து- ஏற்கும் கைகள் வருந்துமாறு உயிர்கட்கு மிக அளித்தும், தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி-தான் குறைவுபடாத்தன்மையைக் கண்டு ;

யானைத் தீநோய் அகவயிற்று அடக்கிய
காயசண் டிகைஎனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி        10
அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்குகொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்
பட்டேன் என்தன் பழவினைப் பயத்தால்           15
அன்னை கேள்நீ ஆர்உயிர் மருத்துவி
துன்னிய என்நோய் துடைப்பாய் என்றலும்,

உரை
யானைத் தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை எனும் காரிகை வணங்கி - யானைத்தீ என்னும் பெரும்பசி நோயினைத் தன் வயிற்றிற்கொண்ட காயசண்டிகை என்னும் மடந்தை மணிமேகலையை வணங்கி, நெடியோன் மயங்கி நிலமிசை தோன்றி அடலருமுந்நீர் அடைத்த ஞான்று - திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது, குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்-குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம், அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு - வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல, இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசி பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் - இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன், அன்னைகேள் நீ - தாயே நீ கேட்பாயாக, ஆருயிர் மருத்துவி துன்னிய என்நோய் துடைப்பாய் என்றாலும் - அரிய உயிரைப் பாதுகாக்க வல்ல மருந்தினையுடையாய் நெருங்கிய எனது பசிப்பிணியைக் களைந்தருள்வாய் என வேண்ட ;

எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்ததுஅவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள்                     20
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்:

உரை
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் பிடித்து அவள் கையில் பெய்தலும்-மணிமேகலை தான் கையிற் கொண்ட அமுத சுரபியிலுள்ள அன்னத்தை எடுத்துப் பிடியாக அவள் கையில் இட, வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித்தொழுதனள் உரைக்கும்-காயசண்டிகை வயிற்றில் எரிகின்ற கொடிய பசி நீங்கத் தன் துயரமும் நீங்கி மணிமேகலையைத் தொழுது கூறுகின்றாள் ;


மாசுஇல் வால்ஒளி வடதிசைச் சேடிக்
காசுஇல்காஞ் சனபுரக் கடிநகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடுஎன் வெவ்வினை உருப்பத்
தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்                         25
கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த
இடுமணல் கானியாற்று இயைந்துஒருங்கு இருந்தேன்

உரை
மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடி - வடதிசையில் மாசற்ற வெள்ளிய வாளியினையுடைய விஞ்சையருலகில், காசு இல் காஞ்சனபுரக் கடிநகர் உள்ளேன் - குற்றமற்ற காஞ்சனபுர மென்னுங் காவல் பொருந்திய நகரத்தில்உள்ள யான், விஞ்சையன் தன்னொடு என் வெவ்வினை உருப்ப-எனது கொடுவினையானது தோற்ற என் கணவனோடு, தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்-தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்காணும் பொருட்டு வந்தேன், கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த - விரைந்த செலவினையுடைய அருவியினது வேகமுள்ள நீர் தெள்ளிய, இடுமணல் கானியாற்று இயைந்தொருங்கு இருந்தேன்- இடுமணலையுடைய கான்யாற்றில் என் கணவனுடன் கூடி ஒருங்கிருந்தேன் ;

புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை
மரஉரி உடையன் விருச்சிகன் என்போன்
பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதுஓர்        30
இருங்கனி நாவல் பழம்ஒன்று ஏந்தித்
தேக்குஇலை வைத்துச் சேண்நாறு பரப்பில்
பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன்

