குற்றாலக் குறவஞ்சி (விக்கிபீடியா கட்டுரை)
திருக்குற்றாலக்
குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம்
எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து
அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி,
தெய்வக் காதல் பற்றிய கற்பனையை
அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.
நூலாசிரியர்
குறவஞ்சி
நாடகம் என்று போற்றப்படும் இந்நூல்
வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின்
அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம்
தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம்
என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர்
திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய
சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின்
முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை
மன்னனான முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.
கதை அமைப்பு
குறவஞ்சி
நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை
அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான்.
திருவுலா தொடங்குகிறது மூவர் தமிழும் நான்மறைகள்
முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின்
திருவுலாவைக் காண பெண்கள் எழுந்து
வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி
(கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி
அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு
தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள்.
தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன்
குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப்
பார்த்து அவள் குற்றாலநாதர் மீது
காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று
குறி சொல்லி பரிசு பெறுகிறாள் குறத்தி
சிங்கி. அவள் கணவன் சிங்கன்
அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக்
கண்ட சிங்கனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல
இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர்.
இவ்வாறு கதை முடிகிறது.
நூலின் சிறப்புகள்
குறவஞ்சி
நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதும், இன்றும்
நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு
வருவதும், இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். திரிகூடராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மீது
தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ்,
யமகஅந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருந்தாலும்
இன்று பலரும் விரும்பிப் படிப்பது
அவருடைய குறவஞ்சி ஒன்றே. குற்றாலக்குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்
பெற்றதால் திருக்குற்றலாக்குறவஞ்சி
எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை
நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை)
நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை
நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப்
பெற்றுள்ளது. சான்றாக வசந்தவல்லி பந்தாடும்
பாங்கைப்பற்றி எடுத்துரைக்கும்,
செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாடஇரு
கொங்கை கொடும்பகைவென்றனம் என்று
குழைந்து குழைந்தாடமலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தார் பந்து பயின்றனளே
என்ற
பாடலைக் கூறலாம். இதைப்போல் சந்தநயம் கொண்ட இன்னும் பலபாடல்கள்
இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டுள்ளன.
குற்றாலக்
குறவஞ்சியில் தமிழகத்தின் காட்டு விலங்குகளைப் பற்றியும்
செடியினங்களைப் பற்றியும் மிகப்பல குறிப்புகள் இடம்
பெற்றுள்ளன.
உசாத்துணைகள்
புலியூர்
கேசிகன் (உரையாசிரியர்), திருக்குற்றாலக்குறவஞ்சி, பாரி நிலையம், சென்னை.
(மறுபதிப்பு 2000)
மு.
வரதராசன், தமிழ் இலக்கியவரலாறு, சாகித்திய
அகாதமி, 18ஆம் பதிப்பு, 2003.
வாழ்வியற்
களஞ்சியம் தொகுதி ஏழு, தமிழ்ப்
பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மே.1998.
இணையதளம்-
www.tamilvu.org
குற்றால குறவஞ்சி -குறத்தி மலைவளங்கூறுதல்
இராகம்-புன்னாகவராளி- தாளம்-ஆதி
கண்ணிகள்
(1)
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே;
(1) ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள், வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப்)பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தேரிற்பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; வளைந்துள்ள இளம் பிறையைச் சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்; (இன்னுங் கேள்)
(2)
முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
முற்றம்எங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வேம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
தேன்அலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவின் ஈசர்
வளம்பெருகும் திரிகூட மலைஎங்கள் மலையே;