உரை
புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் - அப்பொழுது முறுக்கிய பூணூலணிந்த மார்பும் திரித்து முறுக்கிய நீண்ட சடையும் மரவுரி யாடையுமுடைய விருச்சிகன் என்னும் முனிவன், பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதோர் இருங்கனி நாவற்பழம் ஒன்று ஏந்தி - பெரிய குலையையுடைய பனையினது கரிய கனியை யொத்ததாகிய பெருமை பொருந்திய கனிந்த நாவற்பழம் ஒன்றைக் கையிலேந்தி வந்து, தேக்கிலை வைத்துச் சேண் நாறு பரப்பில் பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன் - அதனை ஒரு தேக்கின் இலையில் வைத்துவிட்டு நெடுந்தூரம் நாறுமியல்புடைய பூக்கள் கமழும் பரப்பினையுடைய பொய்கையில் நீராடச் சென்றானாக ;

தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன்                      35
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்

உரை
 தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் - தீவினையானது பயன் கொடுப்பத் தோற்றுதலின் யான் ஆண்டுத் தருக்கொடு சென்று, காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் - காலினாலே அந்த நாவற்பழத்தைச் சிதைத்தேன்

 கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன்
சீர்திகழ் நாவலில் திப்பிய
ஈர்ஆறு ஆண்டில் ஒருகனி தருவது
அக்கனி உண்டோர் ஆறுஈர் ஆண்டு                   40
மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்
பன்னீ ராண்டில் ஒருநாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய்

உரை
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் - உண்ணும் வேட்கையுடன் நீராடிப் போந்த விருச்சிக முனிவன், கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் - அப் பழத்தினைச் சிதைத்த திறத்தினோடு என்னைக் கண்ணுற்றனன், சீர்திகழ் நாவலில் திப்பிய மானது-சிறப்பு விளங்கும் நாவலிலே தெய்வத்தன்மை யுடைய தொன்று, ஈராறு ஆண்டில் ஒரு கனி தருவது - பன்னீராண்டிற்கு ஒரு பழம் கொடுப்பது, அக் கனி உண்டோர் - அப் பழத்தினை யுண்டோர், ஆறீராண்டு மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்- பன்னீராண்டு மக்களுடலிலுண்டாகும் பசி நீங்கப்பெறுவர், பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன் - யானோ பன்னீராண்டில் ஒருநாள் உண்பதல்லது பிறநாளில் உண்ணாத நோன்பினையுடையேன், உண்கனி சிதைத்தாய்-அவ்வியல்புடைய யான் இன்று உண்டற்குரிய அக் கனியைக் கெடுத்தாய் ;

அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித்துயர் உழந்து                       45
முந்நால் ஆண்டில் முதிர்கனி நான்ஈங்கு
உண்ணும் நாள்உன் உறுபசி களைகென
அந்நாள் ஆங்குஅவன் இட்ட சாபம்
இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை

உரை
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து-ஆகலின் விண்மீது செல்லும் மந்திரத்தை இழந்து, தந்தித் தீயால் தனித்துயர் உழந்து - யானைத்தீ யென்னும் பசிநோயால் ஒப்பற்ற துன்பமடைந்து வருந்தி, முந் நாலாண்டில் முதிர்கனி ஈங்கு உண்ணும் நாள் உன் உறுபசி களைக என - இனி வரும் பன்னிரண்டாவதாண்டில் முதிர்கின்ற நாவற்கினியினை நான் இங்கு உண்ணுகின்ற நாளில் நினது மிக்க பசியைப் போக்குவாய் என்று, அந்நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் - யான் அவ் வருங் கனி சிதைத்த அன்று அவ்விடத்தில் அம் முனிவனிட்ட சாபத்தை, இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை - இளங்கொடி போலும் நீ இன்று கெடுத்தாய் ;

வாடுபசி உழந்து மாமுனி போயபின்                   50
பாடுஇமிழ் அருவிப் பயமலை ஒழிந்துஎன்
அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகுஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
ஆர்அணங்கு ஆகிய அருந்தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை        55
வான்ஊடு எழுகென மந்திரம் மறந்தேன்