(2) ஒலிக்கின்ற அலைகளையுடைய நீர் வீழ்ச்சி, செல்லும் வேகத்தில் கழங்காடுகின்ற தென்னும்படி முத்துக்களை ஒதுக்கிச் செல்லும்; அவ்வருவி, மக்கள் வாழ்கின்ற வீட்டின் முற்றங்களிலெல்லாம் பரவிச் சென்று சிறுமிகளின் மணல்வீடுகளை அழித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும்; நாங்கள் மலைக்கிழங்குகளைத் தோண்டியும், தேன் இறால்களைப் பிய்த்து எடுத்தும், மலையின் செழிப்பைப் பாடிக்கொண்டே கூத்தாடுவோம்; பூண்கட்டிய யானைக்கொம்புகளை ஒடித்து உலக்கையாகக் கொண்டு வறுத்த தினைத் தானியத்தை இடிப்போம். இளமை பொருந்திய குரங்குகள் இனிமையுள்ள மாம் பழங்களையே பந்தாகக் கொண்டு அடித்து விளையாடும்; தேன் பெருகி ஓடுகின்ற செண்பகப் பூவின் மணம், தேவருலகினிடத்தே போய்ப் பரவும்; அருட்கொடை வழங்குகின்ற தேவாதி தேவராகிய குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரியதான எல்லா வளப்பமும் பெருகியிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழுகின்ற மலையாகும்; (இன்னுங் கேள்)
(3)
ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும்
அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
வேடுவர்கள் தினைவிரைக்கச் சாடுபுனந் தோறும்
விந்தைஅகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும்
காடுதொறும் ஓடிவரை ஆடுகுதி பாயும்
காகமணு காமலையில் மேகநிரை சாயும்
நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்
நிலைதங்கும் திரிகூடமலை எங்கள் மலையே;
(3) ஆடுகின்ற நாகப் பாம்புகள் கக்கிய எண்ணிறந்த மணிகள் எங்கும் ஒளிகொடுக்கும்; யானைகளானவை திங்களைத் தாம் உண்ணும் கவள உருண்டையென எண்ணி அது செல்கின்ற வான்வழியில் போகவொட்டாமல் தடைசெய்யும், மலைக் குறவர்கள் தினைப்பயிரை விதைப்பதற்காக அழிக்கப் படுகின்ற காடுகளிலெல்லாம் உள்ள பலவகை மரங்களும் அகில் குங்குமம் சந்தனமரங்களும் கண்டோர் வியக்கும்படி தம் மணங்களைப் பரப்பும்; காடுகளில் எங்கும் ஓடிச்சென்று வரையாடுகள் துள்ளிக் கீழே பாயும்; காகமும் பறவாத உயர்ந்த மலையில் மேகக் கூட்டங்கள் உச்சியில் சாய்ந்தோடும்; நீண்ட குறும்பலாவடியில் எழுந்தருளியிருக்கின்றவரும் கைலை மலையில் வாழ்பவருமாகிய திருக்குற்றாலநாதரின் நிலைபெற்றிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்; (இன்னுங் கேள்)
(4)
கயிலைஎனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே
கனகமகா மேருஎன நிற்குமலை அம்மே
சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே
சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை அம்மே
வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே
வான்இரவி முழைகள்தொறும் நுழையுமலை அம்மே
துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும்
துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே;
(4) திருக்கைலைமலை யென்று கூறப்படுகின்ற வடக்குப் பக்க மலைக்குத் தென்பக்கத்தில் இருக்கின்ற மலையாகும்; இது பெரிய பொன்மலை என்னும் மேருமலை போன்ற தென்னும்படி உயர்ந்த மலை அம்மே! சிவசைலம் என்னும் தெற்கு பக்கமுள்ள மலைக்கு வடக்குப் பக்கமாக இருக்கின்ற மலை இஃது அம்மே! இம்மலை மற்ற எல்லா மலைகளின் சிறப்பெல்லாம் தனக்குள் நிறையக்கொண்டிருக்கும் வளமுடையது அம்மே! அது வைரமணியுடன் பலவகை மணிகளையும் விளைத்துத் தருவது அம்மே! வான்வழியாகச் செல்லும் ஞாயிறு குகைகளையே வழியாகக்கொண்டு நுழைந்து செல்வதற்கு இடனாகஇருப்பதும் அந்த மலைதான் அம்மே! அறிதுயில் புரிகின்ற திருமாலான வருங்கூடத் துயில் விட்டெழுந்து எல்லா உலகங்களிலும் போய்த் தேடுகின்ற மேன்மையாளராகிய திரிகூடநாதப் பெருமானுக்குரிய திரிகூட மலைதான் எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும் அம்மே! (இன்னுங் கேள்)
(5)
கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்இனங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்
திரிகூடமலை யெங்கள் செல்வமலை அம்மே;
(5) கொல்லி மலையானது எனக்குப் பின் பிறந்த செல்லி என்னும் பெயருடையாளுக்குரிய மலையாகும்; அவளின் கணவனுக்குக் குடிக்காணியாட்சியாக இருப்பது பழனிமலை ஆகும் அம்மே! ஞாயிறு மேலே செல்கின்ற விந்தை என்னும் மலையே என் தந்தைக்குரிய மலையாகும் அம்மே! இமயமலை என்னுடைய தமையனுக்குரிய மலையாகும் அம்மே! சொல்லுதற்கரிய சுவாமி மலை என்னும் மலையே என் மாமியாளுக்குரிய மலையாகும் அம்மே! என் தோழிக்குரிய மலையோ நாஞ்சில் நாட்டிலுள்ள வேள்வி யென்னும் மலையாகும் அம்மே! மேகங்கள் குமுறலாகிய பறையை முழக்க, அதற்கேற்ப மயிலினங்கள் நடனஞ்செய்கின்ற திரிகூட மென்னும் திருக்குற்றாலமலையே எங்களுக்குச் செல்வப்பொருளாக இருக்கின்ற நாங்கள் வாழும் மலையம்மே! (இன்னுங் கேள்)
(6)
ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்வோம்
உறவுபிடித் தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள்
வெருவிவருந் தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில்மறைந்த பாங்குதனைக்குறித்தே
அருள்இலஞ்சி வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம்
ஆதினந்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்
பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்
பரமர்திரி கூடமலை பழையமலை அம்மே.