உரை
வாடு பசி உழந்து மாமுனி போயபின் - வாடுதற்கேது வாகிய பசியால் வருந்தி அம் முனிவன் சென்றபின், பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து-ஒலி முழங்குகின்ற அருவிகளையுடைய பயனுடைய பொதியின் மலையை அடைவதை விடுத்து, என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற - மனத்தில் தோன்றியதை ஆராயாது செய்த என் செய்கைக்கு அஞ்சினவனாய் நீங்கிய, இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி-விளங்கும் ஒளியையுடைய விஞ்சையன் துன்பமோ டடைந்து, ஆரணங்காகிய அருந்தவன் தன்னால் - அரிய தெய்வத்தன்மை யுடைய அருந்தவனால், காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை - காரணமில்லாமலும் கடிய நோயால் வருந்தலுற்றனை, வானூடு எழுக என - விசும்பின் மீது எழுவாயாக என்று கூற ;


ஊன்உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறுகாய் பெரும்பசி வருத்தும்என்றேற்குத்
தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன
ஆங்குஅவன் கொணரவும் ஆற்றே னாக                     60
நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி
ஆங்குஅவன் ஆங்குஎனக்கு அருளொடும் உரைப்போன்
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும்துணை ஆகி                       65
நோற்றோர் உறைவதுஓர் நோன்நகர் உண்டால்
பலநாள் ஆயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுகென்று அவன்அருள் செய்ய
இப்பதிப் புகுந்துஈங்கு யான்உறை கின்றேன்

உரை
மந்திரம் மறந்தேன் - வானிற் செல்லும் மந்திரத்தை மறந்து விட்டேன், ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி - உடம்பினின்றும் உயிர் நீங்குதற்கேதுவாகிய வெப்பத்துடன் தோன்றி, வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது மிக வருத்தாநின்றது என்று கூறிய என்பொருட்டு, தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவம் ஆற்றேனாக-நல்லனவாகிய இனிய பழங்கள் கிழங்குகள் செழிய காய்கள் முதலியவற்றை அவன் கொணர்ந்து தரவும் எனது பசி தணியேனாக, நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் - என்னைவிட்டு நீங்கலாற்றாதவனாகிய என் கணவன்மிக்க துயரத்தையடைந்து அவ்விடத்தில் எனக்கு அருளொடும் கூறுகின்றவன் ;

       மறந்தேன் எனவும் வருத்தும் எனவும் கூறினேற்கு என்க. நல்லனவென்பதைக் கனி முதலிய ஒவ்வொன்றோடுங் கூட்டுக. ஆற்றேனாக - பசி தணியப்பெறேனாக.

       சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் - நாவலந் தீவினுள் தமிழகத்திலே, கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர் - நடுக்கமில்லாத மிக்க பெருஞ் செல்வத்தையுடையோர், ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி - வறியோர்கட்கு வேண்டியன கொடுக்கும் துணைவராகி, நோற்றோர் உறைவதோர் நோன் நகர் உண்டால் - முற்பிறப்பில் தவம்புரிந்தோர் வாழ்கின்ற பெருமையுடைய நகரமொன்று உண்டு, பலநாளாயினும் நிலனொடு போகி - பலநாட்கழியினும் நீ நடந்து சென்று, அப்பதிப் புகுக என்று அவன் அருள் செய்ய-அந் நகரத்திற் சேர்வாய் என்று அவன் கூறியருள, இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்-யான் அவன் சொல்வழியே இக் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து ஈண்டு வதிகின்றேன் ;

இந்திர கோடணை விழவுஅணி வருநாள்               70
வந்து தோன்றிஇம் மாநகர் மருங்கே
என்உறு பெரும்பசி கண்டனன் இரங்கிப்
பின்வரும் யாண்டுஅவன் எண்ணினன் கழியும்
தணிவுஇல் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமே கலைஎன் வான்பதிப் படர்கேன்

உரை
இந்திரகோடணை விழவணி வருநாள் - இந்திர கோடணையாகிய அழகிய விழா நடைபெறும் நாளில், வந்து தோன்றி இம்மாநகர் மருங்கே - இப் பெரிய நகரின் மருங்கே அவ் விஞ்சையன் வந்து தோன்றி, என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கி-என்னை வருத்துகின்ற பெரும் பசியினைக் கண்ணுற்று இரங்கி, பின்வரும யாண்டு அவன் எண்ணினன் கழியும்-பின்னர் எனது சாபம் கழிகின்ற ஆண்டுகளை எண்ணிக்கொண்டு அவன் நீங்குவான், தணிவில் வெம்பசி தவிர்த்தனை - என்னுடைய தணிதலில்லாத கொடிய பசியை நீக்கினாய், வணங்கினேன் - நின்னே வணக்கஞ் செய்தேன், மணிமேகலை என் வான்பதிப் படர்கேன்-மணிமேகலையே இனி எனது சிறந்த பதியின்கட் செல்வேன் ; இந்திரகோடணையாகிய விழவு என்க; பல்வகை முழக்க முடைமை பற்றி விழா கோடணை யெனப்பட்டது ; "இந்திரகோடணை விழாவணி விரும்பி" (5:94) என முன்னர் வந்தமையுங் காண்க. ஆண்டுதோறும் இந்திரவிழா நடக்கும்நாளில் வந்து கண்டு இரங்கிக் கழியும் என்க. பின்வரும் யாண்டு - சாபம் நிற்கும் பன்னீராண்டில் எஞ்சிய ஆண்டு. மணிமேகலை

தவிர்த்தனை வணங்கினேன் படர்கேன் என்றாளென்க.       75
துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர்
சக்கர வாளக் கோட்டம்உண்டு ஆங்குஅதில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக அறவி ஒன்றுஉண்டு அதனிடை
ஊர்ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்                                                 80
ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர்
இடுவோர்த் தேர்ந்துஆங்கு இருப்போர் பலரால்
வடுவாழ் கூந்தல் அதன்பால் போகென்று
ஆங்குஅவள் போகிய பின்னர் -ஆயிழை

உரை
துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர் - துக்கத்தைப் போக்கும் குற்றமற்ற பெருந் தவத்தோர்கள் உறைகின்ற, சக்கரவாளக் கோட்டம் உண்டு-சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு, ஆங்கதில் பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் - அதன்கண் பலரும் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பிளந்த வாய்போலும் வாயிலினை யுடைய, உலகவறவி ஒன்றுண்டு-உலகவறவி என்னும் ஊரம்பலம் ஒன்று உண்டு, அதனிடை-அதன்கண், ஊரூர் ஆங்கண் உறுபசி உழந்தோர் - ஊர்தோறும் மிக்க பசியால் வருந்தினோரும், ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர் - பாதுகாப்போர் ஒருவரும் இன்மையினால் அரிய நோயுழந்தோருமாய், இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் - அன்னமிடுவோரை ஆராய்ந்து இருக்கின்றவர் பலராவர், வடு வாழ் கூந்தல் அதன்பாற் போகென்று - வகிர் பொருந்திய குழலினை யுடையாய் அவ்விடம் செல்வாயாக என்று கூறி, ஆங்கவள் போகிய பின்னர்-அக் காயசண்டிகை சென்ற பின்பு ;

ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி                            85
வலமுறை மும்முறை வந்தனை செய்துஅவ்
உலக அறவியின் ஒருதனி ஏறிப்
பதியோர் தம்மொடு பலர்தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்துஉடை நெடுநிலைக் காரணம் காட்டிய              90
தம்துணைப் பாவையைத் தான்தொழுது ஏத்தி

உரை
ஆயிழை - மணிமேகலை, ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி-மாடங்கள் ஓங்கிய தெருவின்கண்ணே ஒரு புறமாக ஒதுங்கிச் சென்று, வலமுறை மும்முறை வந்தனை செய்து - வல முறையாக மூன்றுமுறை வந்து பணிந்து, அவ் வுலகறவியின் ஒரு தனி ஏறி - அந்த உலக வறவியின்கண் தான் தனியே சென்று, பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் - நகரிலுள்ளாருடன் பலரும் துதித்து வணங்கும், முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-முதியவளாகிய சம்பாபதியின் கோயிலை மனம் மொழி மெய்களால் வணக்கஞ் செய்து, கந்துடை நெடு நிலைக் காரணம் காட்டிய தந்துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி - நெடிய நிலையினையுடைய தூணின்கணிருந்து பழவினையாகிய காரணங் காட்டும் பொருட்டு எழுதப்பட்ட தம் துணையாகிய கந்திற்பாவையை வணங்கித் துதித்து ;


வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக்
கருவி மாமழை தோன்றியது என்னப
பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுத சுரபியோடு ஆயிழை தோன்றி                   95
ஆபுத் திரன்கை அமுத சுரபிஇஃது
யாவரும் வருக ஏற்போர் தாம்என,
ஊண்ஒலி அரவத்து ஒலிஎழுந் தன்றே
யாணர்ப் பேர்ஊர் அம்பலம் மருங்குஎன்.

உரை
வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து - ஞாயிற்றின் கதிராற் சுடப்பட்டு வெம்பிய மூங்கில் கரிந்த காட்டின்கண், கருவி மாமழை தோன்றியது என்ன - தொகுதியாகிய முகில்கள் தோன்றினாற்போல; பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு - பசியானது உடலைத் தின்ன வருந்திய துன்பமுடைய மக்களுக்கு, அமுதசுரபியோடு ஆயிழை தோன்றி - மணிமேகலை அமுதசுரபியோடு தோன்றி, ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது-ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் இது, யாவரும் வருக ஏற்போர் தாம் என - ஏற்போர் யாவரும் வருக என்று கூற, ஊண் ஒலி அரவத்துஒலிஎழுந்தன்றே யாணர்ப்பேரூர் அம்பலம் மருங்கென்- உணவுண்ணும் ஆரவாரமாகிய முழக்கம் எழுந்தது புதுவருவா யினையுடைய பேரூரின் அம்பலத்தின்கண் என்க.

(காயசண்டிகை யென்னுங் காரிகை, நோக்கி வணங்கி, 'என்னோய் துடைப்பாய்' என்றலும், மணிமேலலை பெய்தலும், அவள் பசி நீங்கித் தொழுது உரைக்கும் ; உரைப்பவள், 'உலகவறவி யொன்றுண்டு ; அதன்பாற் போக' என்று கூறிப் போகிய பின்னர், ஆயிழை ஒதுங்கி வந்து வந்தனை செய்து ஏறி வணங்கித் தொழுது ஏத்தித் தோன்றி, ஏற்போர் யாவரும் வருக' என, அம்பல மருங்கு ஒலியெழுந்தன்று என வினை முடிவு செய்க.)


நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் (நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார்வித்துவான் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளைஇவர்களால் எழுதப்பெற்ற  பதவுரை விளக்கவுரைகளுடன்)

*******

2 comments:

  1. its really very useful for us sir.....!!

    ReplyDelete
  2. [3] கனினி அகரமுதலி (computer dictionary)
    http://gvetrichezhian02.tumblr.com/
    [6] இலக்கியக் காட்சி (Literary Scene)
    http://ulikininpin05.tumblr.com/
    [9] என விரும்பினோம் (Desired As)
    http://ulikininpin08.tumblr.com/
    [10] புலவர் பெருமக்கல் (Great People of Poet)
    http://ulikininpin09.tumblr.com/
    [11] முத்தொட்டுனூரு பாடல் (3*9*100 = 2,700 Poems)
    http://ulikininpin10.tumblr.com/
    [12] தமிலு விடு தூது (Tamilu Messenger)
    http://ulikininpin11.tumblr.com/
    [13] ஊஞ்சல் பாடல் (Swing Poem)
    http://ulikininpin12.tumblr.com/
    [14] பந்து ஆட்டம் (Ball Game)
    http://ulikininpin13.tumblr.com/
    [15] மடல் (Letter)
    http://ulikininpin14.tumblr.com/

    ReplyDelete