(6)
எங்கள் குலந்தவிர வேறொரு சாதியில் நாங்கள் பெண்கள் கொடுக்கமாட்டோம்; வேறொரு குலத்தில் பெண்களை மணஞ்செய்யவும் மாட்டோம்; குறவர் சாதியினராகிய நாங்கள் ஒருவரை நட்புக் கொண்டால் இடையில் அந்நட்பை விட்டுவிடமாட்டோம்; நாங்கள் அச்சங்கொள்ளும்படி தினைப் புனத்தினிடத்தே வருகின்ற யானை முதலிய விலங்குகளைத் துரத்தி வேங்கை மரமாக நின்று எங்களுக்கு நிழல் தந்த நன்மைக்காக எண்ணிப் பார்த்து அருளாளராகிய இலஞ்சியில் எழுந்தருளியிருக்கின்ற வேலினை யுடைய முருகப் பெருமானுக்கு வள்ளி யென்னும் ஒரு பெண்ணை முன்பு கொடுக்கலானோம்; அதற்காக எங்களுக்குரிமையான வேறு மலைகள் எல்லாவற்றையும் மகட்கொடைப்பொருளாக வழங்கலானோம்; ஞாயிறு திங்கள் சுற்றிவருகின்ற மேருமலையைத் துருவன் என்பவனுக்குக் கொடுத்துதவினோம்; சிறந்தவராகிய திருக்குற்றால நாதருக்குரிய இத்தகைய திரிகூட மலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும் அம்மே!
முற்றும்
Good blog is this.
ReplyDeletePlz....kurathi nathuvalaga kuruthal notes vaum...athaum add panuga
ReplyDelete2ஆம் பாடல் பொருள்
ReplyDeletesingan singi uraiyadal add panuga
ReplyDeleteThingal mudi soodum Malai kuttraala kuravanji lyrics
ReplyDeleteநன்று, மிக்க நன்று!
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteTq...
ReplyDeleteThank you so much.
ReplyDelete5 பாடலில் வரும் துருவன் யார்
ReplyDeleteபக்ஷம்
Deleteஅற்புதம்.மிக்க நன்றி
ReplyDeleteUseful, thank you
ReplyDeleteVery useful
ReplyDeleteமிகச் சிறப்பு.
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteSuper
ReplyDeleteVera level
ReplyDeleteபடிக்க எளிமையாக இருந்தது
ReplyDeletePlease upload all notes
ReplyDeleteArchana
ReplyDeleteReally happy to view this...im so interested in teaching this for my daughter ...thank u so much for uploading this .
ReplyDeleteThank you very much for lyrics and beautiful meaning..
ReplyDeleteVery beautiful explanation thank you
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteVery good explanation
ReplyDeleteநன்றி
ReplyDeleteமிக அருமையாக உள்ளது
ReplyDeleteகாதல் காவியம் சிறப்பாக உள்ளது.
ReplyDeleteமிக்க நன்று.
ReplyDeleteஅருமை!!! மிக மிக அருமை!!!
ReplyDeleteஆஹா தெள்ளுதமிழ்ப் பாடல்கள்...
ReplyDelete𝑺𝒖𝒑𝒆𝒓 𝒕𝒒
ReplyDelete